அன்பு, எளிமை, கடின உழைப்பு, பார்ப்பவரைக் கவரும் கம்பீரத் தோற்றம், பிடிவாத குணத்திற்கே மிகவும் பிடித்தவர். ஒருபோதும் புகழை விரும்பாத புன்சிரிப்புத் தோழர் எஸ்.எஸ் கண்ணன் என்றால் மிகையாகாது. தத்துவமென்றால், மார்க்சியத்தைத் தழுவிய முதுபெரும் கம்யூனிஸ்ட். பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த நாத்திகன், கார்ல் மார்க்ஸ் நூலகத்தை நிறுவியர், மனிதநேய செயலுக்கான சைக்கிள் பயணத்தின் நாயகன் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் நமது அன்புத் தோழர் கண்ணன் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். மார்க்சியத்தின் வாசம் வீசிக்கொண்டிருந்த சிஐடி நகரின் வடக்குச் சாலையெங்கும் சிவப்புத் தோழர்களின் கால்படிந்தே தேய்ந்திருக்கும் என சொல்லலாம். அத்தகைய அரிய பெரும் அறிவுப் பெட்டகத்தின் உயிர்நாடி தன் ஓட்டத்திற்கு ஓய்வுகொடுத்துவிட்டது. புகழையும் விளம்பரத்தையும் விரும்பாது புறந்தள்ளும் தோழருக்கு இன்று புகழஞ்சலி செலுத்த நேர்ந்திருப்பது பெரும்வேதனையைத் தருகிறது. ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பதை இறந்தபின் அவரின் இறுதி ஊர்வலமே உணர்த்தும் என்பார்கள்.

kannan25.04.2017 அன்று போராடும் விவசாயகளுக்காகத் தமிழகம் முழுக்க கடையடைப்பு வேலை நிறுத்தம் நடந்துகொண்டிருந்தது. அன்றைய தினத்தின் காலை வேளையிலே தோழர் கண்மூடிய செய்தியைக் கேட்டு, போக்குவரத்துகள் இல்லாத நேரத்திலும் எங்கோ இருந்து ஓடிவந்த பார்வையற்றோர்களின் கதறல்கள் நம்மை நெகிழச் செய்தது. கண்ணற்றவர்களுக்கு கண்ணாயிருந்து விழித்தே உழைத்தவர் என்கிற உண்மைக்கு அவர்களின் கண்ணீர் குரலே வலுசேர்த்தது. தமிழக ஆட்சியாளர்களின் செவிட்டில் அறைந்து 3000க்கும் மேற்பட்ட பார்வையற்றோர்களின் வாழ்விலே ஒளியேற்றிவைத்த வரலாற்றுப் பணிக்கு வலுசேர்த்தவர் நமது கம்யூனிஸ்ட் காம்ரேட் கண்ணன். தன் வாழ்நாளை இரு பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். முதன்மை பணி, பார்வையற்றோருக்கானது, இரண்டு, கம்யூனிச இயக்கத்திற்கு குறிப்பாக மார்க்சிய லெனினிய இயக்கத்திற்கு பயன்படும் நோக்கில் நிறுவிய கார்ல்மார்க்ஸ் நூலகம்.

