பார்ப்பனியம் என்பது ஒரு சமூகக் கோட்பாடு. எப்படி முதலாளியம், மார்க்சியம், சூழலியம் போன்றவை ஒரு கோட்பாடோ, அதுபோன்றே இதுவும் ஒரு கோட்பாடு. சிலர் திரிப்பது போல இது இனவெறுப்பு சொல்லல்ல. பெரியார் திரும்பத் திரும்பச் சொன்னது போல, எதிரி ‘பார்ப்பனர்’ அல்ல, ‘பார்ப்பனியம்’ என்கிற கோட்பாடு மட்டுமே. ஏனெனில் இந்தக் கோட்பாடுதான் ‘சாதியம்’ என்கிற அறமற்ற சிந்தனையை இம்மண்ணில் விதைத்தது. இந்தப் புரிதலோடு ‘சூழலியலில் சாதியம்’ என்கிற இக்கட்டுரைக்குள் நுழைய வேண்டுகிறேன்.

இந்த கருத்தரங்கிற்கு முதலில் இடப்பட்டிருந்த பெயர் ‘பெரியாரின் வேர்களைத் தேடி…’ என்பதாகும். அதனை முகநூலில் பதிவிட்டவுடன் ஓர் இயற்கை அன்பர் என்னிடம், ‘பெரியாருக்கும் சூழலியலுக்கும் என்ன தொடர்பு?” என்று கேட்டார். பெரியாருக்கும் சூழலியலுக்கும் ஒரு தொடர்பும் இல்லைதான். ஏனெனில் அவருடைய காலத்தில் தற்காலத்தைப் போல சூழலியல் சீரழிவு எதுவும் ஏற்படவில்லை. அதனால் அதைப் பேச வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படவில்லை.

சூழலியல் குறித்து பெரியார் எதையும் சிறப்பாகப் பேசிவிடவில்லை என்றாலும் அதற்கான கருத்தியலை விட்டுச் சென்றுள்ளார். சூழலியலை விமர்சன முறையில் அணுகும்போது அது நன்கு புலப்படுகிறது. இந்தக் கட்டுரை முழுக்க பெரியாரியல் பார்வை தென்பட்டாலும், ஆங்காங்கே பொருத்தமான இடத்தில் அவருடைய சொந்த சொற்களையும் பொருத்தி அதைப் புரிய வைக்க முயன்றுள்ளேன். இன்றைய சூழலியல் சீரழிவுக்குக் காரணமான ‘பார்ப்பன – பனியாக் கூட்டணி’யை அன்றே அடையாளம் காட்டியவர் அவர்.

காகம் - குருவிக் கதை

சூழலியல் என்றால் அது காக்கா, குருவிகளைப் பற்றிப் பேசுவது என்பதே பொதுப் புரிதல். சாதியத்தை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளவும் ஒரு காக்கா - குருவி கதைதான் நமக்கு உதவுகிறது. சாதியம் குறித்த தன் ஆய்வில் இந்தக் கதையைதான் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஆலன் டண்டிஸ்’ என்கிற நாட்டாரியல் ஆய்வாளர் தன் அடிப்படை அலகாகக் கொள்கிறார்.

ஓர் ஊரில் ஒரு காகமும், குருவியும் நண்பர்களாக இருந்தனர். ஒருநாள் இருவரும் சமைத்து சாப்பிட முடிவெடுத்தனர். அதன்படி குருவி அரிசி கொண்டு வர, காகம் பருப்பைக் கொண்டு வந்தது. சமையல் முடிந்ததும் காகம் தன் பங்கைக் கேட்டது. அப்போது குருவி காகத்திடம், “நீயொரு அழுக்குப் பிறவி. உன் அலகைக் கழுவி வந்தால்தான் உணவு” என்றது. காகமும் குளத்திடம் சென்று கழுவுவதற்குத் தண்ணீர் கேட்டது. காகம் கழுவினால் நீர் அழுக்காகிவிடும் என்று நினைத்த குளம் காகத்திடம், “நீ கரையோரமாக மான்கொம்பைக் கொண்டு துளையிட்டு ஊற்று நீரை எடுத்துக்கொள்” என்றது. காகம் மானிடம் சென்று கொம்பு கேட்க, அது, “நீ மாட்டிடம் சென்று பால் வாங்கி வா. நான் அதைக் குடித்து ஊட்டமானதும் எனது கொம்பை ஒடித்துக் கொள்” என்றது. காகம் மாட்டிடம் சென்று பால் கேட்டது. மாடும், “நீ புல் கொண்டு வந்தால் பால் தருகிறேன்” என்றது. காகம் புல்லிடம் சென்று அதைப் பறித்துக் கொள்ள அனுமதி கேட்டது. புல், “மண்வெட்டி கொண்டு வந்து என்னைச் செதுக்கிக் கொள்” என்றது. காகம் கொல்லரிடம் சென்று மண்வெட்டி கேட்டது. அவரும் மண்வெட்டியைப் புதிதாகச் செய்ய உலையைப் பற்ற வைத்து, காகத்தைக் காற்று துருத்தியை அழுத்தச் சொன்னார். காகமும் துருத்தியை அழுத்துகையில் உலைநெருப்பில் விழுந்து இறந்துவிட்டது.

