முன்னுரை

இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் மற்றொரு நபரைச் சார்ந்து வாழ்கிறான். உறவு முறைகள் பல சேர்ந்த கூட்டமைப்பு குடும்பம் எனலாம். பல குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு குழுவாக ஓரிடத்தில் வாழ்ந்தால், அது சமுதாயம் என்றழைக்கப்பட்டது. சமுதாயம் தொழில் சார்ந்து காணப்பட்டது. பின்பு காலங்கள் செல்லச் செல்ல அவ்வமைப்பு சாதியாக மாறிவிட்டது. நாவல்கள் பல்வேறு தொழில் செய்யும் மக்களின் வாழ்வியலைத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றன. அந்நிலையில், ஆசிரியர் டி.செல்வராஜ் அவர்களின் ‘தோல்’ நாவலில் இடம்பெற்றுள்ள தொழிலாளர்களின் நிலையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

thol novelதோல் நாவலின் அமைப்பு

எழுத்தாளர் டி.செல்வராஜ் அவர்களால் 2010ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு மாபெரும் படைப்பே ‘தோல்’ நாவலாகும். இந்நாவலுக்கு 2011ஆம் ஆண்டிற்கான ‘இலக்கிய விருதும்’, 2012ஆம் ஆண்டிற்கான ‘சாகித்ய அகாதெமி’ விருதும் வழங்கப்பட்டன.  இந்நாவல் ஐந்து பாகங்களையும், 695 பக்கங்களில் 117 கதை மாந்தர்களையும் கொண்டு 26 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. தோல் நாவல் திண்டுக்கல் பகுதியில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் அவல நிலையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.

தோல் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள்

உடல் உழைப்பால் ஒரு தனி நபரோ அல்லது குழுவோ ஏதேனும் ஓர் அமைப்பிற்கோ அல்லது நிறுவனத்திற்கோ கூலி பெற்றுக் கொண்டு வேலை செய்பவர்கள் தொழிலாளர்கள் என்றழைக்கப்படுகின்றனர். தொழிலாளர்களைப் பற்றி வள்ளுவப் பெருந்தகை,

“இரவார் இரப்பார்க் கொன்று ஈவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்”1

என்னும் குறளில், 'கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார். தம்மிடம் இரந்தவர்க்கு மறைக்காமல் பொருள் ஈவார்' என்று தொழிலாளர்களைப் பெருமைப்படுத்திக் கூறியுள்ளார்.

தொழிலாளர்களின்றி உலகில் எத்தொழிலும் இல்லை எனலாம். தொழிலாளர்கள் உதவியின்றி உலகம் நடைபெறாது. உலகை இயக்கும் மாபெரும் சக்தியாக விளங்குகிறவர்கள் தொழிலாளர்கள். அதற்கு மாற்றுக் கருத்து இருக்கவியலாது.

தோட்டி முதல் தொண்டைமான் வரையிலுள்ள எல்லாரையும் தொழிலாளர்கள் என்று கூறலாம். எல்லா வல்ல இறைவனும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலை நாட்டோறும் ஓயாது செய்து கொண்டே இருக்கிறான். உலகத்தில் எல்லாரையும் தொழிலாளர்கள் எனக் கூறுவது குற்றமாகாது என்கிறார் டி.என். இராமச்சந்திரன்.2

தோல் தொழிற்சாலையில் ஆண்களும் பெண்களும்

தோல் தொழிற்சாலை என்பது இறந்த விலங்குகளின் தோலை ஓரிடத்தில் வைத்து அத்தோலைப் பதப்படுத்தும் இடமாகும். ‘பதப்படுத்தல்’ என்றால் இறந்த விலங்குகளிலிருந்து உரித்து எடுக்கப்படும் பச்சைத் தோலைக் கெடாதவாறு பாதுகாப்பதாகும். தோல் கெடாமலிருக்க, உரித்தவுடன் பொடிக்கப்பட்ட உப்புத்தூளை அதன் உட்பகுதியில் தடவுவர். அதனை வேதிப் பொருட்கள் கலக்கப்பட்ட நீரில் நன்கு ஊறவைப்பர். இதனால் அழுக்குகள் அப்புறப்படுத்தப்படும்.

