காட்டுத் தீயில் எரிந்து சாம்பலான காடுகளை உயிர்ப்பிக்க கறுப்பு மரங்கொத்தி (Black backed woodpecker) என்ற ஒரு சின்னஞ்சிறிய பறவையே ஆய்வாளர்களுக்குப் பேருதவி செய்கிறது. இந்தப் பறவைகளுக்கும் காட்டுத்தீக்கும் இடையில் இருக்கும் தொடர்பே இது குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வாளர்களுக்குத் தூண்டுதலாக அமைந்தது. 

காட்டுத்தீ நிகழ்வுகளுக்குப் பிறகு தீயணைப்புத் துறையினருக்கு காடுகளை உயிர்ப்பிக்க, பன்மயத் தன்மையை மீட்க கறுப்பு மரங்கொத்திகளின் வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய ஆன்லைன் கருவியைக் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எரிந்த காடும் கறுப்பு மரங்கொத்தியும்

சாதாரணமாக காட்டுத்தீ ஏற்பட்ட பிறகு எரிந்து போன மரங்களை வெட்டி அகற்றுவதே தீ சம்பவத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் தீ மேலாண்மை (post fire management) நடவடிக்கை. ஒவ்வொரு முறையும் மரத்தை வெட்டும்போது காடு முழுவதும் பைத்தியம் பிடித்தது போல கறுப்பு மரங்கொத்திகள் பறப்பதை ஆய்வாளர்கள் கவனித்தனர். தீ பிடித்த மரங்களை வெட்டுவது இப்பறவைகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்பது தெரிய வந்தது.black backed woodpeckerபைரோ பன்முகத்தன்மை

பைரோ பன்முகத்தன்மை (Pyrodiversity) நிலையில் உள்ள காடுகளே இவற்றிற்கு மிகப் பிடித்தமானவை. ஒரு நிலப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படும் விதங்களில் உள்ள வேறுபாடே பைரோ பன்முகத் தன்மை எனப்படுகிறது. காடு முழுவதும் எரியாத நிலை - எரிந்து போன காடுகளுக்கு நடுவில் ஆங்காங்கே சில பசுமைப் பிரதேசங்கள் மீதமாகியிருக்கும். எல்லா மரங்களும் முழுவதுமாக எரியாத நிலை - அடுத்த மழையில் அவை துளிர் விடும் என்பது நிச்சயம். இந்த நிலையில் இருக்கும் காட்டுத் தீ ஏற்பட்ட காடுகளில் இப்பறவைகள் கூட்டமாக பறந்து வருகின்றன.

அப்போது எரிந்து போன மரங்களில் ஒரு வகை வண்டுகளின் (beetles) லார்வாக்கள் பெருகுகின்றன. இந்த லார்வாக்கள் மரங்கொத்திகளுக்குப் பிடித்தமான உணவு. வெந்து உருகி சூடு ஆறிய காட்டில் புதிதாக எரிந்த பகுதி அல்லது குறைவாக எரிந்த பகுதிகளுக்கு சமீபப் பிரதேசங்களில் மரங்கொத்திகள் கூடு கட்டுகின்றன. இந்த இடங்களில் இவற்றின் குஞ்சுகளுக்கு எதிரிகளிடம் இருந்து ஒளிந்து கொள்ள இதன் மூலம் மறைவிடம் கிடைக்கிறது. காட்டுத் தீக்கு பிந்தைய தீ மேலாண்மை திட்டமிடலில் இதுபோன்ற மதிப்புமிக்க தகவல்கள் உதவுகின்றன.

பத்தாயிரம் துண்டுகளுடன் உள்ள ஒரு பெரும் புதிர் போலதான் காட்டுத் தீ. காலநிலை மாற்றம் இந்தத் துண்டுகளை பல விதங்களில் இணைத்து வைக்கிறது என்று கார்னல் பறவையியல் ஆய்வக (Cornell lab of ornithology) முதுகலை முனைவர் விஞ்ஞானி, பயன்பாட்டு சூழலியல் மற்றும் சூழலியல் மாதிரி துறை நிபுணர் மற்றும் ஆய்வுக்குழுவின் முதன்மை ஆசிரியர் ஆண்ட்ரூ ஸ்டில்மேன் (Andrew Stillman) கூறுகிறார்.

பைரோ பன்முகத்தன்மையின் முதல் ஆய்வாளர்

பைரோ பன்முகத்தன்மையின் அடிப்படையில் வன ஆய்வு மதிப்பீடுகளை முதல்முதலாக மேற்கொண்டவர் இவரே. கறுப்பு மரங்கொத்திகள் பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரை சூழலியல் பயன்பாடுகள் (Ecological applications) என்ற ஆய்விதழில் 2023 ஏப்ரல் 25ல் வெளிவந்துள்ளது.

