சகோதரிகளே! சகோதரர்களே!

இந்த பெரியதும் முக்கியமானதுமான மகாநாட்டிற்கு என்னைத் தலைவனாக தெரிந்தெடுத்ததன் மூலம் தாங்கள் எனக்களித்த கௌரவத்திற்காக எனது மனமார்ந்த நன்றி அறிதலை தங்கள் எல்லோருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

இம்மகாநாடு சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு என்று சொல்லப்படுகிறது. எனவே, இத்தகைய ஒரு மகாநாட்டுக்கு சீர்திருத்தத்தில் மிகுதியும் நம்பிக்கையுள்ள ஒருவரைத் தலைவராக தெரிந்தெடுத் திருப்பீர்களானால் அது மிகவும் பொருத்த முடையதாக இருந்திருக்கும் என்று நான் சொல்வதற்காக என்னை மன்னிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன். ஏனெனில் வரவர எனக்கு சீர்திருத்தம் என்பதில் உள்ள நம்பிக்கை மறைந்து கொண்டே போகின்றது. அன்றியும் நமது நாட்டை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்பவர்களுக்கும், நமது நாட்டு பெரும்பான்மையான மக்களுக்கு சுயமரியாதையும், சமத்துவமும், விடுதலையும் உண்டாக்கச் செய்ய வேண்டும் என்பவர்களுக்கும், எதிரில் இருக்கும் வேலை சீர்திருத்த வேலை அல்ல என்பதே எனது அபிப்பிராயம்.

மற்றென்னையெனில் உறுதியும் தைரியமும் கொண்ட அழிவு வேலையே ஆகும். அளவுக்கு மீறின பொறுமை கொண்ட யோசனையின் மீதே நான் இந்த முடிவிற்கு வந்திருக்கிறேன். உதாரணமாக ஒரு பெரிய கிணறு இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்; அந்தக் கிணற்றிற்கு மிகப் பழமையானதும் விசேஷ மானதுமான ஒரு புராணம் இருப்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள்; அதாவது அந்தக் கிணற்று தண்ணீரில் ஒரு துளி தண்ணீரை சாப்பிடுவதனாலோ, அல்லது மேலே தெளித்துக் கொள்வதினாலோ நம்முடைய எல்லாப் பாவமும் - மகா பாதகமான காரியம் என்று சொல்லப்பட்ட செய்கைகளைச் செய்தாலும் மன்னிக்கப்படுவதுடன் மோட்சலோகம் என்பது கிடைக்கும் என்று எழுதி இருப்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இப்போது அந்தக் கிணற்றுத் தண்ணீரில் ஒரு சிறிது சாப்பிட்டால் விஷபேதி காணக் கூடியதாகவும், அதில் ஸ்ஞானம் செய்தால் சரீர மெல்லாம் சொறி சிரங்கு வருவதாகவும் இருந்தால் அதற்காக நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? அந்தத் தண்ணிரில் விஷப் பூச்சிகள் உண்டாகி தண்ணீரைக் கெடுத்து விட்டது என்று கருதி அந்த விஷப் பூச்சிகள் சாகத் தக்க மருந்தை அந்த கிணற்றுக்குள் போடுவோம்.

அப்படிப் போட்ட பிறகும் அந்தத் தண்ணீரின் குணம் அப்படியே முன்போலவே இருக்குமானால் மேல் கொண்டு என்ன செய்வோம்; மருந்துக்குக் கட்டுப்படாத அளவு கெடுதி அந்தத் தண்ணீரில் உண்டாய் விட்டதாகக் கருதி அந்தக் கிணற்றுத் தண்ணீர் முழுவதையும் இறைத்து வெளியில் ஊற்றி அந்தக் கிணற்றையும் நன்றாய்க் கழுவி விடுவோம். அந்தப்படி செய்த பிறகும் மறுபடியும் அந்தத் தண்ணீரின் குணம் அப்படியே இருக்குமானால் அதனுடைய காரணம் என்ன? அந்த கிணற்றுக்குத் தண்ணீர் வரும் ஊற்றே விஷத்தன்மை பொருந்தியது. அதாவது விஷ நீர் ஊற்றுக் கிணறு என்றுதானே ஏற்படும். அப்படிப்பட்ட விஷநீர் ஊற்றுக் கிணற்றை என்ன செய்வீர்கள்? பழைய புராணத்தையும் அதில் உள்ள அந்தக் கிணற்றுப் பெருமையையும் மதித்து, அதிலேயே குளித்து அந்த நீரையே சாப்பிட்டு விஷபேதியையும் சொறி சிரங்கையும் அடைந்து கொண்டிருப்பீர்களா? அல்லது அந்தக் கிணத்தை மண்ணைக் கொட்டி மூடிவிடுவீர்களா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

