"கவிதையை முன்னிருத்தி கவிஞனே பின்னால் நில்.. அது தான்.. இலக்கிய உயர்வு...."

-சொல்லாமல் சொல்லும் என் அன்பிற்கினிய சிவக்குமார் சாரின் "புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை" கவிதைத் தொகுப்பு கிட்டத்தட்ட இருபது நாட்களாக என்னை என்னிலிருந்து பிரித்துக் கொண்டே இருந்தது. வாழ்வு பிளிறும் ஓசை என் எங்கிலும்.

j sivakumar bookஇன்று அந்த யானையோடு சேர்ந்து விடும் நோக்கில்தான் மூங்கில்களை தின்ன தொடங்கி விட்டேன். தின்ன தின்ன இசைக்கும் புல்லாங்குழல்களை என்பிலெல்லாம் உணர்கிறேன்.

எனக்கு தெரிந்த கவிதை உலகில் மிக மிக மென்மையான கவிதைகள் "கவிஞர் பூபாலன்" அவர்களுடையது. ஆனால் அவர் கவிதைகளை விடவும் மென்மையான கவிதைகள் இந்த கவிதை புத்தகத்தில் இருப்பதை கண்டு வியக்கிறேன்.

நீரோடைக்கும் குறைவான சப்தங்கள் இவர் கவிதைகள். இன்னதென தெரியும் தவிப்புகளோடு தான்... அடுத்த பக்கத்தை புரட்டினேன். அடுத்த கவிதை நன்றாக இருந்து விட கூடாது என்ற படபடப்பை அடுத்த கவிதையும் அடித்து நொறுக்கியதை மனம் திறந்து ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். காரணம், பெரும்பாலைய பக்கம் ஒவ்வொன்றிலும் என்னால் அத்தனை அற்புதங்களை சுமக்க முடியவில்லை. போனால் போகட்டுமென சில பக்கங்களில் அற்புதம் நிகழாமல் என்னை காப்பாற்றியதற்கு நன்றி.

முதல் கவிதையே முக்தி நிலை. இயல்பாகவே எனக்கு அம்மா அப்பா கவிதைகளில் நம்பிக்கை கிடையாது. ஆனால்... "மகிஷாசுரமர்த்தினி" மேல் அம்மா இறங்குகையில்... ஆடித்தான் போனேன். ஆக சிறந்த கவிதையாவும் இப்புத்தகத்தில் இந்த முதல் கவிதையே இருக்கிறது.

இவர் முனைவர் என்று இப்புத்தகத்தில் படித்த பிறகு தான் கண்டு கொண்டேன். ஒரு போதும் தன்னை அப்படி காட்டிக் கொண்டதே இல்லை. புன்னகையை முன்னாலும்... கவிதைகளை பின்னாலும் சுமப்பவர். இந்த புத்தகத்தை படிக்கத் தூண்டியது....எல்லாவற்றையும் தாண்டி அந்த ஒற்றை யானை. நான் யானையின் தடம் படித்து செல்பவன். யானைக்கு அடி சறுக்கினாலும்... நொடி சறுக்காது என்பவன். யானை ஒரு பிரம்மாண்டம் என்பதை அருகில் இருந்து பார்த்தவன். ஆக, இவரின் ஒற்றை யானையை நானும் கண்டு கொண்டேன். புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானைக்கு காடு மேடெல்லாம் கவிதை தான். கவிதைகளால் ஆன யானைக்கு அசைந்து இசைந்திருக்கிறது இவர் வரிகள்.

"சேத்து மடை 10 கி மீ" கவிதையை படிக்கும்போது சேத்து மடைக்கு 10 கவிதை மீட்டர் என்று தான் படித்தேன். 'மைல் கல்லின் மீது மலை அணில் ஒன்று அமர்ந்திருக்கிறது' என்று எழுதுகிறார். அப்படி என்றால் அணில் வேறு. மலை அணில் வேறு. இது மாதிரி காடுகளின் உயிரினங்கள் பற்றிய இவரின் தேடல் அலாதியானது. முடிந்தளவு அவ்வளவையும் யானை மறைவில் கொண்டு வந்து காட்டி இருக்கும் வித்தையை பாராட்டாமல் இருக்க முடியாது

இப்புத்தகத்தின் மூன்றாவது கவிதையை "தையின் மேல் படர்ந்திருக்கிறது மார்கழி" என்று முடித்திருக்கிறார். நான் மார்கழியில் நின்று தையை பார்த்தேன்.

முன் பத்தியில் சொன்னது போல... இத்தனை இலகுவாக கொலை செய்ய முடியுமா....!

"நீங்கள் தான் சொல்கிறீர்கள் அவனை சாத்தானென்று...." என்று அடுத்த கவிதையில் நல்லவர் போன்ற முகமூடி மனிதர்களை கொன்று குவிக்கிறார். இவர் கவிதையில் கொஞ்சம் சாகலாம் தான் போல. புலிகிட்ட மாட்டிக் கொண்டவனை கவ்விச்சென்ற பெயர் அறியா மிருகத்தை சுமந்தலையும் இவரிடம் காடு இருக்கிறது. அங்கே நீண்ட நெடிய தேடல் இருக்கிறது. தவித்த பொழுதொன்றில் யானை காதில்......" நீ யானை" என்று சொல்லும் தைரியம் ஒரு கவிதையில் வாய்த்திருக்கிறது. அதன் பிறகு தலை தெறிக்க காடு தேடி ஓடும் யானையை நான் யானையாகவே கண்டேன். யானைகள் காடுகளின் வரங்கள். யானையோடே எப்போதும் காடுகளை வரையுங்கள்.