அழுக்குகளை அப்புறப் படுத்திய பிறகு, வேதிப் பொருட்கள் கலவையோடு கூடிய சுண்ணாம்புக் கரைசலில் அத்தோலினை ஊற வைப்பார்கள். பிறகு தோலிலுள்ள மயிர்கள் நீக்கப்படும். தோலிலுள்ள சுண்ணாம்புக் கரைசலை நீக்கப் பல முறைகள் அமிலம் கலந்த நீரில் முக்கி எடுப்பார்கள். இறுதியாக, அழுக்கு நீக்கப்பட்ட பச்சைத் தோல் கிடைக்கும்.

தோல் பதனிடும் மூன்று முறைகள்

பொதுவாக, விலங்குகளின் தோலைப் பதப்படுத்துவதற்கு மூன்று முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

1. தாவரம் பதனிடும் முறை

2. தாது பொருள் பதனிடும் முறை

3. எண்ணெய் பதனிடும் முறை

என மூவகையாகும். தற்காலத்தில் நவீன முறையில் பதப்படுத்தப்படுகிறது.

தோல் தொழிலாளர்களின் வேதனைகளும், இன்னல்களும்

தோல் பதனிடும் தொழிற்சாலையில் வேலை புரியும் மக்கள் மனதளவிலும், உடலளவிலும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். இவர்களால் தங்களுடைய வாழ்க்கையை முழுமையாக வாழ முடிவதில்லை. தோலைச் சுத்தம் செய்ய சுண்ணாம்புக் குழியில் இறங்குபவர்கள் நரக வேதனையை அனுபவிக்கின்றனர்; பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

“நாள் முழுவதும் சுண்ணாம்புக் கலவை கலந்த நீரில் நாற்றம் பிடித்த நல்ல நிணவாடை வீசும் மாட்டுத் தோலையும், ஆட்டுத் தோலையும் போட்டு அலசுவதாலும், அதனை மிதித்து சவட்டுவதாலும், பாதங்களும் கைகளின் உட்பகுதியும் வெந்து காயமாகிக் காய்த்துப் போய்விட்டன. பாதங்களில் விப்பும், விரிப்பும் ஏற்பட்டு நடப்பதற்கே சிரமமாக இருந்தன. சுண்ணாம்பு இரசாயனத்தின் வேகத்தில் ரோமக் கால்கள் அத்தனையும் கருகிப்போய் பார்ப்பதற்கு அவலட்சணமாகப்படும்.”3

சுண்ணாம்புக் குழியில் வேலை செய்பவர்கள் - அதாவது, தோலைத் சுத்தம் செய்பவர்கள் ஏதாவதொரு நோய்க்கு ஆளாகி இறந்துபடுகின்றனர். சுண்ணாம்புக் குழி காளாவாயிலில் இருந்துவரும் புகையை சுவாசிக்க முடியாமல் “மூச்சு முட்டும் தப்புத் தவறி கால் இடறி குழியில் விழுந்தால் இறந்த போவதுமுண்டு, ஆனால் இவர்களுக்கு வெக்கை நோயாலோ, ஈழல் நோயாலோ மரணம் ஏற்படுவது சாதாரணம்” ஒரு மனிதனின் வாழ்க்கை அவன் செய்யும் தொழிலின் அடிப்படையில் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகிறது என்பதை தெளிவாக அறியமுடிகிறது.4

கொத்தடிமை முறை

கொத்தடிமை என்பது பணத்திற்காக ஒரு குடும்பமோ அல்லது ஊரோ தலைமுறை தலைமுறையாகப் பணம் படைத்தவர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதாகும். அதாவது, ‘கொடுத்த கடனுக்கு ஈடாகக் கடன் வாங்கியவனையே அடகுப் பொருளாக வைத்துக் கொள்வது கொத்தடிமை முறை’ எனப்படுகிறது. அவ்வாறு அடிமைப்படுத்தப்படுகின்ற மனிதன் பிணையத் தொழிலாளி அல்லது கொத்தடிமை எனச் சொல்லப்படுகிறான்.

