வட அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜேம்ஸ் ஹேன்ஸன் பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், அவற்றின் தாக்கங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருபவர். புவி வெப்பமடைவதால் ஏற்படும் கடும் விளைவுகள் குறித்து தனது ஆய்வுகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரது ஆய்வின்படி, மிகையான- மிகக் கடுமையான- வெப்பநிலை கொண்ட கோடைப் பருவங்கள் தற் போது மிகவும் அதிகரித்துள்ளன.

பருவநிலை மாற்றங்களால் 1951 முதல் 1980 ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக உலகின் மொத்த நிலப்பரப்பில் 0.1 முதல் 2 விழுக்காடே பாதிப்பிற்குள்ளாயின. ஆனால் தற்போது 10 விழுக்காடு நிலம் பாதிப்பிற்குள்ளா கிறது. கடந்த 50 ஆண்டுகளில் என்றுமில்லாத அளவிற்கு இன்று வடஅமெரிக்காவில் மிகக் கடுமையான வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. உணவு உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. இத னால் உணவு தானியங்களின் விலை 17 விழுக் காடு அதிகரித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவின் சாஹேல் பகுதியில் கடும் பஞ்சம் தலைவிரித் தாடுகிறது. உலகின் பல பகுதிகளிலும் வறட்சியால் உணவு உற்பத்தி குறைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரி பொருளைப் பயன்படுத்தும் மகிழுந்து, துள்ளுந்து போன்ற தானியங்கி வாகனங்களிலிருந்து வெளிப்படும் கரியமிலவாயு புவி வெப்பமடை தலுக்கு ஒரு முக்கியக் காரணியாகும். புவி வெப்ப மடைவதைக் தடுக்க துள்ளுந்து, மகிழுந்துகளின் உற்பத்தியைக் குறைக்க வேண்டும். மிதிவண்டி யின் பயன்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். ஆனால் உலகின் பெரும்பான்மை நாடுகள் தனியாளுக்கான தானியங்கி வாகனங் களின் உற்பத்தியை அதிகரித் துக் கொண்டே இருக்கின்றன.

மேற்குலக நாடுகளின் மிகை நுகர்வால் புவி வெப்பமடைந் துள்ளது. இந்நாடுகள் புவி வெப்பமடைதலைத் தடுக்க பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக “உயிரி எரிபொருள்” பயன்பாட்டைத் தீர் வாக முன்வைக்கின்றன. கரும்பு, சோயா, சோளம் போன்ற உண வுப் பயிர்களிலிருந்து உயிரி எரிபொருள் உற்பத்தி செய்யப் படுகிறது. இதற்காக வறிய நாடுகளின் வேளாண்மை உயிரி எரிபொருள் பயிர்களுக்குத் திரும்பி விடப்படுகின்றது. மேற் குலக செல்வந்தர்கள் மகிழுந்துகளில் செல்ல மூன்றாம் உலக நாடுகளின் விளைநிலங்களும், உணவுப்பயிர்களும் கொள்ளை போகின்றன.

பணக்கார நாடுகளின் உயிரி எரிபொருள் தேவைக்காக உலகெங்கிலும் விளைநிலங்களின் அபகரிப்பு அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய கூட்டுக் குழுமங்கள் உயிரி எரிபொருள் உற்பத்திக்காக 125 இலட்சம் ஏக்கர் பரப்புள்ள விவசாய நிலத்தை மூன்றாம் உலக நாடு களிடமிருந்து அபகரித்துள் ளன. இக்குழுமங்கள் கைப் பற்றியுள்ள நிலத்தின் அளவு டென்மார்க் நாட்டின் பரப் பிற்கு சமமானதாகும். காடு களும், மேய்ச்சல் நிலங்களும் “பசுமை எரிபொருள்” உற்பத் திக்காக அழிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் சந்தைக்காக உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகள் நிலத் திலிருந்து துரத்தியடிக்கப் பட் டுள்ளனர்.

