நாம் பல ஆண்டுகளாக இந்தத் தமிழ்த் தேசியவாதிகளைப் பற்றி ஒரு கருத்தை உறுதியாக சொல்லி வருகின்றோம். அது என்னவென்றால் இவர்கள் பார்ப்பனியத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் என்று. அது ஏதோ காரணம் இல்லாமல் அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கவோ, அவதூறு பரப்பவோ சொல்லப்பட்டதல்ல.

pe maniarasanதமிழ்த் தேசிய அமைப்புகளின் செயல்பாடுகளை உற்றுநோக்கி அந்த அமைப்புகள் எந்த திசையில் செல்கின்றது என்பதை முன் அனுமானித்தே சொல்லப்பட்டதாகும்.

அந்த வகையில் தற்போது முழு பார்ப்பனிய அடிமையாக அம்பலப்பட்டு நிற்கின்றார் தமிழ்த் தேசியவாதி மணியரசன் அவர்கள்.

கடந்த ஜூன் மாதம் தமிழர் கண்ணோட்டம் வலைதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் மணியரசன் அவர்கள் தன்னுடைய சித்தாந்த அறிவை எல்லாம் ஒன்று திரட்டி தமிழ்த் தேசியத்தின் தத்துவ வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போகும் தன்னுடைய அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டார். அது இதுவரை மூளை உள்ள எந்த மனிதனுக்கும் தோன்றாத கண்டுபிடிப்பு என்றால் அது மிகையாகாது.

மணியரசன் அவர்கள் தன்னுடைய தமிழ்த் தேசிய ஆய்வகத்தில் மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டு, ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டு இருந்த போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த ஆர்க்கிமிடீஸ் "யுரேகா... யுரேகா..." என்று கத்தியபடியே அரண்மனைக்கு ஓடிச் சென்று தாம் கண்டறிந்த உண்மையை சைரக்யூஸ் நாட்டு மன்னர் ஹீரானுக்கு விளக்கினார். அதுவே 'ஆர்க்கிமிடீஸ் கோட்பாடு' எனப்பட்டது.

அதற்கு சற்றும் குறையாதது மணியரசன் அவர்களின் கண்டுபிடிப்பும். மணியரசன் அவர்கள் நல்வாய்ப்பாக வேட்டி கட்டியிருந்தார் என்பதும் "யுரேகா… யுரேகா…" என்பதற்குப் பதில் "தமிழ் இந்து… ஆரிய இந்து…" என்று கத்திக் கொண்டு ஓடினார் என்பதும்தான் புதிய செய்திகள்.

இன்னும் பலருக்குப் புரியவில்லை என்பது தெரிகின்றது. மணியரசன் அவர்களின் இந்த ‘ஆர்க்கிமிடீஸ் கோட்பாட்டை’ நாம் சுருக்கமாக இப்படி புரிந்து கொள்ளலாம். வேட்டி ஒன்றுதான். அதை இரண்டாகக் கிழித்து ஒன்றுக்கு லங்கோடு என்றும், மற்றொன்றுக்கு கோவணம் என்றும் பெயர் சூட்டி இருக்கின்றார்.

தன்னுடைய பேட்டி முழுவதும் இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தியும், திராவிடம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை எதிர்த்தும் முடிந்த அளவுக்கு முட்டுக் கொடுக்க முயல்கின்றார்.

ஆரிய இந்து தமிழ் வழிபாட்டை ஏற்கவில்லை, அனைத்து சாதிகளும் அர்ச்சகர் ஆவதை ஏற்கவில்லை, வர்ணாசரமத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள், எனவே அவர்களுக்கும் நமக்கும் வேறுபாடு உள்ளது எனச் சொல்கின்றார்.

ஆனால் தமிழர்களின் புனித நூல் என்று அவர் சொல்லும் தேவாரம், திருவாசகம், திருமந்திரம், ஆழ்வார் பாசுரங்கள் எல்லாம் எதை முன்னிலைப் படுத்துகின்றன என்ற உண்மையைச் சொல்லாமல் மழுப்புகின்றார்.

இவர் குறிப்பிடும் ஒன்று கூட பார்ப்பனிய சனாதன தர்மத்துக்கு எதிரான நூல்கள் கிடையாது என்பதுதான் உண்மை.

