Scienceஒரு புதிய கண்டுபிடிப்பு எப்போது நிகழ்த்தப்படுகிறது தெரியுமா? அவசியம் ஏற்படும்போது மட்டுமே புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது வரலாறு.

ஆகஸ்டு மாதம் 2008ல் மின்னபோலிஸ் நகரில் ஒரு பாலம் இடிந்து 13 பேர் உயிரிழந்தனர். பாலத்தின் உறுதித்தன்மையை விரைவாகக் கண்டறிய வேண்டிய அவசியம் பொறியாளர்களுக்கு ஏற்பட்டது. மிச்சிகன் பல்கலைக்கழக பொறியாளர் ஜெரோம் லின்ச் என்பவர் பாலத்தின் மீது ஒரு வண்ணப்பூச்சை தெளித்து அதன்மூலம் பாலத்தின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ளும் வழியைக் கண்டுபிடித்தார்.

இந்த முறையின் மூலம் பாலத்தின் எந்தப்பகுதியையும் உடைத்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. இலட்சக்கணக்கான வாகனங்கள் கடந்துசெல்லும் பாலங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கின்றன என்பதை உடனுக்குடன் அறிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு மிகவும் உதவியாக இருக்குமில்லையா?

அரிமானத்தின் காரணமாக பாலங்கள் வயதாகி வலிமை இழந்துபோவது இயற்கையான நிகழ்வு. பொறியாளர்கள் என்னதான் கண்களில் விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு சோதனை செய்து பார்த்தாலும் பாலத்தில் ஏற்பட்டுள்ள மிகச்சிறிய சேதாரங்கள் மனிதக்கண்களை ஏமாற்றிவிடுகின்றன.

பாலத்தின் மேற்புறம் ஒரு படலமாக இந்த சிறப்புக்கலவை தெளிக்கப்படுகிறது. படலத்தின் அடியில் நுண்ணிய கார்பன் நானோ குழாய்கள் பரப்பப்பட்டிருக்குமாம். கார்பன் மின்கடத்தும் பொருள். மின்னோட்டம் செலுத்தப்படும்போது, பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஒரு கம்ப்யூட்டர் காட்சித்திரையில் விரியச் செய்யுமாம். பாலத்தில் ஏற்பட்டிருக்கும் விரிசல் மேற்பரப்பிலும் காணப்படும் என்பதும், பாலத்தில் உள்ளே ஏற்பட்டிருக்கும் அரிமானம் மேற்பரப்பிலும் உண்டாகியிருக்கும் என்பதும்தான் இந்த ஆய்வு முறையின் தத்துவம்.

பாலத்தின் உறுதித்தன்மையை உடனுக்குடன் தெரிந்துகொண்டால், விசாரணையை விரைவாக முடிக்கலாம்; பாலம் கட்டுவதில் ஊழல் செய்தவர்களை விரைவுநீதிமன்றம் மூலம் தண்டித்து விரைவாக சிறைக்கனுப்பி விடலாம் என்ற நம்ம ஊர் குரல் கேட்கிறதா? 

- மு.குருமூர்த்தி

Pin It