வாழ்ந்து மறைந்த ஒருவரின் பணியையும் பாடுகளையும் மிகச் சரியான முறையில் மக்களின் வார்த்தைகளில் தொகுத்திருக்கும் அருள்தந்தை அ.இருதயராஜ், இந்த முயற்சியின் வழி அவரது துறவற வாழ்வில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம். அருள்தந்தை அந்தோனி சூசைநாதரைப் பற்றி மக்களிடம் வழங்கிய வழக்காறுகள் வழி, அவரது வரலாற்றையும் கூடவே பேசிச் செல்லும் இந்நூலில் அந்தோனி சூசைநாதர் பணியாற்றிய பணித்தளங்கள் ஒரு வரைபடம் போல சித்திரமாகியிருக்கின்றன. அந்தோனி சூசைநாதரைப் பற்றிய மக்களது நினைவுகள், மக்களுக்கு அந்தோனி சூசைநாதரிடம் பிடித்த குணங்கள், அவருடை ஆன்மிகப் பணிகளைப் பற்றிய மக்களின் எண்ணங்கள், அவர் வாழும் காலத்திலேயே அவரால் பெற்ற நன்மைகள், அவரது மறைவிற்குப் பிறகு அவரிடம் வேண்டிப் பெற்ற நன்மைகள் என்னும் ஐந்து கேள்விகளைக் கொண்டு தகவல்களைத் திரட்டித் தொகுத்திருக்கும் பாங்கு தந்தை இருதயராஜின் களப்பணியினுடைய முதிர்ச்சியைக் காட்டி நிற்கின்றன.

anthony susainathar book1882 முதல் 1968 வரை 86 ஆண்டுகள் வாழ்ந்த அந்தோனி சூசைநாதரின் காலம் தமிழக அரசியல் மிக முக்கியமான காலம். குறிப்பாக அவரது கடைசி முப்பதாண்டுகள் தமிழக அரசியலில் மாபெறும் மாற்றங்கள் நிகழ்ந்த காலம். ஒருபுறம் அசைக்க முடியாத சக்தியாக காங்கிரஸ் இருக்க, எதிர் முனையில் இடதுசாரி இயக்கமும் திராவிட இயக்கமும் முனைப்புடன் வளர்ந்துகொண்டிருந்த காலம். காங்கிரஸுக்கு மாற்றான அரசியலை விரும்பியவர்கள் தம்மை இடதுசாரி இயக்கத்திலும் திராவிட இயக்கத்திலும் இணைந்துக் கொண்டிருந்த காலம். இடதுசாரிகளாலும் திராவிட இயக்கத்தவர்களாலும் கடவுள் குறித்த நம்பிக்கைகள் கேள்விக்குள்ளக்கப்பட்ட காலம். அந்தக் காலத்தில் தான் அந்தோனி சூசைநாதரின் தீவிரமான செயல்பாடுகள் ஆரம்பிக்கின்றன. காலம்தான் அவரை அப்படிச் செய்ய உந்தியிருக்க வேண்டும்.

இந்நூலில் பதிவாகி இருக்கும் சம்பவங்களின் அடிப்படையில் மாறிக்கொண்டிருந்த அரசியல் சூழலில் ஆன்மிகத் தளத்தை அந்தோனி சூசைநாதர் எப்படி நிலைநாட்டினார், மக்களின் பொருளாதாரத் தேவைகளை அவர் எப்படி எதிர்கொண்டார் என்கிற இரண்டு புள்ளிகளை இனம்காண முடிகிறது. அந்த இரண்டு புள்ளிகளைச் சுற்றி வலுவான தகவல்களை முன்வைத்திருக்கும் விதத்தில் நூல் சிறப்புப் பெறுகிறது.

