மோடி ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் வாராக்கடன்கள் என்று முடிவுகட்டி, தள்ளுபடி செய்யப்பட்ட கடன்தொகையும் 7 மடங்கு அதிகரித் திருப்பது, ரிசர்வ் வங்கியின் அறிக்கை மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

இதன்படி, கடந்த 2017-ஆம் ஆண்டின் இறுதியில், வங்கிகளின் வாராக்கடன் 7 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியிருந்த நிலையில், அதில் 2017-18 நிதியாண்டில் மட்டும், 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்களில் திரும்பி வராத தொகையை, பயன்தராத சொத்துக்கள் (Non Performing Asset) என்று கூறுகின்றனர். அதாவது இந்த சொத்துக்கள் வட்டியை ஈட்டித் தராவிட்டாலும், கடனுக்கான ஈட்டுச் சொத்துக்கள் இருக்கின்றன என்று பொருள்படும். இதனால், வங்கிகளுக்கு பெரிய நஷ்டம் எதுவும் இருக்காது.

ஆனால், ஒருகட்டத்தில் இந்த வாராக் கடன்களை வசூலிக்கவே முடியாது; ஈடுகட்டும் அளவிற்கு சொத்துக்களும் இல்லை என்று தீர்மானித்து, அந்த கடன்களை தள்ளுபடி செய்யும்போது, வங்கிகள் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கின்றன. இந்த வகையில், வாராக்கடன்களின் விவரங்களையும், தள்ளுபடி செய்யப்பட்ட தொகைகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதில், 2011 வரை வங்கிகளின் சொத்துக்கள் அதிகரித்துக் கொண்டேதான் வந்துள்ளன; வாராக் கடன்களும் அவ்வளவு அதிகமாக இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி, 2014-ஆம் ஆண்டு- மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த, கடந்த 4 ஆண்டுகளில் வாராக்கடன் பலமடங்கு அதிகரித்து விட்டதை புள்ளி விவரங்களுடன் தெளிவுபடுத்தி யுள்ளது.2014-ஆம் ஆண்டில் வாராக்கடன் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. அதுவே 2014-15இல், 7.79 சதவிகிதமும், 2015-16இல் 10.41 சத விகிதமும் உயர்ந்து, கடந்த 2016-17-இல் வாராக்கடன் 7 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

இந்தக் காலத்தில் வாராக்கடன் தள்ளுபடியும், அதிகரித்துக் கொண்டே வந்திருப்பதை ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 21 பொதுத்துறை வங்கிகள், மொத்தம் 3 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான வாராக் கடன்களை தள்ளுபடி செய்து உள்ளன. குறிப்பாக, 2017-18 இல் மட்டும் 90 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளன. இதன்மூலம், கடந்த 4 ஆண்டுகளில், வங்கிகள் வசூலித்த கடன் தொகையான ரூ. 44 ஆயிரத்து 900 கோடியை விட, தள்ளுபடி செய்யப்பட்ட தொகை 7 மடங்கு அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

Pin It