கடந்த ஜுலை மாதம் 23-28, 2012 வரையான ஒரு வார காலம், ஆந்திர கடலோர மாவட்டங்களான விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பத்திரிக்கையாளர் செந்தளிர், புகைப்பட பத்திரிக்கையாளர் ஸ்டீபன் ஆகியோருடன் சென்றிருந்தேன். ஸ்ரீகாகுளம் மாவட்டம், கொவ்வாடா என்ற கிராமத்தில் அமைய உள்ள அணு உலையை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டம் பற்றியும், லக்ஷ்மிபேட்டா என்ற ஊரில் உயர் சாதி இந்துக்களால் ஐந்து தலித் மக்கள் கொல்லப்பட்டது பற்றியும் பதிவு செய்யும் நோக்கத்தோடு இந்தப் பயணம் திட்டமிடப்பட்டது. இறுதியில், அனல், அணு மின் நிலையங்களை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக சில காரணங்களால் மாற்றப்பட்டது.

குறிப்பாக இந்தப் பயணத்தில் நான் கலந்து கொள்ள இரண்டு காரணம் இருந்தது. கடந்த ஓராண்டாக அரசியல் செயல்பாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களை பல முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் நான் அங்கு கண்ட அந்த மக்களின் அரசியல் எழுச்சியும், போராட்ட குணமும் அம்மக்களின் மீதும், அவர்களின் போராட்டங்களின் மீது இயல்பாகவே ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இரண்டு, கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டதின் காரணமாக ஆந்திராவில் அணு உலையை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டத்தைப் பற்றி அறியும் ஆர்வம்.

ஜூலை 23, 2012 அன்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணியளவில் விசாகப்பட்டினம் சென்று சேர்ந்தேன். விசாகப்பட்டினத்திற்கு இதுதான் என்னுடைய முதல் பயணம். தொடருந்து நிலையத்தை விட்டு வெளியில் வந்தபோது, லேசான தூறலுடனும் மிதமான குளிருடனும் நகரம் அழகாகத் தோன்றியது. பிறகு, அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு அன்னபூர்ணா என்ற தோழர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றேன். அன்று மாலை, செந்தளிர், ஸ்டீபன் உடன் திரு.ரத்னம் அவர்களை சந்திக்க மூவரும் கிளம்பினோம். திரு.ரத்னம், சூழலியல் மாத இதழ் ஒன்றை நடத்திக்கொண்டு இருப்பவர். களப்பணி செய்து சூழலியல், இயற்கை வளங்கள் பாதுகாப்பு, மக்கள் போராட்டம், அரசின் ஒடுக்குமுறை பற்றி மக்களிடம் தன் இதழ் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். எங்களின் ஒரு வார பயணம் வெற்றிகரமாகவும், பயனுள்ளதாகவும் அமைய உதவியவர்களில் ரத்னம் முக்கியமானவர்.

ஜுலை 24, 2012 அன்று மாலை இரண்டு முக்கிய அரசியல், சமூக செயற்பாட்டாளர்களை சந்திக்க ரத்னம் ஏற்பாடு செய்திருந்தார். முதலில் நாங்கள் சந்தித்தது, முன்னாள் இந்திய அரசுப் பணி, திரு. இ.எ.எஸ்.ஷர்மா அவர்களை. இவர் தொடர்ச்சியாக அணு ஆற்றலின் ஆபத்துகள் பற்றி பத்திரிக்கைகளிலும், வலை தளத்திலும் எழுதி வருபவர். அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களை ஆதரிப்பவர். அவருடன் பேசும்போது, தரமில்லாத மின்பகிர்மான கட்டமைப்பினால் 35-37% மின்சாரம் வீணாவதாகவும், மின்பகிர்மான கட்டமைப்பை தரமானதாக மாற்றுவதன் மூலம் 60,000 மெகா வாட் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று கூறினார். மேலும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மாற்று எரிசக்தி சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்கள், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டிற்கு சாத்தியமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தன்னுடைய‌ கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்.

மேலும் அவர், இந்திய அரசு செய்து கொண்டுள்ள அணு உலை சார்ந்த வியாபார ஒப்பந்தங்கள் வழியாக இரண்டாம் அலைக்கற்றைக்கு இணையான மற்றுமொரு ஊழல் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். கூடங்குளம் மக்கள் தங்கள் அறவழியிலான போராட்டங்களையே தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மக்கள் போராட்டங்கள் செல்ல வேண்டிய திசை பற்றிய தன்னுடைய‌ கருத்தையும் பகிர்ந்து கொண்டார். இவரின் பதிவுகளை www.eassharma.in என்ற வலை தளத்தில் காணலாம். ஷர்மா அவர்களிடம் இருந்து விடைபெற்று, திரு. கிருஷ்ணா, மனித உரிமை மன்றம் (HRF) அவர்களை சந்திக்கப் புறப்பட்டோம்.