தோல் தொழிலாளர்கள் வேலையில் சேர்க்கப்படுவதற்கு முன்னதாகவே முதலாளிகளிடம் அடிமை சாசனத்தில் முறி எழுதி கொடுத்துவிட்டு தான் வேலையைச் செய்ய வேண்டும். ஒருவன் தன்னுடைய கடனை அடைக்கும் வரை முதலாளிகளுக்கு உழைத்து உழைத்து அடிமையாகவே அவன் வாழ வேண்டுமென்பது வாழ வேண்டுமென்பது தான் அடிமை மக்களின் விதியாகும்.5

சமூக ஏற்றத்தாழ்வுகளும் ஒடுக்குமுறைகளும்

உலகில் பிறந்த மக்களனைவரும் பிறப்பால் சமமானவர்களே. குலம், தொழில் போன்ற காரணங்களால் மக்கள் பாகுபடுத்தப்படுகின்றனர். இதனை,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்”6

என்ற குறளில் வள்ளுவர் எடுத்துரைக்கின்றார். மேலும் இவ்வாறு கூறினாலும் ஏற்றத்தாழ்வுகளும் ஒடுக்குமுறைகளும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. சாதி, பொருளாதாரம், பண்பாடு, மொழி, பாலியல் போன்ற காரணங்களினால் மக்கள் விளிம்புநிலைக்குப் புறந்தள்ளப்படுகின்றனர்.

சுண்ணாம்புக் குழிகளில் பணிபுரியும் நபர்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகின்றனர். ஆனால் அவர்களது அந்தப் பணிக்குரிய மரியாதை கிடைப்பதில்லை, மாறாக அவர்கள் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். வேதனை தாளாமல் அவர்கள் வேலையைவிட்டுத் தப்பித்து ஓடுபவர்களைப் பிடிக்க தனிக் குழுவையே வைத்திருக்கின்றனர்.

“வேலைப் பளுவும், கொடுமையும் தாங்காமல் தப்பியோடும் தோல் ஷாப்புத் தொழிலாளர்களைப் பிடிப்பதற்கும், அவர்களை உரிய இடத்தில் ஒப்படைக்கவும், முதலாளிகள் ரெயில்வே ஸ்டேசனிலும், பஸ் நிலையங்களிலும் நியமித்திருக்கும் அடியாட்கள் இவர்களென்பது ஓசேப்புக்கு விளங்கிவிட்டது.”7 இது ஓசேப்புக்கு மனத்திற்குள் தோன்றியதாகும். அவன் ஒடுக்கப்படுகிறோம் என்பதையுணர்ந்து தப்பிக்க நினைக்கிறான். ஆனால் கழுவத்தேவனிடம் மாட்டிக் கொள்கிறான் என்ற கருத்தை நாவலில் இடம்பெற்றுள்ள பாத்திரப் படைப்பின் மூலம் அறியமுடிகின்றது.

மனித உடல் உழைப்பு உறிஞ்சப்படுதல்

மனிதனின் உழைப்பு, ஆற்றல் ஆகிய திறன்களுக்கு ஏற்ப ஊதியம் வராமல் அவர்களுடைய உடல் திறன்களைப் பயன்படுத்தி உழைப்பை    உறிஞ்சி அதிக இலாபத்தைச் சிலர் அடையும் முறை சுரண்டலாகும். முதலாளி அல்லது பண்ணையார், ஒருவனது உழைப்பை மட்டும் அதிகமாக வாங்கிவிட்டு அதற்குரிய கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றுவது உழைப்புச் சுரண்டலாகும்.

சுண்ணாம்புக் குழிகளே மக்களின் சீவனில் பாதியைத் தின்று விடுகின்றன. இதனை வருடமெல்லாம் என் உழைப்பையும் என் இரத்தத்தையும் உறிஞ்சினது போதாதா? எங்கிட்ட வாங்கிய ஒப்பந்த பத்திரம் கெடு முடிஞ்சு போயிட்டது. ஒப்பந்த பத்திரம் என் கைக்கு வரலேண்டா நல்லாருக்காது” என்று மம்முதன் கோவமாக முஸ்தாபா மீரானிடம் கேட்டான். இதிலிருந்து மக்களின் உடல் வேதனையும், மன வேதனையும் இந்த உரையாடல் வழி புலப்படுகிறது.8