எனவே, மருந்து போட்டு தண்ணீரைச் சுத்தம் செய்வதும், தண்ணீர் பூராவையும் இறைத்து கிணற்றைக் கழுவுவதும் சீர்திருத்த வேலையாகும். அடுத்தபடியான மண்ணைப் போட்டு நிரவி மூடிவிடுவதே அழிவு வேலையாகும். இந்த முறையில் தான் நான் ஒரு அழிவு வேலைக்காரன் என்பதாகத் தெரிவித்துக் கொண்டேன்.

நமது நாட்டைப் பொறுத்த வரையில் சீர்திருத்தம் என்பதெல்லாம் செய்து பார்த்தாய் விட்டது. நான் பார்த்தாய் விட்டது என்று சொல்வது இப்போது நடைபெற்று வரும் சீர்திருத்தம் என்பதைக் குறித்தல்ல. ஏனெனில், இது உண்மையான சீர்திருத்த மல்ல. இப்போதைய சீர்திருத்தம் என்று சொல்லப் படுவதுகளெல்லாம் பாமர மக்களை ஏய்த்து அவர்களிடம் செல்வாக்குப் பெறுவதற்காக படித்த கூட்டத்தார்களோ பணக்காரர்களோ தங்களில் ஒருவருக்கொருவர் போட்டி போடுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட அநேக சூட்சி ஆயுதங்களில் இதுவும் ஒன்றாகும். இது மேல்நாட்டாரைக் கண்டு பழகிய செய்கையாகும். இம்முறைகள் எல்லாம் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியவர்களுடைய நன்மையைக் கருதி கண்டுபிடிக்கப்பட்டதல்ல. சீர்திருத்தம் செய்பவர்களுடைய சுயநலத்தை உத்தேசித்தே பெரிதும் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.

ஆனாலும், சீர்திருத்தம் பெற வேண்டிய மக்கள் இதை உண்மையாகவே நம்பி வந்திருக்கின்றார்கள். ஆனாலும், அதன் முடிவுகள் எல்லாம் மேலும் மேலும் மோசமான நிலைமைக்கே, அதாவது இனிமேல் சுலபத்தில் சீர்திருத்தம் செய்ய முடியாத நிலைமைக்குப் போய்க்கொண்டிருக்கின்றார்கள். இதன் முக்கிய காரணம் என்னவெனில், எந்தக் கூட்டத்தாரால் - எந்த மனப்பான்மை உடையவர்களால் மக்கள் கெட்டு சீர்திருத்தமடைய வேண்டிய நிலைமைக்கு வந்தார்களோ, யாருடைய எந்தக் கூட்டத்தாருடைய சுயநலத்திற்காக மக்கள் பெரிதும் நிலை குலைய வேண்டியதாயிற்றோ அந்தக் கூட்டத்தார்களேதான் மிகுதியும் சீர்திருத்தம் என்கின்ற துறையை உபயோகித்துப் பயன்பெற்று வந்திருக்கின்றார்கள். இனியும் அவர்களேதான் பெரும்பாலும் இத்துறையில் இருக்கின்றார்கள். அதனால்தான் நான் நமது மக்களின் நிலை சீர்திருத்த முடியாத நிலையை அடைந்து விட்டது என்று சொல்லுகின்றேன்.

சமுதாய சீர்திருத்தம் என்பது ஒவ்வொரு நாடுகளில் ஒவ்வொரு மாதிரியாக இருக்கின்றது. உதாரணமாக மேல்நாடுகளில் எல்லாம் சமுதாய சீர்திருத்தம் என்பது எல்லா மக்களையுமே பொறுத்தது. அதாவது, சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய சமூகப் பழக்க வழக்கம் முதலியவைகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவே இருப்பவைகளாகும். நமது நாட்டில் பெரும்பாலும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியவைகள் என்று சொல்லப்படுபவைகள் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு வகையானதாகும்.

