athurasalai bookஒரு மனிதனுக்கு எது சிறந்த மருத்துவம், எது தனக்கு ஏற்ற மருத்துவம் என தெரியாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் எந்த மருத்துவம் மனிதகுலத்தை நிரந்தர நோயாளியாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்வது மிக அவசியம் மட்டுமல்ல அது காலத்தின் கட்டாயமும் கூட. இதை மிக நுட்பமாக, மிகத் துல்லியமாக உணர வைக்கிறது ஆதுரசாலை நாவல்.

ஆதுரசாலை நாவலுடன், பயணித்த இரண்டு நாட்கள் மிக முக்கிய வரலாற்றுப் பயணம் சென்று வந்த அனுபவத்தைக் கொடுத்தது எனக்கு. அதிர்ச்சி தரும் பல மருத்துவ உண்மைகளின் களஞ்சியம் இந்த நாவல் என்றால் அது மிகை அல்ல.

எழுத்தாளர் அ. உமர் பாரூக் அவர்கள் தன்னுடைய இத்தனை வருட வாழ்நாள் அனுபவத்தையும், தான் சேகரித்த அறிவுக் களஞ்சியத்தையும் கொட்டி உருவாக்கியுள்ளார் ஆதுரசாலையை. இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவ நூல்களை எழுதியுள்ள உமர் பாரூக் அவர்கள் இரத்தவியல் துறைச் சார்ந்த பட்டப் படிப்பை முடித்து அலோபதி ஆய்வகக் கூடத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அக்குபங்சர் மருத்துவராகவும் கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர் மையத்தின் முதல்வராகவும் பணியாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மருத்துவ வரலாற்றில் மிக முக்கிய இடத்தை ஆதுரசாலை வகிக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

கதைச் சுருக்கம்

ஆய்வக பட்டப் படிப்பை படித்து முடித்து அலோபதி ஆய்வு கூடத்தில் பணிபுரியும் இளைஞன், ஆய்வு கூடத்தில் நடக்கும் குளறுபடிகளையும், மனித குலத்தை நிரந்தர நோயாளியாக்கும் தன்மையையும், கொலைக்குச் சமமான சம்பவங்களையும் பார்த்து மனம் நொந்து அத்துறையிலிருந்து வெளியேறுவதுதான் கதையின் முக்கியச் சாரம். அலோபதி மருத்துவ துறையிலிருந்து வெளியேறி சித்த மருத்துத்தின் மகத்துவத்தை அறிந்துக் கொள்கிறான் கதையின் நாயகன்.

வெப்பம்-குளிர்ச்சி

பாரம்பரிய மருத்துவம் குறிப்பிடும் வெப்பம் மற்றும் குளிர்ச்சி உறுப்புகளை போல் நாவலும் வெப்பம், குளிர்ச்சி என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கதை நாயகனின் கல்லூரிக் கால அனுபவங்களையும் ஆரம்பகால ஆலோபதி பணிநாட்களையும் வெப்பம் பகுதியிலும், அலோபதி மருத்துவத்திலிருந்து தற்காலிகமாக விலகி பாரம்பரிய மருத்துவத்திற்குள் நுழைந்த கதைகளத்தைக் குளிர்ச்சி பகுதியிலும் தொடர்கிறார் ஆசிரியர்.

கதாபாத்திர படைப்புகள்.

பெயரின்றி நம்மோடு பயணிக்கும் கதாநாயகன், எல்லோராலும் தம்பி என அழைக்கப்படுகிறார். பெயர் மட்டுமல்ல கதாபாத்திரம் எந்த மதத்தைச் சார்ந்தவர், எந்த சாதியைச் சார்ந்தவர் என்ற குறிப்புகள் கூட இல்லாத கதைகள அமைப்பை பாராட்ட வார்த்தையில்லை.

அன்பு ( சித்த மருத்துவர்) என்ற முக்கிய கதாபாத்திரம் வாசகனின் மனதில் ஒரு அங்கமாகி விடும் என்பதில் ஜயமில்லை

மில்ட்ரி, கிராம் என்ற பட்ட பெயர்களை கதாபாத்திரத்திற்கு வைத்து அவர்களின் குணங்களை விளங்கிவிடுகிறார் ஆசிரியர்.  கலகலப்புக்கு குறைவில்லாத அரசி, கதையின் நாயகனை தம்பி என பாசமாக அழைக்கும் சக ஊழியர்கள் என பாத்திரப் படைப்புகள் அனைத்தும் அருமை.