திரு.கிருஷ்ணாவை ஏற்கனவே ஈழத்தில் நடந்த போர்க்குற்றம் பற்றி பேச ஹைதராபாத் சென்றிருந்தபோது சந்தித்த அறிமுகம் இருந்ததால், சிறிது நேரம் ஈழத்து மக்களின் இன்றைய நிலை பற்றி பேசினோம். பிறகு ஆந்திர மக்கள் போராட்டங்கள் பற்றி எங்கள் உரையாடல் நகர்ந்தது. கடற்கரையை ஒட்டிய தொழிற்சாலை பகுதி (Industrial Coastal Corridor) அமைக்க 2005 இல் போடப்பட்ட ஆந்திர அரசின் அரசாணை 34 மூலம், ஆந்திராவின் தெற்கில் நெல்லூரிலிருந்து, வடக்கில் ஸ்ரீகாகுளம் மாவட்டங்கள் வரையான கடற்கரை ஒட்டிய 972 கி.மீ பகுதிகளில் மட்டும் சுமார் 107 அனல் மின் நிலையங்கள் கொண்டு வர மாநில அரசு திட்டம் தீட்டியுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக நெல்லூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு மண்டல்களில்(தாலுக்காவை விட சிறிய பரப்பளவை கொண்டவை) மட்டும் 28 அனல் மின் நிலையங்கள் கொண்டு வர உள்ளதாகவும், அதற்காக ஏராளமான விளைநிலங்கள் கையகப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும், அதனை எதிர்த்து உள்ளூர் மக்களால் வலுவான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

பெரும் எண்ணிக்கையிலான அனல் மின் நிலையங்கள் சிறிய நிலப்பரப்பில் கொண்டு வரப்பட உள்ளதை கேட்டபோது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. ஒரு லட்சம் மெகா வாட் மின் உற்பத்தி என்ற இலக்குடன், ஆந்திராவின் கடற்கரையோர பகுதிகளில் பெரும் முதலாளிகளுக்கு அனல் மின் நிலையங்கள் அமைக்க ஆந்திர அரசு அனுமதி அளிக்கும் திட்டத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார். ஆந்திர கடற்கரையோரப் பகுதிகள் தான் ஆந்திராவின் நெற்களஞ்சியங்களாக அறியப்படுகின்றன. இந்தப் பகுதி விவசாயிகள், மீனவர்களை அழித்து விடும் திட்டமாகவே அனல் மின் நிலையத் திட்டங்கள் பார்க்கப்படுகின்றன. மேலும், அடிப்படைத் தேவையான மின்சாரம், ஒரு சந்தைப்பொருளாக மாறுவதையும், அதை தனியார் மயப்படுத்துவதன் மூலம், பெரு முதலாளிகள் தங்கள் லாப வேட்டைக்குத் தயாராவதையும், ஆயிரக்கணக்கான விவசாயிகளின்/மீனவர்களின் வாழ்வாதாரமும், ஆந்திர மாநிலத்தின் அடிப்படை உணவு பாதுகாப்பும் கேள்விகுறியாகப் போவதையும் உணர முடிந்தது. அன்று இரவு கிருஷ்ணா அவர்களின் வீட்டிலேயே தங்கினோம்.

பரவாடா அனல் மின்நிலையத்தின் பாதிப்பு:

ஜூலை 25, 2012 காலை விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 40 கி. மீ தொலைவில் அமைந்துள்ள என்.டி.பி.சி.யின் அனல் மின் நிலையத்தை நோக்கி மகிழுந்தில் பயணமானோம். விசாகப்பட்டினத்தைக் கடந்து அதன் புறநகர் பகுதி வழியாக செல்லும்போது பரவலாக‌ தொழிற்சாலைகளைப் பார்க்க முடிந்தது. இரும்புத்தாது மற்றும் உரத்தொழிற்சாலைகளால் அப்பகுதியின் சுற்றுசூழல் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பதைக் காண முடிந்தது. அந்தப்பகுதியில் இருந்த உரத்தொழிற்சாலையை கடந்தபோது ஒரு வித மணத்தை நுகர நேர்ந்தது. அது அமிலத்தன்மை வாய்ந்தது என்று ரத்னம் கூறினார்.

boy_thermal_power_1

பாதிக்கப்பட்ட சிறுவன் - பரவாடா அனல் மின் நிலையம்

சுமார் ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு என்.டி.பி.சி.யின் அனல் மின்நிலையம் அருகில் உள்ள சுயம்புபுரம் என்ற கிராமத்தை அடைந்தோம். சுமார் 140 வீடுகளை கொண்ட சிறிய கிராமம். இக்கிராம மக்களுக்கு விவசாயம் முக்கிய தொழிலாகவும், சிலர் அனல் மின்நிலையத்திற்கு கூலி வேலைக்கும் செல்கின்றனர். இங்குள்ள நிலத்தடி நீர், அனல் மின்நிலையம் வருவதற்கு முன் நல்ல குடிநீராக பயன்பட்டதாகவும், பிறகு சிறிது சிறிதாக மாசுபட்டு, இப்போது குடிநீராகப் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளதாகவும், இக்கிராமப் பெண்கள் தெரிவித்தனர். அனல் மின்னிலையத்திற்குள்ளே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதாகவும், தங்களுக்கான குடிநீரை அங்கிருந்து எடுத்து வருவதாகவும் கூறினார். 40 வயதுக்கு கீழ் உள்ள 12 பெண்களுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு காரணமாக கருப்பை நீக்கப்பட்டதாகவும், நிறைய பெண்களுக்கு கருக்கலைதல் நடப்பதாகவும் கிராமப் பெண்களோடு உரையாடும்போது தெரிவித்தனர்.
 
