சமகாலத் தமிழ்ச் சிறுகதைகள் என்ற தலைப்பில் 2000 - 2020 காலகட்டத்திற்கான கதைகளாக பாரதிபாலன் தொகுத்துள்ளவை சாகித்திய அகாதெமி மூலம் 2022-ல் வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பில் உள்ள சிறுகதைகள்தான் இந்தக் காலகட்டத்திய தமிழ்ச் சிறுகதையின் ஒட்டுமொத்த நிலையையும் எடுத்துரைப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
தொகுப்பில் உள்ள 36 கதைகளில் 20க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் 2000க்குப் பின் தனது முதல் தொகுப்பைக் கொண்டு வந்த எழுத்தாளர்கள் என்று தொகுப்பாசிரியர் கூறுகிறார். ஆக, தொண்ணூறுகளின் இறுதி பத்தாண்டுகளில் எழுதப் போந்தவர்களும் புத்தாயிரத்தில் எழுதத் தொடங்கியவர்களும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாகக் கொள்ளலாம்.
இருபது ஆண்டு கால வெளியில், தொகுக்கப்பட்டுள்ள சிறுகதைகளில் மிகச் சில தவிர (அஜயன் பாலாவின் விநோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு, கீரனூர் ஜாகிர் ராஜாவின் ஜான் ஆபிரகாமின் கழுதை ஆகிய இரு கதைகள் தவிர) அனைத்தும் யதார்த்தவாதக் கதை சொல்லல் முறையைக் கைக்கொண்டுள்ள கதைகளாகவே உள்ளன.
புத்தாயிரத்தின் முதல் இருபது ஆண்டுகளில் வீச்சு கொண்டெழுந்த தலித், விளிம்பு நிலை கதையாடல்களை முன்னிருத்திய கதைகள் (அழகிய பெரியவனின் தோப்பு, கணேசகுமாரனின் குலசாமியைக் கொன்றவன், இமையத்தின் வீடியோ மாரியம்மன், ஆத்மார்த்தியின் பீகாரி, க.வீரபாண்டியனின் சவக்குழி, ராம் தங்கத்தின் கடந்து போகும், சுகுணா திவாகரின் நாயம்மை, க.அரவிந்த குமாரின் காட்டாயி முதலியவை) தொகுப்பில் சரியான முறையில் இடமளித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொன்மத்தின் மறுவாசிப்பாகத் திரௌபதியின் நிலை நின்று ஐந்து கணவர்களை வாக்கின்படி மணக்க நேர்ந்த அவலத்தைப் பதிவு செய்கிறது அ.வெண்ணிலாவின் தர்மத்தின் ஆகுதி. இசுலாத்தில் நிலவும் வர்க்கப் பாகுபாடு குறித்து நுட்பமாகப் பேசுகிறது அ.உமர்பாரூக்கின் சமதை. குழந்தைத் தொழிலாளர் நிலை குறித்த விரிவான ஆவணமாகவும் நிலவும் சூழல் குறித்த யதார்த்தப் பதிவாகவும் திகழ்கிறது ராம் தங்கத்தின் கடந்து போகும் கதை.
பெண்களின் அகநிலை குறித்த கதைகள் எவ்வித சமரசமுமின்றி பெண்களால் எழுதப்படும் போக்கு கடந்த இருபது ஆண்டுகளில் முகிழ்த்திருப்பது இத்தொகுப்பினை வாசிக்கும் போது துலங்குகிறது. அவற்றில் பெரும்பாலானவை குழந்தையின்மை குறித்து இருப்பதும் கவனிக்கத்தக்கது. (உமா மகேஸ்வரியின் கரு, கலைச்செல்வியின் பிரசவ வெளி போன்றவை)
வியக்க வைக்கும் வகையில் பெண்களின் அக உணர்வையும் துணிச்சலையும் பிரத்யேகக் குணாதிசயங்களையும் தங்களது கதைகளில் திறம்பட எடுத்துரைக்கும் ஆண் எழுத்தாளர்களையும் தொகுப்பில் காண முடிகிறது. (பா.திருச்செந்தாழையின் அத்தை, தூயனின் எஞ்சுதல், புலியூர் முருகேசனின் தாழம்பு டீச்சர் C/o காரைக்கால் அம்மையார், கண்மணி குணசேகரனின் வாடாமல்லி, உதயசங்கரின் கடவுளின் காதுகள், எஸ்.ராமகிருஷ்ணனின் கறுப்பு ரத்தம், பாரதிபாலனின் நீல நிறக் கனவு, மித்ரா அழகுவேலின் கார்மலி முதலியவை).
இந்திய ஆட்சிப் பணி அலுவலராகப் பணியேற்ற பின்னரும் தனது எழுத்தில் நேர்மையையும் சமரசமின்மையையும் விளிம்பு நிலை மக்களுக்காக எழுதும் தன் போக்கினையும் கைவிடாத கொள்கையை, சுகாதாரப் பணியாளரின் மலக்குழி மரணம் குறித்து 2018-ல் எழுதப்பட்டுள்ள க.வீரபாண்டியனின் சவக்குழி கதை வழி உணர முடிகிறது.
இருபது ஆண்டு காலத் தமிழ்ச் சிறுகதைகள் என்ற பெருந்தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள இத்தொகுப்பானது முழுமையானதாகத் தன்னளவில் இல்லை என்பதே வாசித்து முடிக்கையில் தோன்றுகிறது. நிறைய விடுபடல்கள் உள்ளதும் தெரிகிறது. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரைச் சேர்த்துள்ள போது பெருமாள் முருகன், நாஞ்சில் நாடன், சுரேஷ்குமார இந்திரஜித், சோ.தர்மன், வண்ணதாசன், சு.வேணுகோபால் முதலிய பெருந்தலைகள் ஏன் விடுபட்டுவிட்டன என்ற கேள்வி எழாமல் இல்லை.
அது போலவே, ரமேஷ் பிரேம், தேவிபாரதி, தமிழ்மகன், ஆதவன் தீட்சண்யா, குமாரசெல்வா, பா.வெங்கடேசன் போன்ற மாற்றுக் கதையாடலை முன்னெடுத்த எழுத்தாளர்களின் கதைகளும் இல்லை. இது போன்ற விடுபடல்களே பெரும் பட்டியலை நிறைக்கும் என்பதால், இன்மை குறித்த அக்கறையை (தேர்வுப் பட்டியலும் ஓர் அரசியல் செயல்பாடு என்பதைக் கவனத்தில் கொண்டு) சற்றே தள்ளி வைத்து, தொகுக்கப்பட்டுள்ள கதைகள் ஓரளவு கடந்த இருபதாண்டு காலத் தமிழ்ச் சிறுகதைக் களச் சித்திரத்தை முன்வைப்பதால் தொகுப்பு ஒரு தொடக்கத் தொகுப்பாக ஏற்கத்தக்கதே.
சமகாலத் தமிழ்ச் சிறுகதைகள் (2000 - 2020) - தொகுப்பாசிரியர்: பாரதிபாலன் - சாகித்திய அகாதெமி வெளியீடு - வலைதளம்: https://sahitya-akademi.gov.in - மின்னஞ்சல்:
- அன்புச்செல்வன்