அதீத ஒலியும், ஒளியும் சூழலியல் மாசுபாடாக பரவலாக அறியப்படாவிட்டாலும் அவற்றை கண்டும், கேட்டும் உணர முடியும். அவற்றால் சூழலியல் பிரச்சனை ஏற்படுகிறதா இல்லையா என்பதை நாம் அறிந்திருக்கிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் அதிகமான ஒளியையும், ஒலியையும் புலன்களால் உணரவாவது முடியும். ஆனால் நம்மால் உணர முடியாத வகையில் ஒரு சூழலியல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மின்காந்தக் கதிர்வீச்சால் ஏற்படும் மாசுபாடு தான் அது. கடந்த இருபது ஆண்டுகளாக வரலாறு காணாத அளவிற்கு மின்காந்த மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளோம். அது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது என்ற போதும் நம் உயிர்ச் சூழல் மின்காந்த மாசுபாட்டால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகளவில் ஆய்வுகள் செய்யப்படவில்லை. மின்காந்த கதிர்வீச்சு நம் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதை அறியாமலே அதனுடனே வாழ்ந்து வருகிறோம். பொதுவெளியில் மின்காந்தக் மாசுபாடு குறித்த விசயங்களை வெளியிட்டு பரவலாக்குவதன் மூலமே அதன் எதிர்மறைத் தாக்கங்களை அறியச் செய்து அவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளமுடியும்.
புவியை அடையும் சூரியக் கதிர்வீச்சு 49 விழுக்காடு அகச்சிவப்பு கதிர்களையும், 43 விழுக்காடு கட்புலனாகும் ஒளியையும், 8 விழுக்காடு புற ஊதாக்கதிர்களையும் கொண்டுள்ளது. சூரியக் கதிர்வீச்சில் காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள், ரேடியோ அலைகள் ஆகியவை 1 விழுக்காடு மட்டுமே உள்ளன. காமா கதிர்கள், எக்ஸ்-கதிர்கள், அதிக அதிர்வெண் கொண்ட புற ஊதாக் கதிர்கள் ஆகியவை அயனியாக்கத்தை தூண்டி வினைபடுதிறன் மிக்க அயனிகளை (free radicals) உருவாக்குவதால் அயனியாக்கும் கதிர்வீச்சு என அழைக்கப்படுகின்றன. புற ஊதா கதிர்கள், காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள் உடலில் அயனியாக்கச் சிதைவைத் தூண்டுவதன் மூலம் புற்று நோய்களை ஏற்படுத்துகிறது.
இயற்கையான சூழலில் மனிதர்கள் குறைந்த அளவே அயனியாக்கும் கதிர்வீச்சின் தாக்கத்திற்கு உட்படும் நிலை காணப்பட்டது. குறைந்த அதிர்வெண் கொண்ட புற ஊதாக்கதிர், கட்புலனாகும் ஒளி, லேசர் ஒளி, அகச்சிவப்புக்கதிர், நுண்ணலைகள், ரேடியோ அலைகள் ஆகியவை அயனியாக்கா கதிர்வீச்சு என அழைக்கப்படுகின்றன. ஆனால் சமீபத்திய ஆய்வுகளின் மூலம் கட்புலனாகும் ஒளி, அகச்சிவப்பு கதிர், ரேடியோ அலைகள், நுண்ணலைகளும் தோல் செல்களில் அயனியாக்கத்தைத் தூண்டுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இயற்கை மூலங்களை விட மனித நடவடிக்கைகளாலும், தகவல் தொழில் நுட்ப மேம்பாடுகளாலும் அதிக அளவுக்கு ரேடியோ அலைகள், நுண்ணலைகள் போன்ற மின்காந்தக் கதிர்வீச்சுக்கு நாம் வெளிக்காட்டப்படுகிறோம். கணினிகள், கைபேசிகள், கைபேசி கோபுரங்கள், நுண்ணலை அடுப்புகள் திறன்மிகு மின்சார அளவி, தொலைக்காட்சிகள், திசைவிகள் என எல்லா மின் சாதனங்களும் வெவ்வேறு அளவுகளில் மின்காந்த கதிர்வீச்சை வெளியிடுகின்றன. நம்மால் நேரடியாகக் காண இயலவில்லை என்ற போதும் நாம் அதிக அளவிற்கு மின்காந்த கதிர்வீச்சுகளின் தாக்கத்துக்கு உட்படுகிறோம்.