இந்த நாட்டார் கதை சிறு சிறு வேறுபாடுகளுடன் இந்திய ஒன்றியம் முழுக்க வழக்கில் உள்ளது. எளிய கதைதான், ஆனால் அதன் உள்ளடக்கம் இந்திய சாதி அமைப்பை அப்படியே திறந்து காட்டி விடுகிறது. காகம் கருப்பு நிறம்; எனவே தாழ்த்தப்பட்ட சாதி. குருவி கருப்பு நிறமல்ல அல்லது வெண்மை நிறம், அதனால் உயர் சாதி. உணவு என்பது சமபந்தி; ஆனால் அது ஒரு சாரார்க்கு மறுக்கப்படுகிறது. இதில் பருப்பு என்பது உழைப்புச் சுரண்டல். குளம் என்பது அனைவருக்கும் பொதுவானதல்ல. நீர் என்பது ஒரு தூய்மைப்படுத்தும் பொருள். தீயில் விழுதல் என்றால் (நந்தன் முதலானோர்) சோதியில் அய்க்கியமாதல். இதனால் சொல்லப்படும் சுருக்கமான நீதி - பிறப்பிலேயே தீட்டானவருக்குச் சாவுதான் தீர்வு.

மேற்கண்ட காகம் - குருவி நாட்டார் கதையில் காகம் இழிவின் குறியீடாக விளங்குகிறது. ஆனால் தமிழ் இலக்கியங்களில் காகம் ஒரு நல்நிமித்தப் பறவை. அதன் கரைதல் விருந்தினரை அறிவிப்பதாகும் (குறுந்தொகை.210, ஐங்குறுநூறு. 391). இது இன்றைய சாதிய மனதுக்கும் அன்றைய சாதியமற்ற மனதுக்கும் உள்ள இடைவெளியைக் காட்டுகிறது. சாதியம் உருவானதற்குப் பல காரணிகள் இருப்பதாக அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சாதியத்தின் அடிப்படை அலகான ‘தீண்டாமை’ குறித்து நுணுக்கமாக ஆய்வு செய்கையில் அது சூழலியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை உணர முடிந்தது. அதைத்தான் இக்கட்டுரை விரிவாகப் பேசவிருக்கிறது.

தீண்டாமையை அம்பேத்கர், ‘ஸ்தூல தீண்டாமை (Literal), சூட்சும தீண்டாமை (notional) என்று இரண்டு பிரிவாக வகைப்படுத்துவார். கண்ணுக்குப் புலனாகும் ஸ்தூல தீண்டாமை, காலம் - வெளி - சூழல் ஆகிய பின்னணியைக் கொண்டது. இது தனிநபர் சார்ந்து வெளிப்படுவதால் ஒத்தத் தன்மை கொண்டிருக்காது. அதேசமயம் சூட்சும தீண்டாமை என்பது நுண்மையான கருத்தியல் தீண்டாமை. ஒருவேளை ஸ்தூலமான தீண்டாமை அதாவது வெளிப்படையான தீண்டாமை அறவே அற்றுப் போனாலும், நுண் தீண்டாமை அதற்கான தார்மீகக் கருத்தியலை எங்கிருந்து பெறுகிறதோ, அது நிலைத்திருக்கும் வரை தீண்டாமை தொடரவே செய்யும் என்கிறார் அம்பேத்கர் (ராமாநுஜம், 2016).

அந்தத் தார்மீகக் கருத்தியல் தோன்றும் இடம் எது என்கிற கேள்விக்கு ‘அசுத்தம்’ என்பதில் தொடங்கி ‘அகமணம்’ என்பது முடிய பல பொருத்தமான காரணிகள் பேசப்படுகின்றன. வியப்பளிக்கும் விதமாக இவை ஒவ்வொன்றின் பின்னணியிலும் சூழலியல் தன்னைப் பொருத்திக் கொள்வதைக் காண்கிறேன். இவற்றை மேலும் துல்லியமாக அடையாளம் காண நம் பயணத்தை மத்திய ஆசியாவிலிருந்து தொடங்குவோம்.

