நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ‘பூமியின் சாம்பியன்’ விருதை வழங்கியுள்ளது ஐக்கிய நாடுகள் சபை. சுற்றுச்சூழல் முன்னேற்றத் துக்காகப் பாடுபடும் தலைவர்களுக்கு வழங்கப்படுவது இந்த உயரிய விருது. சூரியசக்தி மின்சாரம் உள்ளிட்ட சூழல் நடவடிக்கைகளில் பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து செயல்பட்டதற்காகவும், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை 2022ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதாக அறிவித்துள்ளதாலும் இந்த விருது. இதைப் பெறும் அளவுக்கு மோடி தகுதியானவரா? கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?

modi receiving award for environment2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்ததும், புதிய தொழிற்சாலைகளுக்கு சுற்றுச் சூழல் அனுமதி வாங்குவதில் மாற்றம் கொண்டு வந்தார். ஒரு பெரிய தொழிற்சாலையைத் தொடங்குவதற்கு முன்பாக, அது அமைய இருக்கும் இடத்தில் அதனால் எந்தவிதமான சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் பாதிப்புகளும் ஏற்படாது என்பதைச் சூழலியல் துறை உறுதிசெய்ய வேண்டும். முன்பு இதற்கான கால அவகாசம் 600 நாட்களாக இருந்தது. மோடி அரசு இதை 170 நாள்களாகக் குறைத்தது. இதன் விளைவாக, இயற்கையின் சுழற்சிக்குத் தகுந்தவாறு அனைத்துப் பருவங்களிலும் சூழலியல் முக்கியத்துவத்தை ஆய்வு செய்ய முடியாமல் போனது. இதனால் வனப் பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் முறையான ஆய்வுகளின்றி தொடங்கப்பட்டன. இதைப்போன்ற பல சட்டத்திருத்தங்கள் மக்கள் கருத்து கேட்காமலே கொண்டுவரப்பட்டன.

கடந்த ஆண்டு டெல்லியில் காற்று மாசு மிக அதிக அளவைத் தொட்டது. மக்கள் சுவாசக் கவசமில்லாமல் வெளியே வர முடியாமல் போனது வரலாற்று அவலம். உலகின் அதிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதல் 11 இடங்களை இந்திய நகரங்கள் பிடித்தன. உலக அளவில் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்து வரும் 16 நதிகளில் கங்கைக்கு இரண்டாவது இடமும், பிரம்மபுத்திராவுக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது. இந்த நிலையை மாற்ற மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.

இந்தியாவில் சூழலியல் போராட்டங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு வெளியிட்ட ‘சூழலியல் பிரச்னைகளைக் கையாள்வதில் சிறப்பான நாடுகள்’ பட்டியலில் 2016-ம் ஆண்டு 141-வது இடத்திலிருந்த இந்தியா, இந்த ஆண்டு 180 நாடுகளில் 177-வது இடத்துக்குத் தள்ளப்பட் டுள்ளது. போராட்டங்களில் பல சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ‘குளோபல் விட்னஸ்’ அமைப்பு ‘பூமியின் பாதுகாவலர்கள்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், சூழலியல் செயற்பாட்டாளர்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

புது தேசிய வனக் கொள்கை, பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காடுகளைத் தாரை வார்ப்பதாக சூழலியலாளர்களின் விமர்சனங்களுக்கு உள்ளானது. சுற்றுச்சூழல் சட்டங்களில் பல்லாண்டு காலமாக இருந்த தடைகளையும் தடுப்பரண்களையும் தளர்த்திக் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தங்கள் சர்ச்சைக் குள்ளாயின. “இதுவரை இருந்த சிவப்புத் தடைகளைத் தளர்த்தி உங்கள் முதலீடுகளை சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறது இந்தியா” என்று உலக அரங்கில் பிரதமர் பேசியதே இதற்கு சாட்சி.

2017 முதல் 2031-ம் ஆண்டு வரையிலான தேசிய வனவிலங்குகள் பாதுகாப்புத் திட்டம் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. அதில் மனிதன் - விலங்கு எதிர்நோக்குதல், புதர்க்காடுகள் மற்றும் புல்வெளிக் காடுகள் குறித்துப் பேச வில்லை. வனவிலங்குகள் பாதுகாப்புக்குத் தேசியக் குழு ஒன்றை அமைத்தார்கள். அதில் சூழலியல் அறிஞர்களோ, தன்னார்வலர்களோ உறுப்பினர்களாகச் சேர்க்கப்படவில்லை. ஒடிசா, மகாராஷ்டிரம், தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் பறவைகளின் வாழிடங்களில் 519 வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

இந்திய வன உரிமைகள் சட்டமே பழங் குடிகளின் வன உரிமைகளைப் பாதுகாக்கிறது. மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம், பழங்குடியின கிராம சபைகளுக்கு இருந்த அதிகாரத்தைப் பறித்துவிட்டது. இதனால் வனங்களுக்குள் இருக்கும் பழங்குடிகளின் நில உரிமைகள் பறிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான இழப்பீடுகளும் கிடைக்காமல் போனது.

சூழல் சட்டங்களைப் பாதுகாக்கவும் நடைமுறைப்படுத்தவும் அமைக்கப் பட்டதே தேசிய பசுமைத் தீர்ப்பாயம். உலகிலேயே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா ஆகிய மூன்று நாடுகளில்தான் இதுபோன்ற சூழலியல் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இது அரசாங்க நடவடிக்கைகளையே கேள்வி யெழுப்பும் அதிகாரம் கொண்டது. 2017-ம் ஆண்டு இந்தத் தீர்ப்பாயத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. உதாரணமாக, இந்தத் தீர்ப்பாயம் நதிகள், காடுகள் போன்றவற்றைத் தானாக முன்வந்து ஆய்வு செய்யலாம். ஆனால், அதற்கு ஆகும் செலவுகளைக் கட்டுப்படுத்து வார்கள். எப்படி முழுமையாகவும் சுதந்திரமாகவும் ஆய்வுகள் நடத்த முடியும்?

இப்படி காடுகள் அழிப்பு, நீர்நிலைகள் காணாமல் போவது, கேள்விக்குறியாகும் காட்டுயிர்ப் பாதுகாப்பு, பழங்குடிகளின் வன நில உரிமைகள் பறிப்பு எனச் சூழலுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மோடியின் அரசு. இப்படி இருக்கும்போது ஐ.நா சபை அவருக்குத் தந்திருக்கும் ‘பூமியின் சாம்பியன்’ விருது, சர்வதேச அளவில் ஐ.நா சபையின் நேர்மையைச் சந்தேகிக்க வைத்திருக்கிறது.

- க.சுபகுணம் (இணையத்திலிருந்து)

Pin It