பூவுலகின் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மனிதர்களை நேரில் கண்டு, அவர்தம் வாழ்க்கை, பின்பற்றும் நாகரிகம், அவர்கள் கடந்து வந்த வரலாறு அனைத்தையும் துருவித்துருவி அறிந்து, அதனை எழுத்தில் வடித்திடும் வித்தகம், நான் உயிரினும் இனிதாக நேசிக்கும் தம்பி அருணகிரிநாதனுக்கு இயல்பாக அமைந்து விட்ட அரிய ஆற்றல் ஆகும்.

நான் கண்ட உலகம் என நாடுகள் பலவற்றின் பயண நூல்களைத் தருவதில், ஏ.கே.செட்டியாரின் வழித்தோன்றலாக இவர் உலா வருகிறார்.

உலகில் மிகத் தொன்மையாகத் தோன்றிய இனம் தமிழ் இனம் எனினும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொழியால், பண்பாட்டால் சிறந்த தமிழகத்தின் வரலாறு, முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. கடல் கோளாலும், செல்லரிப்பாலும் அழிந்தவை போக, மீதம் இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களும், கிடைத்து இருக்கும் செப்பு ஏடுகளும், கல்வெட்டுகளும்தாம், உன்னதமான தமிழர் சரிதத்தின் ஆவணங்களாக உள்ளன.

arunagiri_vikatan_650

மனித குலத்தின் போக்கையும், நாடுகளின் இயக்கத்தையும் தீர்மானிக்கும் காரணியாக அரசியல் ஆகி விட்டது. கிரேக்கத்துச் சிந்தனையாளன் அரிஸ்டாட்டில், ‘மனிதன் அரசியலால்தான் இயங்குகிறான்’ என்றார்.

நம் தமிழ்நாட்டை அறிவதற்கு, இங்கு எழுந்து உள்ள அரசியலைத் தெரிந்து கொள்ள வேண்டும். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டில் முழுக்கப் பயணித்து, இன்று வரையிலான தமிழகத்தின் அரசியல் தட்பவெட்ப நிலையை உணர வைக்கும் தமனியாக, ‘தமிழ்நாட்டின் கதை’ என்ற அரிய நூலைப் படைத்து உள்ளார் இந்த இலட்சிய இளைஞர்.

ஆவணக் காப்பகங்களிலும், பழைய ஏடுகளிலும் தேடித்தேடிச் சேகரித்து, வளரும் தலைமுறைக்கும், வரப்போகும் தலைமுறைக்கும் வெகுபயன் தரும் நூலைத் தந்து உள்ளார்.

நூல் நெடுகிலும் விரவிக் கிடக்கின்ற தகவல்கள் வியப்பூட்டுகின்றன.

தேர்வுகளுக்குச் செல்வோருக்கு வழித்துணையாகும் இந்த நூல், சுரங்கம் வெட்டி கொண்டு சேர்க்கும் தங்கமாக, கடலுள் மூழ்கி எடுத்து வரும் ஒளி முத்தாக, அனைவரின் கருத்துக்கும் விருந்தாகும் விதத்தில் அமைந்து உள்ளது.

அன்றைய சென்னை இராஜதானி, அதன் அங்கங்களாகத் திகழ்ந்த பகுதிகள், கிழக்கு இந்தியக் கம்பெனியின் பிடியில் இருந்து விக்டோரியா பேரரசியின் ஆளுகைக்கு மாறிய நிலை, இங்கிலாந்தில் வகுக்கப்பட்ட பட்டயச் சட்டம் தொடங்கி, உருண்டோடிய ஆண்டுகளில் உருவான பல சட்டங்கள், 1921 இல் அமைக்கப்பட்ட சென்னை மாகாணச் சட்டமன்றம், முதல் ஆளுநர் உரை, ஈரடுக்குச் சட்டமன்றம், அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் வளர்ந்த விதம், சென்னை இராஜதானியில் இருந்து, கேரள, ஆந்திர, கன்னடப் பகுதிகள் பிரிந்து சென்ற விவரம், இக்காலகட்டத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள், சட்டமன்றம் இயங்கிய இடங்கள் அனைத்துமே, எளிதில் மனதில் பதியும் வண்ணம் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் எழுந்த அரசியல் விழிப்பு உணர்வாக, சென்னை மாகாண ஆட்சியை, பிரித்தானியப் பேரரசே ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, பேரரசி விக்டோரியாவுக்கு, 1855 இல், 14,000 பேர்களிடம் பெற்ற கையெழுத்தை, சென்னை வணிகர் காசுலு லட்சுமி நரசு செட்டி விண்ணப்பம் அனுப்பினார் என்பது, பலரும் அறியாத வியப்பூட்டும் செய்தி ஆகும்.

