"ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது" எனும் நூல் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதற்பதிப்பாக வெளிவந்துள்ளது. கயல்கவின் பதிப்பகத்தார் இதை வெளியிட்டு உள்ளனர். கீழை மார்க்சியம் எனும் நூலின் ஆசிரியரான சத்தியமங்கலம் நாகராசன் என அவருடைய நண்பர்களால் அழைக்கப்படும் தோழர். எஸ்.என்.நாகராசன் அவர்களுடன் விசுவநாதன், பொன்.சந்திரன், தனலட்சுமி சந்திரன், மு.சந்திரகுமார் ஆகியோர் உரையாடி எஸ்.பி.உதயகுமார் மற்றும் யமுனா ராஜேந்திரன் ஆகியோரால் தொகுத்து ஒருங்கிணைக்கப்பட்டதுதான் இந்நூல்.
 
மண்ணின் மொழி இரண்டாம் தரமாக ஆக்கப்பட்டு இருக்கும் சமுதாயம் முன்னுக்கு வரமுடியாது என்றும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தைக் கைவிட்து மிகப்பெரிய தவறு என்றும் (பக்கம் 47) தோழர். எஸ்.என். நாகராசன் கூறியிருப்பது மிகவும் பாராட்டுக்கு உரிய கருத்துகள். அதே போல், ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றிய அவரது கருத்தும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. இலங்கைப் பிரச்சினையில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது என்ற ஃபிடலின் நிலையை, அவர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருப்பதாக இங்குள்ள சிலர் கூறிவருவதைத் தவறு என்று சுட்டிக் காட்டுகிறார். இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடாமல் இருந்திருந்தால் தமிழ் ஈழம் உருவாவதைத் தடுத்து இருக்க முடியாது.
 
இவ்வாறு சிறந்த கருத்துகளைக் கூறியிருந்தாலும், இவ்வுரையாடல் தொகுப்பில் அறிவியல் நோக்கில் ஏற்றுக் கொள்ள முடியாத சில கருத்துக்களும் உள்ளன.
 
நாயன்மார்களும், ஆழ்வார்களும் கம்யூனிஸ்டுகளே (பக்கம் 23) என்று தோழர் கூறுகிறார். நாயன்மார்களின், ஆழ்வார்களின் பங்களிப்புகள் ஏற்படுத்திய விளைவுகள் பற்றியும், அவை நல்லது தானா என்பது பற்றியும் கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக, சமணர்களின் ஓலைச் சுவடிகளை நெருப்பிலும், வெள்ளத்திலும் அழித்துவிட்டு, எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றிய திருஞானசம்பந்தரின் செயல் சரியானது என்று எப்படி ஏற்க முடியும்? சரி! அதைவிட்டு விட்டாலும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், நல்லபடியாகத்தான் சிந்தித்தார்கள் என்று வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும், அது கற்பனாவாதமே தவிர, அறிவியல் வழி அல்ல. சமதர்ம அமைப்பு மலர வேண்டும் என்று பலர் விரும்பி இருந்தாலும் காரல் மார்க்சுதான் அதற்கான அறிவியல் வழியை முதன்முதலில் காட்டினார். இவ்வாறு இருக்கையில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆழ்வார்களின் செருப்பைப் பார்ப்பனர்கள் வணங்குமாறு செய்திருப்பதால், அவர்கள் மார்க்சுக்கே வழிகாட்டியவர்கள் (பக்கம் 29) என்று கூறுவது மிக மிக ...மிக அதிகப்படியாகும்.
 
காரல்மார்க்சுக்கு சேக்ஸ்பியரைப் பிடிக்கும்; சேக்ஸ்பியர் பெண்களைப் பற்றி நல்ல கருத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே காரல்மார்க்சும் பெண்களைப் பற்றி நல்ல கருத்தைக் கொண்டிருக்கவில்லை (பக்கம் 30, 31) என்று கூறியிருப்பது தர்க்கரீதியாகச் சரி என்று தோன்றவில்லை.
 