பறவைகள், வன உயிரினங்கள் பற்றி ஆராயும் இந்த ஆய்வகம் இமஜன் (Imogene) ஜான்சன் பறவைகள் மையத்தில் சப்சகார் (Sapsucker) என்ற மரங்களுக்கான சரணாலயத்தில் அமைந்துள்ளது. இது நியூயார்க் இத்தகா (Ithaca) பகுதியில் உள்ள கானெல் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பிரிவாக செயல்படுகிறது. அதிதீவிர காட்டுத்தீ சம்பவங்கள் கலிபோர்னியாவின் புதிய இயல்பாக (newnormal) மாறியுள்ளது. அடர்த்தியான காடுகளின் இயல்பு, வறட்சி மற்றும் காட்டுத் தீயின் தீவிரம் அதிகரிப்பதுமே இதற்கு முக்கியக் காரணம்.

ஆனால் பைரோ பன்முகத் தன்மையுள்ள சூழல் மண்டலத்தில் காட்டுத் தீ படர்ந்த பிரதேசங்களில் பொதுவாக பறவைகள் சிரமம் இல்லாமல் வாழ்கின்றன. கறுப்பு மரங்கொத்திகளுக்கு பைரோ பன்முகத் தன்மையுடைய காடுகளே மிகப் பிடித்தமானவையாக உள்ளன. புதிதாக எரிந்த காடுகள், குறைவான அளவு மட்டுமே எரிந்த காடுகளை இவை விரும்புகின்றன. ஒவ்வொரு காட்டுத் தீ சம்பவத்திற்குப் பிறகும் காட்டை மீட்க எடுக்கப்படும் பணிகளுக்கு இணையாக மனிதர்கள், வனவிலங்குகளின் நலன்களைப் பாதுகாப்பது தீ மேலாண்மையினர் எதிர்கொள்ளும் கடினமான சவால்.

தீ ஏற்பட்ட காடுகளில் வனவியல் வாழ்வைக் குறித்து ஆராய ஆய்வாளர்களுக்குப் போதுமான நேரம் கிடைப்பதில்லை. என்ன செய்ய வேண்டும், எப்பகுதியை முதலில் மீட்பது போன்றவை பற்றி உடனடியாக முடிவு செய்வது மிகக் கடினமாகவுள்ளது. இந்த சூழ்நிலையில் காட்டுத் தீக்குப் பிறகு கறுப்பு மரங்கொத்திகள் பறந்து வரும் பிரதேசங்களின் பாதுகாப்பு பற்றி ஆய்வாளர்கள் ஆராயத் தொடங்கினர்.

ஒரு காட்டுத் தீ நிகழ்வு ஏற்பட்டு ஒரு சில மாதங்கள் கழித்து தரவுகளைப் பயன்படுத்தி மரங்கொத்திகள் எங்கு அதிகமாக கூடுகின்றன என்று புதிய ஆன்லைன் கருவி மூலம் அறிய முடியும். காட்டுத்தீயின் தீவிரம் பற்றிய செயற்கைக்கோள் தரவை முதல் அடுக்காகக் கொண்டு பல அடுக்கு தகவல்கள் இந்த ஆன்லைன் கருவி மூலம் பெறப்படுகிறது. இத்தரவுகள் தீ மேலாண்மைத் துறையினரால் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் தீயால் இழக்கப்பட்ட வனப்பரப்பைத் தெரிந்து கொள்ள முடியும்.

மற்ற தரவு செய்திகள் மரங்கொத்திகளின் கூடுகளின் அமைவிடம், அவற்றிற்கு இடையில் இருக்கும் தொலைவு, அப்பகுதியில் வளரும் தாவரங்கள் பற்றிய விவரம், அந்த இடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை, தரைமட்டத்தில் இருந்து காட்டின் உயரம் மற்றும் கடைசியாக தீ ஏற்பட்ட பிறகு உள்ள ஆண்டு இடைவெளி போன்ற விவரங்கள் பெறப்படுகின்றன. பதினோரு ஆண்டு ஆய்வுகளின் பலனாக உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆன்லைன் கருவியின் உதவியுடன் இந்தப் பறவைகள் இருக்கும் இடங்கள் பற்றி முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்க முடியும்.

இதனால் காட்டைக் காப்பாற்ற ஏற்படும் நேர விரயத்தைக் குறைக்க முடியும். இந்த கருவி காட்டுத் தீ மேலாண்மைத் துறையினர், சூழல் பாதுகாவலர்கள், தனியார் நில உரிமையாளர்கள் போன்ற பல்வேறு பிரிவினருக்கு உதவும். இப்போது இக்கருவி கலிபோர்னியாவிற்கு மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும் இம்முறை மற்ற இடங்கள், பிற உயிரினங்களின் பாதுகாப்பிற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

