அனைத்திய புரட்சிகர பண்பாட்டு இயக்கத்தின் (All India Leagu for Revolutionary Culture, AILRC ) நிகழ்வு ஒன்றின் பொழுது சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கவிஞரிடம் பேசுகையில் சுதந்திர போரிலோ, வங்கப் பிரிவினையின் பொழுதோ, வசந்த்தின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியின் ஒடுக்கிய அரசு பயங்கரவாதத்தினாலோ உயிரிழப்பைச் சந்திக்காத குடும்பங்கள் கல்கத்தாவில் மிகக் குறைவு என்றார்.! காஷ்மீர், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களின் தேசிய இனவிடுதலைப்போரில் இதே நிலைமைகள்தான்.

“வாருங்கள்
பூலோகத்தின் சொர்க்கமான
எங்கள் காஷ்மீருக்கு
நுகருங்கள்
கருகும் மனிதநிணத்தில் வாடையை
சாவின் அழிவின் நர்த்தனத்தைக் காணுங்கள்.”

என்று விரியும் காஷ்மீர் கவிஞர் பர்வீஸ்சின் கவிதைகள் அதற்குச் சாட்சியமாய் உள்ளன.

பூகோள-அரசியல் சூழ்நிலையின் காரணத்தினால் உக்கிரமானதொரு போர்ச்சூழலை தமிழக மக்கள் சந்திக்கவில்லை. இனக்குழுக்கள், மன்னர்கள் ஆட்சிகளில் கடந்த போர்களைப் பற்றிய தமிழ் இலக்கிய பதிவுகள், அரசர்களின் போர் பரணியைப் பாடுபவைகளாகவே பெரும்பாலும் உள்ளன. தமிழ்நாட்டில் நடந்த வீரச்செறிந்த மக்கள் போராட்டங்கள் அரசு பயங்கரவாதத்தினால் இரத்தக் களரியாய் நசுக்கப்பட்ட வரலாறுகள் நிறைய உண்டு, இருப்பினும் இவைகளிலிருந்தெல்லாம் தமிழீழப்போர் சூழல் என்பது முற்றிலும் வேறானது.

ஒரு தலைமுறை வாழ்க்கை முழுவதும் ஈழத்தில் போர்க்கொடூரத்தில் சிதைந்துள்ளது. வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் ஈழத்தமிழர்கள் சிங்களப் பேரினவாத அரசு பயங்கரவாதத்திலும், போர்ப் படுகொலைகளிலுமான பெருந்துயரில் வாழ்ந்து வருகின்றர். கடைசி இறுதிக்கட்டப் போர் என்பது நெஞ்சம் பதைபதைக்கும் மானிடப் படுகொலைகள், அழிவுகள், சிதைவுகளில் முடிந்துள்ளன. முள்ளிவாய்க்கால் பேரவலமும், நந்திகடலின் மனித இரத்த வாடையும் மனித நாகரிகத்தினை எள்ளிநகையாடி பரிகசிக்கின்றன.

மனித குலத்திற்கு எதிரான பெரும் போர்க்குற்றத்தை, இனப் படுகொலையைச் (Genocide) எந்த சாட்சிகளும் இல்லாமல் முடித்து விட்டதாக ராஜபக்சே அரசு கொக்கரிக்கின்றது. இந்த இனஅழிப்பு போரின் பங்காளிகளான இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளும் அகமகிழ்ந்து இறுமாந்து உள்ளன. புதையுண்ட, சிதைந்த, முடங்களாகிய, அனாதைகளாகிய, மண்ணை இழந்த, சொந்தங்களைக் பறிகொடுத்த, உறவுகளைக் காணாத, அகதிகளாகிய மனிதர்களின் பெருந்துயரங்களை, கருகும் மவுனங்களைப் புதைச்சேற்றில் அமிழ்த்தி விட முடியுமா என்ன? புதைச்சேற்றில் குமிழ்கள் உருவாகி புகைச்சலை கக்கும்.. அவைகள் எரிமலைகளாய் நெருப்பு பிழம்புகளாய் வெடித்துச் சிதறும். உலகின் மனச்சாட்சியை, மனித நாகரிகத்தின் பிடறியை நிச்சயம் உலுக்கியே தீரும்!

அதுவரையிலும் இந்த மனச்சாட்சிகளை உறங்காமல், அணையாமல் பாதுகாத்துக்கும் கடமைகள் படைப்பாளிகளுக்கும், கலைஞர்களும் காலத்தால் இன்று கையளிக்கப்பட்டன.

தீபச்செல்வன் கவிதைகள் அத்தகைய மனச்சாட்சிகளின் சுடர்விளக்குகளாகத் திகழ்கின்றன. சேனல் 4 தொலைக்காட்சியின் காட்சிகள் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தின. இந்தக் கவிதைகளோ போரின் கொடூரங்களைப் பேசும் சித்திரங்களாக்கி நம் மனக்கண்கள் முன் அந்த கொடூரக்காட்சிகளாய் விரிக்கின்றன.