உளவியல் வசன தெறிப்புகள்

கதை முழுவதும் நம்மோடு பயணிக்கும் உளவியல் வசன தெறிப்புகள்... நம்மை ஒரு சில நிமிடங்கள் நிறுத்தி வாசகனின் வாழ்நாட்களை திருப்பிப் பார்க்க வைக்கிறது. அத்தனையும் ஒரு தனி மனித வாழ்க்கைக்கும் ஒரு நல்ல சமுகத்திற்கு தேவையான உளவியல் சிந்தனைகள். உதாரணமாக கோபால் சாரின் உண்மை முகம் வெளிப்படும் இடத்தில், " நம்பிக்கை பெற்றுவிட்ட ஒருவரின் எல்லலா சொற்களையும் பரிசீலனையற்று நம்பிவிடுகிறது மனது. எப்போது அந்த நம்பிக்கையில் சிறுபிளவு விழுகிறதோ அதன் பின்பு எல்லா செயல்களையும் யோசித்து பெரும் பிளவாக மாற்றி விடுகிறது மனது".

இப்படி பல இடங்களை சுட்டி காட்டலாம்.

நவீன மருத்துவத்தின் குளறுபடிகள்

அலோபதி மருத்துவத்தின் உண்மைப் பக்கத்தைப் பார்க்க முடிகிறது இந்நாவலில். ஆய்வகத்தில் நடக்கும் கொலைக்குச் சமமான சம்பவங்கள் வாசகனுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம். மருத்துவர்கள் வாங்கும் கமிஷன், நோயாளியின் ஆய்வக ரிப்போட்டுகளை சாராசரிக்கு ஏற்றார்போல் திருத்தி எழுதுவது, டெஸ்ட் செய்யாமலே ரிப்போர்ட் தயாரிப்பது, என நாவல் தரும் பல அதிர்வுகளை, மனதைரியம் படைத்த வாசகனால் தான் வாசிக்க முடியும். தவறான சிகிச்சையாலும் கவனமின்மையாலும் மரணத்தைத் தேடிதரும் மருத்துவமாக அலோபதி இருப்பதை எந்த அச்சமும் இன்றி ஆசிரியர் பதிவு செய்திருப்பது பாராட்டதக்கது.

எளியநடை

குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த வட்டார மொழியை பயன்படுத்தாமல், எல்லோருக்கும் பரியும் எளிய தமிழில், நாவலைப் படைத்திருப்பது வாசிப்பு வேகத்தை கூட்டுகிறது. புரியாத மருத்துவ சொற்களுக்குக் கூட புரியும்படி விளக்கம் கொடுத்திருப்பது சிறப்பு. பள்ளி மாணவர்களுக்கு கூட விளங்கும் வகையில் மருத்துவ குளறுபடிகளை எளிய விளக்கங்களுடன் பதிவு செய்திருப்பது நாவலின் சிறப்பு.

வரலாற்று குறிப்புகள்

தேனிமாவட்ட பெயர் சூட்டு வரலாறு, கம்பம் மற்றும் தேனியை சுற்றிய கோவில்களின் வரலாற்று குறிப்புகள் , ஆதிபட்டர்கள், பூசாரிகள் அதை தொடர்ந்த சாதிய பிரிவினை உருவாகியது போன்ற பல வரலாற்று நிகழ்வுகளை குறிப்பிடுகிறது நாவல்.

சாதி பார்க்காத, எல்லோரையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மனதிலும், சாதி வெளிப்படும் என்ற எழுத்தாளரின் குற்றசாட்டு வாசகனை பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறது.