* * *

ஒளி X இருள் = வெள்ளை X கருப்பு

மத்திய ஆசியாவின் ஏதோவொரு சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களே ஆரியர்கள். குளிர்ப்பகுதி சார்ந்த அம்மக்களுக்கு அங்கிருந்த பருவநிலையே அவர்களின் மதக் கருத்தியலை வடிவமைத்துத் தந்தது. வெப்பமண்டலப் பகுதியைப் போல அல்லாது குளிர்ப்பகுதியில் ஞாயிறு அரிதாகவே தோன்றும். அது தோன்றும் காலம் மகிழ்ச்சியைத் தந்தது. எனவே சூரியன், மித்திரன், ஆதித்தன், சவிதா போன்ற அவர்களுடைய பல தெய்வங்கள் ஞாயிறோடு தொடர்புடையதாக இருந்தது. ஞாயிறைக் குறித்து ஏராளமான சுலோகங்கள் இயற்றப்பட்டிருந்தன. ஞாயிறு துதிக்கப்பட்டு ‘சூரியபகவான்’ ஆனார். காயத்ரி மந்திரமே ஞாயிறைத் துதிப்பதுதான்.

ஞாயிறு தோன்றாத நேரங்களில் குளிரையும் இருளையும் போக்க நெருப்பு மூட்டப்பட்டது. அந்நெருப்பு ஞாயிறைவிட எல்லாக் காலங்களிலும் உடனிருந்ததால் காலப் போக்கில் அதன் மதிப்பு உயர்த்தப்பட்டு ‘அக்னி பகவான்’ ஆனது. அதாவது இருளைப் போக்கிய ஒளி வணக்கத்துக்கு உரியதானது. வெளிச்சமற்ற காலம் இருளாக இருந்ததால் அது மகிழ்ச்சியற்றதாக இருந்திருக்க வேண்டும். ஒளி என்பது வெண்மையுடன் தொடர்புடையது. வெண்மைக்கு எதிர்மை கருப்பு. இருள், இரவு அனைத்தும் கருப்புதான். எனவே இயல்பாகவே கருப்பு என்கிற நிறத்தின் மீது வெறுப்பு உருவாக்கியிருக்க வேண்டும்.

வெள்ளை X கருப்பு என்கிற பாகுபாட்டில் இருந்தே வர்ணப் பிளவுகள் தோன்றின என்று “ஆரிஜின் அண்ட் குரோத் ஆஃப் இந்தியா” எனும் நூலில் நிருபேந்திரம் குமார் தத் கூறுவது கவனத்துக்குரியது. அதுபோல் இன இடப்பெயர்ச்சியுடன் மொழி, பண்பாடு ஆகியவை கடப்பது போல வர்ணப் பாகுபாடும் (வெள்ளை X கருப்பு என்கிற பிரிவினை) கடந்து வந்துள்ளது என்கிறார் ஓம்வெட். (தி.கு. இரவிச்சந்திரன், 2014).

‘வெண்ணிறம், தாமிர வண்ண, மஞ்சள் நிறக் கூந்தல் ஆகியவை பார்ப்பனர் என்பதற்கான அடையாளங்கள்’ என்று தனது ‘மகாபாஷ்யம்’ (2-2-6) நூலில் பதஞ்சலி பெருமைப் படுகிறார். இப்பெருமையை ரிக் வேதத்தின் பல சூத்திரங்களிலும், பரத்வாஜர், வசிஷ்டர் போன்ற முனிவர்களிடத்தும் காண முடியும். இத்துடன் நீல நிறக் கண்களும் அவர்களின் பெருமைக்குரியதே. வெண்மையைக் குறித்து பெருமைப்படும் அதேநேரம் விஸ்வாமித்திரர் உள்ளிட்ட பலரது சுலோகங்களில் ‘கருப்பு’ நிறத்தின் மீதான வெறுப்பையும் காண முடியும் (ராகுல, 2017). ஆனால், ஆரியர்களின் இந்த வெற்றுப் பெருமை முற்றிலும் அறிவியலுக்குப் புறம்பானது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றிய மானுட இனத்தின் ஆதிநிறம் ‘கருப்பு’ என்கிறது அறிவியல். குளிர்ப்பகுதிக்கு இடம் பெயர்ந்தவர்கள் காலப் போக்கில் தம் உடலில் இயல்பாக அமைந்திருந்த ‘மெலனின்’ நிறமியை இழந்து வெளுத்துப் போயினர். மந்தாரமான வானத்தின் கீழ் நடமாடிய இனங்களுக்குக் கண்களைச் சார்ந்த நிறப்பசை குறைந்ததால் அவை நீலநிறம் அடைந்தன. வெயிலொளி மிகுந்த இடங்களில் வசித்த மக்களுக்குக் காப்புக்கு அவசியமான நிறப்பசை மேம்பட்டுக் கண்கள் கருப்பு அல்லது கபில நிறத்தில் இருந்தன. மயிரின் நிறத்துக்கும் இது பொருந்தும் என்பார் டாக்டர் வேட்டூ அவர்கள். (ஞானப்பிரகாசர், 2013).