பார்ப்பனியத்திற்கும், சாதியத்துக்கும் உள்ள வேறுபாட்டை அவர் (பெரியார்) பார்க்கவில்லை. பார்ப்பனன் என்று தான் பார்த்தாரே தவிர, சைவப் பிள்ளைகளைப் பார்த்தாரா (பக்கம் 56) என்று பெரியாரைக் குறைகூறும் தோழர் நாகராசன், மக்கள் தொகை விகிதத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், பார்ப்பனர்கள் அளவிற்கு அதிக அளவில் இடம் பெறவில்லை என்பதையும், சைவப் பிள்ளைகளிலும், பார்ப்பன ஆதரவாளர்களால்தான் அதிகார மையங்களில் இருக்க முடிவதையும், மற்றவர்கள் இடம் பெற முடியாமல் போவதையும் கவனத்தில் கொண்டு இருந்தால் பெரியார் மீது இவ்வாறு குறை கூறி இருக்க முடியாது. மேலும் இடஒதுக்கீட்டின் மூலம் புதுப் பார்ப்பனர்களை உருவாக்கினார்கள். அவன் பார்ப்பனனை விட மோசம். மேலும் புதுப் பார்ப்பனன் தில்லியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அவனுக்கும் அவனுடைய சொந்தக்காரர்களுக்கும் சம்பந்தமில்லை (பக்கம் 47) என்று வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் சொல்கிறார். அதிகார மையங்களுக்குள் செல்லும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும்போது ஆசைக்கும், அச்சத்திற்கும் அவர்கள் பார்ப்பனர்களிடம் அடிமையாகவே இருக்க வேண்டி இருக்கிறது என்பதை இவரால் எப்படி புரிந்து கொள்ளாமல் இருக்க முடிகிறது? அவர்கள் புதுப்பார்ப்பனர்களா அல்லது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள்தானா என்பதை, அவர்களின் எண்ணிக்கை போதுமான அளவிற்கு உயர்ந்து, அதிகார மையங்களில் உள்ள பார்ப்பனர்களின் எண்ணிக்கை, போதுமான அளவு குறைந்தால் தானே தெரிந்து கொள்ள முடியும்? சொல்வதையும் சொல்லிவிட்டு பெரியாரைக் குற்றம் சொல்வதைவிட கம்யூனிஸ்டுகள் செய்த தவறுகளைப் பார்க்க வேண்டும் (பக்கம் 57) என்று கூறி வாசகர்களின் மனதில் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு உணர்வை மழுங்கடிக்கும் பணியைச் செய்கிறார்.
 
மனிதன் தன்னுடைய தேவைகளை அளவுக்கு மீறி வளர்த்துள்ள நிலையில், தேவைகளைக் குறைப்பதும், மக்கள் தொகையைக் குறைப்பதுமான இருவழிகளிலும் செயல்பட்டால் தான் இயற்கை வளங்கள் பிழியப்படும் வேகத்தைக் குறைக்க முடியும். ஆனால் தோழர் நாகராசன் மக்கள் தொகையைக் குறைக்க செஞ்சீன அரசு எடுத்த நடவடிக்கைகளைக் குறை கூறுகிறார். நகரத்தில் கடுமையான கட்டுப்பாடும், கிராமங்களில் அக்கட்டுப்பாடு விதிக்கப்படாததையும், வேறு இன மக்கள் பகுதியில் சீனமக்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் உத்தியாகக் காட்டுகிறார். (பக்கம் 63 மற்றும் 72)
 
முதலாளித்துவத்திற்குள் நுழையாமலேயே சோசலிசத்திற்குச் செல்ல முடியும் என்று முதன்முதலில் டி.டி.கோசாம்பி தான் கூறினார் (பக்கம் 67) என்று தோழர் நாகராசன் கூறுவதைக் கேட்டு நகைப்பு தான் வருகிறது. ஆனால் கோசாம்பி சொல்வதற்கு முன்னால் இதை லெனின் செயல்படுத்தியே காட்டிவிட்டார்.
 
இவ்வுரையாடல் முழுக்க அவர் காரல் மார்க்சு, ஸ்டாலின், மாவோ ஆகியோரை மிக எளிதாகக் குறை கூறிக்கொண்டு வருகிறார். லெனின் மீது மிகவும் சிரமப்பட்டு ஒரு குறையைக் கண்டுபிடித்து இருக்கிறார். மார்க்சு சொன்ன மெய்யியல் தொழிலாளர்களுக்குப் புரியாது என்றும், அதற்காகப் படித்தவர்களின் தலைமையை உருவாக்கினார் (பக்கம் 64) என்றும் கூறுகிறார். ஆனால் தொழிலாளர்களின் கல்வி அறிவு இல்லாத நிலையைப் போக்க மிகுந்த கவலையும், ஆர்வமும் கொண்டிருந்தார் என்பது கிளாரா ஸெத்கின் என்ற ஜெர்மன் பெண் தொழிலாளர் மற்றும் பாட்டாளிகள் இயக்கத் தலைவருடனான உரையாடலில் காணக் கிடக்கிறது. லெனின் அனைவரும் படித்தவர்களாக வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாய் இருந்தார்.
 