பார்வையற்றோருக்கான வாழ்க்கை 

ஒவ்வொருவரும் தனது வாழ்வில் இச்சமூக மக்களுக்காக, மாற்றத்திற்காக மக்கள் போற்றும் முன்னோடிகளாக ஏதோ ஒரு அதிசயத்தை ஆச்சரியத்தை இப்பூமிப்பந்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதுபோன்ற ஓர் அதிசயத்தை தன் வாழ்நாள் முழுவதும் செய்து காட்டியவர் தோழர் கண்ணன். கடைக்கோடி கிராமப்புறத்திலிருந்து சென்னை நகரம் நோக்கி வாழ்வின் வழி தேடிவரும் ஒவ்வொரு பார்வையற்றோரும் காலடி வைக்கும் முதல் இடம் தோழர் கண்ணன் வீடுதான். இச்சமூகம் திரும்பிப் பார்க்காத, குடும்பத்தாலும், உறவினர்களாலும் கண்டு கொள்ளாது கைவிடப்பட்ட பிரிவினரான பார்வையிழந்த, மாற்றுத்திறனாளி மக்கள் குறிப்பாக பெண்கள் படும் சிரமத்தை கண்கள் இருக்கும் நாம் அதன் வலியை உணரமுடியாது. வாழ்வின் மீதான நேசத்தால் திசை தேடி அலைந்த அந்த மக்களின் வலியை தனதாக்கி அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தை உருவாக்கி அவர்களின் வாழ்விற்கு ஓர் அர்த்தத்தைக் கற்பித்தவர் பெருமைமிகு கண்ணன். இச்சமூகத்தில் உள்ள கடைகோடி ஏழை எளியோருக்கு ஒவ்வொரு மனிதரும் இதுபோன்ற தொண்டை நாம் செய்ய வேண்டும் என தன் வாழ்வின் கால இடத்தை இட்டு நிரப்பியவர். தான் ஓய்வுபெற்றப்பின் சென்னை முழுவதும் ஓய்ந்துவிடாமல் சைக்கிளிலேயே பயணம் செய்து பார்வையற்றோருக்கான பணிகளை செய்ய ஆரம்பித்தார்.

1982 காலகட்டத்தில் அவர்களை சங்கமாக்கி அவர்களுக்கென ஒரு அலுவலகத்தை தக்கர்பாபாவில் அமைத்துக் கொடுத்தார். அவர்களின் உரிமைக்காக முதன் முதலில் சேப்பாக்கம் அருகில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம்தான் பார்வையிழந்தோருக்கான முதல் படி. அப்போராட்டத்தின் விளைவால் அன்றைய முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வேலைவாய்ப்பிற்காகக் கடுமையாக சண்டையிட்டிருக்கிறார். இதுதான் அவர்களுக்கான முதல் வெற்றிப்படி. ஒரு நகைச்சுவையும் அவற்றில் உண்டு. தோழர் கண்ணன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்ததால் பூணூலை தூக்கியெறிய பலமுறை வீட்டோடு முரண்பட்டிருக்கிறார். அந்த நேரத்தில்தான் அவருக்கு கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அவர் பார்த்ததும் கேட்டாராம். “கம்யூனிஸ்ட் என்கிறாய் பூணூலை போட்டிருக்கிறாய்?“ எனக் கேட்க அங்கேயே கழற்றி வீசினாராம் தோழர் கண்ணன். இதுபோல் ஜெயலலிதா ஆட்சியிலும் பல போராட்டங்களை நடத்தி அவரை நேரில் சந்தித்து அரசு துறைகளில் வேலைவாய்ப்பு, கல்வி உரிமையை உறுதிசெய்தார். இன்று ஆயிரக்கணக்கான பார்வையற்றோர்கள் பட்டதாரிகளாக, ஆசிரியர்களாக எழுத்தாளர்களாக, வரலாற்று ஆய்வாளர்களாக ஆளுமைகளாக திகழ்வதற்குக் காரணம் நமது அருமைத் தோழர் கண்ணன்தான்.

 அடுத்து, தோழர் கண்ணனின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து அவருக்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர்தான் அம்மா மைதிலி. சட்டென்று கோபப்பட்டாலும் அதே நிமிடம் தனக்கு தானே சமாதானம் அடைந்து அன்பைப் பொழிவார். உணவளிப்பார். தோழர் கண்ணன் ஏற்றுக்கொண்ட கருத்துக்களில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அவரின் பணியை தன் தோளில் சுமந்தவராய் வருவோரை அரவணைக்கும் பண்பு கொண்டவர். 88 வயதைத் தொட்டுள்ள அம்மா மைதிலி. 1945ல் இரண்டாம் உலகப் போரின் உக்கிரமான அக்காலத்திலேதான் ஏதுமறியா தன் பதினாறு வயதில் கண்ணனின் கரம்பிடித்து வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார். தங்களுக்குக் குழந்தை இல்லையென்ற குறை நீக்கி பார்வையற்றோர்களின் குழந்தைகளை தம் குழந்தையாக ஊட்டி வளர்த்தவர்கள்தான் தோழர் கண்ணன், மைதிலி. மிகவும் புத்திசாலியானவர் எப்பொழுதும் படித்துக்கொண்டேயிருப்பார். நினைவாற்றலில் நாம் தோற்றுவிடுவோம்.