இயற்கை குறைபாடு கொண்ட ஓரினம், இயற்கையின் இயல்போடு இருந்தவர்களைத் தாழ்மையாக எண்ணியது வேடிக்கையே. சிந்துவெளிப் பகுதிக்குள் நுழைந்த ஆரியர்களுக்கும் இந்த அறிவீனம் இருந்தது. அதன் காரணமாகவே அவர்கள் இங்கிருந்த கருநிற மக்களைத் தாழ்மையாக நோக்கினர். இத்தகைய அறிவற்ற மக்களை, ‘கால்நடையை ஓட்டிக் கொண்டு கால்நடையாய் வந்த கால்நடைகள்’ என்று பெரியார் வருணித்தது பொருத்தமாகவே உள்ளது.

தோல் நிறத்தை அடிப்படையாகக் கொண்டே, ‘சதுர்வர்ணங்கள்’ என்கிற நான்கு வர்ணம் உருவாக்கப் பட்டன. வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கருப்பு முதலிய நிறங்கள் முறையே பார்ப்பனர், சத்ரியர், வைசியர், சூத்திரர் ஆகிய வகுப்புகளைப் பிரதிபலித்தன. காலப்போக்கில் முதல் மூவர்ணங்களும் ஒன்றிணைந்து இறுதியில் வெள்ளை X கருப்பு என்கிற இருமையில் வந்து நின்றது. இந்த வேறுபாடு மனிதர்கள் மட்டுமன்றி இயற்கைசார் பொருட்கள், உயிரினங்கள் அனைத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. வெண்ணிறப் பொருட்களும் உயிரினங்களும் உயர்வானதாக மாற, கருநிறப் பொருட்கள் இழிவானதாக மாறியது.

குளிர்ப் பகுதியில் ஆரியர்களின் குளிரைப் போக்கிய ‘சூரிய பகவான்’ வெப்பமண்டலப் பகுதியின் இருள்நிற மனிதர்களால் ஏற்பட்ட தீட்டினைக் கழிக்கும் கருவியாகவும் விளங்கினார். மனுவின் காலத்தில் சண்டாளர் இரவில் நடமாடக் கூடாது (மனு.10:43). பகல் என்றால் அவர்களைப் பார்த்த தம் கண்களால் பார்ப்பனர்கள் சூரியனைப் பார்த்துத் தீட்டுக் கழித்துக் கொள்வர். இரவில் அதற்கு வழியில்லை (தி.கு. இரவிச்சந்திரன், 2014).

தேவர்கள் X அசுரர்கள் என்கிற இருமையே வெண்மை X கருப்பு என்பதின் எதிரொலி தான். நாட்டார் கதையில் வரும் காகம் என்கிற கருநிறப் பறவையின் தேர்வு வடிவமைக்கப்பட்ட உளவியலே. காகம் என்பது அசுர வகை. அசுரர் நிறம் கருப்பு. மேலும் அசுரர்கள் தீமை செய்பவர்கள். தீமை செய்யும் தெய்வமான சனியின் வாகனம் இந்தக் கருநிற காகம்தான். அதே சமயம் படைப்புக் கடவுளான பிரம்மாவின் வாகனம் அன்னம். அது வெண்மை நிறம்.

வெண்ணிறத்தில் இருக்கும் பசு ‘காமதேனு’வாக மாற, கருநிற எருமை சாவுக் கடவுள் எமனின் வாகனமானது. அதிலும் ஆண் எருமை எதிர்த் தன்மை கொண்டது. தீமையைக் குறிப்பது. பறையர்களோடு இணைந்து நோக்கத்தக்கது (டோனி வெண்டிகர், 2016). எருமை இந்நிலத்தின் கடவுள். ‘மசோபா’ எனும் பெயரில் அது வணங்கப்பட்டது. அந்தத் தெய்வத்தை வணங்கியவர்களின் குலம் வெல்லப்பட்டதன் அடையாளம்தான் ‘மகிஷாசுர மர்த்தினி’ (மகிஷம் - எருமை) கதையாகும் (டி.டி.கோசாம்பி, 2017). வெள்ளை X கருப்பு அரசியல் உயிரினங்களில் இருந்து தாவரப் பொருட்களுக்கும் தாவியிருந்தது. தமிழகத்தில் சாதாரண உணவாக இருந்த ‘காரெள்’ (கருப்பு எள்) இன்றைக்குத் துக்கச் சடங்குகளில் இடம்பெறும் பொருள் (கு.வி.கிருஷ்ணமூர்த்தி, 2011).