வட அமெரிக்காவில் மக்காச் சோள உற்பத்தியில் 40 விழுக் காடு உயிரி எரிபொருள் உற்பத் திக்குப் பயன்படுத்தப் பட்டுள் ளது. இந்த ஆண்டு உற்பத்திக் குறைந்துள்ளதால் இன்னும் அதிக விழுக்காடு மக்காச் சோளம் உயிரி எரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். ஐரோப்பிய நாடுகளின், சீனா வின் தேவைக்காக இந்த ஐந்து நாடுகளிலும் மரபின மாற்ற சோயா என்ற ஒற்றைப்பயிர் பயிரிடப்படுகிறது. உள்நாட்டுத் தேவைக்காக உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகள் நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மரபீனி மாற்ற சோயா பயிரிடப்படுவதை எதிர்த்த பராகு வாய் அதிபர் பெர்டினாண்ட் டோ லூஹோவின் பதவி பறி போனது. இடதுசாரி சிந்தனை யுள்ள, மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட இவர் பன்னாட்டுக் குழுமங்களின், வல்லரசுகளின் சதியால் பதவி இழந்தார்.

உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளின் அரசியல், பொருளா தார இறையாண்மை மறுக்கப் படுகிறது; அழிக்கப்படுகிறது.

உயிரி எரிபொருள் உற்பத் திக்காக காடுகள், மேச்சல் நிலங்கள் அழிக்கப்படுவதையும், நைட்ரஜன் உரங்களின் பயன் பாட்டையும் கணக்கில் கொண் டால் பெட்ரோல் டீசல் போன்ற புதைபடிவ எரிபொரு ளைக் காட்டிலும், உயிரி எரி பொருள் உற்பத்தியால் வெளிப் படும் “பசுமை இல்ல வாயுக் களின்”அளவு அதிகம் என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள் ளன. உயிரி எரிபொருள் உற் பத்தி புவியை மேலும் வெப்ப மடையச் செய்வதோடு உலகில் பட்டினியையும் பஞ்சத்தையும் அதிகரிக்கவே வழி செய்கிறது.

கடந்த முப்பதாண்டுகளில் உலகெங்கிலும் பணக்காரர் களிடம் அதிகப் பணம் குவிந் துள்ளது. ஏழை, பணக்காரர் களிடையே ஏற்றத் தாழ்வு அதிகரித்துள்ளது.பெரிதும் பணக்காரர்களின் தேவைகளுக் காகவே சந்தை உற்பத்தி நடக் கிறது. சந்தையில் எதை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஓட்டுரிமை பெரும்பான்மை மக்களிடம் இல்லை. பெரும்பான்மை மக் களிடம் வாங்கும்திறன் இல்லை. புதிய தாராளமயமும், உலக மயமும் பொருளாதாரத் தைத் தீர்மானிக்கும் உரிமையை பெரும்பான்மை மக்களிடமி ருந்து முற்றிலுமாகப் பறித்து விட்டது. பணக்காரர்களின் மிகை நுகர்வுக்கும் ஏழை மக்களின் உயிர் வாழ்தலுக்கு மிடையேயான போராட்டமாக வாழ்க்கை மாறிவிட்டது.

மூன்றாம் உலக நாடுகள் தங்களது அரசியல், பொருளாதார இறையாண்மையை இழந்துள்ளன. புவி வெப்ப மாதலும், சூழல் சீர்கேடும் தேசங்களின் பொருளியல் இறை யாண்மைப்பறிப்போடு இணைந்தே நிகழ்கிறது. உல கெங்கிலும் உலகமயத் தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆப்பிரிக்க, அரபு நாடுகளிலும், இலத்தீன் அமெ ரிக்க நாடுகளிலும் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி என்பது அடிப்படையில் ஒரு அரசியல் பொருளாதார இறையாண்மை மீட்புப் போராட்டமே ஆகும்.

ஆதாரங்கள்:

1.Hunger Games by Georgo Monbiot Published in “ Guardian” 4th August 2012.

2. South America: Soy’s Great Homeland, Upside Down world, 6.09.2012.

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவ‌ம்பர் 2012 இதழில் வெளியானது)

Pin It