செயற்கையாக தயாரிக்கப்படும், ஆற்றல் தரும் பானங்கள் என்று சொல்லப்படும் பானங்களை எடுத்துக் கொள்பவர்கள் தூக்கத்தில் இருந்து சீக்கிரமே விழித்தெழுவதுடன், மீண்டும் உறங்க வெகுநேரம் ஆகிறது என்று புதிய ஆய்வு கூறுகிறது. மாதத்திற்கு ஒரு முறை இத்தகைய பானத்தை அருந்துபவர்களுக்குக் கூட தூக்கக் குறைவு பாதிப்பு ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.energy drinksஇன்சாம்னியா என்னும் குறைபாடு

ஒவ்வொரு நாளும் ஒரு கேன் (can) பானத்தை அருந்துபவர்கள், அதை எப்போதேனும் அருந்துபவர்கள் அல்லது ஒருபோதும் அருந்தாதவர்கள் தூங்குவதை விட அரை மணி நேரம் குறைவாகவே தூங்குகின்றனர். இவ்வகை பானங்கள் இன்சாம்னியா (insomnia) என்ற தூக்கக் குறைபாட்டிற்கு அல்லது குறைந்த நேரத் தூக்கத்திற்கு காரணமாக அமைகிறது. இந்தக் குறைபாடு உள்ள பெரும்பாலானவர்கள் வழக்கமாக தூக்கக் குறைபாடு, மன அழுத்தம், பதட்டம், உடற்பயிற்சி குறைவு, நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களாக, ஒரு சில மருந்துகளைப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள் உடலின் செயல்திறனை மேம்படுத்துவதாகவும், மன நலம் தருவதாகவும் கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தப்படும் இந்த ஆற்றல் பானங்களை (ED Energy Drinks) அருந்துகின்றனர்.

ஒரு லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு கலனில் இருக்கும் பானத்தில் சராசரியாக 150 மில்லி கிராம் காஃபின், சர்க்கரை, வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. ஆனால் இவ்வகை பானங்கள் பெரும்பாலானவற்றில் பொதுவாக நான்கு கோப்பை காபிக்கு சமமான அளவு 400 மில்லிகிராம் காஃபின் கலந்துள்ளது.

அதிக அளவு காஃபின் இருப்பதால் இவை மற்ற சேர்வைப் பொருட்களுடன் சேர்ந்து தூக்கக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம், அளவிற்கு அதிகமான இதயத்துடிப்பு, மனப்பதட்டம், எரிச்சல், வாந்தி போன்றவற்றுடன் சில சமயங்களில் உடற்செயல்பாடுகளின் இயக்கம் நிண்று போவது, இதயக் கோளாறுகள் மற்றும் மரணம் போன்ற மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த வகை பானங்கள் இளம் தலைமுறையினரிடம் பிரபலமாக உள்ளது.

இவை தூக்கத்தின் தரத்தைக் குறைக்கின்றன என்பது முந்தைய ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருந்தது. ஆனால் தூக்கத்தின் எந்த அம்சங்கள் இதனால் அதிகமாக அல்லது குறைவாக பாதிக்கப்படுகிறது, இந்த பாதிப்புகளில் ஆண் பெண்களுக்கு இடையில் ஏதேனும் வேறுபாடுகள் உள்ளனவா என்பது இது வரை தெரியாமல் இருந்தது.