அந்தோனி சூசைநாதர் பஞ்சம்பட்டி, வடக்கன்குளம் முதலிய ஊர்களில் பணியாற்றியதை விட கடலோரப்பகுதிகளில் ஆற்றிய பணிகள் மெச்சத்தக்கனவாக இருக்கின்றன. குறிப்பாக, கடலோர மக்களிடம் இருந்த முரண்பாடுகளை அவர் எதிர்கொண்ட விதம், அன்றைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெறுகின்றன. கடலோர மக்களான மடிக்காரர்கள் மேஜைக்காரர்கள் என்னும் பிரிவினருக்கிடையே இருந்துவந்த முரண்பாடுகள் அந்தோனி சூசைநாதரின் காலத்தில் தீவிரமடைந்திருந்தன. பெருமுதலாளிகளாக இருந்த மேஜைக்காரர்கள் காங்கிரஸ் சார்புடையவர்களாக அரசியல் பலம் பெற்றிருந்தனர். அவர்களால் ஒடுக்குமுறைக்கு ஆளாகிக்கொண்டிருந்த மடிக்காரர்கள் தம்மை அறியாமலேயே அரசியல் மையமாகிக் கொண்டிருந்தார்கள். இடதுசாரிச் சிந்தனைகளால் கவரப்பட்டார்கள். தொழிற்சங்கங்கள் உருவாயின. மடிக்காரர்கள் அரசியல் ரீதியில் வலுவடைந்தார்கள். இதனால் மேஜைக்காரர்களுக்கு எதிராக மடிக்காரர்கள் போராட்டங்களில் குதித்தனர். இந்தச் சூழலை மையமிட்டுத்தான் பிற்காலத்தில் பொன்னீலன் ‘தேடல்’ என்கிற நாவலை எழுதினார். கடற்கரை மக்களுக்குள் குறிப்பாக மடிக்காரர்களுக்குள் தொழிலாளர் சங்கம் கட்டமைக்கப்பட்ட விதத்தைப் பேசியது அந்நாவல்.

1940களின் பிற்பகுதியிலும் 1950களிலும் காங்கிரஸுக்கு எதிராக இடதுசாரிகளும் திராவிட இயக்கத்தினரும் ஒருபுள்ளியில் இருந்தனர். 1950 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி சேலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 22 தோழர்கள் கொல்லப்பட்டார்கள். அதை பெரியார் வன்மையாகக் கண்டித்தார். அந்தளவுக்கு இடதுசாரிகளுக்கும் திராவிட இயக்கத்தினருக்கும் ஒருமித்த புரிதல் இருந்தது. ரஷ்யாவிற்குச் சென்று திரும்பியிருந்த பெரியார் இடதுசாரிகளின் தேவையை உணர்ந்திருந்தார். இந்தச் சூழலில் இடதுசாரிகளாலும் திராவிட இயக்கத்தினராலும் அரசியல் அணியமாகி இருந்த மடிக்காரர்கள் காங்கிரஸ் அனுதாபிகளாக இருந்த மேஜைக்காரர்களோடு அடிக்கடி மோதிக்கொண்டனர். இது அன்றைய கடலோர மக்களிடம் இருந்த தலையாய அரசியல் பிரச்சினை. இந்தப் பிரச்சனையை திருச்சபைக்குள் இருந்துகொண்டு அந்தோனி சூசைநாதர் எப்படிக் கையாண்டார் என்கிற விதத்தைப் பதிவு செய்திருக்கிற வகையில் இந்த நூல் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகத் தன்னை முன்னிருத்துகிறது.

ஒரு சமயத்தைப் பின்பற்றுகிற மக்களுக்கு புதிதாக நேர்ந்திருக்கிற அரசியல் பிரச்சினையை சமயப் பின்னணிக்கு பங்கம் வராமலும் அரசியல் தலைவர்களைப் பகைத்துக்கொள்ளாமலும் ஒரு தனிமனிதர் எதிர்கொண்டு வெற்றியடைந்த வரலாற்றைப் பக்க எண் 19இல் மணப்பாட்டைச் சார்ந்த ரபேல் வாய்ஸின் குரலிலேயே நூல் பதிவு செய்திருக்கிறது. காவல்துறைக்கே தலைவலியாக இருந்த பிரச்சினையை அந்தோனி சூசைநாதர் மிக எளிதாக சமய அடையாளத்தை முன்னிறுத்தி வெற்றி பெற்றிருக்கிறார். இதுதான் உண்மையான மக்கள் பணி.

