மிகு இரத்த அழுத்தம் இதயத்தை இரண்டு வகைகளில் பாதிக்கும். இதயத்தமனி மிகு இரத்த அழுத்தத்தால் சுருக்கமடைவதால் இதயத்திற்கு தேவையான அளவு இரத்தம் செலுத்தப்படாத நிலை ஏற்படும். இரத்தக்-குழாய்கள் சுருக்கம் சில நொதியங்களாலும், இதயத்தமனி உட்சுவர்களில் கொழுப்புப் படிவங்கள் படிந்து, அவை கெட்டிப்படுவதாலும் இதயத்தமனி உள்சுற்று சிறுத்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு ஏற்படும். மாரடைப்பு நோய்க்கு பெரும்பாலும் மிகு இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயுமே பெரும்பாலான காரணிகளாக உள்ளன.

நாள்பட்ட மிகு இரத்த அழுத்தம் இடது வெண்டிரிக்-கள் உடலுக்கு தேவையான அளவு இரத்தம் செலுத்த அதிக அளவில் சுருங்கி விரியும். இதனால் இதயத்தின் சதைகள் பருத்துவிடும். இதில் இடது வெண்டிரிக்கள் அதிக அளவு பெருத்து விடும் நிலை சில வருடங்களில் உண்டாகி விடும். இதனால் இதயச் செயல்பாடுகள் குறைந்து இதயம் செயலிழக்கத் துவங்கும். இதனால், நுரையீரல்களில் நீர்கோக்க துவங்கும். அதனால் மூச்சிரைப்பு, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டு இறுதியில் இதயம் முழுமையாக செயல்பாட்டை நிறுத்திவிடும். இதனால் மரணம் ஏற்படும். இதயம் மிகு இரத்த அழுத்தத்தால் மேற்சொன்ன இரண்டு வகையில் பாதிக்கப்பட்டாலும், மாரடைப்பால் ஏற்படும் மரணம் எதிர்பாராமல் திடீரென்று ஏற்படும். இதயம் செயலிழப்பதால் ஏற்படும் மரணம் மெதுவாக நிகழும். ஆகையால் மிகு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருத்தல் அவசியமாகும்.

மூளையும் மிகு இரத்த அழுத்தமும்: இரத்த அழுத்தம் லேசாக கூடுதலாக இருக்கும்பொழுது தலைவலி, தலைச்சுற்றல், லேசான மயக்கம் போன்றவை ஏற்படும். ஆனால் அதுவே இரத்த அழுத்தம் அதிகமாகும் பொழுது, இரத்தக் குழாயிலிருந்து கொழுப்புப் படிவங்கள் பிய்ந்து, இரத்த ஓட்டத்தோடு சென்று பெருமூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களை அடைத்துக் கொள்ளும். இதை ‘பெருமூளை தமனி அடைப்பு’ என்று சொல்வர். சில சமயங்களில் இதே தமனிகள் வெடித்து இரத்தப் போக்கு மண்டை ஓட்டுக்குள் ஏற்படக்கூடிய நிகழ்ச்சியும் நடக்கலாம். இதை ‘பெருமூளை இரத்தப் போக்கு’ என்று கூறுவர். நம் மூளை மிகவும் செயல்படக்கூடிய பகுதி. அது செயல்படத் தேவையான சத்துக்கள் இரத்தம் மூலம்தான் செல்கிறது. திடீரென்று மிகு இரத்த அழுத்தத்தால் ஏற்படும் இரத்தக் குழாய் அடைப்போ அல்லது இரத்தக் குழாய் வெடிப்போ, மூளையை செயலிழக்கச் செய்யும். மூளை செயலிழப்பதால், அதிலிருந்து செல்லும் நரம்புகளும் செயலிழந்து விடும்.

இதனால் அந்த நரம்புகள் பரவியுள்ள இடம் முழுமை-யாக செயலிழந்து விடும். இதையே பக்க வாதம் என்று சொல்கிறோம். இது மிகவும் ஆபத்தான நிலை. உடனடியாக மருத்துவம் செய்யவேண்டும். அதிலும் பெருமூளை உதிரப்போக்கு ஏற்பட்ட ஒரு சில நிமிடங்களில் நோயாளி தன் நினைவு இழந்த நிலைக்குச் சென்று விடுவார். இந்த நிலையில் உதிரப் போக்கைக் கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தாவிட்டால் நோயாளியின் மரணம் தவிர்க்க முடியாததாகி விடும். இரத்த அழுத்தம் தொடர்ச்சியாக அதிக அளவாக இருக்கும்பொழுது முதலில் லேசான அளவு மூளைக்கு செல்லும் இரத்த அளவால், சில நரம்புகள் பாதிக்கப்படும். அதனால் முதலில் லேசாக கை, கால்களில் மரப்பு உணர்ச்சி, கை, கால் விரல்களின் நுனியில் துடிப்புப் போன்ற உணர்ச்சி ஆகியவை ஏற்படும். இது நமது மூளை நமக்கு விடும் எச்சரிக்கையாகும். இதுபோன்ற உணர்வுகள் உண்டானால், உடனே மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் மேற்சொன்ன பேரபாயம் நேர்ந்துவிடும். எனவே மிகு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் இன்றியமையாத தேவையாகும்.

மூளையும், சிறுநீரகங்களும்: நம்முடைய சிறுநீரகங்கள் ஒரு பெரிய தொழிற்சாலை. நம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருள்களை வெளியேற்றி ஒரு பெரும் சுத்திகரிப்புப் பணியினை சிறுநீரகங்கள் செய்கின்றன. மிகு இரத்த அழுத்த நோயில் ஆரம்ப நிலையில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. ஆனால் நாளடைவில் சிறுநீரகங்களுக்குச் செல்லும் மிக மெல்லிய, கண்களுக்கு புலப்படாத தந்துகளில் அடைப்பு ஏற்படும். இதனால் சிறுநீரக செயல்பாடுகள் குறையத் தொடங்கும். இதனால் சிறுநீரில் நம் உடலுக்குத் தேவையான புரதச் சத்துப் பொருள்கள் வெளியேறத் துவங்கும். இந்த இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு அதிகமாக, அதிகமாக சிறுநீரகங்கள் நச்சுப் பொருள்களை உடலிலிருந்து பிரித்து, வெளியேற்றும் செயல்பாடு பாதிப்படையும்.

இதனால் யூரியா, யூரிக் ஆசிட், நைட்ரஜன் போன்ற வெளியேற வேண்டிய நஞ்சுகள் மீண்டும் உடலில் சேரும். இது உயிருக்கு ஆபத்தானதாகும். இந்த நஞ்சுகள் ஓரளவிற்கு மேல் சென்றால் நோயாளி ‘தன் நினைவிழப்பார்’. இந்த நிலையில் சரியான மருத்துவம் செய்யாவிடில் சிறு நீரகங்கள் முழுமையாக செயல்பாட்டை இழந்து விடும். நோயாளியின் உடலில் தேங்கும் நஞ்சுகளால் நோயாளி மரணமடைவார். இதை ‘யூரிமியா’ என்றழைப்பர். 

Pin It