புவியின் மின் காந்தப் புலம், 7. 7 ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணைக் கொண்டுள்ளது இது புவியின் நாடித்துடிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. மனித உடலிலும் ஒரு மின் காந்தப்புலம் உள்ளது. மனித மூளையின் ஆல்ஃபா அலைகளின் அதிர்வெண் (7. 5-12. 5) புவியின் நாடித்துடிப்புக்கு ஒத்ததாக உள்ளது. மனித உடல் ஓர் உயிர் மின்மண்டலத்தைக் கொண்டுள்ளது. அதன் மூலமே அனைத்தும் நரம்பு மண்டல சமிக்ஞைகள், இதயத் துடிப்பு என அனைத்து உடல் செயல்பாடுகளும் இயக்கப்படுகின்றன. மின் உடலியங்கியலில் இது குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இயற்கையில் புவியின் மின் காந்தப்புலம், எதிர்மின் தன்மை கொண்டதாக உள்ளது. மின் சாதனங்களால் ஏற்படும் மின்காந்தக் கதிர்வீச்சு நேர்மின் தன்மையை ஏற்படுத்துகிறது. மனித நடவடிக்கைகளால் உருவாக்கப்படும் மின் காந்தக் கதிர்வீச்சு நம் உடலில் உள்ள இயல்பான மின் காந்தப்புலத்துடன் குறுக்கிடுவதால் உடலில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
மின் காந்த மாசுபாட்டால் மனித உடலில் ஆக்சிஜனேற்ற சிதைவைத் (Oxidative stress) தூண்டி பல உடல்நலச் சீர்கேடுகளை ஏற்படுத்துகிறது. நம் உடலில் வளர்சிதை மாற்றத்தின் போது பல்வேறு ஆக்சிஜனேற்ற வினைகளும், ஆக்சிஜனொடுக்க வினைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவற்றிற்கிடையே ஒரு குறிப்பிட்ட சமநிலை ஆக்சிஜனேற்ற – ஒடுக்க சம நிலை (redox balance) தக்க வைக்கப்படுகிறது. ஒரு அணு அல்லது மூலக்கூறு ஒரு எலக்ட்ரானை இழக்கும் வேதிவினை ஆக்சிஜனேற்றம் எனப்படுகிறது. ஒரு அணு அல்லது மூலக்கூறு ஒரு எலக்ட்ரானை ஏற்கும் வேதிவினை ஆக்சிஜனொடுக்க வினை எனப்படுகிறது.
உடலில் வளர்சிதை மாற்றத்தின் போது நடைபெறும் உயிர்வேதிவினைகளில் உபப்பொருட்களாக ஆக்சிஜனேற்ற வினைபடு அயனிகள் (Reactive oxygen species-ROS) உருவாகின்றன. இவை பல்வேறு பணிகளை செய்கின்றன. இவற்றின் சமநிலை ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களால் (Anti-oxidants) ஒழுங்குபடுத்தப்படுகிறது.
ஆக்சிஜனேற்ற வினைபடு அயனிகளால் தூண்டப்படும் ஆக்சிஜனேற்றத்தைத் தடுப்பவை ‘ஆண்டி ஆக்சிடன்டு’ ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள் எனப்படுகின்றன. உடலில் ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களின் அளவு குறையும் போது, வினைபடு ஆக்சிஜனேற்ற அயனிகளின் அளவு அதிகரிப்பதால் ஆக்சிஜனேற்ற சிதைவு தூண்டப்படுகிறது. இதனால் உடலின் ஆக்சிஜனேற்ற – ஒடுக்க சம நிலை (redox balance) பாதிக்கப்படுகிறது. வினைபடு ஆக்சிஜனேற்ற அயனிகள் அருகிலுள்ள உயிர்மூலக்கூறுகளான மரபணு (நியூக்ளிக் அமிலம்), புரதம், கொழுப்பு ஆகியவற்றில் ஆக்சிஜனேற்றத் தொடர் வினையைத் தூண்டி செல்களையும், திசுக்களையும் சேதப்படுத்தும் நிகழ்வே ஆக்சிஜனேற்ற சிதைவு (Oxidative stress) என அழைக்கப்படுகிறது.
விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் ஈ, ஆகியவை ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களாக செயல்படுகின்றன. ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் பல வண்ண பழங்கள், காய்கறிகளில் அதிகம் காணப்படுகின்றன என்பதால் அவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும் போது நம் உடல் அதிக ஆக்சிஜனேற்ற சிதைவால் தாக்கப்படாது பாதுகாக்க முடியும்.
ஆக்சிஜனேற்ற சிதைவின் மூலமாகத் தான் வெள்ளையணுக்கள் கிருமிகளை அழிக்கின்றன. ஆனால் அதே நிகழ்வு நம் உடல் செல்களின் மீதே தூண்டப்பட்டால் அதுவே பல நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. புகை பிடித்தல், மது அருந்துதல், காற்று மாசுபாடு, ரத்த சர்க்கரை அதிகரிப்பு, தொற்று தாக்கம், விட்டமின் குறைபாடு ஆகியவற்றால் உடலில் உள்ள ஆக்சிஜனேற்ற வினைபடு அயனிகளின் அளவு அதிகரிப்பதால் ஆக்சிஜனேற்ற சிதைவு தூண்டப்படுகிறது. ஆக்சிஜனேற்ற சிதைவால் புற்றுநோய், நீரிழிவு, ஆஸ்துமா, நரம்பு நோய்கள் ஏற்படுகின்றன.
மின் காந்த கதிர்வீச்சு நம் உடலில் அதிக ஆக்சிஜனேற்ற வினைபடு அயனிகளை உருவாக்குகிறது, அதன் மூலமாக நம் உடலில் ஆக்சிஜனேற்ற சிதைவு தூண்டப்பட்டு பல எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகிறது. மின் காந்தக் கதிர்வீச்சின் தாக்கத்தால் நரம்பு மண்டலக் கோளாறுகள், புற்று நோய், கருவுறுதலில் பிரச்சனைகளை, நோய் எதிர்ப்புத் தன்மை குறைபாடு, இளமையில் முதுமை, குழந்தைகளில் வளர்ச்சி குறைபாடு எனப் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மின்காந்தக் கதிர்வீச்சின் தாக்கத்தை எவ்வாறு குறைக்க முடியும்? கம்பியில்லா தொழில் நுட்பத்தின் பயன்பாட்டை முடிந்த அளவிற்கு குறைத்துக் கொள்வது நல்லது. கம்பியில்லா தொழில்நுட்பத்திற்கு அதிக அதிர்வெண் கொண்ட மின்காந்தக் கதிர்வீச்சு பயன்படுத்தப்படுகிறது. கைப்பேசியையும், இணையத்தையும் பயன்படுத்தாத போது கம்பியில்லா சமிக்ஞையை அணைத்து வைக்க வேண்டும். கம்பியற்ற சாதனங்கள் – திசைவிகள் (routers), கைபேசிகள், மடிக்கணினிகள் அனைத்தும் அருகலை சமிக்ஞைகளை (Wifi signals) வெளியிடுகின்றன. முடிந்தவரை, பயன்பாட்டில் இல்லாத போது இச்சாதனங்களின் அருகலை செயல்பாட்டை துண்டித்து வைப்பது நல்லது. அது மட்டும் அல்லாமல், இத்தகைய சாதனங்களை பயன்படுத்தும் பொழுது அவற்றுடனான நேரடி உடல் தொடர்பைத் தவிர்க்க வேண்டும். கைபேசியை காதோடு உரசியவாறு வைத்து பேசுவதையும், மடிக்கணினியை மடியில் வைத்து பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். வீட்டில் அருகலை திசைவியை நாம் அதிகம் புழுங்கும் இடத்திலிருந்து சற்றுத் தள்ளி வைக்க வேண்டும். சட்டை, கால்சட்டை பைகளில் கைபேசியை வைக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