நமக்குள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் சீர்திருத்தம் பொது மனித சமூகத்தில் தேவை. மக்களின் பிறப்பின் காரணமாக உயர்வு தாழ்வு கற்பிப்பதாகும். இந்த முறை நமது இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மோசமான கற்பனையின் மீது கையாளப்படுவதே இல்லை. அடுத்தபடியானது வாழ்க்கையில் இருந்து வரும் பழக்க வழக்கம், மூட பக்தி, குருட்டு நம்பிக்கை ஆகியது போன்ற வகைகள்; இவைகள் எல்லாம் நமது நாட்டில் விசேஷமாய் மதம், கடவுள், மோட்சம் என்பதன் பெயர்களாலேயே அவைகளை ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருகின்றது. என்றாலும், இவைகளைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்கிற கவலை வெகுகாலத்திற்கு முன்னதாகவே ஏற்பட்டது என்று சொல்லலாம். அதாவது புத்தர், இராமானுஜர், திருவள்ளுவர் முதலிய பல பெரியோர் காலத்திலேயே ஏற்பட்டதாகச் சொல்லலாம். ஆனாலும், மேற்கண்ட துறைகளில் அதுமுதல் இதுவரை ஒரு சிறு காரியத்திலாவது வெற்றியேற்பட்டு அது நமக்குப் பயன்பட்டது என்று சொல்லுவதற்கு இல்லை. இப்போது ஏதாவது ஒரு சிறிதளவு மாறுதல் ஏற்பட்டு இருக்கின்றது என்று யாராவது சொல்லவருவார்களானால் அது வெளி நாடுகளில் நடைபெறும் சமூக சீர்திருத்தத்தின் சாரல் அல்லது ‘வெளிநாட்டார் தங்கள் சுயநலத்திற்காகச் செய்யப்பட்ட வேலைகளின் பலன்’ என்றுதான் சொல்லவேண்டும்.

நம் நாட்டில் நம் நாட்டு மக்களால் சமூக சீர்திருத்தம் என்பது ஒரு சிறிதும் செய்வதற்கு சாத்தியமே இல்லை. ஏனெனில், அவற்றிற்குத் தடையாய் கடவுள் உணர்ச்சியையும், மத உணர்ச்சியை யுமே நிறுத்தப்பட்டு இருப்பதால் முடியாததாய் இருக்கின்றது அன்றியும் இந்நிலை சிலருக்குப் பயன்படுவதாயு மிருக்கின்றது. இதுவரை செய்து வந்த காரியங்கள் எல்லாம் பயன்படாமல் போனதற்குக் காரணமே இதுதான் என்றே சொல்லுவேன்.

இதற்கு சமாதானம் சொல்ல வேண்டியவைகள் எல்லாம் சொல்லியாய்விட்டது. செய்ய வேண்டிய தெல்லாம் செய்து ஆய்விட்டது. அதாவது புத்தர், கபிலர், திருவள்ளுவர் முதலியவர்கள் சொன்னவை களுக்கு மேலாகவும், இராமானுஜர் செய்ததற்கு மேலாகவும் இனி ஒருவர் வந்து புதிய ஞானத்தை போதித்தோ, புதிய காரியத்தைச் செய்தோ விடமுடியும் என்பது இலேசான காரியம் அல்ல. அன்றியும் சமூக சீர்திருத்தத்திற்கு இப்போது விரோதிகளா யிருப்பவர்களுங்கூட தங்களுடைய தடை வேலையில் நம்பிக்கை வைத்திருப்பதன் காரணமும் இதுவேதான். ஆனாலும் அப்போதைய நிலைமையும், சௌகரியமும், அரசாங்கமும் வேறு; இப்போதைய நிலைமையும், சௌகரியமும் அரசாங்கமும் வேறு என்பதான ஒரு சிறிய திருப்தி சமூக சீர்திருத்தக்காரர்களுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடியதாயிருந்தாலும், கடவுள் உணர்ச்சியும், மத உணர்ச்சியும், ஒரு சிறிதும் மாறு பாடடையாமல் இருப்பதால் இந்த நிலையில் நமது நாட்டுச் சமுதாயத்திற்குச் சீர்திருத்தம் என்பது முடியாத காரியம் என்றே முடிவு கட்ட வேண்டி யிருக்கிறது. ஏனெனில் இந்த இரண்டையுமே மனிதனின் மூடபக்தியும், குருட்டு நம்பிக்கையும் என்கின்ற அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டிருக் கின்றது. ஏனெனில், குருட்டு நம்பிக்கையின் பயனாய் ஏற்பட்ட கடவுளினிடத்தில் தான் பெரிதும் மூட பக்தியால் ஏற்பட்ட மதத்தின் மூலம் கொள்கைகளை வகுத்து வாழ்க்கை நடத்துகிறோம். இம் மூட பக்தியையும், குருட்டு நம்பிக்கையும் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுவது சீர்திருத்த வேலையின் பாற்பட்டதல்ல; அது மனித சமூகத்தின் நன்மைக்காக அழிக்கப்பட வேண்டிய வேலையின் பாற்பட்டதாகும். ஏனெனில், அடியோடு அழித்துத் தரை மட்டமாக்கி புதுப்பிக்க வேண்டி இருக்கும் வேலை சீர்திருத்த வேலையாகாது, வேண்டுமானால் புனருத்தாரண வேலை Reconstruction என்று சொல்லலாம்.