மாமி வீடு என்பதால் அங்கு கண்டிப்பும் புத்திமதியும் அதிகமாகவே கிடைக்கும். தன் சொந்த சாதியிலுள்ளவர்களின் ஆதரவு இருந்ததோ இல்லையோ அவர்களை கவனித்துக்கொள்ள வீட்டுவேலைக்கு அருகில் உள்ள மகேஷ் என்கிற அக்காவை வேலைக்கு வைத்துக்கொண்டார்கள் கிட்டத்தட்ட 35 வருடம் தன் காலத்தை அவர் இங்கேயே கழித்துவருகிறார். அவரின் அயராத கவனிப்பும் ஆதரவும்தான் கண்ணன் குடும்பம் இயங்கிவருவதற்கு காரணமாக இருக்கிறது. சாதி கடந்த, சடங்கின் இறுக்கம் தளர்ந்த குடும்பமாக சமத்துவ, சனநாயகக் கூறுகளோடு இயங்கும் மனிதநேயப் பண்பை வளர்த்தெடுத்திருக்கிறார் காம்ரேட் கண்ணன். இரு மனிதர்களுக்குள் இரு பண்பாட்டு வழக்கம், இரு சிந்தனைமுறை, நாத்திகமும், ஆத்திகமும் ஒருங்கே புழங்கும் சொற்கள். நடைமுறையில் விட்டுக்கொடுப்பது, அவரவர் பண்பாட்டிற்கு உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பது என்கிற ஒருமித்த புரிந்துணர்வு. அத்தகைய முதிர்ச்சி கணவன் மனைவி இருவரின் அணுகுமுறையிலும் நிரம்பியிருந்தது. இதுபோன்ற மனிதப் பண்பு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. குடும்பம், அரசியல் வாழ்க்கை, மனித நேய பணிகள் என மூன்று அம்சத்தையும் ஒருங்கே இணைத்து நடைபோட்டு முன்னுதாரணமாக்கியிருக்கிறார் அன்புத் தோழர். இத்தகைய பண்பிற்கு மூல காரணமாக விளங்கியது அவரின் அம்மா, அக்கா, மனைவி என பெண்களின் பங்களிப்பு மறுக்கமுடியாத ஒன்று. அடுத்த மிக முக்கியமானது கார்ல் மார்க்ஸ் நூலகத்தை நிறுவிய பணி.

கார்ல் மார்க்ஸ் நூலகம் 

1946ல் மின்பொறியாளராகப் பணியில் சேர்ந்து 1978ல் ஓய்வுபெற்றார். கல்லூரி காலத்தில் மாணவர் போராட்டங்களின்போது மார்க்சிய அரசியலால் ஈர்க்கப்பட்டார். அதற்கடுத்து தொழிற்சங்கப் போராட்டங்களிலும் பங்கேற்ற தோழர் கண்ணன், மின்பொறியாளராகப் பணிபுரியும்போது ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார் தோழர் கண்ணன். தான் ஓய்வுபெற்றபின் கம்யூனிஸ்டுகளுக்கு குறிப்பாக எம்எல் இயக்கத்தினருக்கு பயன்படும் நோக்கில் தோழர் எஸ்.வி ராஜதுரை, தோழர் ஜவஹர், தோழர் கோவை ஈஸ்வரன் போன்ற தோழர்களின் உதவியோடு எவ்வாறு தொடங்கலாம் என நூலகத்திற்கான உரையாடலை நடத்தியிருக்கிறார். இணைந்து பல இடங்களிலிருந்து புத்தகங்களைத் திரட்டி கார்ல் மார்க்ஸ் நூலகத்தை நிறுவியிருக்கிறார்கள். இத்தோழர்களின் முயற்சிதான் அன்று முதல் இன்றுவரை இந்நூலகத்தில் எங்கும் கிடைக்காத பல அரிய புத்தகங்களை நமக்கு கொடுத்திருக்கிறது. இத்தகைய மார்க்சிய சிந்தனையாளர்கள் விதைத்த விதைதான் இன்றைய தலைமுறைக்கு பல வரலாற்று அனுபவங்களைக் கற்றுக்கொடுக்கிறது. நம் அனைவரையும் வாசிப்பாளனாக வளர்த்தெடுத்திருக்கிறது. இன்றும் நூலகத்தின் பெயரைக் கேட்டாலே நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. பல அறிவாளிப் பிரிவினரை வளர்த்திருக்கிறது. களப்பணியாளர்களை புடம் போட்டிருக்கிறது என்பது மிக முக்கியமானது.