மின் காந்த கதிர்வீச்சின் தாக்கத்திலிருந்து காப்பு தருவதற்கான தொழில் நுட்பங்களும் சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு சந்தை படுத்தப்பட்டுள்ளன. மின்காந்தக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் கைபேசி, கணிணி உறையைப் பயன்படுத்தி பாதுகாப்பு பெறலாம். மின்காந்தக் கதிர்வீச்சின் தாக்கம் குறிப்பிட்ட உட்கிரகித்தல் வீதத்தால் அளவிடப்படுகிறது (SAR). குறைந்த உட்கிரகித்தம் வீதம் கொண்ட கைபேசியையும், பிற சாதனங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட உட்கிரகித்தல் வீதம் என்பது ஒரு சாதனத்தால் வெளியிடப்படும் மின்காந்த கதிர்வீச்சை உடல் உட்கிரகிக்கும் அளவைக் குறிப்பிடுகிறது. . இதன் அலகு 1. 6 வாட்/கிகி கொண்ட கைபேசிகள், சாதனங்கள் பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன.
இவை அல்லாமல் மின் காந்தக் கதிர்வீச்சினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க இயற்கையான ஒரு வழிமுறையும் உள்ளது. அதற்கு நீங்கள் வேறெங்கும் தேடவேண்டியது இல்லை, உங்கள் காலடியிலே மருத்துவர் இருக்கிறார். நேரடியாகப் புவியுடன் தொடர்பை ஏற்படுத்தும் புவியிணைவு (earthing/grounding) தான் அந்த வழிமுறை. இது வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படவில்லை அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ள்ப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், அமெரிக்காவின் கிளின்ட் ஓபர் மற்றும் போலந்தின் கே. சோகல், பி. சோகல் ஆகியோர் சுயேச்சையாக செய்த ஆய்வுகளின் மூலம் புவியிடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட படுக்கைகளும், பாய்களும், உடல் நலத்தை மேம்படுத்துவதை கண்டறிந்தனர்.
வீட்டில் மின் இணைப்பு ஏற்படுத்தும் போது மின்சார அதிர்ச்சி ஏற்படுவதைத் தடுக்க புவியுடன் இணைப்பு ஏற்படுத்தப்படுவது வழக்கம். இன்று நாம் காங்கிரீட் கட்டிடங்களில் வாழ்கிறோம், ரப்பர், நெகிழி காலணிகள் அணிந்து கொண்டு தான் நடக்கிறோம். ரப்பர், நெகிழி மின் கடத்தாப் பொருட்கள் என்பதால் புவியுடனான நேரடி தொடர்பு தடுக்கப்படுகிறது. நகரமயமான வாழ்க்கை முறையால் புவியுடனான நேரடித் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. புவியுடனான நேரடித் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் நம் உடலின் மின் காந்தச் சமநிலை பாதிக்கப்படுகிறது.
மீண்டும் புவியுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும். நம் கைகளும், கால்களும் நேரடியாகப் புவியைத் தொடவேண்டும். காலணிகள் இல்லாமல் வெறுங்கால்களுடன் மண்தரையில், புல்வெளியில், கடற்கரையில் நடக்க வேண்டும், உட்கார வேண்டும், படுத்துக் கொள்ள வேண்டும். மண்ணில் நடக்கும் போதும், கைகளை ஊன்றும் போதும், படுத்திருக்கும் போதும் உடல் புவியுடன் நேரடித் தொடர்பு கொள்கிறது. வீட்டிற்குள் இருந்தபடியே புவியிணைவை ஏற்படுத்தும் படுக்கைகள், இருக்கைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
புவியிணைவின் போது உடலானது புவியின் மேற்பரப்பில் உள்ள எண்ணற்ற எலக்ட்ரான்களுடனும் தொடர்பு கொள்கிறது. மனித உடல் மின்சாரத்தைக் கடத்தும் என்பதால், புவியுடன் நேரடியாக தொடர்பு ஏற்படும் போது இந்த எலக்ட்ரான்களை உடல் உட்கிரகிப்பதற்கு வழிவகை செய்கிறது.