மெட்ராஸ் மகாஜன சபா, திராவிட மகாஜன சபை, இவைகள் உருவானதும், 1909 இல் சென்னை பிராமணர் அல்லாதார் சங்கம், பின்னர் சென்னை ஐக்கியக் கழகம், ஓராண்டுக்குப் பின்னர் டாக்டர் நடேசனார் தோட்டத்தில் அதுவே திராவிடர் சங்கமாகப் பரிணமித்தது, 1916 ஜூன் திங்களில், திராவிடர் சங்க விடுதி அமைந்தது, அதே ஆண்டு நவம்பர் 20 இல், சர் பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர், டாக்டர் நடேசனார் உருவாக்கிய தென்னிந்திய நல உரிமைச் சங்கம், அதுவே நீதிக்கட்சியாகப் பெயர் தாங்கியது, 1920 முதல் நான்கு தடவை நீதிக்கட்சி அரசுகளும், தந்தை பெரியாரின் விழுமிய தலைமை, சேலத்தில் 1944 இல் திராவிடர் கழகம் உதித்தது ஆகிய நிகழ்வுகள் அருமையாகச் சித்தரிக்கப்பட்டு உள்ளன.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் நாத்திகர் ஆகி பகுத்தறிவை ஏற்றது, காங்கிரசில் சேர்ந்து தலைமை தாங்கியது, தீண்டாமையை எதிர்ப்பு, வைக்கம் போர், சேரன்மகாதேவி குருகுல எதிர்ப்பு, வகுப்புவாரி உரிமைக் கிளர்ச்சி, காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டது, 1932 இல், ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்ததும், நாடு திரும்பிய பின் தோழர் என்ற பதத்தையே விளிக்கும்போதும், பேச்சிலும், எழுத்திலும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்தது, தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை விடுதலை இதழ் மூலம் அறிமுகப்படுத்தியது, இவை அனைத்தும் திராவிட இயக்கத்தின் நாற்றங்காலை அறியச் செய்வனவாகும்.

விடுதலைக்கு முன்பு நடைபெற்ற சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த செய்திகள், அக்கால அரசியல் போக்கை உணர்த்துகிறது.

சென்னை அடையாறு தியாசஃபிகல் சொசைட்டி வளாகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், மெட்ராஸ் மகாஜன சபா உறுப்பினர்கள், ஆங்கில அரசுக்கு எதிராக ஒரு அமைப்பைத் தோற்றுவிக்க உறுதி கொண்டனர். இந்தக் கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரசுக்கு விதை ஊன்றிய ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆலன் ஆக்டேவியன் ஹியூம் கலந்து கொண்டார் என்ற அரிய செய்தியை இந்நூலில் காண முடிகிறது.

ஆங்கிலேயேர் ஆட்சியை எதிர்த்துச் சமர்க்களத்தில் வாள் ஏந்தியதும் தென் தமிழ்நாடுதான்; இந்தியாவின் விடுதலைக்கான ஓர் அமைப்புக்கான எண்ணம் உதித்ததும் சென்னையில்தான் என்பது, தமிழர்களின் வீறுகொண்ட மான உணர்ச்சிக்கு அடையாளங்கள் ஆகும்.