அவ்விடத்தில் ஈழ விடுதலைப் போராளிகள் ஈரோஸ் இபிஆர்எல்எப், மாவோயிஸ்டுகள் மகஇக உள்ளிட்ட பல்வேறு எம்எல் இயக்கத் தோழர்களின் புகழிடமாக, தத்துவ சண்டைக்கான கூடாரமாக, குவிந்துகிடக்கும் அறிவுப் புதையலாகத் திகழ்ந்தது தோழர் கண்ணனின் நூலகம். குருட்டுத்தனமான நடைமுறை வேலை மட்டும் பயனில்லை, அதனை மெருகேற்றுவதற்கு மார்க்சியத் தத்துவம் எனும் கேடயம் தேவை என்பதையும் தத்துவம் நடைமுறையோடு இணைய வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்தியிருக்கிறார். வகையில் ஆசான்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ ஆகியோரின் தொகுப்புகள் மற்றும் இந்திய, தமிழக கட்சிகளின் கம்யூனிஸ்டுகளின், புரட்சிகர இயக்கங்களின் திட்டங்கள், சாதி, மொழி குறித்தும், இரஷ்ய, சீன, வியட்நாம், ஆப்பிரிக்க இலக்கியங்கள், பண்பாட்டு பத்திரிகைகள், இடது இதழ்கள் பாரதியார், தமிழக எழுத்தாளர்களின் புத்தகங்கள் போன்ற சிறந்த நூல்கள் அடங்கிய நூலகம்தான் கார்ல்மார்க்ஸ் நூலகம். தோழர் கண்ணன் கம்யூனிஸ்ட் என்பதால் கம்யூனிஸ்டுகளோடு மட்டும் தன் உறவை சுருக்கிக்கொள்ளும் குறுகிய பார்வை கொண்டவராக அல்லாமல், பரந்த பார்வையோடு மார்க்சியர்கள் அல்லாத பலரையும், மாறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களையும் அரவணைத்து சனநாயகப் பண்போடு அரசியல் உரையாடலை நிகழ்த்தி ஆரோக்கியப் போக்கைக் கடைபிடித்து வந்தவர் தோழர் கண்ணன்.

1970களிலே சென்னை மாநகரம் முழுவதும் தொழிலாளர்களுக்கு போராட்டக் களங்கள் நிறைந்த காலம். உயிர்தியாகம் செய்து உரிமையை நிலைநாட்டிய வெற்றியின் வசந்த காலம். அத்தகையப் போராட்டத்தில் கவரப்பட்ட தோழர் கண்ணன், பின்பு ஐஐடி பேராசிரியராக இருந்த பார்வையற்றவர் பி. வீரராகவன் என்பவரை ஊக்கப்படுத்தி அதனை ஆவணமாக்கிட முழு உதவியும் செய்தார். இன்று “சென்னை பெருநகரத்தின் தொழிற்சங்க வரலாறு“ என்கிற பெயரில் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத் தீ பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தகமாய் வந்திருக்கிறது என்றால் தோழர் கண்ணனின் ஆழமான பற்றும், விடாமுயற்சியுமே காரணம். மார்க்சியத்தின்மீதும், வர்க்கப் போராட்டம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்தான் சரியானது என்றும், தேசிய இன அரசியல் சர்வதேசப் பாட்டாளிவர்க்கத்திற்கு எதிரானது என்கிற கருத்தில் இறுதிவரை வலியுறுத்தியவர். தேசிய இனச் சிக்கல் குறித்து தோழர் லெனினுக்கும் ரோசா லக்சம்பர்க்கிற்கும் நடந்த உரையாடலில் தோழர் லக்சம்பர்க் பக்கம்தான் நின்றார். அந்த உரையாடல் குறித்தும் மார்க்சிய தத்துவத் தலைவர் தோழர் ரோசா லக்சம்பர்க் பற்றிய புத்தகங்களையும் வாங்கிக் குவித்தார். ட்ராட்ஸ்கி, அல்துசர் போன்ற தலைவர்களின் புத்தகங்கள் என ஒரு புத்தகத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. எந்த அரசியல் சூழல் நிலைப்பாடுகள் குறித்து கேட்டாலும் சட்டென்று பதில் கொடுப்பார்.