காட்டுத்தீ அணைந்த பல மாதங்களுக்குப் பிறகுள்ள நிலைமையும் ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுத் துறையின் ஒருங்கிணைந்த தீ அறிவியல் பிரிவு, அமெரிக்க வனச்சேவைகள் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான கார்னல் அட்கின்சன் (Atkins) மற்றும் பறவைகள் எண்ணிக்கைக்கான ஆய்வுக் கழகத்தின் (Institute for bird population) நிதியுதவியுடன் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

எரிந்த மரங்கள், கறுத்த மண், தீ பிடித்த காட்டைப் பார்க்கும்போது எல்லாம் முடிந்து விட்டது என்றே நாம் நினைப்போம். எல்லாம் எரிந்து சாம்பலாகி இருக்கும். ஆனால் காட்டிற்குள் நடக்கும்போது புது உயிர்ப்பின் தளிர்கள் துளிர் விடுவதைக் காண முடியும். காட்டுத் தீயில் எரிந்த காடு நம்ப முடியாத ஒரு சூழல் மண்டலம்.

மரணமடையாத காடு

எரிந்த காடு சிக்கலானது, தனித்தன்மை வாய்ந்தது, மதிப்பு மிக்கது. எரிந்த ஒவ்வொரு காட்டின் ஒவ்வொரு துண்டிலும் புதிய உயிர் நிறைந்து தளும்பி நிற்கிறது. அந்தப் பிரதேசம் உயிருடன்தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது! அது மரணமடையவில்லை, மாறியே இருக்கிறது என்று ஸ்டில்மேன் கூறுகிறார்.

காடும் காட்டுத்தீயும் சமரசத்துடன் செயல்படுகின்றன. ஒவ்வொரு காட்டுத்தீக்குப் பிறகும் காடு முன்பை விட கூடுதல் வலிமையுடன் வளர்கிறது. காட்டுத்தீயை சமாளிப்பதற்குரிய அதிசயிக்கத்தக்க திறன் சில இன மரங்களுக்குள் இருக்கிறது. தீ எரித்த காடுகளில் முதலில் துளிர் விடும் மரங்களில் லாட்ஜ் பைன் என்ற மரமும் ஒன்று.

எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்த மரத்திற்கு வாழும் திறமை உள்ளது. இதன் சிறிய காய்கள் மூடப்பட்ட சிறிய அறைகள் போல இருக்கும். பழம் நிறைய ஆயிரக்கணக்கான வித்துகள் இருக்கும். பசையைப் பயன்படுத்தி இயற்கையாக சீல் செய்தது போல இதன் காய்களின் அமைப்பு காணப்படுகிறது. இந்த காய்கள் திறக்கப்பட வேண்டுமென்றால் காட்டுத்தீயால் உருவாகும் உயர்ந்த வெப்பம் தேவை! இந்த சூடு கிடைக்கவில்லை என்றால் இந்தக் காய்கள் ஆண்டுகணக்கில் முளை விடாமல் அப்படியே மண்ணில் கிடக்கும்! ஹாண்டுரோசா பைன் போன்ற சில மரங்கள் அவற்றின் கடினமான தோலைப் பயன்படுத்தி காட்டுத் தீயை சமாளித்து வாழ்கின்றன.

உலகெங்கும் காட்டுத் தீ சம்பவங்களின் தீவிரத் தன்மை அதிகரிக்கிறது. வெப்பநிலை அதிகமுடைய, நீடித்து நிற்கும் காட்டுத் தீ காடுகளின் இயல்பான மறுபிறவியை தடை செய்கிறது. மண்ணின் ஆழத்தில் பரவும் வறட்சி அதிக எண்ணிக்கையிலான வித்துகளை அழிக்கிறது. தீ அணையும்போது மண்ணில் மிச்சம் இருக்கும் வித்துகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. 2022ல் பிரேசிலில் அமேசான் காட்டுத்தீ முன்பை விட கடினமானதாக இருந்தது.

இதே ஆண்டில் காட்டுத் தீயால் உமிழப்பட்ட கார்பன் டை ஆக்சைடின் அளவு ஐரோப்பா, இங்கிலாந்தில் பல மடங்காக அதிகரித்தது. நாசாவின் வளங்களை மேலாண்மை செய்வதற்கான தீ தடுப்பு நடவடிக்கைகளுக்கான தளத்தின் (Firing formation for resource management site) புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 2023ல் பிப்ரவரி 13-20ம் தேதிக்கும் இடைபட்ட காலத்தில் மட்டும் சுமார் 1,156 காட்டுத் தீ சம்பவங்கள் பற்றிய செய்திகள் வந்தன.

காலநிலை மாற்றத்தின் கருணையில்தான் காடு இன்று உள்ளது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. கறுப்பு மரங்கொத்தி போல இன்னும் ஆயிரமாயிரம் பறவைகள் காடுகளைக் காக்க நமக்கு வேண்டும்.

** ** **

மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/columns/black-backed-woodpecker-and-deforestation-nature-future-1.8589651

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It