யாழ்ப்பாணத்து இளங்கவிஞர் இளங்கோ தந்துள்ள கவிதைத் தொகுப்பு ‘நாடற்றவனின் குறிப்புகள்!’ புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் இவர் வலைப்பதிவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். இத்தொகுப்பில் 53 கவிதைகள் உள்ளன. கவிதைகளின் பாடுபொருள் போர்க்கால ரணங்கள், அவலம், இழப்பு மற்றும் தன்னம்பிக்கை, காதல் என விரிகின்றன. மொழிவளத்துடன் நுணுக்கமான வெளிப்பாட்டையும் துணைக்கு அழைத்துக் கொள்வது இவரது சிறப்பு!
 
 ‘அமைதியின் மணம்’ போர்க்கால அவலத்துடன் தொடங்குகிறது. கவிதையின் இடையில்..

 எதிர்வீட்டு அக்காவின்
 ஆடைக்குள் குண்டிருப்பதால்
 எச்சில் தெறிக்கும் பரிகசிப்புடன்
 அமைதியானவர்கள் முலைகள் திருகி
 கூட்டாய்ப் படர்கையில்
 அசையாய்ச் சாட்சிகளாவது
 நானும் மதிய வெயிலும்

எனும்போது மனித மன வக்கிரத்தின் கோரசாட்சி விட்டுச் செல்லும் ரணம் கொடியது. அந்தப் பெண் என்ன ஆனாள் என்பதை அடுத்த வரிகள் காட்டுகின்றன.

 நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியில்
 ஆழ்மனத்தின் துலங்கல்கள் சிதைவுற
 மழலையாகிச் சிரித்தபடி
 காணாமல் போனாள் அக்கா
 ஓர் நாள்

கவிதை தரும் சோகம் சித்திரம் வாசகர் மனம் பிளக்கச் செய்கிறது. இக்கவிதையின் பிற்பகுதியில் மனத்துணிவு கவிஞருக்குப் பக்கபலமாக உள்ளது.

 நேற்று பரவிய வெறுமை
 துடைத்தெறிந்து
 நாளையை மீண்டும் சுகிக்க
 எங்கிருந்தோ எழும் மிடுக்கு

என்பதில் தன்னம்பிக்கை அழகாகத் துளிர்த்துள்ளது.
 
 ‘இலையுதிர்காலத்து பிரியங்கள்’ – நன்றாகத் தொடங்குகிறது.
 
 தனிமையை
 ஒரு பூச்செடியாய் வளர்க்கத் தொடங்குகையில்
 இலைகளாகவும் கனிகளாகவும்
 மலர வைத்தேன்
 பகிர முடியாத என் பிரியங்களை

என்ற வரிகளில் ‘பூச்செடி’ என்பது புதிய உவமையாக ஒளிர்கிறது. அதைத் தொடரும் குறியீடுகள் எளிமையான வெளியீட்டு முறையில் தெளிவான கருத்துருவாக்கம் கொண்டுள்ளன.

 ‘எதிர் உலகம்’ கவிதை, கணவன்-மனைவி பிணக்கு பற்றிப் பேசுகிறது.

நம்முடைய துயரங்களை
இன்னொரு உயிரில் கரைப்பது
புணருமிரு பாம்புகளை
சிதைத்துவிட்டு
குற்றத்துடன் நகர்வதற்கு நிகர்

என்பது அழுத்தமான பதிவு!

 இந்த அதிகாலைப் பனி
 தெருவை அழகாக்குவது போல்
 நமது ஈகோக்கள் கரைந்து போகின்ற
 ஒரு நாளில் இயல்பாய் புன்னகைக்கலாம்

என்ற வரிகளில் நல்லுறவை மீண்டும் அவாவுகிற நல்லெண்ணம் தெரிகிறது.

 இன்னும் நூலிழைக் காரணங்களுடன்
 ஊசலாடுகிறது
 உறவு

என்ற வெளிப்பாட்டில் நுட்பமான சொல்லாட்சி ரசிக்கத்தக்கது.

 ‘அழிவின் தீரா நடனங்கள்’ கையறுநிலையை சுட்டுகிறது.

 அழிவுகளிலிருந்து
 எதை நோக்கிய தேடலுள்ளதென
 வினாவிய தோழிக்கு
 அரங்கம் நிரம்பிய நிசப்தமே
 விடையாக வழிந்தது

என்ற வரிகள் திசை காண இயலாத இறுக்கத்தை நம்முன் வைக்கின்றன.

 ‘ஒற்றைக் கல் மூக்குத்தி’ – ஒரு நல்ல படிமத்தைக் காட்டுகிறது.

 கத்திகளாய்க் குத்திக் கொண்டிருந்த
 கடந்த காலம் தூர்ந்து போக
 சிறகுகள் முளைக்கின்றன
 மனவெளி முழுவதும்

இதில் மனவெளிச்சம், மிகுந்த நம்பிக்கை தருகிறது.

 பளிச்சிடும்
 உன் மூக்குத்தியைப் போல்
 நினைவுகளை விரும்பிய போது
 அணியவும் எறியவும்
 முடியுமெனில்
 எவ்வளவு நன்றாகவிருக்குமெனும்
 ----------------------------------------------------
 ஆண் - பெண் உறவு எல்லா துயரங்களையும் மறக்கச் செய்யும் என்னும் நிலையை உணர்த்திக் கவிதை முடிகிறது.

 ‘மழைக்காலப் பெண்’ – என்ற கவிதை பெண்ணின் இக்கட்டான சூழலைக் கருப்பொருளாகக் கொண்டது.

மொத்தத்தில் இளங்கோ கவிதைகள் சராசரிக்கும் மேல் உள்ளன. இன்னும் பல கவிதைகளைப் பற்றி பேச வைக்கும் இத்தொகுப்பை வாசகர் படித்து மகிழலாம் என்ற நம்பிக்கை தருகிறது. பாராட்டுகள்!

Pin It