"சற்று முன் துடித்தடிங்கியவனைப் பற்றி சொல்ல
அழைப்பு மணியை அழுத்தும் துணிச்சல்
உங்களில் யாருக்கிருக்கிறது...."

என்று ஒரு கவிதையை முடிக்கிறார். ஒரு சுமையை ஏற்றிக் கொண்டு புறப்படுகிறது இந்த வாழ்வின் காடு. வெகுநேரம் இதே கவிதைக்குள் நின்றிருந்தேன். அப்படித்தான் நிற்கத் தோன்றியது. மரணத்தை விட மரண செய்தி மிக கொடூரமானது...இல்லையா !

காற்று நடந்து போக
மெல்ல அதிரும் குளம்
இருக்கிறதா இன்னும்
பால்யத்தில்
என் தூண்டில் நரம்பறுத்துத்
தப்பிய மீன்

இந்தக்கவிதையில் ஒரு இருளின் வெளிச்சம் காண கிடைக்கிறது. காலத்தின் நடுக்கத்தை கவிதையின் இடைவெளியெங்கும் காண்கிறேன். ஒரு மீனின் வாழ்வுக்கும்.....ஆசிரியரின் வாழ்வுக்குமான இடைவெளியில் அந்த குளம் காற்று அதிர இன்னும் இருக்கிறது. காலத்தால் அழியாத வரைவுகள் மனிதனுக்கு அப்பாற்பட்டது. சிறு வயது குளங்களில் சிறு வயது மீன்கள் தான் இன்னும் இருக்கின்றவா என்ற கேள்வியை நம்மை அறியாமல் உதடும் மனமும் உரசிக் கொண்டு கேட்பதை வார்த்தைகளின்றி பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு கவிதையில், திடும்மென வீட்டுக்கு வந்தவ நண்பரிடம் நாகரீகமாக பேசிக் கொண்டிருக்கும் சிவகுமாருக்கு அது மட்டுமா முகம் என்ற நிஜங்களின் பிரதிபலிப்பை போட்டு உடைக்கும் போது ஒரு கவிஞனுக்கு மறைக்க ஒன்றும் இல்லை. ஒரு கவிஞனுக்குள் மறைக்கவும் ஒன்றும் இல்லை...என்று புரிகிறது.

பெரும்பாலைய கவிதைகளுக்கு தலைப்பு இல்லை. தலைப்பில் என்ன இருக்கிறது.... தவிப்பில் தான் கவிதை இருக்கிறது என்பது போன்று தான் ஒவ்வொரு கவிதையும் முடிகிறது.

"குடிஞன்" கவிதையின் நெடியை.....எனக்குள் உணர முடிந்தது. அது எத்தனை நிஜமாக ஒரு செவ்வியல் உண்மையை போட்டு உடைக்கிறது. குடிகாரர்களின் நடுக்கத்தில் கிடைக்கும் காசில் தான் இங்கே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் என்றால் எவன் பாவம் எவனைச் சேருவது....!

ஒரு கவிதையில், வறண்ட வரப்பில் மது போத்தல் கிடைக்கிறது. கார கடலை பாக்கெட் கிடைக்கிறது. நசுங்கின டம்ளர்கள் கிடைக்கின்றன. புகைந்த சிகரெட் துண்டுகள் கிடைக்கின்றன. அதன் பிறகு ஒரு கை பை கொள்ளுமளவுக்கு கொக்கின் வெண்ணிற இரவுகள் கிடைக்கிறது என்று முடிக்கிறார். கொஞ்சம் வரப்பு நீண்டு மிக அற்புதமான கவிதையாக மாறி இருக்க வேண்டிய கருப்பொருள் இது.

நிறைகள் மட்டுமா வாழ்வு. குறைகளும் சேர்ந்தது தானே. அற்புதமான இக்கவிதை நூலில் அப்பா தொடர்பான கவிதைகள் துருத்திக் கொண்டு இருப்பது போன்று தோன்றுகிறது. ஒரு கவிதையில் பூபாலன் தெரிகிறார். இன்னொரு கவிதையில் சோலைமாயவன் தெரிகிறார். மற்றபடி பெருங்காடு சருகோசையும் இன்றி அசைந்தாடுதல் நிகழ்கிறது. அவரவர் காடுகள் இவர் காட்டில் விரிகிறது. இவரின் யானைக்குள் தான் நமக்கான அசைவும் இருக்கிறது.

யானை இல்லாத காட்டுக்கு பொருள் ஏது.. சிவக்குமார் சாரின் காட்டுக்கு யானையே பொருள்.

நூல் : புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை
ஆசிரியர் : ஜி சிவக்குமார்
விலை : Rs.70

- கவிஜி

Pin It