புராணத்திலும்கூடச் சிவன் கருநிறக் காளியைக் கேலிச் செய்கிறான். அவளது கருத்த உடல் தன் சிவந்த உடலைத் தழுவியிருப்பது ஒரு கரும்பாம்பு சந்தன மரத்தைத் தழுவியிருப்பது போன்றுள்ளது என்கிறான். காளி நாட்டார்களின் கடவுளாக இருந்து பெருந்தெய்வ வழிபாட்டுக்குள் ஈர்க்கப்பட்டவள். பௌத்தப் புரட்சிக்குப் பின் கருப்பு நிறத்தை நேரடியாகத் தவிர்க்க முடியவில்லை. எனவே அதற்குச் சாயமடிக்கும் முயற்சிகள் தொடங்கின. இதற்காகப் புராணங்கள் கெட்டிக்காரத்தனமாக வடிவமைக்கப்பட்டன. தன் கருப்பு நிறம் பற்றிக் கவலைப்பட்ட காளிக்கு பிரம்மன் அவள் பொன்னிறம் பெறுவாள் என்று வரம் தருகிறான். அதன்படி காளி தன் தோலை உரித்து ஒரு கருநிறப் பெண்ணை உருவாக்கி ‘காளி’ எனும் பெயர் தந்து விந்தியமலைக்குச் செல்லுமாறு சொல்கிறாள். அங்கு அவள் ‘விந்தியவாசினி’ ஆகிறாள். பொன்னிறம் பெற்ற காளியோ ‘கௌரி’ ஆகிறாள் (டோனி வெண்டிகர், 2016).

அதேசமயம் நிறமிக் குறைப்பாடோடு தம் நிலத்தில் நுழைந்த ஆரியரைத் தமிழ் மக்கள் இனவெறுப்புடன் நோக்கவில்லை. அவர்களுக்குச் சூட்டப்பட்ட ‘பார்ப்பனர்’ என்கிற பெயரும் சூழலியல் அடிப்படையில்தான் சூட்டப்பட்டது. ஆரியர்கள் வெள்ளை நிறத்தில் இருந்ததால் அதற்குப் பொருத்தமான பெயராக ‘பார்ப்பனர்’ என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தனர். பார்ப்பு + அனர் = பார்ப்பனர். ‘பார்ப்பு’ என்றால் பறவைக் குஞ்சு. ‘அனர்’ என்றால் போன்றவர். எந்த நிறப் பறவையாக இருந்தாலும் அது குஞ்சாக இருக்கும்போது வெளுத்த நிறத்தில் தோற்றம் அளிக்கும். அந்த வெளுப்பான பறவை குஞ்சைப் போன்றவர் எனும் பொருளில்தான் ‘பார்ப்பனர்’ என்று பெயரிட்டனரே ஒழிய அதில் ‘சூத்திரர்’ என்கிற சொல்லைப் போலத் துளியும் வெறுப்புணர்வு கிடையாது.

மேலும் பார்ப்பனர்கள் தம்மை ‘இரு பிறப்பாளர்’ எனும் பொருளில் ‘த்விஜ’ என அழைத்துக் கொள்வர். இதற்கான விளக்கத்தில் ‘முட்டையில் இருந்து வெளிவரும் பறவையைப் போல இருமுறை பிறந்தவர்கள்’ எனப் பொருள் கூறுவர். இந்தப் பொருளில் பார்த்தாலும் ‘பார்ப்பனர்’ என்கிற சொல் மிகப் பொருத்தமான சொல்லாகவே அமைந்துள்ளது.

