இந்திய தேசியம் (அனைத்துப் பிரிவினரையும்) உள்ளடக்கியதா? ((“Was Indian Nationalism inclusive?) என்ற தலைப்பில், சீரிய சமூக ஆய்வாளர் கே.என்.பணிக்கர் எழுதிய கட்டுரை ஒன்று ‘இந்து’ நாளேட்டில் (பிப்.23, 2010) வெளிவந்துள்ளது.
 
இந்திய விடுதலைப்போராட்டத்தின் மிகப் பெரும் பலவீனம் - சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்ட பிரிவினருக்கான தீவிர செயல் திட்டங்கள் எதையும் இணைத்துக் கொள்ளாததுதான் என்று, கே.என்.பணிக்கர், அக்கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். கீழ்க்கண்ட கருத்துகளையும் அக்கட்டுரை முன் வைத்துள்ளது.
 
நாட்டின் வளர்ச்சிகளோடு இணைந்து வர முடியாது ஒதுக்கியே நிறுத்தப்பட்டுள்ள பிரிவினரை பொது நீரோட்டத்துக்கு கொண்டு வரும் வகையில் 11 ஆவது திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட பிரிவினர் நாட்டின் வளர்ச்சி நீரோட்டத்தில் இணையாமல், ஒதுங்கியே நிற்கிறார்கள் என்பதை அரசே, இதன் மூலம் ஒப்புக் கொண்டுள்ளது. காலனியத்துக்கும், மக்களுக்கும் உள்ள பரிமாற்ற உறவுகளை தொலைநோக்குப் பார்வையில் ஆராய்ந்து, பல்வேறு சமூகப் பிரிவுகளையும், கவனத்தில் கொண்டு, அவைகளுக்கிடையிலான வேறுபாடுகளைகளையும் முயற்சிகளே இந்தியச் சூழலில் ‘தேசியம்’ என்பதற்கான உண்மையான அர்த்தமாக இருக்க முடியும். காலனிய காலத்தின் முதன்மையான முரண்பாடாக - சாதி, தீண்டாமை, வகுப்பு பிரச்சினைகளே இருந்தன. இந்த நிலையில் சுதந்திரம் பெற வேண்டும் என்ற ஒற்றை முழக்கத்தோடு எல்லைகளை வகுக்காமல், சாதி மதப் பகைமை இல்லாத ஒரு புதிய சமூகத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற பார்வையும், சுதந்திரப் போராட்டத்தோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆய்வாளர் பணிக்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். தேசியத்தை ‘சுதந்திரம்’ என்ற குறுகிய எல்லையில் வரையறுத்துக் கொண்ட காரணத்தினால்தான், உயர்சாதி - மேல்தட்டு வர்க்கத்தின் ஆதிக்கம் இன்றளவும் தொடருகிறது என்று சுட்டிக்காட்டும் அந்த ஆய்வாளர், சமூகநீதி கோரிக்கைகளை முன் வைத்து, பெரியார், அம்பேத்கர், பூலே போன்ற சிந்தனையாளர்கள், சுதந்திரப் போராட்ட காலத்திலேயே இயக்கம் நடத்தியதையும் சுட்டிக்காட்டுகிறார்.
 
காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், அக்கட்சி அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை வலியுறுத்தினார். காங்கிரசின் பார்ப்பனத் தலைமை அதை புறந்தள்ளியது. சுதந்திரம் என்ற பெயரில் ஆட்சி அதிகாரம், பார்ப்பன - பனியாவின் கரங்களிடம் சென்றடைந்தது. இந்திய ஆட்சி - அரசு நிறுவனங்கள் - பார்ப்பனியத்தின் குணாம்சங்களை உள்வாங்கிக் கொண்டன. இந்தியாவில் மத்தியில் ஆட்சி மாறினாலும் ஆளும் வர்க்கத்தின் கோட்பாடாக பார்ப்பனியமே மேலோங்கி நிற்கிறது. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் - ‘சூத்திர’ இழிவுக்கும், சாதிய ஒடுக்குமுறைக்கும் உள்ளாகி, நாட்டின் வளர்ச்சிப் பாதையில் புறந்தள்ளப்பட்டுக் கிடக்கிறார்கள்.
 
பெரியார், அன்று ‘சுதந்திரம்’ என்ற பெயரில் நடந்த போராட்டத்தைக் கடுமையாக சமூகப் பார்வையில் விமர்சனம் செய்து வந்தபோது, ‘தேசத் துரோகி’ என்றும், ‘பிரிட்டிஷ் விசுவாசி’ என்றும், ‘வகுப்புவாதி’ என்றும் பார்ப்பன ஏடுகள், பார்ப்பனர்கள் திட்டமிட்டு, அவதூறுகளை அள்ளி வீசினர். அன்று பெரியார் முன் வைத்த கருத்துகள், சமூகப் பார்வையில் மிகச் சரியானவை என்பதையே இன்று ஆய்வாளர்கள் வெளியிடும் கருத்துகள் உறுதிப்படுத்துகின்றன.

Pin It