அவருக்கான மகிழ்ச்சி என்பது, தி ஆஸ்பெக்ட்ஸ் ஆப் இந்தியன் எக்கானாமி,( Aspects of Indian Economy) பிராண்டியர் (Frontier) லெப்டு வோர்டு (Left Word), பிரண்ட்லைன்,( Frontline), மன்த்லி ரெவ்யூ (Monthly Review) எக்கானாமிக் பொலிடிக்கல் வீக்கிலி (Economic of Political weekly), (Law Animated), (Social Action) போன்ற சிறப்பான பத்திரிகைகள் அனைத்தையும் தன் சொந்த பணத்தில் வாங்கிக் குவித்து தினந்தோறும் அதனைப் படித்துவிடுவார். கண் மங்கிய நேரத்திலும் பூதக்கண்ணாடியை வைத்து சோர்வாகும் வரையிலும் படித்துக்கொண்டேயிருப்பார். தமிழ் பற்றாளர் என்பதால் எழுத்து, நடை, வாக்கியமைப்பு என அனைத்தையும் விமர்சிப்பார். பத்திரிகைகளை பார்த்து, “மக்களுக்குப் புரியும் மொழியில் எழுதவேண்டும். அறிவுஜீவித்தனம் ஒன்றுக்கும் உதவாது.“ என சுட்டிக்காட்டுவார். இடையிடையில் தோழர்களின் குரல் கேட்டால் குதூகலம் அடைந்து அழகிய பொக்கை வாயால் பேசும் மொழி இருக்கிறதே அவ்வளவு அழகு. அரசியல் என்று வந்துவிட்டால் தவறை சுட்டிக்காட்டுவதில் யாரையும் விட்டுவைத்ததில்லை, விமர்சிக்கத் தயங்கியதில்லை. பல அரசியல் கோட்பாட்டு விசயங்களை படித்துவிட்டு நம்மிடையே விவாதிப்பார். இறுதியில் “யாரும் புரட்சி செய்யற மாதிரியே தெரியலேயே“ என்று கம்யூனிஸ்டுகளை நக்கலும் அடிப்பார். எந்த தோழர்களும் அவரிடம் புத்தகத்தைப் படிப்பதற்கு அவ்வளவு எளிதில் வாங்கிவிட முடியாது. திருப்பி கொடுக்காமல் பதுக்கிக்கொள்ளவும் முடியாது. புத்தகத் திருடர்கள் என்றுதான் பல இயக்கத் தோழர்களை அழைப்பார். புத்தகத்தை வாங்கிவிட்டு யாரும் தப்பித்துவிடமுடியாது. ஆனால் அவரையே ஏமாற்றி மார்க்சிய புத்தகத்தை பல இடங்களிலிருந்து சுருட்டி சிறு நூலகத்தை உருவாக்கியதில் நாம் பலரும் இருப்போம் என நினைக்கிறேன்.