“கேட்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை அதுதான் சோசலிசம்” (பக்கம் 74) என்று கூறுகிறார். பொதுவுடைமைத் தத்துவ மூலவர்களான மார்க்சு, ஏங்கல்சு, லெனின் ஆகியோர் இப்படிக் கூறவில்லை; உற்பத்திச் சக்திகள் தனி மனிதர்களின் ஆதிக்கத்தில் இல்லாமல், மக்களின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் சோசலிசம் என்று கூறி இருக்கிறார்கள்.
 
“விஞ்ஞானம் அந்த நாட்டில் போரை நாடுது; எங்கள் மெய்ஞ்ஞானம் உலகமெங்கும் அமைதி தேடுது” என்று பார்ப்பன மத ஆன்மீகவாதிகள் (கருத்து முதல்வாதிகள்) கூறுவதையே தோழர் நாகராசனும் எதிரொலிக்கிறார் (பக்கம் 89). மெய்ஞ்ஞானம் என்பது விஞ்ஞானத்திற்கு மாறுபட்டதோ, எதிரானதோ அல்ல; மாறாக எல்லா விஞ்ஞானங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதுதான். மெய்ஞ்ஞானம் என்பது தான் பொருள் முதல்வாதம். தோழர் நாகராசனின் கருத்து மார்ச்சியக் கருத்துக்கு நேரெதிராக இருக்கிறது.
 
இறுதியாக, இந்த உலகம் புவி வெப்பத்தினால் அழிந்து விடக்கூடாது என்று அவர் அக்கறைப்படுவது மெச்சத் தகுந்ததாக உள்ளது. ஆனால் அதற்காக சோசலிசம் எல்லாம் அப்புறம் பார்க்கலாம் என்று கூறுவது பொருத்தமாக இல்லை. முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை, புவி வெப்பத்தை உயர்த்தும் பொருட்களை உற்பத்தி செய்தே ஆகவேண்டும் என்று கடுமையாக வற்புறுத்துகிறது. புவியைக் குளிர்விக்கும் மரம் வளர்த்தல், விவசாயம் முதலியவற்றில் இலாபம் குறைவாக இருப்பதாலும், சில சமயங்களில் இலாபம் வராததாலும், பல சமயங்களில் நட்டம் வருவதாலும், அவை மேற்கொள்ளப்பட முடிவதே இல்லை. ஆகவே முதலாளித்துவ முறையைக் காவு கொடுக்காமல் புவி வெப்ப உயர்வை நிறுத்த முடியாது. ஆனால் சோசலிச முறையில் மக்கள் நலனை அடிப்படையாக வைத்து உற்பத்திச் சக்திகள் செயல்படும் என்பதால் புவிவெப்ப உயர்வைத் தடுத்து நிறுத்துவது மட்டுமல்லாமல், அதைத் திருப்பி விடவும் முடியும். இப்படி இருக்கையில் சோசலிசத்தை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஏன் கூறுகிறார் என்று தெரியவில்லை.

புவிவெப்பம் உயரும் இன்றைய சூழ்நிலையில், முதலாளித்துவ உற்பத்தி முறையைப் பற்றியும், சோசலிச உற்பத்தி முறையைப் பற்றியும் விளக்கிக் கூறி, மக்களின் அனைத்துப் பிரிவினரையும் சோசலிசப் புரட்சிக்கு ஆயத்தம் செய்யும் பணி இவ்வுலகம் அழிந்து போய்விடக்கூடாது என்று எண்ணும் அனைவருக்கும் இருக்கிறது. “ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது” ஏனென்றால், சுரண்டும் வர்க்கத்திடம் தான் வலிமையான ஆயுதங்கள் உள்ளன. உழைக்கும் வர்க்க விடுதலைக் கருத்துகள் மக்களிடையே பரவும் முன், ஆயுதப் போராட்டம் சுரண்டும் வர்க்கத்திற்குத்தான் வெற்றியை அளிக்கும். ஆகவே இப்போதைய தேவை உழைக்கும் வர்க்க விடுதலைக் கருத்தை மக்களிடையே பரப்புவது. ஆனால் இந்நூல் இத்திசையில் இல்லாமல் மக்களை மார்க்சியச் சிந்தனையில் இருந்து வெளியே கொண்டு போய்விடும் நோக்கில் உள்ளது.
 
- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் 2013 ஜூலை 14 இதழில் வெளிவந்தது.)

Pin It