இங்கிருந்து அருகில் உள்ள பிட்டவானிபாலம் என்ற மற்றொரு சிறிய கிராமத்திற்கு சென்றோம். இங்கு சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்கும் குடிநீர் பிரச்சினை உள்ளதாக மக்கள் கூறினார். இங்கு சிலருக்கு சுவாசக்கோளாறு, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் தெரிவித்தனர். மூளைப் புற்று ஏற்பட்டு நடுத்தர வயதுக்காரர் ஒருவர் இறந்துள்ளார். இந்த ஊருக்கு மிக அருகில், அனல் மின்நிலையத்தில் எரிக்கப்படும் நிலக்கரியிலிருந்து உண்டாகும் கழிவான சாம்பல் கொட்டப்படும் மிகப்பெரிய குளம்(Ash Pond) உள்ளது. அந்த குளத்திற்கு வெளியேயும் சாம்பல் கொட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இந்த ஊரில் ஏற்படும் சுவாசக்கோளாறு, நுரையீரல், மூளைப் புற்று போன்ற நோய்களுக்கு இந்த சாம்பல் கழிவுதான் காரணம் என்று வாய் மொழியாக மருத்துவர்கள் கூறியதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த காரணங்களை மருத்துவர்கள் தங்கள் மருத்துவ அறிக்கையில் கொடுப்பதில்லை என்று ரத்னம் கூறினார்.

நாங்கள் அங்கு சென்றிருந்த அன்று கூட, நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் சுவாசக்கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக மக்கள் கூறினார். நரம்புக் கோளாறு காரணமாக நடக்க முடியாமல் போன ஒரு சிறுவன், ஒரு நடுத்தர வயதுக்காரர், ஒரு பெரியவரைப் பார்த்தோம். ஒரு முதியவருக்கு நரம்புப் பிரச்சினை காரணமாக, கால்களில் ஆங்காங்கு பெரிய தடிப்புகள் இருந்தன. இங்கும் பரவலாக பெண்களுக்கு கருக்கலைதல் நடப்பதாக பெண்கள் கூறினார். ஒரு பெண்ணுக்கு கால்களில் தோல் பிரச்சினை காணப்பட்டது. 20-30 பேர் கண்பார்வை இழந்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர். 

oldman_thermal_power_2

 நரம்புகள் பாதிக்கப்பட்ட முதியவர்

1000 பேருக்கு குறைவான மக்கள் தொகை கொண்ட இந்த கிராமங்களில் இத்தனை உடல் நலக்கோளாறு என்பது சற்று அதிகப்படியானதாகத் தோன்றுகிறது. மேலும் மருத்துவர்கள் அனல் மின் நிலையத்தின் கழிவுகளால் தான் நோய் உண்டாகியிருப்பதாக வாய் மொழியாக மட்டும் மக்களிடம் கூறியிருப்பதை வைத்தே இந்த அனல் மின் நிலையத்தின் கழிவுகளின் பாதிப்பை நாம் உணர முடிகிறது. தொழிற்சாலைகளால் அப்பகுதிகள் வளர்ச்சி அடைவதாக நம்முடைய அரசாங்கங்கள் தொடர்ந்து கூப்பாடு போடுகின்றன. என்.டி.பி.சி. இப்பகுதியில் செய்துள்ள வளர்ச்சிப் பணிகளை பார்த்தால் இதன் உண்மை முகம் தெரியும். இந்த கிராமங்களுக்கு சுடுகாடு கட்டிகொடுக்கப்பட்டுள்ளது. (அவசியம் என்று கருதியிருப்பார்கள் போல!) பள்ளிக் கட்டிடம், பென்ச், நாற்காலி போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களை கூலிக்கு பணியில் அமர்த்தியுள்ளனர். இந்த கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர். அனல் மின்நிலையத்தில் வேலை செய்பவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் என்.டி.பி. சி நிர்வாகம், அதே நீரை குழாய் வழியாக இக்கிராமங்களுக்கு வழங்க ஏன் ஏற்பாடு செய்யவில்லை?

paravada_village_600

பரவாடா மின் நிலையத்தை ஒட்டி உள்ள கிராமத்தின் தண்ணீர் விநியோகம்

இந்த கிராமங்களின் அடிப்படை கட்டமைப்பான சாலை, கழிவுநீர் வெளியேற்றும் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற எதுவுமே முன்னேற்றம் காணவில்லை. இக்கிராமங்களை விட்டு திரும்பும் வழியில் உப்பளங்களைப் பார்த்தோம். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பிலும் அனல் மின்நிலையத்தின் கழிவுகளால் பாதிப்பு ஏற்படுவதாக ரத்னம் கூறினார். இந்த கிராம மக்களிடம் இருந்து விடைபெற்று, மீண்டும் விசாகப்பட்டினம் நோக்கி பயணமானோம். 
 