எம்எல் இயக்கத் தோழர்களுக்கான தூண் 

கடந்த 2002ல் அன்றைய மக்கள் யுத்தக் கட்சியில் (இன்று மாவோயிஸ்ட்) நான் முழுநேர ஊழியராக கிராமப்புறங்களிலே பணியாற்றிக்கொண்டிருந்தபோது நான், பத்மா, ரீனா, ரீட்டா, ஆனந்தி, சத்யா உள்ளிட்ட பெண் தோழர்கள் மற்றும் தோழர்கள் பாலன், துரைசிங்கவேல், விநாயகம், பாஸ்கர், சதீஷ், தங்கபாண்டியன் உள்ளிட்ட இன்னும் பல தோழர்கள் அன்றைய ஜெயலலிதா அரசால் பொடா வழக்கிலே கைதுசெய்யப்பட்டு சிறைக்குள் இருந்தநேரம். தோழர்கள் சங்கரசுப்பு, செங்கொடி போன்ற தோழர்களின் முயற்சியில் கிட்டத்தட்ட 21/2 வருடங்கள் கழித்து 2005ல் தான் பெண்களுக்கு மட்டும் சென்னை உயர் நீதிமன்றத்திலே பிணை கிடைத்தது. ஆண் தோழர்கள் 41/2 வருடங்கள் வரை சிறைக்குள் இருந்தார்கள். நான் வெளியில் வந்த பின் சிறையிலிருக்கும் தோழர்களுக்கான புத்தகங்களை, செய்திகளை பிரதிகளை சேகரித்து தரும் பணி எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில்தான் கார்ல்மார்க்ஸ் நூலகத்தின் புதுமையை, அதை உருவாக்கி பாதுகாத்துவரும் தோழர் கண்ணனின் ஆளுமையை நான் நேரில் பார்க்கும் தருணம் எனக்குக் கிடைத்தது. உள்ளே நுழைந்ததுமே மிகவும் பழமைவாய்ந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆய்வுக்கூடம்போல் காட்சியளித்த அந்நூலகம் எனக்குள் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தின. இவ்வளவையும் எப்படி சேகரித்தார்? எனக் கேட்டறிந்தேன். மிகவும் சுவாரசியத்துடன் அதைப் பகிர்ந்தார். இது எதோ ரகசிய கட்சிகள் கூடும் இடமென கருதி உளவுவத்துறையினரின் கண்காணிப்பு அதிகரித்திருக்கிறது என்பதையும், அவர்கள் விசாரித்ததையும் விவரித்தார். ஆனாலும் விடுதலைப்புலிகள், மாவோயிஸ்ட் உள்ளிட்ட எந்த தோழர்கள் வந்தாலும் தடையின்றி அவர்களுக்கு முழுமையாக இந்த நூலகமும் அவரின் வீடும் பயன்படுவதை அவர் ஒருபோதும் நிறுத்திக்கொள்ளவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் தியாகி மாவோயிஸ்ட் பெண் தோழர் அஜிதாவை தோழருக்கு மிகவும் பிடிக்கும். எப்பொழுது சென்றாலும் அவரை பற்றி நலம் விசாரிப்பார். பெண்களின் உடல் நலத்திலே மிகவும் அக்கறையுள்ளவர் தோழர். உணவு கிடைக்கும் காபி கிடைக்கும். உடல் நிலை சரியில்லாதவர்கள் வந்தால் புத்தகத்திற்கு நடுவிலே குட்டித் தூக்கத்திற்கு சிறிது இடமும் கிடைக்கும். வாசிப்பின்மீது ஆர்வம் உள்ளவர்கள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவருக்கும் அந்த இடம் சொந்தவீடாகவே இருந்தது. கூடவே காய்ச்சல் மாத்திரைகளும் கிடைக்கும். சென்னை போன்ற நகரத்திலே நெருக்கடி மிகுந்த வாழ்க்கைச் சூழலிலே எந்தவித எதிர்ப்பார்ப்புகளும் இன்றி ஏழை எளியோருக்கும் இயக்கத்தவர்களுக்கும் உதவும் உள்ளம் இருக்கிறதே என வியந்தேன். அங்கிருக்கும் ஒவ்வொரு புத்தகங்களின் சிறப்பை சொல்லி தனக்குள் வாசிப்பு ஆர்வத்தை தூண்டியவர் தோழர் கண்ணன் தான். அன்றுமுதல் சிறை என்கிற பாடசாலைக்குள் இருக்கும் எமது இயக்கத் தோழர்களுக்கான புத்தகங்களை நகலெடுத்துச் சென்று கொடுக்க ஆரம்பித்தேன். அதன்பின் நூலகத்தைப் பராமரிக்க ஆட்கள் இல்லாத காரணத்தால் அதன் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டேன். அந்த நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்த எனக்கு அன்று அவர் கொடுத்த மாத சம்பளம் 1500ரூபாய் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 4 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்தேன். அச்சமயத்தில் என்னைப் போன்ற முழு நேர ஊழியர்களை அவர் பராமரித்ததும் அந்நூலகத்தை நான் பராமரிப்பதுமாக அங்கு ஒன்றிப்போனேன். சென்னையில் சற்று இழைப்பாற எனக்கொரு இடமென்றால் அது தோழர் கண்ணன் வீடுதான். நான் வேலையை விட்டு நின்றபின்பும் எமது இயக்கத்திற்கான நன்கொடையாக அவரின் ஓய்வூதியப் பணத்திலிருந்து மாதம் 1500 ஐ கொடுத்துவந்தார். இத்தகைய சிறப்புமிக்க தோழர் நிறைவான ஒரு வாழ்வை வாழ்ந்து அனைவரின் உணர்வுகளிலும் நீங்கா இடம்பிடித்திருப்பதற்குக் காரணமான பலவற்றை நினைவுகூர்ந்து பார்க்கமுடியும்.