* * *

திசைகள் தோறும் சாதியம்

இந்திய ஒன்றியத்தில் பல நூற்றாண்டுகளாகச் சாதிய அமைப்பு எவ்வாறு நீடித்து வருகிறது என்கிற ஆய்வை சூழலியலாளர் மாதவ் காட்கில் அவர்களும், மானுடவியலாளர் கைலாஷ் மல்கோத்ராவும் ஆய்வு செய்தனர். ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுக்காலம் நடத்தப்பட்ட ஆய்வில் இயற்கை வளப் பயன்பாடு எவ்வாறு சாதிய அமைப்புடன் நெருங்கியத் தொடர்புடையதாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். அவ்வகையில் சூழலியல் – சாதியத் தொடர்பை வெளிக்கொணர்ந்தனர். ஒரு சூழல் வெளியும் (Ecological Space), அதன் மூலவளமும் (Natural Resources) ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது. அவர்களுக்கு நாம் பார்ப்பனர், சத்ரியர், வைசியர் என்று வெவ்வேறு பெயரிட்டு அழைத்தாலும் ‘ஆரியர்’ என்று அதைச் சுருக்க முடியும். இயற்கைவள துய்ப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மண்ணின் மைந்தர்கள் சூத்திரர்களாகவும் சண்டாளர்களாகவும் சபிக்கப் பட்டதே வரலாறு.

கி.மு.1000-500-களில் வேத கால மக்கள் சிந்து-கங்கை ஆறுகளின் இடைப்பட்ட வண்டல் நிலத்தில் குடியேறியதில் இருந்து இது தொடங்குகிறது. அதற்கு முன்பு ‘விரிஜனா’ என்றழைக்கப்பட்ட மேய்ச்சல் வெளிகள் இலவச பயன்பாட்டில் இருந்தன. பின்னர் கங்கைச் சமவெளியில் இருந்த காட்டு மரங்களின் கனிகளும் வேர்களும் பார்ப்பனர்களின் சொத்தாக மாறின. அவற்றின் முதல் உரிமை பார்ப்பனர்களுக்கே என்று ‘சாந்தி பர்வா’ சட்டம் வகுத்தார். எதிரிகளிடமிருந்து பறிக்கப்பட்ட பசுக்களின் பாலைப் பார்ப்பனர்கள் குடிக்கலாம் என்பதால் அவற்றையும் அவர்களுக்கே உரிமையாக்கி சட்டம் இயற்றினார். சாணக்கியர் இன்னும் ஒருபடி மேலே சென்றார். சோமபான உற்பத்திக்காகப் பார்ப்பனர்களுக்குக் காடுகளை வழங்க வேண்டும் என்றார் (ஆர்.எஸ்.சர்மா, 2017).

எவ்வளவுதான் சோம பானம் குடித்துக் கொண்டிருக்க முடியும்? உண்ணுவதற்கு உணவு வேண்டாமா? வேளாண் நிலத்தை விரிவாக்க காடுகள் எரிக்கப்பட்டன. ‘சதபதா பிராமணா’ என்பவர் ‘விதேக மாதவ’ எவ்வாறு காடுகளை எரித்துக் கொண்டே முன்னேறி, வடக்கு பீகாரிலுள்ள ‘சடனிரா’ வரை சென்றடைந்தனர் என்பதைக் குறிப்பிடுகிறார். தம் வாழ்விடமான காட்டிலேயே பல பழங்குடிகளும் பிற உயிரினங்களும் உயிரோடு எரிக்கப்பட்டனர். வாயு புராணமும் ஆரியர்கள் வன்முறையின் மூலம் ஆறுகள், நிலங்கள், குன்றுகள், மரங்கள், புதர்கள், தாவரங்களை அவர்கள் தமதாக்கிக் கொண்டனர் என்று ஒப்புக் கொள்கிறது (ஆர்.எஸ். சர்மா, 2017).

நிலம் கைவசமானதும் ஆரியரின் புவியியல் எல்லையைத் தீர்மானிக்கிறார் மனு. அதற்கு, ‘ஆர்ய வர்த்தம்’ என்று பெயரிடுகிறார். அது கிழக்கு கடலுக்கும் மேற்கு கடலுக்கும் இடையே வடக்கே இமயத்துக்கும் தெற்கே மால்வா மலைகளுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பாகும். கிருஷ்ண சாரம் எனும் கறுப்புக் கோடுகள் கொண்ட மான்கள் உலாவும் இந்த இடம்தான் வேள்விகள் செய்வதற்கு மிகச் சிறந்த இடமாகும். (ஏனெனில் இந்த மானின் தோல்தான் அன்றைக்குப் பார்ப்பனர்களின் மேலாடை) மற்றவை மிலேச்ச தேசம் எனப்படும் (மனு: 22-23).