புடுமுறு பயணம்:

மறுநாள் ஜூலை 26, 2012 , ஸ்ரீகாகுளம் மாவட்டம், கொவ்வாடா என்ற மீனவ கிராமப் பகுதியில் அமைய உள்ள அணு உலையை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டத்தைப் பற்றி அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்களிடமும், போராட்டக் குழுவிடமும் கேட்டு அறிவதாகத் திட்டம். விசாகப்பட்டினத்திலிருந்து கொவ்வாடா சுமார் 70 கி.மீ. தொலைவு இருக்கும். அதனால், கொவ்வாடாவிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள புடுமுறு என்ற ஊரில் ரத்னம் அவர்களின் அமைப்பான மக்கள் போராட்டங்களின் தேசிய கூட்டமைப்பைச் (NAPM) சேர்ந்த திரு. ராமு அவர்களின் வீட்டில் இன்று இரவு சென்று தங்குவதாக முடிவு செய்யப்பட்டது. ரத்னத்திடம் விடைபெற்றுக்கொண்டு மாலை விசாகப்பட்டினத்திலிருந்து புடுமுறுவுக்குப் புறப்பட்டோம். சுமார் 1.30 நேரப் பயணம். அன்று இரவு திரு.ராமுவின் நண்பர் வீட்டில் தங்கினோம். மறுநாள் நிகழ்ச்சி நிரலையும் பேசி முடிவு செய்து கொண்டோம்.

ஜூலை 26, 2012 காலை கொவ்வாடா புறப்படத் தயாரானோம். ராமு கொவ்வாடா பயணத்திற்காக ஒரு ஆட்டோவையும், திரு. கோபால் என்பவரை எங்களுக்கு வழிகாட்டியாகவும் ஏற்பாடு செய்திருந்தார். கொவ்வாடா செல்லும் வழியெல்லாம் முந்திரித் தோட்டங்களும், பனைமரங்களும், சிறுதானிய பயிர்களுமாக பச்சைப் பசேல் என்று இருந்தது. இந்தியாவின் கிராமங்களில் போக்குவரத்து வாகனம் பங்கு தானிகள்தான்(share auto) போலும். எங்கு பார்த்தாலும் தானிகளில், தானியின் மேல் கூரைகளில் என்று மக்கள் பெரும்பாலும் பங்கு தானியிலேயே பயணம் செய்வதைப் பார்க்க முடிந்தது. ஒரு அரசு பேருந்தையும் எங்களால் பார்க்க முடியவில்லை. வழியில் இருந்த கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பான நல்ல சாலையோ, கழிவு நீர் வெளியேற்றும் வசதியோ காண முடியவில்லை. ஆங்கில வழி தனியார் பள்ளி பேருந்துகளை மட்டும் காண முடிந்தது. குறைந்தது 30-40 நிமிட பயணத்திற்குப் பிறகு பெரிய கொவ்வாடா என்ற மீனவ கிராமத்தைச் சென்றடைந்தோம்.

இடிந்தகரை கிராமத்தையும், மக்களையும் பார்த்து விட்டுச் சென்ற எனக்கு, கொவ்வாடா மக்களின் வாழ்க்கை மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாகப் பட்டது. இங்கு போரட்டக் குழுவைச் சேர்ந்த திரு.அல்லிபில்லி ராமுடு முன்னாள் கிராமத்தலைவர் (Ex. MPTC, Mandal Parishad Territorial Constituency Member) அவர்களைச் சந்தித்தோம். கொவ்வாடா போராட்டம் பற்றிய அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். ஒரே பஞ்சாயத்தைச் சேர்ந்த பெரிய கொவ்வாடா, சின்ன கொவ்வாடா, ராமச்சந்திரபுரம் என்ற மூன்று கிராமங்களை உள்ளிட்ட 2000 ஏக்கர் நிலம் அணு உலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறினார். இந்த மூன்று கிராமங்களில் சுமார் 1250 வீடுகள் உள்ளன.

2011 கணக்குப்படி சுமார் 5000 மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் நிலங்கள் எதற்கும் பட்டா கிடையாது. 1992லிருந்து போராட்டம் நடப்பதாக கூறுகின்றனர். 2007 தேர்தல் பிரசாரத்திற்காக ரணஸ்தளம் வந்த ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி புலிவேந்தல் என்ற வேறொரு பகுதியை அணு உலைக்காக தேர்ந்தெடுக்கப் போவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் 2009 இல் ரோசையா தலைமையிலான அரசு மக்களிடம் எந்த முன்னறிவிப்பும் கொடுக்காமல் கொவ்வாடா பகுதியில் அணு உலை அமைய இருப்பதாக செய்தித்தாள்களில் அறிவிப்பு செய்துள்ளது. மக்களிடம் எந்த கருத்துக்கணிப்பும் செய்யாமலேயே இந்த பகுதியில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளன. மக்கள் அதிகாரிகளை அணுகியபோது, குரவிபேட்டா என்ற மற்றொரு கடலோர பகுதிக்கு இவர்களை மீள்குடி அமர்த்துவதாக கூறியுள்ளனர்.

