வாழ்க்கையின் வளர்ச்சி நிலைகளை, மகிழ்ச்சியான தருணங்களை, பிரிவுகளைப் பதிவு செய்து புதிய இலக்கிய வகைக்கு நம் முன்னோர்கள் வழி ஏற்படுத்தித் தந்திருக்கின்றனர். பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள ஒவ்வொரு நிகழ்வையும் இலக்கியமாகப் படைக்கும்போது அது வரலாறாக மாறுகிறது. மனித வாழ்க்கை - தாலாட்டில் தொடங்கி, ஒப்பாரியில் நிறைவடைகிறது. வாழ்வின் முன்னுரையாக - தாலாட்டும், முடிவுரையாக - ஒப்பாரியும் அமைவதால் நாட்டுப்புறப் பாடல்களை விளக்கும் போது, தாலாட்டுப் பாடல்களைக் ‘கலங்கரை விளக்கம்’ என்று குறிப்பிடுவதுடன் ஒப்பாரியை ‘நினைவுச் சின்னம்’ என்று கருதுகின்றனர்.kabilan poems on daughterதாலாட்டும் ஒப்பாரியும் பெண்களை மையப்படுத்தி அமைகின்றன. தாலாட்டு பாடக் கூடியவள் பெரும்பாலும் அந்தக் குழந்தையின் தாயாகவே இருக்கிறாள். அதேபோலப் பெற்றோரை இழந்து அல்லது கணவனை இழந்து அல்லது உற்றார் உறவினரை இழந்து பெண்கள் பாடும் இலக்கியமாக ஒப்பாரி விளக்கம் பெறுகிறது. மனதில் இருக்கும் துன்ப உணர்வை வெளிப்படுத்த ஒப்பாரி பாடப்படுகிறது. இறந்தவரைப் பற்றிய புரிதலை, அவரின் வரலாற்றை ஒப்பாரிப் பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இறந்தவர்களின் சிறப்பை மட்டுமல்லாமல் அவர்களை இழந்ததால் மற்றவர்கள் எதிர்கொள்ளும் துன்பத்தையும் இந்தப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. பொதுவாக, இந்தப் பாடல்கள் உணர்வு மேலீட்டால் பாடப் பெறுபவை என்று புரிந்து கொள்ளலாம்.

கையறுநிலைப்பாடல், புலம்பல், இரங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப் பாட்டு, அழுகைப் பாட்டு என்ற பெயர்களில் ஒப்பாரிப் பாடலைக் குறிப்பிடுவர். அதியமான் இறந்தபோது பாடப்பட்ட கையறுநிலைப் பாடலும், பாரி இறந்தபோது பாரி மகளிர் பாடிய பாடலும் ஒப்பாரியின் முக்கியத்துவத்தை உணர்த்தும். கம்பராமாயணத்தில் கும்பகர்ணன் இறந்த போதும், மேகநாதன் இறந்த போதும் இராவணனுக்கு ஏற்பட்ட துயரத்தைப் பாடல்கள் வழி உணர முடியும். சோகத்திலும் பெரிய சோகம், மனித இனத்தின் தொடர்ச்சியாக இருக்கக்கூடிய குழந்தைகளின் இறப்புதான்!

குழந்தைகள் இந்த வாழ்க்கையை இன்னும் அர்த்தமுள்ளதாகவும், அழகுள்ளதாகவும் மாற்றி வருகிறார்கள். அவர்களின் கள்ளங்கபடமற்ற சிரிப்பு எல்லா துன்பத்தையும் மறக்க வைத்து விடும். குழந்தைகளின் மனதால் இந்த உலகத்தைப் பார்ப்பது ஒரு வரம். குழந்தைகளைக் கொண்டாட இலக்கியங்கள் ஒருபோதும் தவறியதில்லை. அதிலும் அப்பாக்களுக்கு மகள்கள் மீது தனிப்பிரியம் உண்டு. மகள்களைத் தன் தாயாகப் பாவித்து, மகள்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் அப்பாக்களைக் காலந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தன் வீட்டின் அரசியாக இருக்கும் மகள் காலத்தின் கொடுமையால் மரணத்தைத் தழுவுவது அந்த அப்பாவுக்கு உயிர் பிரியக் கூடிய வேதனையன்றி வேறில்லை. செல்ல மகளை இழந்து வாடும் அப்பாவின் சோகத்தை ‘மகள்’ என்ற கவிதைத் தொகுப்பாக வடித்துக் கொடுத்திருக்கிறார் கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன். தன் மனைவி மருத்துவமனையில் பிரசவித்த மகளுடன் வீட்டுக்குத் திரும்புகையில் அந்தக் குழந்தையின் அசைவுகளைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்ட நொடிகளை நினைத்துக் கொண்டிருக்கும்போதே மகளின் மறைவுச் செய்தி எவ்வளவு கொடுமையானது. இந்தச் சூழ்நிலையை அனுபவிக்கும் கவிஞர் தன்னுடைய இயலாமையை, கையறுநிலையை ஒப்பாரியாகக் கொடுத்திருக்கிறார்.

