ஆங்கிலத்தில் GOLDEN HOUR என்று கூறப்படும் நேரம் மிகவும் முக்கியமானது. ஒருவர் விபத்தில் அடிபட்டாலோ, இதய நோயால் மாரடைப்பு ஏற்பட்டாலோ, அல்லது பாரிசம் ஏற்பட்டாலோ, அந்த முதல் ஒரு மணி நேரக் கவனிப்பு அவருடைய குணமடைதலுக்கு துணை செய்கின்றது. பாரிசம் ஏற்பட்டவர், முதல் ஒரு மணி நேரத்தில் மருத்துவம் பெற்றால் அவருடைய குறை முற்றிலும் குணமாகலாம். ஏன் எல்லோரும் போல் நன்றாக நடந்து பேசி வேலை செய்யமுடியும்.

உதாரணமாக எங்கள் மருத்துவமனைகளில் ஒரு 35 வயது நபர் இடது பக்க பாரிசத்துடன் 15 நிமிடங்களில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்து, அவருக்கு சிகிச்சை உடனடியாக தொடரப்பட்டது, அவர் 10 நாட்களில் முழுவதுமாக குணமாகி வீட்டுக்கு சென்றார். இன்று அவர் என்ன தொழில் செய்துக்கொண்டிருந்தோரோ அதையே தொடர்ந்து செய்து வருகின்றார்.

பாரிசத்திற்கு இன்னொரு காரணம் உண்டு. அதாவது மூளையில் மண்டை ஒட்டிற்கும் மூளைக்கும் இடையே இரத்தம் சேர்ந்து அது அழுத்தம் கொடுக்கின்றது. அதை Subdural Hematoma என்பர்.

எதனால் ஏற்படுகின்றது? (Chronic subdural Hemation) தலைக்காயம் பட்டால் ஏற்படலாம், ஆனால் 6 வாரத்தில் இருந்து. 11\2 வருடம் வரை வரலாம். இது மெதுவாக கசிந்து கட்டியாகும்போது தான் தன்மையை காட்டுகின்றது. அது பெரிதாகும்போது எந்த பகுதியில் உள்ளதோ அதற்கு எதிர்பகுதி கை கால்கள் செயல் இழந்து போகின்றன. கோமா நிலை ஏற்படுகின்றது.

இந்த நோயாளியை உடனடியாக CT scan படம் எடுத்து பார்த்தால், இந்த காரணம் தெரியும். அதை உடனடியாக அறுவை சிகிச்சையின் மூலம் அப்புறப்படுத்தினால் நோயாளி தன் சுய நினைவை அடைந்து, கை, கால் பாரிசம் குறைந்து நன்றாக குணமடைவர்.

எங்களிடம் ஒரு 70 வயது பெரியவர் கொண்டுவரப்பட்டார். அவர் நினைவு இல்லாமல் கோமா நிலையில் இருந்தார். அவருக்கு வலது கை கால்களில் செயல் இல்லை. அவருடைய மூளைப்படம், இடது மூளைப்படத்தில் இரத்தக்கட்டி இருப்பது தெரிந்தது. அதன் அளவு பெரியதாக இருந்ததால் இடது மூளை வலது மூளையை தள்ளிக்கொண்டு இருந்தது. நோயாளியின் மகன்கள் அவர் குணமடைவாரா என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இந்த அறுவை சிகிச்சையினால் அவர் முற்றிலும் குணமடைவார். மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் போதே அவர் நினைவு பெறுவார் என்று கூறி அறுவை சிகிச்சை செய்தேன். மூளையின் சவ்வை திறக்கும்போது இரத்தம் வெளிவந்தது. அவ்வாறு வெளிவரும்போதே அவர் நினைவு திரும்பியது, சப்தம் போட ஆரம்பித்தார். அறுவை சிகிச்சை முடிந்து வெளிவரும்போது அவரின் மகன்களுடன் பேசினார். 5 ஆண்டுகளுக்கு பின்னும் நன்றாக நடந்துகொண்டு சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பாரிசம் என்பது கை, கால், செயல் இழப்பை குறிக்கின்றது. அதற்கான காரணங்கள் ஏராளம். அதை மூளை படம் எடுப்பதால் தெரிந்து கொள்ளலாம். (Chronic subdural hematoma) நாள்பட்ட இரத்த கசிவினால் ஏற்பட்ட பாரிசம் அறுவை சிகிச்சை செய்தவுடன் குணமடையும். குடிப்பழக்கம் இருப்பவருக்கு இந்த இரத்த கசிவு சுலபமாக வருவதுண்டு. எனவே குடிப் பழக்கத்தை நிறுத்த பழகிக்கொள்ள வேண்டும். பாரிசம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சைக்கு நரம்பியல் நிபுணரிடம் கொண்டு செல்லுங்கள்.

உணர்வுபூர்வமாக எந்த விஷயத்தையும் அணுகுவதை விட அறிவு பூர்வமாக அணுகுவது தெளிவைத் தரும் தானே? எதைக் குறிப்பிடுகிறேன் என்கிறீர்கள்...? இதய நோய்க்கு தரும் முக்கியத்துவத்தை மூளை நோய்க்கும் தர வேண்டும் என்பதைத் தான் அதோடு குடிப்பழக்கம் குடியை மட்டும் கொடுப்பதில்லை. மூளையையும் பதம் பார்க்கிறது. குவாட்டர், லார்ஜ், ஸ்மால் இந்த வார்த்தைகளோடு இனி பாரிசம் என்ற வார்த்தையையும் சேர்த்து சியர்ஸ் சொல்லுங்கள். குடிப்பழக்கம் தானாக ஓடிவிடும்.

(நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்)

Pin It