சாதி ஒழிப்பும் பெரியாரின் சட்ட எரிப்பும்

பெரியார் இயக்க வரலாற்றில் பெரியார் தொண்டர்கள் கடும் விலையை கொடுத்தப் போராட்டம் 1957 நவம்பர் 26 நாள் நடந்த சட்ட எரிப்புப் போராட்டம் தான். இந்த நாளில் பெரியார் தனது இறுதி இலட்சியமான சாதியை ஒழிக்க இந்திய அரசியல் சட்டத்தை எரித்த நாள். பெரியாரின் ஆணையை ஏற்று பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்ற நாள்.

மரணம் என்பது ஒரு வீரன் தன் இலட்சியத்திற்கு கொடுக்கும் விலை என்பார் பெரியார். சாதியை ஒழிக்க வேண்டும் என்கின்ற இலட்சியத்தோடு தங்களின் இன்னுயிரையே பதினெட்டு பேர் விலையாக கொடுத்தப் போராட்டம். சாதி ஒழிப்பிற்காக பல்லாயிரக்கனக்கானோர் சிறை சென்றது இந்திய வரலாற்றிலேயே இந்தப் போராட்டம் மட்டும் தான். சிறைக் கொடுமையின் உச்சத்திலும் சிதையாமல் தனது இனத்தின் சுயமரியாதையை காத்திட சுடர் முகம் காட்டிய தோழர்களின் வரலாறு இது. உறவுகள் மடிந்த போதும் உற்ற தோழர்கள் களப் பலியானபோதும் சாதி ஒழிப்பில் உறுதிக் கொண்டு கடைசி வரை கலங்காமல் இருந்த உள்ளங்களின் உணர்ச்சி மிகுந்த போரட்டம். சிறையிலிருந்து விடுப்பில் வருவதைக் கூடக் கோழைத்தனம் என்று பிடிவாதமாய்சிறையிலிருந்த கருஞ்சட்டைத் தொண்டர்கள் குடும்பத்தில் முக்கியமானவர்கள் நோய்வாய்ப்பட்டபோதும் கூட விடுப்பில் வெளிவர மறுத்தார்கள்.

இந்த போராட்டத்தில் சிறைக்குள்ளேயே மாண்ட பட்டுக்கோட்டை இராமடசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் உடல்கள் கருஞ்சட்டை வீரர்களின் கடிமையான போராட்டத்திற்குப்பின் அஞ்சலி செய்வதற்காக சில நிமிடங்கள் சிறையில் வைக்கப்பட்டன. திருமணமாகாத கருஞ்சட்டை தொண்டர்கள் பலர் இந்த சாதி ஒழிப்பு வீரர்கள் நினைவாகத் தாங்கள் சாதி மறுப்பு கலப்புத் திருமணங்களே செய்து கொள்வோம் என்று அந்த மாவீரர்களின் உடல்கள் முன்னால் உறுதி எடுத்துக்கொண்டார்கள். பலர் பல் ஆண்டுகளுக்குப் பின்னர் மறக்காமல் அப்படியே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார்கள்.

பெரியாரின் சட்ட எரிப்பு நாள் பொதுக்கூட்டம் - 26-11-2009 - மாலை 5 மணிக்கு - லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை,சென்னை

சிறப்புரை

கொளத்தூர் மணி

ஆனூர் கோ.செகதீசன்

கோவை ராமகிருட்டினன்

விடுதலை ராசேந்திரன்

பேராசிரியர் சரசுவதி

சமர்ப்பா குமரன் குழுவின் இன எழுச்சிப்பாடல்கள் நடைபெறும்.

 

Pin It