2009 வாக்கில் நாங்கள் நடத்திவந்த தேசிய முன்னணி இதழை பார்த்துப் பாராட்டினார். அதன் வடிவமைப்பு எளிய தரத்தில் கொண்டுவந்ததற்குக் காரணம் நூலகத்தில் இருந்த பிராண்டியர் என்கிற ஆங்கில வார இதழ் மாதிரிதான். அதன்பின் அந்நூலகத்தை எதிர்காலத்தில் பராமரிக்கும் நோக்கோடு அவரிடம் பலமுறை உரையாற்றியிருக்கிறேன். நூலகத்தைத் திருட வந்திருக்கிறாயா? என்னை கொன்றுவிட்டு எடுத்துச்செல்“ என பலமுறை கடிந்திருக்கிறார். “நீங்கள் ஆங்காங்கு கட்சிப்பணி என்று சுற்றிக்கொண்டு நூலகத்தை நடத்த மாட்டீர்கள்“, நம்பிக்கைக்குரியவர்களுக்கு மட்டும்தான் இந்நூலகத்தை கொடுப்பேன் என உறுதிபட கூறிவந்தார். அதனை அவரின் உயிர்மூச்சாகவேக் கருதினார். நான் தொடர்ந்து அங்கு பணியாற்றிவந்ததும், அவர் இறக்கும்வரை அக்குடும்பத்தோடு இணைந்து உதவிகளை செய்துவந்ததும் அவருக்கு என்மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. எமது கட்சியின் அனைத்து அரசியல் நடவடிக்கைகள், அரசியல் உரையாடல் அவரோடு பகிர்ந்துகொள்ளும் களமாக பின்பு மாறியதன் விளைவாக நூலகத்தை எமது இயக்கத்திற்குக் கொடுக்க ஒத்திசைந்தார். ஆனாலும் பலமுறை அந்த கருத்து மாறிக்கொண்டேயிருக்கும். இடையில் பல தோழர்கள் அந்நூலகத்தை கேட்டுவந்தனர். திடீரென்று யாருக்கும் கொடுக்க முடியாது என முடிவெடுப்பார். இருந்தும் அவருக்கு உடல்நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. அதனைக் கருத்தில் கொண்டு இத்தகைய அறிவுப் பெட்டகத்தை மேற்கொண்டு நாம் பாதுகாப்போம் என உறுதிகூறி ஒருவழியாக சம்மதிக்க வைத்தேன். இறுதியில் இடம் இருக்கிறதா பராமரிக்க பணம் இருக்கிறதா? என்றெல்லாம் கேட்டார். அது நீடித்து இயங்குவதற்கு அது அடிப்படை என அவர் கருதியதால் அதனை ஏற்பாடு செய்யச் சொன்னார். அதன் தொடர்ச்சியாகத்தான் தோழர் நடராசன் வழக்கறிஞர் இதற்கான நிலம் கொடுக்கவும் முன் வந்திருந்தார். ஆனால் சென்னைக்குள் இருந்தால் நல்லது என வலியுறுத்தியதால் எமது கட்சியின் மையக்குழு தோழர் கண்ணன் அவர்களின் மாடியிலே நூலகத்தை தொடங்க முடிவுசெய்தோம்.