புவியிணைவால், புவியிலிருந்து உடலுக்கு எலக்ட்ரான்கள் கடத்தப்படுவதால் உடலின் மின்புலம் சமனப்படுத்தப்பட்டு புவியின் மின் காந்தப் புலத்தின் நீட்சியாகிறது. புவியிணைவால் வெளிப்புறத்திலிருந்து வரும் மின்காந்தக் கதிர்வீச்சினால் உடலில் ஏற்படும் எதிர்மறைத் தாக்கம் குறைகிறது. மின்காந்தக் கதிர்வீச்சால் உடலில் தூண்டப்படும் ஆக்சிஜனேற்றச் சிதைவு புவியிணைவால் தடுக்கப்படுகிறது. உடலின் ஆக்சிஜனேற்ற – ஒடுக்க சம நிலை(redox balance) நிலை நிறுத்துவதற்கு புவியிணைவு துணைபுரிகிறது.
புவியிணைவினால் பலருக்கு நல்ல மன நிலையும் ஆழ்ந்தத் தூக்கமும், ஏற்படுவதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. புவியிணைவு ஆக்சிஜனேற்ற சிதைவால் ஏற்படுகிற நோய்களின் தீவிரத்தை குறைப்பதாகவும் அறியப்படுகிறது. புவியிணைவினால் இரத்த அழுத்தமும், இரத்தத்தின் பாகுத்தன்மையும், இதய செயல்பாடுகளும் சீரடைகிறது; உடல் வீக்கமும், வலியும், மன அழுத்தமும் குறைகிறது; துணைப் பரிவு நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, கார்டிசோலின் அளவை சீரமைக்கிறது.
மின் நிலையங்களுக்குத் தொலைவான இடங்களில் புவியிணைவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். மின்கம்பிகள், மின் கசிவுக்கான வாய்ப்பு இல்லாத பாதுகாப்பான இடங்களை முன்னெச்செரிக்கையுடன் தேர்ந்தெடுத்து புவியிணைவு கொள்வது நல்லது. நகர்புறங்களுக்குத் தொலைவான இடங்களில் புவியிணைவு கொள்வது சிறப்பு.
எப்படி சூரிய ஒளியும், சுத்தமான காற்றும், நீரும், சத்தான உணவும், உடற்பயிற்சியும் நம் உடல் நலத்தை பாதுகாப்பற்கான அடிப்படைத் தேவையாக உள்ளதோ அது போலவே புவியிணைவும் உடல் நலத்திற்கான ஒரு அடிப்படை தேவையாக உள்ளது. உணவூட்டம் மட்டுமல்லாது இயற்கையான முறையிலான மின்னூட்டமும் (electrical nutrition) உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக உள்ளது. என்பதை உணர்ந்து புவியிணைவினால் பயன்பெறுவோம். மின்காந்த மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்.
மின் காந்த மாசுபாடு மனிதர்களை மட்டுமல்லாது மற்ற உயிரினங்களின் நல்வாழ்விற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நம் புலன்களால் உணரக்கூடிய ஒன்றினால் ஆபத்து ஏற்படுகிறது என்றால் அதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் என்பதால் மின்காந்தமாசு புலன்களால் உணரக்கூடிய மாசுக்களை காட்டிலும் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அது குறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்படாமல் இருப்பது ஆபத்திற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது. மாசுகட்டுப்பாட்டு அமைப்புகள் இது குறித்து எந்த ஒழுங்குமுறையையும் செயல்படுத்தாமல் இருப்பதும், அரசின் கொள்கை வகுப்பாளர்களின் அலட்சியமும், நமக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. மின்காந்த மாசுபாட்டின் தாக்கம் குறித்து நம் சுற்றத்தார், நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். மின்காந்த மாசுபாட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.
- சமந்தா