1937 இல், காங்கிரஸ் அரசு அமைந்தது, இராஜாஜி தலைமை, காங்கிரஸ் கட்சிக்குள் காமராஜர்-இராஜாஜி அணிகள் என முரண்பட்டது, காமராஜர் வென்று முதல்வர் ஆனது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பொறுப்பு ஏற்றது, நேரு மறைவுக்குப் பின்னர், சாஸ்திரி, இந்திரா காந்தியை பிரதமர் ஆகத் தேர்வு செய்யக் காமராசர் காரணம் ஆனது, 69 இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது, காமராசர் மறைவுக்குப் பின் இரண்டும் ஒன்றானது, 71 இல் தொடங்கி ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி சேர்ந்து கொண்ட கூட்டணிகள், 96 இல் தமிழ் மாநில காங்கிரஸ் பிறந்து, பின்னர் காங்கிரசிலேயே சங்கமித்தது, ஒவ்வொரு தேர்தலிலும், காங்கிரசுக்குக் கிடைத்த இடங்கள் என, 133 ஆண்டுக்கால காங்கிரஸ் கட்சியின் வரலாறு, இரத்தினச் சுருக்கமாகப் பளிச்சிடுகின்றது.

அரசியல் சட்ட வரைவு குறித்தும், இந்தியாவில் மத்தியில் அமைந்த இடைக்கால அரசு குறித்தும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.

1936 இல், தமிழகத்தில் பொது உடைமை இயக்கம் பூத்தது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவு-, மார்க்சிஸ்ட் கட்சி உதயம், இக்கட்சிகள் பங்கு ஏற்ற கூட்டணிகளும், தேர்தல்களும் பற்றிய தகவல்களைக் காணலாம்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டது, 1949 செப்டெம்பர் 18 இல் இராபின்சன் பூங்காவில் ஆற்றிய உரை, அண்ணாவின் தலைமையில் இலட்சோபலட்சம் மாணவர்களும், இளைஞர்களும் அணி திரண்டது, பொதுக்கூட்டங்கள், ஏடுகள் மூலம் தி.மு.க. மாபெரும் சக்தியாக வளர்ந்தது, 57 தேர்தலில் போட்டியிட்டது, அடுத்தடுத்த தேர்தல்களில் மாபெரும் சக்தியாக வளர்ந்தது,

61 இல் ஈ.வெ.கி. சம்பத் தி.மு.க.வை விட்டு விலகல், 63 இல் திராவிட நாடு கோரிக்கையை ஒத்தி வைப்பு, 67 பொதுத் தேர்தலில் தி.மு.கழகம் அண்ணா தலைமையில் அரசு அமைத்தது, சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டியது, சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட ஒப்புதல் தந்தது, புற்று நோயால் 69 இல் அண்ணா மறைந்ததும், கலைஞர் கருணாநிதி எம்.ஜி.ஆர். துணையுடன் முதல்வர் ஆனது, 71 பொதுத் தேர்தலில் தி.மு.க. பெருவெற்றி, எம்.ஜி.ஆர் தி.மு.கழகத்தில் இருந்து நீக்கம், 76 இல் தி.மு.க. அரசு கலைப்பு, அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் தி.மு.க. தோல்விகள், 87 இல் எம்.ஜி.ஆர். மறைந்த பின்பு, மீண்டும் தி.மு.க. ஆட்சி, 91 இல் தி.மு.க. அரசு கலைப்பு, 93 இல் வைகோ தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்டது, 96 , 2006 தேர்தல்களில் வென்று ஆட்சி அமைத்ததும் உள்ளிட்ட தி.மு.கழகத்தின் அரசியல் பயணம், விருப்பு வெறுப்பு இன்றித் தீட்டப்பட்டு உள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர் தொடங்கியதன் பின்னணி, திண்டுக்கல் இடைத்தேர்தலில் பெற்ற பெருவெற்றி, 77இல் எம்.ஜி.ஆர். முதல்வர் ஆனது, மும்முறை முதல்வராகத் தொடர்ந்தது, அவரது மறைவுக்குப் பின்னர் அண்ணா தி.மு.க.வில் நிகழ்ந்த பிளவு, ஜெயலலிதா தலைமை, அடுத்தடுத்து அமைந்த ஆட்சிகள் பற்றி அருமையாக விவரித்து உள்ளார்.