மக்களின் பணிகளை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதற்கு மக்களின் வார்த்தைகளே நூலின் பெரும்பகுதியில் சான்றாக அமைந்திருக்கின்றன. அந்தோனியார்புரத்தைச் சார்ந்த ஜெயசிங் விசுவாசத்தின் கூற்று அந்தோனி சூசைநாதர் எந்தளவுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குத் துணை நின்றார் என்பதைச் சுட்டுகிறது. 33 ஏக்கர் நிலத்தைச் சொந்த முயற்சியில் வாங்கி ஊரை உண்டாக்கி மக்களைக் குடியமர்த்துவது என்பது ஆன்மிகப் பணியையும் தாண்டிய புனிதமான செயல். அதனால் தான் அம்மக்கள் அவரது படத்தை வைத்துக் கூட இன்றளவும் வணங்கி வருகிறார்கள்.

கடற்கரை மக்கள் தொடர்ந்து கடலுக்குள் செல்வதாலும் உப்புக்காற்றால் ஏற்படுகிற உடல்வலியைப் போக்கிக்கொள்ளவும், கனமான வலைகளை ஈரம் சொட்ட சொட்ட இழுப்பதால் உண்டாகும் உடல் அசதியினாலும் இயல்பாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகினர். கடலுக்குள் ஆண்கள் மட்டுமே தனித்திருக்கும் சூழலும் கடற்கரையை ஒட்டியிருக்கும் பனை, தென்னந்தோப்புகளும் அவர்கள் குடித்துப் பழகுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கின. இதனால் அவர்கள் குடும்பத்திற்குள் பிரச்சினைகள் உருவாயின. முன்னேற்றம் தடைபட்டது. இதன் பின்னணியை உணர்ந்த அந்தோனி சூசைநாதர் மதுவிலக்கு சபையை உருவாக்கினார். மக்களை மதுவின் பிடியிலிருந்து மீட்டார். அவரால் உருவாக்கப்பட்ட அச்சபை 2012 வாக்கில் 34 ஊர்களில் கிளைபரப்பி இருக்கிற தகவலை உவரியைச் சார்ந்த அந்தோனிச்சாமி சான்று பகர்கிறார்.

இன்னொரு முக்கியமான தன்மையையும் நூல் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. அதாவது முதலில் அந்தோனி சூசைநாதர் மக்களின் நம்பிக்கையைப் பெறும் செயல்களிலேயே ஈடுபடுகிறார். பின் மக்களில் ஒருவராக மாறுகிறார். பிறகே தம்முடைய வழிக்கு மக்களை மனமாற்றுகிறார் என்பதை நூலில் இடம் பெற்றிருக்கும் தகவல்களின் வைப்புமுறைகள் தெரிவிக்கின்றன. தன்னைப் பார்க்க வருகிறவர்களிடம் முதலில் சாப்பிட்டீர்களா? எனக் கேட்டு, சாப்பிடவில்லை என்றால் அவர்களைச் சாப்பிட வைத்து பிறகு பேசியிருக்கிறார். இம்மாதிரியான பணிகள் தான் அவர்பால் மக்களை நெருக்கம் கொள்ள செய்திருக்கிறது. அந்தவகையில் அந்தோனி சூசைநாதரின் வாழ்க்கையைப் பற்றி மக்களால் கூறப்பட்ட வார்த்தைகளால் நிரம்பியிருக்கும் இந்த நூல் மக்களை இன்னும் அவர்பால் நெருக்கம் கொள்ள வைப்பதாக அமைந்திருக்கிறது.

………………….

பதிப்பகம் :           ரொசாரியன் வெளியீடுபாத்திமாகிரி ஆசிரமம், வடக்கன்குளம், திருநெல்வேலி - 627 116 / பேச -        0461 - 2330147

விலை                      :           150.00/- ரூபாய்.

பதிப்பாண்டு        :           ஜூன் 2018

Pin It