"தமிழ் தேச அரசியல் போராட்டம் த.பொ.கா (மா.லெ) வும் தமிழரசன் உள்ளிட்ட தோழர்களும்" என்னும் நூலை தோழர் பொழிலன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். தமிழ் தேசிய அரசியல் குறித்தான விரிவான பேச்சு இன்றைய அரசியல் அரங்கில் பேசப்படும் சூழலில். இந்நூல் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கது.

pozhilan bookஇந்திய பொதுவுடைமை (மா.லெ) இயக்கத்தின் வரலாற்று தொடர்ச்சியில் உதித்தெழுந்த நக்சல்பாரி எழுச்சியின் வழி தோன்றியதுதான் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா.லெ) அதன் முன்னனித் தோழர்களாக தமிழகத்தில் செயல்பட்டவர்கள் தோழர் கலியபெருமாளும் , தமிழரசனும் . பிறகு இவர்கள் தமிழக விடுதலை என்னும் கருத்தியலோடு தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (மா.லெ) என்னும் இயக்கத்தை தொடங்கியுள்ளனர். தமிழ் தேசிய விடுதலை என்னும் சரியான புள்ளியைத் தொட்டபோதும். அவர்கள் பின்பற்றிய இடது தீவிரவிய நடைமுறையின் காரணமாக விரைவில் அக்கட்சி முடங்கிவிட்டது.

இது பற்றிய ஆவணங்களையும் களசெயல்பாட்டுத் தகவல்களையும் தோழர் பொழிலன் தொகுத்து வழங்கியுள்ளார்.

தமிழ் தேசியத்திற்காக தோழர் தமிழரசனோடு இயங்கி இன்னுயிர் நீத்த பல தோழர்களைப் பற்றிய விபரங்களையும் கொடுத்துள்ளது இளைய தலைமுறையினருக்கு மிக தேவையான ஒன்றாகும்.

தமிழ் தேசிய போர்வையில் வலது சாரி சக்திகள் தமிழகத்தில் காலூன்றி வருகின்றன. இந்த பிற்போக்கு சிந்தனையைப் பயன்படுத்தி இந்திய அரசின் உளவுப்பிரிவும் தமிழ் தேசியத்தை சீர்குலைக்கும் பொருட்டு இனவெறியூட்டி தமிழக மக்களைப் பிளவுபடுத்துகிறது.

இந்த நூலில் பல வரலாற்று செய்திகளை பதிவு செய்த தோழர் பொழிலன் அவர்களும் பல்வேறு தீவிரவிய நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்ததை இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். அதற்காக பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அனுபவித்துள்ளார். தற்போது அவருடைய செயல்பாட்டை கடந்த கால செயல்பாடுகளிலிருந்து எப்படி அமைத்துக்கொண்டள்ளார் என்று எதுவும் குறிப்பிடவில்லை . இதனால் நூலைப்படிப்பவர்கள் கடந்த கால செயல்பாடுகளின் நிறை , குறைகளை பற்றிய சரியான மதிப்பீட்டிற்கு வர இயலாது.

இறுதியாக தமிழ்நாடு மார்க்சிய லெனினியக்கட்சி , தோழர் தமிழரசன் குறித்து செய்துள்ள மதிப்பீட்டை இந்நூலில் பதிவு செய்துள்ளார். த.நா.மா.லெ கட்சி அந்த மதிப்பீட்டை வந்தடையச் செய்துள்ள கொள்கையியல் நிலைபாடுகள் பற்றிய மதிப்பீட்டையும் சேர்த்து பதிவு செய்திருக்க வேண்டும்.

தோழர் தமிழரசன் போன்றவர்கள் தமிழ்நாடு விடுதலை என்ற முடிவை வந்தடைந்திருந்தாலும், இந்தியாவின் குறிப்பான பிரச்சனையாக இருக்கின்ற சாதி, இன , வர்க்க ஒடுக்ககுமுறைகளின் தன்மையை சரியாக வரையறுக்கவில்லை.

இந்திய சமூத்தை த.ந.மா.ல.க கீழ்கண்டவாறு வரையறுக்கிறது

"இந்திய பெருமுதலாளிகள் தொடர்ந்து பார்பனியத்தை பேணுவதன் மூலம் இந்தியாவில் உள்ள பல்தேசிய இனங்களையும் இந்திய தேசியம் என்ற போர்வையில் ஒரே எல்லைக்குள் அடக்கி வைத்து தமது விரிந்த சந்தையைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். மேலும் பார்ப்பனியம் தேசிய இன மக்களை சாதிய ரீதியில் பிளவு படுத்துவதால் அவர்கள் வர்க்க உணர்வோ தேசிய இன உணர்வோ பெறாமல் தடுக்கப்பட்டு தொடர்ந்து பின் தங்கிய நிலையில் வைக்கப்படுகிறார்கள். தேசிய மற்றும் சனநாயக இயக்கங்களில் அணிதிரளாமல் தடுக்கப்படுகிறார்கள். இது தரகுப் பெருமுதலாளிகளின் சுரண்டலும் , கொள்ளையும் இந்தியா முழுவதும் பாதுகாப்பான வகையில் தொடர வழிவகை செய்கிறது".

இவ்வாறு இந்திய தேசியம் என்ற பெயரில் தரகு முதலாளித்துவ சக்திகளும் நிலக்கிழாரிய சக்திகளும் பார்ப்பனியத்தின் மூலம் சாதிய ஒடுக்குமுறையையும் தேசிய ஒடுக்குமுறையையும் செய்து தனது சுரண்டல் நலனைப் பாதுகாக்கிறது . தேசிய இனங்களின் அரசுரிமையை மறுக்கும் இந்திய தேசியம் ஒரு தரகு பார்ப்பனிய ஏகாதிபத்தியமாக செயல்படுகிறது.

மார்க்சிய லெனினிய அடிப்படையில் ஆய்வு செய்து இந்திய சமூகத்தின் தனிச்சிறப்பான ஒடுக்குமுறை குறித்து வரையறுத்திருப்பது புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இந்தியா போன்ற ஒடுக்கும் தேசிய இனம் இல்லாத ஆனால் தேசிய ஒடுக்குமுறை நிலவுகிற தனிச்சிறப்பான நிலைமைகளில் ஒவ்வொரு தேசிய இனங்களும் தமக்கான கட்சியைக்கட்டி தேசிய விடுதலைப்புரட்சியின் மூலமே உழவர் புரட்சியை நிறைவு செய்ய முடியும் என்ற கொள்கை முடிவானது இ.பொ.க.மா.லெ இயக்கத்தில் 'இந்திய புரட்சி' என்ற ஏகாதிபத்திய பொருளாதார வாதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாகும்.

த.பொ.க (மா.லெ) வுக்குப் பின் உருவாகியிருக்கும் பல புதிய கோட்பாட்டு முடிவுகளையும் பதிவு செய்திருந்தால் இளைய தலைமுறையினருக்கான ஒரு வலிமையான ஆயுதமாக இந்நூல் திகழும் என்பதில் ஐய்யமில்லை.

புரட்சிகர தமிழ்தேசியத்தை வளர்த்தெடுக்க கொள்கைவழி ஒற்றுமையை கட்டமைக்க இந்நூல் பயன்படட்டும்.

- கி.வே.பொன்னையன்

Pin It