63 சைவ நாயன்மார்களில் 5 பேர் மட்டுமே ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். 12 வைணவ ஆழ்வார்களில் ஒருவர் மட்டுமே ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர். சமயக் குரவர்கள் என்று அழைக்கப்படும் நால்வரில் திருநாவுக்கரசரைத் தவிர மற்ற மூவரும் பார்ப்பனர்களே ஆவார்கள்.

மணியரசன் அவர்களுக்கு உண்மையில் தமிழர்களை சாதி, மதம் கடந்து ஓரணியில் திரட்ட வேண்டும் என்பதெல்லாம் நோக்கமே கிடையாது.

அவரே சொல்கின்றார், இஸ்லாமிய ஒருங்கிணைப்பு நடக்கின்றது, கிறிஸ்துவ ஒருங்கிணைப்பு நடக்கின்றது. இதைக் காரணம் காட்டி தமிழ் இந்துக்கள் கபளீகரம் செய்யப்படுகின்றார்கள். விநாயகர் அகவல்கள் கூட தமிழில் பாடப்படுவதில்லை. இதைத் தடுக்கவே தான் தமிழ் இந்து என்றும், ஆரிய இந்து என்றும் பிரிப்பதாக சொல்கின்றார்.

மேலும் பகுத்தறிவு என்ற பெயரில் மதத்தில் தலையிடாமல் போனதால்தான் அதை ஏகபோகமாக ஆரியத்துவவாதிகளும் வட நாட்டுக்காரர்களும் கைப்பற்றி விட்டதாகவும், முரட்டுத்தனமான கடவுள் எதிர்ப்பும், “இந்து என்று சொல்லாதே, இழிவை தேடிக்கொள்ளாதே” என்று கடவுள் நம்பிக்கையுடையவர்களை கொச்சைப்படுத்தியதும் ஆர்.எஸ்.எஸ் வளர்வதற்கு காரணமாக அமைந்தது என்றும், அதற்கு திக தான் காரணமென்றும் கூறுகின்றார்.

மணியரசன் பல ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் மேல் பல குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவை எல்லாம் பெரும்பாலும் ஆரியம், திராவிடம், தமிழ்த் தேசியம் பற்றியதாகவே இருக்கும். அதற்கு பெரியாரியவாதிகள் எல்லாம் ஆணித்தரமாக மறுப்பு எழுதி இருக்கின்றார்கள்.

ஆனால் மணியரசன் அவர்கள் ஒரு போதும் தன்னுடைய அபத்தக் கருத்தில் இருந்து பின்வாங்கியதில்லை. அவருக்கு உண்மையிலேயே சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை போன்ற கருத்துக்களில் ஈடுபாடு இருந்தால் திராவிடம் என்ற வார்த்தைக்குப் பதிலாக அதை தமிழ்த் தேசியம் என்ற வார்த்தையைக் கொண்டு கட்டமைத்து பெரியாரைப் போல தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் பரப்புரை செய்து தமிழ்த் தேசியத்தை நிலை நிறுத்தி இருப்பார்.

ஆனால் பார்ப்பனியத்தின் அத்தனை அசிங்கங்கள் மீதும் கட்டப் பெற்ற தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலில் அதற்கு இடம் இல்லை என்பதால்தான் மணியரசன் அவர்கள் ஒரு சங்கியைப் போல தன்னை வெளிப்படுத்தி வந்தார்.

தமிழில் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது என்பதை எல்லாம் மணியரசன் அவர்கள் ஆதரிக்கின்றார் என்பது உண்மைதான். ஆனால் சாதி ஒழிப்பை வலியுறுத்தி அவர் நடத்திய பரப்புரைகளை அவரால் பட்டியல் இட முடியுமா?

இன்று சொல்கின்றார், “ஒரு மொழிக்கு ஒரு இனத்திற்கு என்று மதம் இல்லை” என்று. நிச்சயம் அது உண்மைதான். ஆனால் இதை யார் சொல்ல வேண்டும்? ஒரு மதவாதி சொல்ல வேண்டும். அனைத்து மக்களுக்குமாக அமைப்பு நடத்துகின்றேன், தமிழர்களை ஓரணியில் இணைத்து தமிழ்த் தேசியம் அமைக்கப் போகின்றேன் என்று சொல்லும் ஒரு அமைப்பு இதைச் சொல்கின்றது என்றால் அது எப்படி அனைத்து மக்களுக்குமான அமைப்பாக, இயக்கமாக இருக்க முடியும்?