அடிமைச் சமூகம்

செல்வ நிலையில்் கீழ் நிலையில் இருப்பவர்கள் உழைப்பாளிகள் ஆவர். ஒரு பண்டத்தை உற்பத்தி செய்து அதனை விற்பனைக்குரியதாக மாற்றும் தொழிலாளிகளுக்கும் அப்பண்டத்திற்கும் தொடர்பே இல்லாமல் போய்விடுகிறது. மாறாக, முதலீடு செய்யும் முதலாளி அப்பண்டத்திற்கு உரியவராகிறார். அதன் மூலமாகக் கிடைக்கும் பயனைப் பெறக்கூடியவராக இருக்கிறார். முதலாளியின் சொத்து உயர்வடைகிறது. தொழிலாளியின் நிலை தாழ்வடைகிறது.

அடிமைச் சமூகத்தில் மனிதனும் ஒரு பண்டமாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டான். இந்த அடிமை வாணிபம் மனிதச் சமூகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இத்தகைய அடிமைச் சமூகத்தினைப் பற்றி, “தோல் ஷாப்புக்கு பணிக்குக்கூட போகமுடியாமல் மார்க்கெட்டில் குப்பையள்ளிப் போட்டதில் கிடைத்தைக் கொண்டு ‘வரகரிசி கஞ்சி’ வைப்பதற்குத்தான் போதுமானதாக இருந்தது.”9

வறுமை உணவு நெருக்கடி

வாழ்வியல் களஞ்சியம், “வறுமை என்பது இல்லாமை, ஒரு மனிதன் தன் வருமானம் போதாததாலோ அல்லது அறிவற்ற செலவினங்களாலோ தன்னுடைய மன நிலையையும் உடல் நிலையையும் ஏற்றதாக வைத்துக் கொள்ளவும், தன்னைச் சார்ந்தவர்களைத் தான் வாழும் சமுதாயம் எதிர்பார்க்கும் அளவுக்கு வசதிகளோடு காப்பாற்றவும் முடியாத நிலையே ஏழ்மை” என்று பொருள் கூறுகிறது.10

தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பஞ்சப்படி, சம்பள உயர்வு கேட்டும், போனஸ் கோரிக்கை வைத்தும், தோல் ஷாப்பு முதலாளிகள் ஒத்து வராததால் மூன்று மாதங்களாக வேலைநிறுத்தம் செய்வதால் மக்கள் பசி பட்டினியோடு துன்புறுகின்றனர். மேலும் முதலாளிகளின் அடியாட்களின் இன்னல்களையும் சந்திக்கின்றனர்.

கிராமங்களில் அரிசியும் நவதானியமும் கிடைக்காமல் போய் விட்டதால், உள்ளது உரியது என்று அத்தனைப் பொருட்களையும் அடமானம் வைத்தும், தெருத் தெருவாக மீன் விற்றும், குப்பைகளைப் பொறுக்கியும் அதை விற்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தனர்.11

தீண்டாமைக் கொடுமை

தீண்டாமை என்பது ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சமமாகக் கருதாமையாகும். குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் பொது வழியைப் பயன்படுத்தத் தடை, பொதுக் குளத்தைப் பயன்படுத்தத் தடை, கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை, கோயிலில் வழிப்படத் தடை, உயர்ந்த இனத்தினத்ரைத் கண்டால் தூரப் போய்விடுதல் எனப் பல வடிங்களில் தீண்டாமை என்னும் பெருங்குற்றம் சமூகத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.

நாவலில் ஊருணிக்குப் பக்கத்தில் இறந்து கிடந்த சின்னக்கிளியின் சடலத்தை இடுகாட்டிற்குக் கொண்டு செல்வதில்தான் சிக்கல் ஏற்படுகிறது.

மேல் சாதிக்காரர்கள் கருமாரியம்மன் கோவில் வழியாகப் பிணத்தைக் கொண்டு செல்லவிடாமல் தடுக்கின்றனர். அப்போது சங்கரனிடம் காக்கையன் என்கிற வெட்டியான், “சாமி நீங்கதான் எங்கள காப்பாத்தனும், பரம்பரை பரம்பரையா இந்த ஊர்சனங்களுக்குத் தொண்டூழியம் செஞ்சு இத்துப் போனேன். உப்ப எம் பேத்தியோட பொணத்த கூட இடுகாட்டுக்குக் கொண்டு போக உடமாட்டேண்டு மறிக்காவ ஆண்டைக” என்று கூறுகிறார்.12

1.      தங்கசாமி போன்ற கீழ் ஜாதி சேரிப்பிள்ளைகள் அனைவரும் தனியாக ஒதுக்கித் தரையில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.