இவ்வேலையில் ஈடுபடுபவர்களுக்கு மகத்தான மன உறுதியும் சந்தேகமற்ற தெளிவும் இருக்கவேண்டும். அஃதில்லாமல் ஆவேசத்தில் தலையிட்டு விட்டால் தற்கொலையாகவே முடியும். ஏனெனில் பலமானதும் இடையறாததுமான எதிர்ப்புகளிற்கிடையே இவ் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. காரணம் என்னவென்றால் வெகு காலமாக மனித சமூக இருதயத்தில் கலந்து ஊறி விட்டதும், இந்நிலை வெகு பேரினுடைய சுயநலத்திற்கு அனுகூலமாக யிருப்பதும் ஆகிய இரண்டு காரணங்களால்தான்.

எந்த காரணங்களால் உண்மையான சீர்திருத்தம் வெற்றி பெறவில்லையோ, என்ன என்ன சாதனங்கள் அச்சீர்திருத்தத்திற்குத் தடையோ அவைகளை வேருடன் அழிக்கத் தயாராயிருக்க வேண்டும். அவைகளில் ஒரு சிறு தாரையாவது கிளை வேரையாவது மீத்தி வைத்துக் கொண்டு சீர்திருத்தம் செய்யலாம் என்று எந்தவிதமான சீர்திருத்தக்காரர்கள் நினைத்தாலும் அவர்கள் ஒருக்காலமும் வெற்றி பெறமாட்டார்கள் என்பது எனது உறுதி.

அன்றியும் சிலர் சொல்லுவது போல் சீர்திருத்தக்காரர்களுக்கு நிதானமும் சாந்தமும் அளவுக்கு மீறி வேண்டும் என்பதையும் நான் ஒப்புக் கொள்ளுவதில்லை. அன்றியும் இவ்விஷயத்தில் வெறுப்பும் பிடிவாதமும் அடியோடு கூடாது என்பதையும் நான் ஒப்புக் கொள்வதில்லை.

நான் இப்படிச் சொல்லுவதால் அநேக பெரியோர்களுடைய அபிப்பிராயத்திற்கு முரண் பட்டவனாக பலருக்குக் காணப்படலாம். ஆம், இவ்வித அபிப்பிராயங்களில் நான் நன்றாக முரண்பட்டவன் தான். மேற்கண்டவிதம் சொல்லப்பட்டவர்களின் பொறுமையையும், நிதானத்தையும் சாந்தத்தையும், துவேஷமற்ற தன்மையையும் நான் என்னறிவுக்கு எட்டிய வரை கவனித்துப் பார்த்தேன். அவைகள் மிகுதியும் பயத்தாலும், ஒருவிதப் பலக் குறைவினாலும் இவ்விஷயத்தில் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தைகள் என்றே கண்டேன்.

அன்னியர்கள் நம்மை மதிக்கமாட்டார்களே, பழிப்பார்களே, எதிர்ப்பு பலமாய் விடுமே என்கிற பயமும் பலக்குறைவும் யாரிடத்தில் இருக்கின்றதோ அவர்கள் ஒருக்காலமும் உண்மையான சீர்திருத்தத் திற்கு உதவவே மாட்டார்கள். அன்றியும் அக்குணங் களுடன் கூடியவர்களால் நடைபெறும் சீர்திருத்தம் ஒரு காலமும் பயனளிக்கவே முடியாது; அன்றியும் சீர்திருத்தம் செய்பவர்கள் எவ்விதக் கட்டுப்பாட்டிற்கும் ஆளாயிருத்தல் கூடாது. சீர்திருத்தத்திற்கு விரோதமான கட்டுப்பாடுகள் எல்லாம் உடைத்தெறிவதைக் கைக் கொள்வதுதான் சீர்திருத்தத்திற்கு முதன்மையான பாதையாகும். கட்டுப்பாடுகளுக்கு அடங்கிய சீர்திருத்தம் என்பது அதிலும் நம் நாட்டைப் பொருத்தவரை சிறிதும் பயனற்றது.

(‘குடிஅரசு’ சொற்பொழிவு 2.12.1928)

Pin It