ஏன் அணு உலையை எதிர்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ஒன்று வேறொரு கடலோர பகுதிக்கு மீள்குடி அமர்த்தப்பட்டால் அங்கு மீன்வளம் நிறைந்த பகுதிகள் பற்றி தெரியாது, அதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இரண்டாவது, இவர்களின் நிலங்களுக்கு பட்டா கிடையாது. எனவே இடப்பெயர்வு செய்யப்பட்டால் இழப்பீடு எதுவும் கிடைக்காது என்று கூறினார். இங்கு அமைய உள்ள அணு உலை பற்றி பரவலாக மண்டல், மாவட்ட அளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்களால் செய்யப்பட்டுள்ளது. ரணஸ்தளம் மண்டலில் உள்ள 30 கிராமங்களில் அணு உலையை எதிர்த்து தீர்மானம் போடப்பட்டுள்ளது. லவேரு, இச்செர்லா, ரணஸ்தளம் ஆகிய மண்டல் அளவிலும், ஸ்ரீகாகுளம் மாவட்ட அளவிலும் தீர்மானங்கள் போடப்பட்டுள்ளன. 
 
அடுத்து, தெலுங்கு தேசம் கட்சியின் மண்டல் செயலர் திரு. மைலபிள்ள போலிசு என்பவரைச் சந்தித்தோம். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அணு உலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் பற்றிய விவரங்களை தரச் சொல்லி ஸ்ரீகாகுளம் மாவட்ட வட்டாசியரை அணுகியுள்ளார். ஆனால், ஒரு லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் இருந்தால்தான், தகவல் பெற முடியும் என்று வட்டாச்சியரிடம் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. திரும்பவும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரை அணுகப்போவதாக கூறினார். இங்கிருந்த மக்களில் 80% பேர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாகவும், மீதம் உள்ள மக்களில் 30% பேர்களுக்கு அரசு வீடுகள் வழங்கி உள்ளதாகவும், 70% மக்கள் குடிசை வீடுகளிலேயே வாழ்வதாகவும் கூறினார். ரணஸ்தள மண்டலில் உள்ள 115 கிராமங்களில், 110 கிராமங்கள் மீனவ கிராமங்கள். இதில், 3 லட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர். பெரிய கொவ்வாடாவிலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் 5 கிராமங்கள் உள்ளன. ஸ்ரீகாகுளம் கொவ்வாடாவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு கட்டப்படும் அணு உலை உலகில் எங்குமே நடைமுறையில் இல்லாத அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்போகிறது. இந்த தொழில்நுட்பம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்டுள்ளதாக போலிசு கூறினார். மேலும், கொவ்வாடாவில் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை என்றும், அரசு வேலையில் யாருமே இல்லை என்றும் ஆதங்கப்பட்டார்.

அடுத்ததாக, ராமச்சந்திரபுரம் சென்றோம். இங்கிருந்த பொதுமக்கள் சிலரிடம் உரையாடினோம். கொவ்வாடா பகுதியில் மீன்வளம் சொல்லிக்கொள்ளும் படி இல்லையாதலால், தாங்கள் கூலி வேலையை நம்பி உள்ளதாகக் கூறினர். அரசு மாற்று இடம் கொடுத்தால் போகத் தயாராக இருப்பதாகக் கூறினர். பிறகு, அருகிலிருந்த கடற்கரைப் பகுதியை நோக்கிச் சென்றோம். அங்கிருந்த ஒரு முதியவரிடம் பேசினோம். அவர், கொவ்வாடா மக்களில் ஒரு பகுதியினர், மீன் பிடி தொழிலுக்கு மாற்றாக பிளாஸ்டிக் கயிற்றில் ஊஞ்சல், தொப்பி போன்றவற்றைச் செய்து மற்ற மாநிலங்களுக்குச் சென்று பல மாதங்கள் தங்கி விற்பனை செய்வதாகக் கூறினார். இதனால் அவர்களின் குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்படுவதாகக் கூறினார். தமிழக‌த்தின் சாலையோரங்களில் தொப்பி, ஊஞ்சல் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் இந்த கிராம மக்கள்தான் என்றார் அந்த முதியவர். இதனால் இந்த கிராம மக்களில் சிலருக்கு தமிழ் கொஞ்சம் தெரியும் என்றார். இந்த பாரம்பரிய மீனவர்கள் தங்கள் தொழிலை, வாழ்விடங்களை விட்டு இடம்பெயர என்ன காரணம் என வினவினோம். இந்த கடலோர பகுதியில் கடந்த 20 வருடங்களாகவே மீன்வளம் குறைந்து விட்டதாகக் கூறினார். இதற்கு காரணம், இந்த பகுதிக்கு அருகில் உள்ள பைதபீமாவரம் என்ற இடத்தில உள்ள வேதிப்பொருட்கள் தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுகள் பல ஆண்டுகளாக கடலில் கலக்கப்படுவதுதான் என செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

கடற்கரையில் மக்களோடு பேசிக்கொண்டு இருக்கும்போது, அணு சக்திக் கழகத்தை(NPCIL) சேர்ந்த சில அதிகாரிகள் அங்கு வந்தனர். நாங்கள் அணு உலை மூலம் மின்சாரம் என்ற விளம்பரத்தில்/அரசியலில் உள்ள ஆபத்துக்கள் பற்றிய கேள்விகளை முன்வைக்க, அவர்கள் அணு உலைக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைக்க, சிறிது நேரம் விவாதம் நடந்தது. பிறகு அவர்கள் எங்களிடம் விடைபெற்றுச் சென்றனர். அவர்கள் சென்றபிறகு, அங்கிருந்து மீனவர்கள், புது வீடு கட்டித்தர ஏற்பாடு செய்வதாகவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தருவதாகவும், பிரியாணி அரிசி தருவதாகவும் சொல்லிக்கொண்டு இந்த அதிகாரிகள் அடிக்கடி இந்த கிராமங்களுக்கு வருவதாக கோவத்தோடு கூறினார்கள்.

