பத்திரிகை என்றால் பல வடிவங்கள் நம் கண்ணுக்குள் நிழலாடும். புதுவிசை, கவிதாசரண் போன்ற வடிவில் பெரியவை ஒருபக்கம். இந்தியாடுடே, புதிய பார்வை போன்று தரமான தாள்களில் தயாரித்து வெளியாகும் பத்திரிகைகள் ஒரு பக்கம். ஆனந்தவிகடன், குமுதம் போன்று ‘திறந்த மனதுடன்’ காட்சி தரும் நடிகைகளின் படத்துடன் கூடிய பத்திரிகைகள் ஒரு பக்கம். இவை தவிர பத்திரிகைகள் தமது கருத்துகளைத் தாங்கிச் செல்லும் ஊடகங்களே என்னும் கருத்தில் வெளியாகும் சிந்தனையாளன், உன்னதம், தீம்தரிகிட உள்ளிட்ட பத்திரிகைகள் ஒரு பக்கம்.

இவை எவற்றுக்குள்ளும் சிக்காத வடிவமைப்புடன் ஒரு சிறு பத்திரிகை, இல்லை இல்லை மிகச் சிறுபத்திரிகை ஒன்று மாத இதழாக கடந்த 2004ம் ஆண்டு தை மாதம் (இப் பத்திரிகையில் தமிழில்தான் வெளியாகும் மாதத்தைக் குறிப்பிடுகிறார்கள். வரவேற்கப்பட வேண்டிய ஒன்று) முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழ் அணு என்ற பெயரில் 7.51 X 11 செ.மீ அளவுதான் பத்திரிகை அளவு. விலை ரூ.2. பாட்டுக்கேசட்டில் வரும் பாட்டு புத்தகதைப் போல் சட்டைப்பையில் வைத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு செய்தி என மொத்தம் 16 பக்கங்களில் 16 படைப்புகள். தலையங்கம், புத்தக விமர்சனம், திரை விமர்சனம், சிறுகதை, கவிதை என அனைத்தும் ஒரு பக்கத்திற்குள் கணகச்சிதமாகப் பொருந்திவிடுகின்றன. பக்கங்களில் பரவிக் காணப்படும் கருத்துகளும், செய்திகளும் பாரம்பரியமிக்க எந்தவொரு பத்திரிகையின் தரத்துக்கும் குறைவானதல்ல.

ஆடி மாத இதழில் வைரமுத்து வழியில் பா.விஜய் ‘வாங்கி’யிருக்கும் தேசிய விருது பற்றி ஒரு கட்டுரை, மூத்த புகைப்படக் கலைஞர் சபா சுந்தரம் மறைவு குறித்து ஒரு கட்டுரை, ‘ஹாரிபாட்டர்’ விற்பனை குறித்து ஒரு கட்டுரை, அந்நியன் பட விமர்சனம், நாட்டை ஆள்பவர்கள் பணக்கார விவசாயிகளாக இருப்பது குறித்து எள்ளல் தொனியில் ஒரு கட்டுரை என குறிப்பிடும்படியாகவே பல கட்டுரைகள் அமைந்துள்ளன. இதழை முழுமையாகப் படிக்கும்போது ஆசிரியரின் சமூக அக்கறை நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

ஆசிரியரைப் பற்றி குறிப்பிடவில்லையே, நக்கீரன் இதழில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி வரும் கோவி. லெனின் தான் இச்சிறு பத்திரிகையை நடத்தி வருகிறார். ‘கொன்றால் பாவம்’ என்ற இவரது கவிதை ஆனந்த விகடன் நடத்திய பவள விழா கவிதைப் போட்டியில் முத்திரைக் கவிதையாக வெளிவந்தது.

சமூகநீதிக்கு எதிரான புதர்களை எரிக்க அக்னிக் குஞ்சொன்று போதும் என்ற நம்பிக்கை ‘தமிழ் அணு’வைப் படிக்கும்போது இயல்பாய் நமக்கு வருகிறது. ஆராதிக்க வேண்டிய பத்திரிகைகளுள் ஒன்று இது.

அந்நியன் படத்திற்கு கோவி. லெனின் எழுதியுள்ள விமர்சனம் இங்கு தரப்பட்டுள்ளது.

நாமம் போட்ட சாதியினர் நல்லவர்கள். நாம் எல்லோரும் அயோக்கியர்கள்.

எழுத்தாளர் சுஜாதாவின் கூட்டணியுடன் இயக்குநர் ஷங்கர் இதைத்தான் தன் புதுப்படத்தில் சொல்லி இருக்கிறார். அந்தக்கால கருட புராணத்தில் சொல்லியிருப்பது போல், இக்காலத்தில் தவறு செய்பவர்களை எண்ணெய் கொப்பரையில் போட்டு, கோழி போல பொறிக்கிறான் அய்யங்கார் நாயகன்.

மரண தண்டனை கூடாது என்று உலக நாடுகள் அனைத்தும் ஓங்கி குரல் கொடுக்கும்போது, இ.பி.கோவைக்கூட நம்பாமல் கருடபுராணத்தை கையில் எடுத்து திரையில் மனித உரிமை மீறலை நடத்தியிருக்கிறான் அந்நியன்.

இதையெல்லாம் ரசிகர்கள் கவனித்து விடக்கூடாது என்பதற்காகவே ‘ரண்டக்க.. ரண்டக்க’ சத்தத்தை அதிகப்படுத்தியிருக்கிறார் ஷ்ஷங்கர்.

தொடர்புக்கு:
கோவி. லெனின்
13/10, பெர்தோ தெரு,
ராயப்பேட்டை,
சென்னை - 600014.
கைப்பேசி: 94443 91354

Pin It