இஸ்லாமிய ஒருங்கிணைப்பு நடக்கின்றது, கிறிஸ்துவ ஒருங்கிணைப்பு நடக்கின்றது. அதனால் நான் இந்துக் கடவுள்களை வணங்கும் ஆரியர் அல்லாத தமிழ் மக்களை தமிழ் இந்துக்கள் என ஒருங்கிணைக்கப் போகின்றேன் என்பது கேடுகெட்ட அயோக்கியத்தனம் இல்லையா?

தமிழர்கள் அனைவரும் சைவர்கள் என சீமான் சொல்வதற்கும், இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் தமிழ் இந்துக்கள் என்பதற்கும் என்ன வித்தியாசம்?

பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என மணியரசன் அவர்கள் போராட்டம் செய்தபோது சங்கிகள் அவரை டேவிட் மணியரசன் என்றார்கள். பதறிப் போன மணியரசன் தமிழ்த் தேசியத்தில் போய் தஞ்சம் அடையாமல் தன்னை ஒரு விசுவாசம் நிறைந்த இந்து என்பதை மெய்ப்பிக்க முயன்றார்.

''எங்களுடைய குலதெய்வம் ஶ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கிற வீரேசுவரம் பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயில்தான். எங்கள் குடும்பம் செலுத்த வேண்டிய மரபுக்காணிக்கை இருக்கிறது. என் அப்பாவுக்குப் பிறகு, என் தம்பிதான் அதைச் செலுத்தி வருகிறார். கே.டி.ராகவன் வேண்டுமானால், அங்கு சென்று தெரிந்து கொள்ளட்டும். அதுவும் முடியாவிட்டால், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் மாவட்டம், ஆச்சாம்பட்டிதான் என்னுடைய சொந்த ஊர். அங்கு சென்று விசாரித்தாலும் என்னைப் பற்றிய முழு விவரங்களும் தெரியவரும்” என்று சொன்னார்.

அதே பேட்டியில் “நான் இந்துதான். ஒருவேளை நான் கிறிஸ்துவராக இருந்தால் என்ன குற்றம், என்ன தவறு. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் மொழிக்கான உரிமைப் போராட்டங்களில் கலந்து கொள்ளும் உரிமை உண்டு. அதன்படி கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் வேறுபட்டாலும் அவர்களின் தாய்மொழி தமிழ்தான். அவர்கள் தமிழர்கள்தாம். அந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய அமைப்புகள் எல்லாம் இணைந்து போராடுகிறார்கள். எங்களின் போராட்டத்துக்கு அவர்கள் துணை நிற்கிறார்கள் அவர்கள் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை” என்றும்,

“இந்துக் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என நாங்கள் எப்படிப் போராடுகிறோமோ, அதேபோல நாளை மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என அந்த மதத்தைச் சேர்ந்த தமிழர்கள் போராடும்போது நாங்கள் துணை நிற்போம். ஆனால், அந்தப் போராட்டத்தை அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்தாம் முன்னெடுக்க வேண்டும். அதற்கான கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்து வருகிறோம். நாங்கள் எங்கள் தாய்மொழிக்காகப் போராடுகிறோம். தமிழர் மரபுவழிப்பட்ட ஆன்மிகத்துக்காகப் போராடுகிறோம். ஆனால், தஞ்சை பெருவுடையார் கோயிலைப் பற்றிப் பேச கே.டி.ராகவனுக்கு என்ன உரிமை இருக்கிறது... அவர் எதற்காகப் போராடுகிறார் என்பதை அவர் சொல்ல வேண்டும்.” என்றும் பேசினார்.

இதில் இருந்து நாம் தெளிவாக தெரிந்து கொள்வது மணியரசன் அவர்கள், அவர் சொல்வது போலவே இந்து தமிழர்களை முன்னிறுத்தும் ஒரு மதவாதி என்பதுதான். அர்ஜுன் சம்பத்துக்கும் மணியரசனுக்கு உள்ள வித்தியாசம் லங்கோடுக்கும் கோவணத்துக்கும் உள்ள வித்தியாசம்தான்.