அதற்கானத் தயாரிப்பு வேலையில் நாங்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அந்த நூலகத்தில் 9000க்கும் மேற்பட்ட நூல்கள் இருந்தன. இடையில் சிபிஎம் தோழர்கள் பேசியிருக்கிறார்கள். பாதி நூல்களை அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். இதை கேள்விப்பட்டு நான் கடுமையாக சண்டையிட்டேன். முழு நூலகத்தை ஒரு இடத்தில் ஒப்படைக்காமல் சிதறிய நிலையில் கொடுத்து அதன் வீரியத்தை குறைத்துவிட்டீர்களே தோழர்?“ என எல்லோரையும் விமர்சிக்கும் அவரை அன்று நான் விமர்சித்தேன். அமைதியாக இருந்தார். இறுதியாக எமது தோழர்களோடு சென்று இருந்த புத்தகத்தை எடுத்துவந்தோம். அவர் கொடுத்த புத்தகத்தோடு வெளியில் பல தோழர்களிடமிருந்தும் புத்தகத்தை சேகரித்து கடந்த 2014ல் “மார்க்ஸ் நூலகம்“ என்கிற பெயரில் தி.நகரிலே நூலகத்தைத் திறந்தோம். திறப்பு விழாவிற்கு சிபிஎம்எல் எமது மக்கள் விடுதலை கட்சியின் கட்டுப்பாட்டு ஆணையர் தோழர் எஸ். அண்ணாதுரை, தோழர் எஸ்.வி ஆர், கண்ணன், கோவை ஈஸ்வரன் போன்ற தோழர்களை அழைத்து நிறைவுசெய்தோம். தோழர் கண்ணன் உரையாற்றியபோது “நாங்கள் ஏற்றிவைத்த தீபத்தை அணையாமல் பார்த்துக்கொள்வது உங்களது கடமை“ எனக் கூறினார். இந்நூலகம் விரிந்த தளத்தோடு பல்வேறு இயக்கத் தோழர்கள் வந்துபோகும் இடமாக நூலகம் இயங்கவேண்டும். அதற்கான நம்பிக்கையுள்ள தோழர்கள் நீங்கள் அதனை நிறைவேற்ற வேண்டும் என உரிமையோடு வலியுறுத்தினார். அந்த நம்பிக்கை வீண் போகாத வகையில் அவர் பணியை நாம் தொடங்கி அதற்கு உயிரூட்டி இயக்கிக்கொண்டிருக்கிறோம்.

பல தோழர்களின் நிதி உதவியாலும், புத்தக பரிசளிப்பாலும் மேலும் பொலிவுடன் மெருகேற்றியிருக்கிறோம். வலதுசாரி கருத்துக்கள் மேலோங்கிவரும் இன்றைய சூழலில் மார்க்சிய சித்தாந்தத்தை முழு வீச்சுடன் படரச் செய்திட தோழர் கட்டியெழுப்பிய இந்நூலகம் எனும் மார்க்சிய கோட்டை நமக்கு அடிநாதமாக விளங்கும். 18ஆம் நூற்றாண்டிலே சூழ்ந்திருந்த இருண்ட காலத்தைக் கிழித்து உலக பாட்டாளிகளின் ஆசானாக, புதிய மானுடத்தை பிரசவித்த புதல்வனாக, முதலாளித்துவத்திற்கு சவக்குழி வெட்டிய மூலதனத்தின் நாயகனாக திகழ்ந்த, என்றும் திகழும் நமது மேதை கார்ல்மார்க்சின் 200வது பிறந்தநாள் மே 5. இந்த நாளிலே மனித நேயத்தையும் மார்க்சியத்தையும் போதித்த கண்ணன் தோழருக்கு செவ்வஞ்சலியை நிகழ்த்துவது சிறப்பை சேர்த்திருக்கிறது. உழைப்பவர்க்கு ஓர் பொன்னுலகைப் படைக்கும் நம்பிக்கையை நமக்கு ஊட்டியிருக்கிறது. இப்படியும் ஒரு மனிதரா எனப் போற்றும் வகையில் இம்மண்ணில் இறுதி மூச்சுவரை சமரசமின்றி கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து நேர்மைப் பண்போடு பயணித்து தலைச்சிறந்த மனிதனராக வாழ்ந்துகாட்டிய நமது அன்பிற்குரிய தோழர் கண்ணன் விட்டுச்சென்ற பணியை நம் தோள்மீது சுமக்க, புரட்சி சகாப்தத்திற்கான அறிவுக் களஞ்சியத்தைக் காத்திட. நாம் ஒவ்வொருவரும் துணைநின்று அதனை அழியாமல் பாதுகாப்போம். இதுவே அவருக்கு நாம் செலுத்தும் செவ்வஞ்சலி.

- ரமணி, சிபிஎம்எல் மக்கள் விடுதலை