கொவ்வாடா அணு உலையை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டத்தைப் பற்றி அந்தப் பகுதி மக்களையும், அரசியல், சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்துப் பேசியதில் இருந்து நான் அறிந்துகொண்டது இதுதான். கொவ்வாடா பகுதி மீனவர்களின் மீன்வளம் பல ஆண்டுகளுக்கு முன்பே குறைந்து விட்டது. அதனால், ஒரு பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி வேறு பகுதிகளுக்கு, மாநிலங்களுக்கு குடியேறுகின்றனர். இதனால் அவர்களின் பிள்ளைகளின் கல்வி கேள்விக்குரியாக உள்ளது. ஆனால், ஜப்பானில் புகுஷிமா விபத்துக்குப் பிறகு இங்கு அணு உலை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதற்கு அரசியல், சமூக இயக்கங்களின்/செயற்பாட்டாளர்களின் பிரச்சாரங்கள் முக்கிய காரணம். இதன் காரணமாகவே, ரணஸ்தளம் மண்டலத்தில் 30 கிராமங்களும், லவேறு, இந்தெர்லா மண்டலங்களிலும், ஸ்ரீகாகுளம் மாவட்ட அளவிலும் அணு உலைக்கு எதிரான தீர்மானங்கள் போடப்பட்டுள்ளன. மேலும், அணு உலைத் திட்டம் மிக மிக ஆரம்ப கட்டமான நிலம் கையக்கப்படுத்தல் என்ற நிலையிலேயே இருப்பதால், போராட்டம் இன்னும் தீவிரம் அடையவில்லை என நினைக்கிறேன். கொவ்வாடா பயணத்தை முடித்துக்கொண்டு, அன்று இரவு புடுமுருவில் தங்கி தங்கினோம்.

காக்ராபள்ளி அனல் மின் நிலையத்தை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டம் :

மறுநாள் ஜூலை 27, 2012 காலை திரு. ராமு மற்றும் அவரின் நண்பரின் குடும்பத்தினரிடம் விடைபெற்றுக்கொண்டு காக்ராப்பள்ளி நோக்கி பயணமானோம். ராமு அவர்கள் எங்களுக்கு உதவியாக காக்ராப்பள்ளியில் திரு. சிரஞ்சீவி அவர்களை ஏற்பாடு செய்திருந்தார்.

kakrapalli_farmers

காக்ராப்பள்ளி அனல் மின் நிலையத்தை ஒட்டி உள்ள விவசாய பூமி

சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு கொட்ட பேட்டா என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த பயணத்தில், அனல் மின் நிலையத்தில் வேலை செய்யும் பொறியாளர் ஒருவரைச் சந்தித்தோம். அவரிடம் அனல் மின் நிலையத்திற்கு எதிராக நடக்கும் போராட்டம் பற்றி வினவினோம். அவர் ஒரே ஒரு கிராம மக்கள் மட்டுமே போராடுவதாகவும், மக்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர் என்றும், காக்ராப்பள்ளி அனல் மின் நிலையம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு கிடையாது என்று கூறினார். பிறகு அனல் மின் நிலைய நிர்வாகம், மின் நிலையத்தைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு போகத்திற்கு 10,000 ரூபாய் நிறுவனத்தின் - சமூக கடமை(CSR) என்ற நடவடிக்கையின் கீழ் வழங்குவதாகவும் கூறினார். இது பற்றி மக்களிடம் விசாரிக்க மறந்து விட்டோம். கொட்ட பேட்டா பேருந்து நிலையத்தில் சிறிது நேர காத்திருப்பிற்குப் பிறகு, ஒரு தானியில் அனல் மின் நிலையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு திரு.சிரஞ்சீவி எங்களை அழைத்துச் சென்றார். 2640 மெகா வாட் காக்ராப்பள்ளி அனல் மின் நிலையம் ஈஸ்ட் கோஸ்ட் எனெர்ஜி லிமிடெட்(East Coast Energy Limited) என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் மைத்துனர் ஒரு பங்குதாரராக உள்ளார் என்று இங்குள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் ஏற்கனவே கூறி இருந்தனர்.