2. மண் பானையில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைக் கூட கீழ் ஜாதிக்கார மாணவர்கள்  தொடமுடியாது. தீட்டுப்பட்டுவிடும் என்று தண்ணீர்கூட அவர்களுக்கு விலக்கப்பட்டிருந்தது.

3.      மாணவர்கள் என்ன ஆசிரியர்கள் மட்டத்திலும் அந்த நோய் பரவியிருந்தது.

4.      பஞ்சாங்கம் சாரும் இஸபெல்லா டீச்சரும் மேல்ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்களால் விலக்கி வைக்கப்பட்டிருந்தார்கள்.

5.      கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் வராததால் ஆசிரியர்கள் ஓய்வறையில் வைக்கப்பட்டிருந்த மண்பானைத் தண்ணீரை பஞ்சாங்க சாரும் இஸபெல்லா டீச்சரும் உபயோகப்படுத்தி தண்ணீரே தீட்டுப்பட்டு விட்டதாக கருதினார்கள்.

இதுபோன்ற சாதிவெறி நிகழ்வுகள் இன்றளவிலும் நடைபெற்றுக் கொண்டுதான்  இருக்கின்றன.13

முடிவுரை

சமுதாயத்தில் நடக்கும் பல பிரச்சினைகளில் தொழிற்சாலைப் பிரச்சினைகளும் ஒன்றாகும். தொழிற்சாலையில் மக்களுக்கு நடக்கும் அநீதிகளும் அவர்களின் அடிமை வாழ்க்கை முறைகளும் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதும் இல்லை. அவர்களின் வாழ்க்கையில் போராட்டங்கள் தான் மிகுதியாக நடக்கின்றன.

முதலாளிகளின் ஆதிக்கம் மேலும் மேலும் வளர்ச்சி பெற்றுக் கொண்டே போகின்றது. கீழ்சாதி மக்கள் அடிமைகளாகவே உள்ளனர். தோல் தொழிலாளர்களின் இன்னல்களும், உணர்வுகளும் நாவலில் படம் பிடித்துக் காட்டப்படுகின்றன.

அடிக்குறிப்புகள்

1.      மு. வரதராஜன் (உ.ஆ.), குறள். 1035.

2.      டி.என். இராமச்சந்திரன், திரு.வி.க.வின் தேசபக்தன் கட்டுரைகள், ப. 113.

3.      டி.செல்வராஜ், தோல், ப. 60.

4.      மேலது., ப. 85

5.      மேலது., ப. 86.

6.      மு. வரதராஜன் (உ.அ.), குறள். 972.

7.      மேலது., 59.

8.      வாழ்வியல் களஞ்சியம், தொகுதி-9, ப. 265.

9.      டி. செல்வராஜ், தோல், ப. 206.

10. மேலது., ப. 151.

11. வாழ்வியல் களஞ்சியம், தொகுதி-9, ப. 86.

12. டி. செல்வராஜ், தோல், ப. 105.

13. மேலது., ப. 308.

துணைநின்ற நூல்கள்

1. மு. வரதராஜன் (உ.ஆ.), திருக்குறள், இனிய உரை, இரா. நாராயணசாமி, ஆகஸ்ட் 1997.

2. டி.என். இராமச்சந்திரன், திரு.வி.க.வின் தேசபக்தன் கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம்.

3. டி. செல்வராஜ், தோல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை, 2010.

4.      மு. வரதராஜன் (உ.அ.), திருக்குறள், இரா. நாராயணசாமி, ஆகஸ், 1991.

5.      வாழ்வியல் களஞ்சியம், தொகுதி-9, வாழ்வியல் களஞ்சியம் பதிப்பகம்.

கட்டுரையாளர்கள் : 

கி. அன்பரசி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

& முனைவர் ச. வனிதா, உதவிப் பேராசிரியர், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்