கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாய்
சொல்லி கொழுத்த மறி ஒன்றை
பலியிட்ட நாளில்தான் முதன்முதலாக அவளைப் பார்த்தேன்
சற்றே தடித்த தேகம் குட்டையான உருவத்தில் மலங்க விழித்தபடி
உணவு வாங்கி செல்வதற்காய்
பாத்திரங்கள் ஏந்திய வண்ணம்
வாயிலோரம் பாவமாய் நின்றிருந்தாள்.

அருகில் வருமாறு அவளை விளித்த
நான் அதிர்வடைந்தேன்
அவளுடைய வலது கண்ணானது
சற்று மேலே துருத்திக் கொண்டு
ஒரு வெள்ளைப் பளிங்குக்கல் போல தெரிந்தது
வேறுகோணத்தில்
முட்டை வடிவத்தை ஒத்ததாகவும்
கருவிழியை மேல்நோக்கி சுழற்றும் போது
மரக்கிளையில் அமர்ந்து
கோபக்கனலில் உற்றுப்பார்க்கும்
கோட்டானின் பார்வையைக் கொண்டதாகவும் இருந்தது.

பார்வையை மீட்டெடுக்கும் படலங்கள்
அம்மாவின் அனுசரணையில் பலமுறை
அரங்கேறிவிட்டதாம் பலனொன்றும் இல்லை..
அவள் கண் பார்வை நரம்புகள் ஒவ்வொன்றிலும்
புற்றுநோய் செல்கள் புடமிட்டுக்
கிடப்பதை அறிந்தவுடன்
மெல்லிய கூர்வாள் கொண்டு
என் நெஞ்சை யாரோ கீறியது போல் இருந்தது.

போய் வருவதாய்ச் சொல்லிச்
சென்ற ஐஸ்வர்யாவின் பளிங்குக் கண்ணால்
அன்றிரவு தொலைத்துவிட்டேன் என் உறக்கத்தை.
எப்படியாவது என்னைக் காப்பாற்றி விடு என்று தொணியில்
தன் இமைகள் இரண்டும் திறந்த வண்ணம்
கண்ணீர்த் துளிகளை உதிர்த்துச் சென்றது
ஐஸ்வர்யாவின் பளிங்குக் கண்.

என்னால் இதுவரை சபிக்கப்பட்ட கடவுள்கள்
எல்லோரிடமும் என் கோபங்களைத்
திரும்பப் பெற்றுக்கொண்ட நான்
அன்றிலிருந்து துவங்கினேன்
அவளுக்கான வேண்டுதல்களை..
அடுத்த முறை மறியைக் கொன்று
களிக்கும் விருந்து நிகழ்வில்
தன் பளிங்குக் கண்ணை கொன்று
ஒளி நிறைந்த பார்வையை மீட்டுவரும்
ஐஸ்வர்யாவின் வருகைக்காய்
காத்திருக்கிறேன் நான்..

- எஸ்தர்

Pin It