kakrapalli_604

காக்ராப்பள்ளி அனல் மின் நிலையத்தை ஒட்டி உள்ள உள்ளூர் மீன் பிடி பகுதி

2000 ஏக்கர் நிலம் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கையில் இவை தரிசு நிலங்களாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் பல்லுயிர் சூழல் கொண்ட வளமான சதுப்பு நிலம் (wetland) என வனத்துறை அறிக்கை அளித்துள்ளதாக கூறுகின்றனர். இங்குள்ள ஒட்டிதன்றா என்ற கிராமத்திற்குச் சென்றோம். இங்குள்ள மீனவ சங்கத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து அனல் மின் நிலையத்தை எதிர்ப்பதற்கான காரணத்தை கேட்டோம். மீனவ சங்கத்தின் தலைவர் காருண்ய கெத்று கூறியதிலிருந்து நாங்கள் அறிந்து கொண்டது இதுதான். அனல் மின் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் நிறைய நீர்நிலைகளை கொண்ட பகுதி. ஒட்டிதான்றா, கொள்ளுறு, சந்தபொம்மாளி போன்ற கிராமங்களைச் சேர்ந்த 6000 மீனவர்கள் பல ஆண்டுகளாக உள்நாட்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மேலும் பெரும்பான்மையான மக்களுக்கு உப்பளத் தொழில் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த கையக்கபடுத்தப்பட்ட நிலத்தைச் சுற்றி 2400 ஹெக்டர் விவசாய நிலங்கள் உள்ளது. இங்குள்ள நீர்நிலைகளில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு 1948லிருந்து மீன்பிடி உரிமம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. 2009இல் இந்த உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மீனவர்கள் ஸ்ரீகாகுளம் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு மனு கொடுத்துள்ளனர். ஆனால், அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லாது போகவே, ஆகஸ்ட் 15, 2009 தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், மின் நிலையத்தைச் சுற்றி உள்ள நீர்நிலைகளை மண் கொண்டு நிரப்பியுள்ளனர். இதனால், இங்கிருந்த நீர்நிலைகளின் இயற்கையான நீரின் ஓட்டம் தடைபட்டு வெள்ளம் உண்டாகி 10,000 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த நீர்நிலைகளில் இருந்த மீன்கள் நஞ்சு வைத்து அழிக்கப்பட்டுள்ளன. இந்த அனல் மின்நிலையத்திற்கு அருகில் 3.5 கி.மீ தொலைவில் உள்ள தேல்நீலாபுரம் என்ற இடத்தில சிறிய பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு சைபீரிய பறவைகள் உட்பட பல இடங்களில் இருந்து பறவைகள் வருகின்றன. இந்தப் பறவைகளுக்கு இந்தப் பகுதியில் உள்ள மீன்கள் போன்றவையே உணவாகும். ஆனால், இந்த நீர்நிலையைத் தேடி வரும் பறவைகள் துரத்தியடிக்கப்பட்டுள்ளன. 

இதனால், கிராமமக்கள் அனல் மின் நிலையத்திற்கு மரக்கட்டைகளை (டிம்பர்) ஏற்றிச் சென்ற லாரிகளை ஜனவரி, 2011 வழிமறித்து போராட்டம் செய்துள்ளனர். இதனால், ஒரு மாதம் அனல் மின் நிலைய வேலை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சௌம்யா மிஸ்ரா என்ற ஸ்ரீகாகுளம் மாவட்ட ஆட்சியர் இப்பகுதிகளுக்கு பார்வை இட வந்துள்ளார். பிப்ரவரி 16, 2011 அன்று இந்தப்பகுதியில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. பிப்ரவரி 25, 2011 அன்று தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒட்டிதான்றா வரக்கூடிய கொட்ட பேட்டா, தெக்கேலி என்ற கிராமங்களின் சாலை முழுவதும் 3000 காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அனல் மின் நிலையத்தை ஒட்டிச் செல்லும் ரயில் பாதையில் 250 காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு மக்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி அனல் மின் நிலையத்திற்கான கட்டுமானப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

kakrapalli_women

காக்ராப்பள்ளி அனல் மின் நிலையத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் சிறையில் வைக்கப்பட்ட மூதாட்டிகள்

இதனால் வெகுண்டெழுந்த கிராமமக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டம் பெருமளவிலான பெண்களால் முன்னெடுக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிட வேண்டிய செய்தியாகும். பகல் 12 மணிக்கு ஒட்டிதான்றாவில் மின் நிலையத்திற்குச் செல்லும் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டுள்ளன. காவல் துறைக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டுள்ளது. காவல் துறை வீடு புகுந்து ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் என்றும் பாராமல் 100-150 பேர் வரை கைது செய்து கொண்டு சென்றிருக்கிறது. 2000 பேருக்கும் மேலான மக்கள் மீது கொலை செய்ய முயற்சி(307) என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 92 வயது பாட்டி, ஆனந்த மாணிக்கம்மா என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு ஸ்ரீகாகுளம் சிறையில் 16 நாட்கள் வைக்கப்பட்டுள்ளார் என்ற கேட்ட நொடியில் நாம் அதிர்ச்சியாகி விட்டோம். 
 