பாரம்பரிய மருத்துவத்தின் மகத்துவம்

அலோபதி மருத்துவதின் குளறுபடிகளை மட்டுமல்ல, பாரம்பரிய மருத்துவத்தின் மகத்துவத்தையும் பதிவு செய்துள்ளது இந்நாவல். சித்த மருத்துவத்தின் நோயறிதல் முறைகளையும் சிகிச்சை முறைகளையும் விளக்கமாக, விரிவாக பதிவு செய்திருக்கிறது இந்நாவல். மிக முக்கியமாக நாடி பார்க்கும் முறையை தெளிவாகப் பதிவு செய்துள்ளது நாவல்

அறம் சார்ந்த கருத்துக்கள்

வாழ்க்கைக்குத் தேவையான எந்த பக்கத்தையும் விட்டு வைக்கவில்லை இந்நாவல். தனிமனித வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய அறம் சார்ந்த கருத்துக்களை, கற்பித்திருக்கிறது நாவல்.

இயற்கை ஆற்றலே கடவுள், செயலே பிராத்தனை போன்ற விளக்கங்கள் எந்த மதத்தவராலும் ஏற்ககூடிய வகையில் அமைந்திருப்பது நாவலின் சிறப்பு.

முக்கிய கதாபாத்திரங்கள் மூலம் ஆசிரியர் தரும் படிப்பினைகள் ஏராளம். அவற்றைப் பட்டியலிட தொடங்கினால் விமர்சனம் இன்னும் நீண்டு விடும்.

கதைக்குச் சம்மந்தமில்லாமல் புகுத்தப்பட்ட பார்த்தி என்ற கதாபாத்திரம் கூட, பணம் கொடுக்கல் வாங்கலின் முக்கிய வாழ்க்கை பாடத்தை முன் வைக்கிறது.

வாசிப்பின் மகத்துவம்

உடல் நலத்தின் முக்கிய ஆணிவேர் மனநலம். மனநல கேடு உடலை பாதிக்கும். மன ஆரோக்கியத்திற்கு வாசிப்பு அவசியம் என்ற, நாவல் கூறும் விளக்கம் ஆசிரியரின் ஆழமான பார்வையை காட்டுகிறது.

இறப்பை உணரலாம்

இயற்கையாக நிகழ்வது இறப்பு, முறையற்ற வாழ்வியல் முறைகளால் நாமாகத் தேடிக் கொள்வது மரணம் என இறப்பு, மரணம் இவை இரண்டிற்க்குமான வேறுபாட்டை ஆசிரியர் விளக்கமாக முன் வைக்கிறார். இறப்பை முன்கூட்டியே அறிய முடியும் என்ற ஆசிரியரின் விளக்கம் அச்சத்தை தராமல் வியப்பை அளிக்கிறது. இறப்பின் நாடி பற்றிய விளக்கம் நம் தேடலை விரிவுபடுத்துகிறது.

கடைசி இரு அத்தியாயங்களை கண்ணீரின்றி கடக்க முடியாது எந்த வாசகனாலும். அன்பின் இறப்பு, மிகுந்த மன அழுத்தத்தை கொடுத்தது. சில மணித்துளிகள் உடலும் மனமும் அசைவற்ற நிலையை அடைந்தது. அன்பின் மறைவால் ஒட்டு மொத்த சித்த மருத்துவமும் அழிந்து போன உணர்வு மேலெழுந்தது. தன் வாழ்நாளில் சேகரித்த ஒட்டு மொத்த சித்த மருத்துவ அறிவையும் கதையின் நாயகனுக்கு கடத்தி விட்ட மனநிறைவு அன்புக்கு மட்டுமல்ல... வாசகனுக்கும் அதே மனநிறைவு ஏற்படும்.

அன்பின் இறப்பு காட்சியாக விரிந்த அந்த தருணம் நமக்கும் இப்படிப்பட்ட ரணமில்லா, முன்கூட்டியே அறிய கூடிய சுகமான இறப்பு ஏற்பட வேண்டும் என்ற ஆசை பிறப்பதைத் தவிர்க்க முடியாது.

ஆதுரசாலையில் சொல்லப்பட்ட அறம் சார்ந்தக் கருத்துக்களைப் பின்பற்றினாலே உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதற்கு இரண்டாம் கருத்து இருக்க முடியாது.

"எல்லா செயல்களுக்கும் நிச்சயம் விளைவு உண்டு. நாம் செய்ய வேண்டியவற்றைச் சரியாக செய்துவிட்டால் போதும் எந்த செயலும் வீணாவதில்லை" என்ற நாவலின் கூற்றுபடி ஆதுரசாலை சமூகத்திலும், மருத்துவத் துறையிலும் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

- இரா.ஜெயலட்சுமி

Pin It