உண்மையில் மத்திய ஆசியாவிலிருந்து தொடர்ந்து மாடு மேய்த்து வந்த இடங்கள் அனைத்தையும் உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் ஆரியரின் ‘அகண்ட பாரதம்’ கனவு. அவர்களுடைய தொடக்க நூல்களும் அக் கனவையே தூண்டின. ’பிருது’ என்கிற அரசனின் பெயருக்கே ‘அகலமானது’ என்பதுதான் பொருள். இச்சொல்லின் பெண் பால் வடிவம்தான் ‘பிருத்வி’, அதாவது ‘நிலம்’. ஐரோப்பாவின் ஆரிய வெறியர்களான நாஜிகளும் ‘லெபன்ஸ்ரோம்’ (வாழுமிடம்) என்கிற பெயரில் தம் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி அகண்ட நிலம் தேடியதை இத்துடன் ஒப்பிட்டு நோக்கலாம் (டோனி வெண்டிகர், 2016).

இவ்வாறு சொத்து உருவானதும் வர்ணமுறை கெட்டிப் படுத்தப்பட்டது. ‘புனித ஞானத்துக்குச் சொந்தமானவர்கள் ‘பார்ப்பனர்’ ஆயினர். வேட்டையாடுபவர்கள் மற்றும் அழிவை ஏற்படுத்துபவர்கள் ‘சத்ரியர்கள்’ ஆயினர். உழவர்கள் ‘வைசியர்கள்’ ஆனார்கள். துயரம் தாங்காது ஓடியவர்களும் உடல் உழைப்பாளிகளும் இழிவானவர்களும் பலவீனமானவர்களும் ‘சூத்திரர்’ என வகுக்கப் பட்டதாக வாயு புராணம் கூறுகிறது (ஆர்.எஸ்.சர்மா, 2017).

வண்டல் மண், இரும்புக் கலப்பை கூட்டணி ஆரிய வர்த்தத்தின் தானிய உற்பத்தியைப் பெருக்கியது. நாற்றுப் பிடுங்கி நடும் முறை உருவானதும் அவை இருமடங்காகி உபரி பெருகிற்று. இதனால் ஆடம்பரமான வேள்விகள் நடத்தி பார்ப்பனர்கள் ‘பலி’ பெற்றனர். பலி என்பது காணிக்கை. பார்ப்பனர்களோடு சத்ரியர்களும் இவ்வகை அன்பளிப்புகளைப் பெற்றனர். இதனால் உழைக்கும் மக்கள் பாதிப்படையத் தொடங்கினர். கி.பி. 3 மற்றும் 4 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சூத்திரர்களும் வைசியர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய மறுத்தனர். இதுவே சமஸ்கிருத அறிஞர் ஆர்.சி.ஹஸ்ரா என்பவரால் ‘கலிகாலம்’ என அழைக்கப்பட்டது (ஆர்.எஸ். சர்மா, 2017).

தொடக்க யுகமான கிருதயுகம் ஆரியர்களால் ‘சத்ய யுகம்’ எனப் புகழப்பட்டது. காரணம் அக்காலத்தில் அவர்கள் உழைக்கவில்லை, நூற்கவில்லை. நிலம் தானாகவே வேண்டியதை எல்லாம் வழங்கியது (டி.டி.கோசாம்பி, 2017). அடுத்தடுத்த யுகங்களான திரேத, துவாபர யுகத்தில் நிலைமை படிப்படியாக வீழ்ந்து கலவரமான கலியுகம் பிறந்து விட்டது. இதற்குமேல் விட்டு வைக்க முடியாது. சட்டங்களை இறுக்கி, ‘தண்டநீதி’ தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. வர்ணக் கடமையை மீறுபவர்களை அடக்கச் சத்திரியர்கள் அணியமாகினர். வாயு புராணத்தின்படி பிரம்மன் சத்திரியர்களுக்குப் போர் செய்வதைத் தொழிலாகப் பரிந்துரைத்தார் (ஆர்.எஸ்.சர்மா, 2017).

ஆரியவர்த்தம் முழுமையும் கட்டுக்குள் கொண்டுவர நால்வர்ணக் கொள்கைகள் நான்கு திசைகளுக்கும் விரிவடைந்தது. இதற்கு இராமாயணம், மகாபாரதக் கதைகள் உதவின. மகாபாரதத்தின் புவியியல் அச்சுக் கிழக்கு மேற்காகவும், இராமாயணத்தின் புவியியல் அச்சு வடக்கு தெற்காகவும் அமைந்திருந்தன. பஞ்சாப்பையும் வங்காளத்தையும் இணைத்த கிழக்கு மேற்காக அமைந்த ‘உத்தரபாதா’ வணிக வழியும், தெற்கு நோக்கி சென்ற தட்சிணபாதா வழியும்தான் இன்றைய தேசிய நெடுஞ்சாலைகளான சூழ 2 மற்றும் சூழ 7 ஆகியவை. இவை இரண்டும் சந்திக்கும் புள்ளியே காசி நகரம் (சஞ்சீவ் சன்யால், 2016). காசி என்ற பழங்குடியினர் வாழ்ந்த அந்நகரம், அவர்கள் விரட்டியடிக்கப்பட்டுச் சூத்திரர்கள் ஆக்கப்பட்ட பின்னர் ‘வருணை ஆறும் அசி ஆறும் (இன்றைக்குச் சாக்கடையாக ஓடுவது) இணையும் ‘வாரணாசி’ ஆக்கப்பட்டது. காசி எனும் பழங்குடியினப் பெயர் மறக்கடிக்கப்பட்டது.