இலக்கியங்களில் தந்தையை இழந்து வாடும் மகள்கள் அந்த இழப்பைச் சொல்லிப் புலம்புவதைப் புறநானூற்றுப் பாடல்கள் தெரிவிக்கின்றன. சென்ற முழுநிலவு நாளில் எங்கள் தந்தையார் எங்களுடன் இருந்தார், எங்களுடைய பறம்பு நாடும் எங்கள் வசம் இருந்தது. ஆனால் இன்று முழுநிலவு உதிக்கும் போது எங்கள் தந்தையும் இல்லை, நாட்டையும் இழந்தோம் என்று வேதனையோடு பாடி இருப்பது நெஞ்சை உலுக்கும் வரிகள். இப்படி அப்பாவுக்காக மகள்கள் பாடும் பாடல்களை இலக்கியம் காட்டுகிறது. ஆனால், மகளின் இல்லாமையில் அப்பா பாடும் பாடல்களை வாசிக்கும் போது இப்படி மீண்டும் ஓர் இலக்கியம் தோன்றி விடக்கூடாது என்பதே வாசகனின் வேண்டுதலாக இருக்கும்.

ஒரு தாய் தன் கருவைப் பத்து மாதம் சுமக்கிறாள் என்றால் ஒரு தந்தையோ அந்தக் குழந்தையை காலம் முழுக்க தன் இதயத்தில் சுமக்கிறார் என்பதே உண்மை. அப்படித் தாலாட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்த மகளைச் சாவுக்குத் தின்ன கொடுத்து விட்ட ஒரு தந்தையின் புலம்பல் எப்படி இருக்கும்? கடைசியில் அவளுக்கான தீச்சட்டியையும் நான்தானே சுமந்தேன் என்ற இடத்தில் கண்ணீர் முட்டிக் கொண்டு வருகிறது.

"கண்ணீரின் வெளிச்சம்

வீடு முழுக்க

நிரம்பியிருக்க

இருந்தாலும் இருக்கிறது

இருட்டு"

- இப்படி மகள் பிறந்த பிறகு வாழ்க்கை விளக்கேற்றியது போல் ஒளிமயமாக மாறி இருந்தது. ஆனால் அவளை இழந்து விட்டதால் இனி வாழ்க்கை முழுக்க இருள் மட்டுமே நிலைத்திருக்கப் போகிறது என்று வேதனை கொள்கிறது அந்தத் தந்தையின் மனம்.

தனக்குப் பிடித்தமானவர்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது ஒரு சுகம். அவர்களைச் சந்திக்க முடியாத நேரத்தில் நினைவுகளின் வழியாகச் சந்தித்துக் கொள்கிறோம். அதனால்தான் நினைவுகளை ஒருவகை சந்திப்பு என்றும் மறதியை ஒருவகை பிரிவு என்றும் சொல்வர். இனி மகளைப் பார்க்கவே முடியாது என்ற சூழல் வரும்போது அந்தத் தந்தையின் நிலை என்ன? பார்க்கும் இடங்களில் எல்லாம் கடவுளைத் தரிசிக்கும் பக்தனைப் போல, காணும் பொருள்களிலெல்லாம் காதலியை நினைவுகூரும் காதலன் போல, கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா என்று பாரதியார் பாடி மகிழ்வதைப் போல மகளை இழந்த தந்தையால் மகிழ்ச்சி அடையமுடியாது. எல்லா குரல்களிலும் தன்னுடைய மகளின் குரலே ரீங்காரமிடுகிறது என்ற வரிகளை வாசிக்கும்போது வாசகனையும் சோகம் தொற்றிக் கொள்கிறது.