இந்த நிலைக்கு தன்னை மணியரசன் இறக்கிக் கொண்டதால்தான் அவரால் சீமான் அவர்களோடு இயல்பாக சேர முடிகின்றது.

சீமான் அவர்கள் முன்வைக்கும் சைவமும், மணியர்சன் அவர்கள் முன்வைக்கும் தமிழ் இந்துவும் அடிப்படையில் ஒன்றுதான். எப்படி என்றால்…

சைவம் ஒரு சித்தாந்தமாக காசுமீரத்தில் ஸ்ரீகண்டர் என்பவரால் உருவாக்கப் பெற்றதாகும். பல்லவர்களின் ஆட்சியில் நடுப்பகுதியில் இருந்தே வைதீக மதங்களான சைவமும், வைணவமும் தமிழ்நாட்டில் செல்வாக்குமிக்க மதங்களாக வளரத் தொடங்கின. பெரும்பாலும் வைதீக சமயத்தின் வளர்ச்சியையும் அந்தக் காலப் பகுதியில் நிலைபெற்றுக் கொண்டிருந்த நிலவுடைமையின் வளர்ச்சியும் ஒன்றாகவே இருந்தது. ஆழ்வார்கள், நாயன்மார்களால் பாடப் பெற்ற கோயில்கள் அனைத்துமே பெரும் நிலவுடைமையைக் கொண்ட கோயில்கள் என்பதையும், மக்களை ஒட்டச் சுரண்டிய ஒரு நிலவுடைமையின் தத்துவமாகவே சைவமும், வைணமும் தமிழகத்தில் வளர்ச்சி பெற்றன என்பதையும் பல வரலாற்று அறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றார்கள்.

நிலவுடைமையைக் கெட்டிப்படுத்த நிறுவனங்களாக மாறிவிட்ட கோயில்களின் நடைமுறையை ஒழுங்குபடுத்தும் சட்டங்களான ஆகமங்கள், தமிழ்நாட்டில் பல்லவர் காலத்திலேயே உருவாக்கப்பட்டன. காரணம் அந்தக் காலப்பகுதியை ஒட்டியே கற்கோயில்கள் தோற்றம் கொள்ள ஆரம்பித்தன. அதற்கு முன்பு தமிழகத்தில் குடைவரைக் கோயில்கள் மட்டுமே இருந்தன. இந்தக் கோயில்கள் அனைத்தும் ஆகம விதிகளுக்கு உட்படாதவை. கட்டுமானக் கோயில்கள் என்பது நிலவுடைமையின் வளர்ச்சியுடன் இணைந்து உருவான ஓர் அமைப்பு ஆகும். இவை அரசு உருவாக்கத்திற்கு துணை நிற்பவை. மேலும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் யாருமே இந்தக் குடைவரைக் கோயில்களைப் பற்றி பாடவில்லை என்பதில் இருந்து இதைத் தெரிந்து கொள்ள முடியும்.

தமிழில் திருமூலர் என்ற பார்ப்பனரால் எழுதப்பட்ட சதாசிவ ஆகமம் எனப்படும் திருமந்திரம், நிறுவனங்களாக மாறிவிட்ட கோயில்களின் நடைமுறைகளைத் தொகுத்துக் கூறுகின்றது. மேலும் வேதச் சிறப்பு, ஆகமச் சிறப்பு, அந்தணர் ஒழுக்கம் போன்றவற்றைப் பற்றியும் அதிகமாகப் பேசுகின்றது.

“வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே”

என்ற திருமந்திரப் பாடலின் மூலம் இதை அறியலாம். திருமந்திரம் மட்டுமல்லாது அனைத்து ஆகமங்களுமே வர்ணாசிரம தத்துவத்தை தூக்கிப் பிடிப்பவை தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஆகம வழிபட்ட பெருந்தெய்வ வழிபாடு என்பது தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருந்த நாட்டார் தெய்வ வழிபாடுகள் அனைத்தையுமே அழித்தது. தமிழரின் நடுகல் வழிபாட்டு முறை போன்றவற்றின் மீது தாக்குதல் தொடுத்து சாதியத்தை உயர்த்திப் பிடிக்கும் சனாதன தர்மத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அத்தோடு தமிழரின் மரபான தாய்த் தெய்வ வழிபாடுகளும், உயிர்ப்பலி கொடுத்து வழிபடும் புராதான மரபுகளுயும் இழிவானது என்ற சிந்தனையையும் விதைத்தது. இதற்கான ஆதாரங்களை சங்க இலக்கியங்களில் நம்மால் பெருமளவு காண முடியும். முருகனுக்கு ஆட்டு ரத்தத்தில் தினை மாவைக் கலந்து படைத்ததாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் முருகனை தமிழ்க் கடவுள் என்று சொல்லும் ஒருவனுக்கும் இந்த வழிபாட்டு முறையை இன்று தூக்கிப் பிடிக்கத் திராணியில்லை. காரணம் தமிழர்கள் சைவர்கள் என்று சொல்லும் கும்பல்கள் அனைத்துமே பார்ப்பனர்கள் மற்றும் சத்சூத்திரர்களின் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள்தான்.