தி.மு.க., அண்ணா தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை நடுநிலையோடு எழுதி உள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து 1993 இல் விடுதலைப்புலிகளைக் காரணம் காட்டி வைகோ விலக்கப்பட்டதால், ஐந்து தி.மு.க. தொண்டர்கள் தீக்குளித்து மடிய, மறுமலர்ச்சி தி.மு.க. பிறந்தது. இலட்சிய தாகம் கொண்ட இளைஞர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். இந்த இயக்கம் நடத்திய பேரணிகள், நடைபயணங்கள், மாநாடுகள், சந்தித்த போராட்டங்கள், சிறைச்சாலைகள் பற்றிய செய்திகள் இடம் பெற்று உள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாரதிய ஜனதா கட்சி, பார்வர்டு பிளாக், ஒடுக்கப்பட்டோர் உரிமை இயக்கங்கள் குறித்த செய்திகளையும் இந்நூலில் காணலாம்.

விடுதலைக்குப் பின்பு நடைபெற்ற பொதுத் தேர்தல்கள், போட்டியிட்ட கட்சிகள், அவைகளுக்குக் கிடைத்த இடங்கள், இக்காலகட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் குறித்த விவரங்கள், ஆய்வாளர்களுக்கு உதவிடும்.

தமிழக முதல் அமைச்சர்கள், தமிழக அரசியலின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள், தமிழகத்தில் கடந்த காலத்தில் தோன்றிச் செயல்பட்டு, கால வெள்ளத்தில் கரைந்து போன கட்சிகள், தமிழகத்தின் ஆளுநர்கள், இவை அனைத்தையுமே கால வரிசைப்படித் தொகுத்து உள்ளார்.

ஏறத்தாழ 150 ஆண்டுக்காலத் தமிழக அரசியல் சரித்திரத்தை, இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. இன்றைய இளைஞர் உலகத்துக்குத் தேவையான நூலாக அமைந்து உள்ளது.

அகில இந்திய அரசியல் கட்சிகளைப் படம் பிடித்து, கட்சிகள் உருவான கதை என்று, அருணகிரி முன்பு எழுதி, விகடன் பிரசுரம் வெளியிட்ட நூலின் அணிந்துரையில், ‘எண்ணங்களை எழுத்து ஆக்கும் கணினிக் களஞ்சியமான அருணகிரிநாதன் படைத்து உள்ள இந்திய அரசியலின் ஆவணப் பேழை’ என வருணித்து இருந்தேன்.

தமிழ்நாட்டின் கதை - தமிழக அரசியலின் காலக் கண்ணாடி ஆகும்.

வாழ்வில் எனக்குக் கிடைத்த கருவூலங்களுள் ஒருவராக அவரை நான் நேசித்தாலும், அவரது ஊனிலும், உணர்விலும் என் மீது நீங்காப் பற்றுடன் 26 ஆண்டுகளாக அவர் என்னுடன் இயங்கியபோதிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அவர் அருந்தொண்டு செய்யும் நிலையிலும் கூட, துலாக்கோல் நிலையில் நின்று, காய்தல் உவத்தல் அகற்றி, தமிழக அரசியல் கட்சிகளை அவர் விவரித்து இருக்கும் பாங்கு மிகவும் அபூர்வமானது.

ஒவ்வொரு நூலகத்திலும், ஒவ்வொருவர் இல்லத்திலும் இடம் பெற வேண்டிய இந்த அரிய நூலினைத் தந்து உள்ள என் ஆருயிர்த் தம்பி அருணகிரிநாதன், தமிழகம் ஒளி பெற வேண்டும் எனும் தொலைநோக்கோடு தன்னை அர்ப்பணித்து இயங்கி வருகின்றார். அவரின் முயற்சிகளுக்குத் தோன்றாத் துணையாக, தோள் கொடுத்து ஊக்குவிக்கும் விகடன் பிரசுரத்தார், பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள் ஆவார்கள்.

தேடல் என்ற சொல்லுக்கு இலக்கணமாக இயங்கிக் கொண்டு இருக்கும் இந்நூலின் ஆசிரியர், அரிய நூல்கள் பலவற்றைப் படைத்து உள்ளார்; அந்த வரிசையில் இன்னும் பல ஆய்வு நூல்கள் அணிவகுத்திட வாழ்த்துகிறேன்.

- வைகோ, பொதுச் செயலாளர், மதிமுக‌

Pin It