நம்மைப் பெற்றெடுத்தவர்களை இழப்பது துன்பம் என்றாலும் அதை காட்டிலும் நமக்குப் பிறந்தவர்கள் நாம் வாழும் காலத்திலேயே மரணித்துவிடுவது பெருந்துன்பம். குழந்தைகள் முதன் முதலில் தவழ்ந்த நாட்களை, நடை பயின்ற நாட்களை, அப்பா என்று அழைத்த நாட்களை, முதல் நாள் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று விட்டு வந்த நாளை, பிள்ளைகளின் வளர்ச்சியைப் பார்த்துப் பூரித்த அந்த நொடிகளைப் பணத்தைச் சேமிப்பது வைக்கும் வாங்கியைப் போலச் சேமித்து வைத்திருக்கிறார் அப்பா. சிரமப்பட்டு உழைத்துச் சேர்த்த பொருளைத் தன் கண் எதிரிலேயே வெள்ளம் அடித்துச் செல்வது போல, புயல் காற்று வீசிச் சாய்க்கப்பட்ட மரங்களைப் போலக் கதியற்ற நிலைக்குத் தன்னைத் தன் மகள் தள்ளவிட்டுச் சென்றுவிட்டாளே என்று ஆதங்கப்படுகிறார். விழுதுகளைப் பிரசவித்த பிறகு தன்னுடைய சுமைகளை விழுதுகளில் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கும்போதே அறுந்துவிடும் விழுதுகளைப் போல, மகள் இல்லாமல் போகும் சூழலை அந்தத் தந்தையின் மனம் எப்படி ஏற்றுக்கொள்ளும்?

கருணையற்ற காலம் தன்னுடைய மகளைத் எடுத்துக் கொண்டதால், மண்ணில் புதைத்து விட்டு வரும் அந்தத் தந்தை, குழியில் இறக்கி வைக்கப்பட்ட மகளைக் கண்ணெடுத்துப் பார்ப்பதற்கு இயலாதவராய் கண் மூடியபடி கண்ணீர் சிந்தும் அந்தக் காட்சியை இந்தக் கவிதைத் தொகுப்பு பதிவு செய்திருக்கிறது. அந்த அப்பா மட்டுமா கண்ணீர் கடலில் மூழ்குகிறார் அவருடைய அலைபேசியும்தான். மகளின் புலனத் தகவல்களை வாசிக்க முடியாமல் கண்ணீரில் மூழ்கிப் போகிறது, கூடவே வாசகனையும் நனைத்து விடுகிறது அந்தக் கண்ணீர்க் கடல்.

மனைவிகள் சமைக்கும் போது அம்மா சமைத்த உணவின் ருசி இருப்பதில்லை என்று குற்றம் சாட்டும் ஆண்கள் தங்கள் மகள்கள் சமைக்கும் போது அந்த உணவை அறுசுவை விருந்தாகக் கொண்டாடுவர். அப்படிக் கருதும் அப்பாவுக்கு அவரின் மகள் மணக்க மணக்க சமைத்த சத்தான உணவுகளை ஆசையுடன் பரிமாறுகிறாள். காலமெல்லாம் அந்த உணவைச் சாப்பிட விரும்பிய அந்த அப்பாவுக்கு அவளின் மறைவு இப்போது பட்டினியாக இருக்க வைத்திருக்கிறது. ஆனால், அவளோ தன்னையே மரணித்திற்குப் பரிமாறிக் கொண்டாளே என்று புலம்புபவரை என்ன சொல்லி ஆறுதல்படுத்துவது.

திரைப்படத்தில் வரும் பாடல்களை எல்லோரும் ரசிக்கலாம். ஆனால் அந்தப் பாடலாசிரியரின் விருப்பத்திற்கு உரியவர்கள் ரசிக்காமல் போனால் அந்தக் கலைஞனுக்கு வெற்றிடமே மிஞ்சும். தன்னுடைய சாதனைகளைப் பாராட்டி வரவேற்பதற்கு யாரும் இல்லை என்றால் அந்தக் கலைஞனால் எப்படி இயங்க முடியும்!