சிவனையும், முருகனையும், விஷ்ணுவையும் தமிழ்க் கடவுளாக கட்டமைக்கும் வேலையை மணியரசன், சீமான் போன்றவர்கள் தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தொடர்ச்சியாக செய்து வருகின்றார்கள்.

ஆனால் அடியார்களை எல்லாம் சோதித்து ஏற்றுக் கொள்ள பெரிய புராணத்தில் பார்ப்பன வடிவத்திலேயே சிவன் வருகின்றார். திருநீலகண்ட நாயனாருக்கு “மேனிமேல் தோளோடு மார்பிடைத் துவளு நூலுடன்” காட்சி தந்தார். அதேபோல சுந்தரரை ஆட்கொள்ள பூணூல் மார்பினராய், மறையோதும் வாயினராய், வாயாடும் விருத்த வேதியராய் வந்தார். இயற்பகையாரிடம் அவரது மனைவியை கேட்டுப் பெற “தூய நீறு பொன்மேனியில் விளங்கத் தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்” வந்தார். இதே போல வேளாளர் குலத்தைச் சேர்ந்த மானக்கஞ்சாற நாயனார் வீடுவந்து, மணக்கோலத்தில் இருந்த அவரின் மகளுடைய கூந்தலை அறுத்துக் கேட்கும் போது "வடப் பூணூம் நூலும்…. அருமறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திரு உடையும்” கோலத்தில் வந்தார். சிவனடியார்களில் பல சாதிகள் இருக்கின்றன என்று சொன்னாலும், அப்பருக்கும், சுந்தரருக்கும் இருக்கும் மரியாதை ஒரு நாளும் நந்தன்களுக்கு இருப்பதில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.

நாம் என்னதான் வரலாற்றில் இருந்து உண்மையை எடுத்துச் சொன்னாலும் சூத்திர சங்கராச்சாரியாக தன்னை முன்னிலைப்படுத்தும் மணியரசன் அவர்கள் மாறப் போவதில்லை. அதைத்தான் சனாதனம் என்கின்றோம்.

மணியரசன் அவர்கள் அனைத்து தமிழர்களுக்குமான இயக்கத்தை நடத்தவில்லை. அவர் இந்து தமிழருக்கான இயக்கத்தை நடத்துகின்றார்.அவர் கிருஸ்தவர்களையும், முஸ்லீம்களையும் தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்கின்றார். அதே சமயம் அவர்களின் ஒருங்கிணைப்பு ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலுக்கு எப்படி எரிச்சலை ஏற்படுத்துகின்றதோ அதே போல மணியரசன் அவர்களுக்கும் ஏற்படுத்துகின்றது.

அந்த எரிச்சலில் அவர் நிலை தடுமாறுகின்றார். எப்படி ஆரிய இந்துவை இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஏற்றுக்கொண்டு தனது தேசபக்தியை நிரூபிக்க வேண்டுமோ அதே போல தமிழ் இந்துவையும் அதை முன்னிலைப்படுத்தும் மணியரசனையும் ஏற்றுக் கொண்டு அவர்கள் தங்களை இந்து தமிழ்த் தேசியத்திற்கு நிரூபித்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் இந்துக்களின் சூத்திர சங்கராச்சாரியாக பதவி ஏற்று இருக்கும் தமிழ் இந்து தேசியத்தின் பிதாமகன் மணியரசன் அவர்களுக்கு நாம் மனமார வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வோம்.

- செ.கார்கி

Pin It