நால்வர்ணத்தாரின் பிணத்தைப் புதைக்கும் இடுகாட்டின் திசைகளும் தீர்மானிக்கப்பட்டது. சூத்திரர்களுக்குத் தென்திசை ஒதுக்கப்பட்டது (மனு.5:92; அர்த்த சாஸ்திரம்.2:4). தெற்கே விந்தியமலை இருந்ததே காரணம். ஆரிய நாகரிகம் விந்தியத்துக்குத் தெற்கே நுழையாத மிகப் பழையக் காலத்தில் ‘தக்கிணப் பாதம்’ நாடு கடத்தப்பட்டோர்களின் இடமாகக் கருதப்பட்டது என்பது மெக்டொனால்ட் மற்றும் கெய்த் ஆகியோரின் கருத்தாகும். எனவே சதுர் வர்ணம் தென்னிந்தியாவில் எக்காலத்திலும் நடைமுறையில் இருந்ததில்லை (பி.டி.எஸ். அய்யங்கார், 1989).

விந்திய மலையைக் கடந்து ஊடுறுவாதபடி அங்கு வசித்த பழங்குடிகள் ஆரியர்களைத் தடுத்ததால் தெற்கு யமனின் திசையாகக் கருதப் பட்டது. அகஸ்தியரை விழுங்கிய வாதாபியின் கதை இதைதான் தெரிவிக்கிறது. இதனால் பழங்குடிகள் வசித்த அப்பகுதியில் (நிஷாட தேசத்தில்) புண்ணிய நதிகளும் இல்லாது போயிற்று. இதற்கு எதிர்நிலையில் தெற்கில் வசித்தவர்கள் வினையாற்றினர். தமிழ்நாட்டின் பெரும்பாலான நாட்டார் தாய் தெய்வங்கள் தொன்னூற்று ஒன்பது விழுக்காடு தம் நிலத்துக்கு ஆபத்தைக் கொண்டுவரும் திசையான வடக்கு நோக்கியே வீற்றிருந்து காத்து வந்தனர் என்கிறார் தொ.பரமசிவன் (தொ.ப. 2012).

தமிழர்களின் கூட்டு நனவிலி மனதில் இன்றைக்கும் வடக்கு ஆகாத திசைதான். ‘வடக்கே தலைவைத்துப் படுக்காதே’ என்கிற சொற்றொடரின் உளவியலும் இதுதான். இதை மறைப்பதற்காக இன்றைய இந்துத்துவா ‘காந்தப்புலம்’ போன்ற கதைகளை உருவாக்கி அளிக்கிறது. காற்றைப் பற்றிச் சங்க இலக்கியம் விரிவாகப் பேசியுள்ளது. அனைத்து திசையிலிருந்து வரும் காற்றை வரவேற்கும் அது வடக்கிலிருந்து வரும் ‘வாடை’க் காற்றை மட்டும் பல இடங்களில், ‘இரக்கமில்லாதது, கொடியது’ என்று கடிகிறது. தமிழர்களுக்கு வடக்கிலிருந்து காற்று வந்தால்கூடப் பிடிக்கவில்லை; பின், காதல் மட்டும் எப்படி வரும்?

அனைத்தையும் மீறி பார்ப்பனியம் தமிழக எல்லைக்குள் நுழைந்ததும் அது உடன் அழைத்து வந்த சாதிய அழுக்கு தமிழகத்தின் திசைகளில் படிந்தது. தமிழக நில அமைப்பு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிவதாகும். மேற்கு மேடான பகுதி, கிழக்கு தாழ்வான பகுதி என்கிற இயற்கை அமைப்பையே அவர்கள் உயர்வு - தாழ்வு என்கிற சாதியக் கருத்தியலாக மாற்றினர். இதனால் சேரியின் திசை கிழக்கு என்றானது. ‘கீழத்தெரு, கீழ்குடி போன்ற சொற்கள் சாதியச் சொற்களாக மாறிவிட்டன.

- நக்கீரன்