 "என்
கடைசி ரசிகையும்
இல்லாதபோது
யாருக்கு
எழுதுவது பாடல்"

என்ற வரிகள் ஆழமானவை. பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட எனக்கொரு தாய்மடி கெடைக்குமா என்ற முதல் மரியாதை படத்தின் பாடல் வரிகள் ஆதரவற்ற நிலையை அழுத்தமாகப் பதிவு செய்வது போல இந்த வரிகள் நமக்குள் அழுத்த உணர்வைத் தருகின்றன.

நோய் வாய்ப்பட்டு இறந்திருந்தாலும் ஏதோ ஒரு வகையில் தேற்றிக் கொள்ளலாம், விபத்து காரணமாக உயிர் பிரிந்திருந்தாலும் எப்படியோ நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளலாம், ஆனால் பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்வது பெற்றோருக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரிய தண்டனை! சொல்ல முடியாத சோகத்தால் உயிரைத் தூக்குக் கயிருக்குத் தாரை வார்த்துக் கொடுத்த மகள் தூரிகையை நினைக்காத நாள்களே இல்லை கவிஞருக்கு. பெயரில் ஒரு புள்ளி எழுத்தும் இல்லை, ஆனால் அவளின் வாழ்க்கையே முற்றுப்புள்ளியாக விட்டதே என்ற கவிஞரின் வேதனை தற்கொலைக்கு முயலும் பிள்ளைகளுக்கு நிச்சயம் ஒரு படிப்பினையைத் தர வேண்டும்.

ஒவ்வொரு முறையும் தூதஞ்சல் தரும் நபரைப் பார்க்க நேர்ந்தால் தன் மகளுக்காக வரும் தூதஞ்சலைப் பெற்ற நினைவுகளே மனதில் நிழலாடுகின்றனவாம். அப்படி நினைத்துக் கொள்ளும் அந்த அப்பா கடைசியாக, தன் மகளின் உடலையே மருத்துவமனையிலிருந்து கையொப்பமிட்டே பெற்று வந்தார். மகளுக்காக வந்த பொருள்களை கையொப்பமிட்டு வாங்கிய நிலைமை மாறி மகளையே கையொப்பமிட்டு வாங்க வேண்டி வந்துவிட்டதே என்ற செயலற்ற பாடல்கள் வருத்தத்தின் உச்சம்.

சங்க இலக்கியத்தில் தன் மகள் காதல் வசப்பட்டு தன்னுடைய காதலனுடன் வீட்டுக்குத் தெரியாமல் வீட்டை விட்டுச் சென்று விடுவாள். அந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாத தாய் மகள் வைத்து விளையாடிய விளையாட்டுப் பொருட்களை, அவள் உண்டு உறங்கிய இடத்தை, அவளுக்குப் பிடித்தமானவற்றைப் பார்த்து ஏங்குவது போல இங்கேயும் ஒரு பதிவு காணப்படுகிறது.

"பள்ளத்தில்
மூடியது தெரியாமல்
காத்துக் கிடக்கிறது
பல்லங்குழி"

இந்த வரிகளில் அவள் விளையாடிய பொருட்கள் இன்னும் இருக்கின்றன, விளையாடிய அவளைத்தான் காணவில்லை என்று புலம்புகிறார் கவிஞர். கல்யாண வயதில் இருக்கக்கூடிய மகளுக்குத் திருமணம் செய்து வைத்து, அவளின் வாரிசுகளைக் கண் குளிர காண வேண்டும் என்ற ஆர்வத்தோடு காத்திருக்கும் காலத்தில் தனக்குத்தானே தாலி கட்டிக் கொண்டதைப் போல தூக்குக் கயிற்றில் தொங்கிவிட்ட அந்தத் தவிப்பை, மகள் சாவி கொடுத்து இயங்கும் கடிகாரத்தின் முட்கள் அவளையே தேடிக் கொண்டிருக்கின்றன என்ற வரிகளின் தேடலும் பரிதவிப்பின் உச்சமாக அமைகின்றன. எல்லா அப்பாக்களுக்கும் மகள்கள் பொக்கிஷமாகவே இருப்பார்கள். அதனால் இனிமேல் எங்குச் சென்றாலும் தன் வீட்டைப் பூட்ட வேண்டிய அவசியம் இல்லை, திறந்து போட்டு விட்டே செல்லலாம். ஏனென்றால் திருடிச் செல்வதற்கு இனி ஒரு பொருளும் இல்லை என்று வருத்தப்படுகிறார்.