நார்வேயில் 18 முதல் 35 வயதில் இருக்கும் ஐம்பத்தி மூன்றாயிரம் பேருக்கும் அதிகமானவர்களிடம் இந்த ஆய்வுகள் நடந்தன. இந்த ஆய்வுகள் ஆற்றல் பானங்களின் எதிர்மறை விளைவுகளை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றின் நுகர்வு அதிகமாக அதிகமாக அருந்துபவர்கள் தூங்கும் நேரம் குறைகிறது. மாதத்திற்கு ஒன்று முதல் மூன்று முறை இவற்றை எடுத்துக் கொள்பவர்களும் தூக்கக் குறைவால் பாதிக்கப்படுகின்றனர். இது பற்றிய ஆய்வறிக்கை பி எம் ஜே (BMJ Open journal) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆறு மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம்

பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்திற்கு (BMA) சொந்தமான மருத்துவக் குழுவால் இந்த இதழ் வெளியிடப்படுகிறது. இது உலகின் பழமையான மருத்துவ இதழ்களில் ஒன்று. இதன் முதல் இதழ் 1840ல் வெளியிடப்பட்டது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஆற்றல் பானங்களை அருந்தும் ஆண்கள் மற்றவர்களை விட நள்ளிரவிற்குப் பிறகு தூங்கச் செல்லும் வாய்ப்பு 35% அதிகமாக உள்ளது. இவர்களில் 52 சதவிகிதம் பேர் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குகின்றனர்.

இந்த பானங்களை எடுத்துக் கொள்ளாதவர்கள் அல்லது எப்போதேனும் எடுத்துக் கொள்பவர்களை விட பானம் அருந்தும் 60% பேர் இரவில் விழித்துக் கொள்கின்றனர். பானம் அருந்தும் 20% பெண்கள் நள்ளிரவு வரை உறக்கம் வராமல் விழித்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இவர்களில் 58% பெண்கள் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குகின்றனர். இத்தகையவர்களில் 24% பெண்கள் இரவில் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்கின்றனர்.

இவற்றைத் தினமும் அருந்துபவர்கள் அருந்தாதவர்களை விட தூங்கிய பின் அதிகம் விழித்துக் கொள்வதால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் பிறகு தூங்குவதற்கும் வெகுநேரம் ஆகிறது. மற்றவர்களை விட இவர்கள் குறைவாகத் தூங்குகின்றனர். அருந்தும் பானத்தின் அளவு அதிகமாகும்போது தூங்கும் நேரம் குறைகிறது.

தினமும் பானம் அருந்தும் பெண்களில் 51% பேர் இன்சாம்னியா குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பானங்களைப் பயன்படுத்தாத அல்லது அரிதாக மட்டுமே எடுத்துக் கொள்ளும் பெண்களில் இந்த பாதிப்பு 33 சதவிகிதமாக உள்ளது. தினமும் ஆற்றல் பானம் அருந்தும் 37% ஆண்கள் இன்சாம்னியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிதாக அல்லது எப்போதுமே ஆற்றல் பானங்களை அருந்தாத ஆண்களில் இந்த பாதிப்பு 22 சதவிகிதமாக உள்ளது.

தினமும் பானம் அருந்தும் ஆண்கள் எப்போதுமே ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குவதாக ஆய்வின்போது கூறினர். 87% பெண்கள் இதே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இந்த பானத்தை கையால் கூட தொடாதவர்களை விட இதை மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் எடுத்துக் கொள்பவர்களும் கூட தூக்கக் குறைவால் பாதிக்கப்படுகின்றனர்.

நார்வேயில் உள்ள பெர்ஜென் (Bergen) மற்றும் ஆஸ்லோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆற்றல் பானங்கள் தூக்கம் தொடர்பான செயல்பாட்டில் எதிர்மறை விளைவையே ஏற்படுத்துகிறது என்று இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையில் மிகப் பிரபலமாக இருக்கும் இந்த ஆற்றல் பானங்களின் சிறிதளவு பயன்பாடு கூட நம் உடல் மற்றும் மனநலத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் உறக்கத்தைப் பாதிக்கிறது என்பதால் இது பற்றி மேலும் தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்கள்: https://www.theguardian.com/society/2024/jan/22/one-energy-drink-month-increases-risk-disturbed-sleep-study?

&

https://www.childrenscolorado.org/conditions-and-advice/sports-articles/sports-nutrition/energy-drinks-are-they-safe/#:

சிதம்பரம் இரவிச்சந்திரன்