பிப்ரவரி 28, 2011, அனல் மின் நிலையத்தால் தங்கள் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் அருகில் இருந்து ஹனுமந்த நாயுடு பேட்டா என்ற பகுதியில் விவசாய குடிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். காவல் துறைக்கு சுடச்சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இரண்டு பேர் அதே இடத்திலும், ஒருவர் மருத்துவ மனையிலும் இறந்துள்ளனர். சுற்றுபட்டு கிராமங்களின் நெல் சேமிப்பு கிடங்கு ஒன்று காவல் துறையினரால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. ஒட்டிதான்றாவில் 25 வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. (போலீசா, பொறுக்கியா? என்ற கேள்விதான் எழுகிறது) முதலாளிகளுக்கான இந்த ஆட்சி ஒரு கோர தாண்டவத்தை எளிய மக்களின் மீது நடத்தி முடித்திருக்கிறது என்பதை எங்களால் உணர முடிந்தது. 

kakrapalli_violence

காக்ராப்பள்ளி அனல் மின் நிலையத்தை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தின் கலவர காட்சி

மீனவ சங்கத் தலைவரோடு பேச்சை முடித்துக்கொண்டு, நாங்கள் ஒட்டிதான்றா சாலை சந்திப்பில் சிறிய பந்தலில் 712 நாளாக நடக்கும் தொடர் உண்ணாவிரதத்தில் பங்குபெற்றிருந்த நான்கு பெண்களை சந்தித்தோம். இவர்கள் கொள்ளுறு, ஒட்டிதான்றா, சந்தபொம்மாளி என்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள். முதலாளித்துவத்தின் லாப வேட்டைக்குத் துணை போகும் அரச பயங்கரவாதத்திற்கு மூன்று உயிர்களை பலிகொடுத்த பின்னும், தங்கள் ஜனநாயக உரிமைக்காக, தங்கள் அறவழிப்போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் இம்மக்களின் மன உறுதியும், போராட்ட குணமும் நிச்சயமாக போற்றத்தக்கது, வரலாற்றில் பதியப்படவேண்டியது. கடைசியாக, தங்களுக்கு மீன்பிடி உரிமம் மீண்டும் கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அது இப்போது நிலுவையில் உள்ளதாகவும் மீனவ சங்கத்தினர் கூறினர். மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டதால் பெரியவர்கள் வேறு வேலைகளைத் தேடி வெளியூர் சென்று வருவதால், அவர்களின் பிள்ளைகளின் பராமரிப்பு, கல்வி பாதிக்கப்படுவதாகக் கூறினர். 
 
பிறகு அனல் மின்நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்குச் சென்று பார்த்தோம். இவை நெய்தலும், மருதமும் கலந்த பகுதியாக கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் பசுமையான வயல்களும், நீர் நிலைகளுமாக இருந்தன. நம் சங்ககால இலக்கியங்களில் வயல்களில் மீன்கள் துள்ளித் திரிந்ததாகவும், அல்லி மலர்கள் பூத்திருந்ததாகவும் வரும் வர்ணனைகள்தான் ஞாபகம் வந்தது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு ஹனுமந்த நாயுடு பேட்டாவில் ஒரு நினைவுத் தூண் எழுப்பி உள்ளனர். இறந்தவர்களுக்கு அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

kakrapalli_memorial

காக்ராப்பள்ளி அனல் மின் நிலைய போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவு தூண்

மாலை தானியில் தெக்கேலி சென்று சேர்ந்தோம். பிறகு, சிரஞ்சீவி மற்றும் தானி ஓட்டுனரிடம் நன்றி கூறி விசாகப்பட்டினம் நோக்கி பயணமானோம். அன்று இரவு ரத்னம் அவர்களின் அலுவலகத்தில் தங்கினோம். மறுநாள் ஜூலை 28, 2012 பிற்பகல், மீண்டும் சில அரசியல் செயற்பாட்டாளர்களுடன் ஒரு சந்திப்பை ரத்னம் ஏற்பாடு செய்திருந்தார். ஆந்திராவில் வளர்ச்சி என்ற பெயரில் தொடங்கப்படும் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு தரும் தொழிற்சாலைகள் பற்றியும், பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் நடக்கும் பாக்சைட் சுரங்கம் பற்றியும், கடற்கரைப் பகுதியைக் குறிவைத்து தொடங்கப்படும் தொழிற்சாலைகளால் 80 லட்சம் மீனவர்கள் பாதிக்கப்படுவது பற்றியும் செய்திகளை பகிர்ந்து கொண்டனர். மாலையில் லக்ஷ்மிபெட்டா தலித்மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நடந்த அரங்கக் கூட்டத்திற்குச் சென்றோம். சிறிது நேரம் அங்கிருந்து விட்டு பிறகு, ரத்னம் அவர்களுடன் சென்னைக்கு போகும் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றோம். மாலை ஆறு மணிக்கு பேருந்து வந்தது. ரத்னம் அவர்களிடம் நன்றி கூறி செந்தளிரும், நானும் பேருந்தில் சென்னையை நோக்கி பயணமானோம்.

விவசாயம், மீன்பிடி, உப்பளம், முந்திரிக்காடு, கால்நடை வளர்ப்பு என்று சுயசார்புடன் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை ஒழித்துக் கட்டிவிட்டு, வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்விடங்களை விட்டு துரத்தியடிப்பதும், அடுத்தவரிடம் கைகட்டி நிற்பவராகவும், கையேந்துபவராகவும் மாற்றுவதுதான் இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கை. இதுதான் தேசிய இனங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து இந்திய தேசத்தில் வாழுகிற அனைத்து மக்களும் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்சினை.

- பரிமளா, தமிழர் பாதுகாப்பு இயக்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

Pin It