பூக்களை விரும்பாத தன் மகளின் உடல்மேல் எத்தனை பூக்களை தூவ வேண்டிய சூழல் அமைந்து விட்டதே. மகள் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பிய போது பரிசளித்த காலணிகளை அணியாமல் பத்திரப்படுத்தி இருக்கும் அந்த அப்பா அணிந்து கொண்டாள் அவளை மிதிப்பதாக நினைத்துக் கொள்ளும் அப்பா அவளையே மண்ணில் புதைத்து விட்ட வேதனை சொல்லில் அடங்காதவை. பட்டாம்பூச்சி போல இருக்கும் அவளை எப்படி நெருப்புக்குத் தின்னக் கொடுப்பேன் என்று ஆற்றாது ஏங்கும் அந்த மனம் மகளின் ஆர்வத்திற்கு ஏற்ப ஒளிப்பட கருவியை வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தது. ஆனால் அவளோ ஒளிப்படமாகி விட்டாளே, இனிமேல் தன் வாழ்க்கையில் தூக்கமே கிடையாது.

காலணிகளை வீட்டிலேயே போட்டுவிட்டு அவள் மட்டும் எங்கு தான் சென்றாளோ என்று தேடும் அப்பாவின் கண்ணீரில் எப்போதும் உப்பு கரிப்பதில்லை. மாறாகக் கண்ணீர் கசப்பாக மாறி இருக்கிறது. அவள் பிறந்த மருத்துவமனை அவளின் பிறப்பை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது.

"அவள் பிறந்த
மருத்துவமனையைக்
கடக்கிறபோது
என்
இதயச்சத்தம்
குழந்தையாய்
அழுகிறது"

என்ற இடத்தில் நிரந்தரப் பிரிவின் துன்பத்தை உணரமுடிகிறது. அவளுக்காகச் சேர்த்து வைத்த நகைகள் எந்தப் பயனும் இல்லாமல் அப்படியே கிடைக்கின்றன. இதைப் பார்க்கும் போது விரல்கள் சுருங்கிப் போன ஒரு தொழுநோயாளிக்கு மோதிரத்தைப் பரிசாகக் கொடுப்பதால் என்ன பயன் ஏற்படும். அதுபோல நகைகள் பயனற்றுக் கிடக்கின்றன என்ற இடத்தில் மனம் பெருங்குரலெடுத்து அழுகிறது.

இறந்துபோனவர்களுக்கு அமாவாசை நாள்களில் படையலிட்டு நன்றிக் கடனைச் செலுத்தி வருவது நம் வழக்கம். அந்த வகையில் முதலில் இறந்து போன மாமனாருக்கும், அவருக்கு அடுத்ததாக மரணித்த அப்பாவுக்கும், தொடர்ந்து இல்லாமல் போன அம்மாவுக்கும் படையல் இட்டு வந்த கவிஞரின் வீட்டில் இப்போது புதிய உறுப்பினராக அவருடைய மகளும் இணைந்து கொண்டாள் என்ற வரிகள் வாசகனை உறைய வைப்பன.

சோகத்தின் சாறெடுத்துச் சுகமான ராகம் தயாரிப்பதாகப் பலரும் பேசுகின்றனர். பிரிவைக் கொண்டாடுவதே செவ்வியல் தன்மை என்று சிலர் சிலாகிக்கின்றனர். இன்று இருப்பது நாளை இல்லை என்று வேதாந்தமாக உரையாடுபவர் உண்டு. வந்தவர்கள் எல்லோரும் தங்கி விட்டால் இந்த உலகம் தாங்குமா என்று கேள்வி எழுப்புவோர் உண்டு. ஆனால் கல்யாண வயதில் இருக்கும் மகளை இழப்பது எப்போதுமே ஏற்றுக் கொள்ள முடியாத வேதனை. காயம்பட்ட இதயத்திற்குச் சரியான ஆறுதலாக இருப்பது இலக்கியத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. அந்த வகையில் கவிஞர் வருத்தத்தின் வடிகாலாக உருவெடுத்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பு ஓர் ஆணின் ஒப்பாரியாக மாறியிருக்கிறது. மகளின் ஒளிப்படங்களாலும், ஓவியக் கலைஞர்களின் ஓவியங்களாலும் புத்தக வடிவில் எழுப்பப்பட்ட ஒரு நடுகல் இந்தக் கவிதைத் தொகுப்பு!

முனைவர் மஞ்சுளா