போர்ச் சூழலில் பிறந்து, தாய்மண் தவழ்ந்து, நிலாச் சோறு ஊட்டி, மழலை பேசி, பள்ளிச் சென்று, நட்பு செய்து, உறவுபேணி, இழிவைச் சுமந்து, சிதைவுகளில் நொந்து, அகதியாய் அலைந்து, போரின் அனைத்து பேரவலங்களுக்கும் முகம் கொடுத்த ஒரு தலைமுறையின் பிரதிநிதியாய், சாட்சியாய் வாழுகின்றன தீபச்செல்வனின் கவிதைகள். போரில் உருக்குலைந்த மானுடத்தின் பேரவலங்களைச் சித்திரங்களாய்ச் செதுக்கி, காட்சிப் படிமங்களாக சமைத்து, கதைகளாக உருவகித்து தன்னுள் புதைத்து வைத்துள்ளன.

“வீடுகட்டத் தேவையில்லை
பள்ளிக்கூடம் கட்டத் தேவையில்லை
வீதிசெய்யத் தேவையில்லை
மண்ணைக் கிண்டியே
வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்
மண்ணைக்கீறியே பயணம் செய்ய வேண்டும்.
நிலத்தின்கீழ்
புதிய நாகரீகத்தின்
வாழ்க்கை முறையா?
விஞ்ஞானங்களின் பரிசா?”

என்று அவரின் கவிதை கேட்கும் உரத்த கேள்விக்கு நம்மிடமோ, சமூக அறிவியலாளர்களிடமோ பதில் இல்லை.

தீபச்செல்வனின் கவிதைகளுடான உள்ளார்ந்து பயணிக்கின்ற அனுபவங்கள் நமது ஆன்மாக்களை உலுக்கி நிலைகுலையச் செய்கிறது. போரின் குரூரங்கள் நம் கண்முன் நடமாடும் காட்சிகளாய் நினைவின் நிழல்களாய் பேறுரு கொண்டு மனங்களை வாட்டி வதைக்கின்றன. இவரது கவிதைகள்.

“மனிதாபிமானத்தின்
படை நடவடிக்கையில்
வயல்களிலிருந்து வயிறு வரை
தீப்பற்றி எரிகிறது……”
 
எனும்போது நமது வயிறுகளும் கூடவே பற்றி எரிகின்றன.

எந்தக் ஒரு குழந்தையும் யாருக்கு பிள்ளையாய், எந்த இடத்தில், எந்த தேசத்தில், எந்த இனத்தில் பிறக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க முடியாது. போரின் மரண வாசனை சுமந்த, மனித பிணங்களை வல்லூருகள் கிழித்து தின்கினற நிலத்தில் பிறந்ததுதான் ஈழக் குழந்தைகள் செய்த பாவம் போலும்! போரில் குழந்தைகள் படும் துன்பங்களை, அவலங்களை, சிதைவுகளை, காயங்களை, அழிவுகளைப் படிமங்களாகக், காட்சிகளாய் பெரும்பாலும் சொல்லும் தீபத்தின் கவிதைகள் நமது மனச்சாட்சிகளை சோகத்தில் ஆழ்த்தி கதற வைக்கின்றன. இந்தப் போர்க்குற்றவாளிகள் அன்பு, பாசம், நேசம், இரக்கம், நாகரிகம், தாய்மை, மழலை என்று அனைத்தையும் வரலாற்றின் குப்பைக் கூடையில் கழிவுகளாக்கி சிங்கள காடையர்கள் எறிந்து உள்ளனர்.
 
“சனங்களின் குருதியால் சிவந்த நிலத்தில்
குழந்தைகளுக்காக
எஞ்சிய வெடி பொருட்களின் பாகங்களைத் தவிர
ஒன்றுமில்லை….”

“படுக்கைகளில் குருதி வழிந்தோடுகிறது
தூக்கத்தில் பறி எடுத்த
குழந்தையை விமானம் தின்று
வீசிவிட்டுப் போகிறது…”இனம், மொழி, சாதி, மதம், நிறம், வர்க்கம்.....ஏதுமற்ற, என்னவென்று அறியாத மழலைகளின் அவலங்களாய் விரியும் பெரும்பாலான இக்கவிதைகள் காலத்தின் விஞ்சி நிற்கும் மானுடத்தின் சொற்சிற்பங்களாய் வரலாற்றில் பதியப்பெறும்

“பலியிட முன்பாகவிட்டுச் செல்லப்பட்ட
ஒரே ஒரு பார்வையில்
தன் சாட்சியை வழங்கிற்று அக்குழந்தை..”

“குழந்தை களுக்காகவே யுத்தம் செய்தோம்
யுத்தத்தைத் தவிர ஏதுமறியாக் குழந்தைகள்
திரும்ப வேண்டுமென காத்திருக்கிறது இப்பூமி”

என்ற தீபச்செல்வன் கவிதை வரிகள் கூறுவது போல சகல ஒடுக்குமுறைகளும் ஒழிந்த யுத்தமற்ற புதிய பூமியில் இனி பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு தவழ வேண்டும் என்ற பேராவல் நம்மை ஆட்கொள்கின்றன.

மேலும் அதிகாலையில் சேவல் கூவும் காட்சியை, அழகை வர்ணிக்காத இலக்கியங்களை காண இயலாது. பல்வேறு படிமங்களுக்கு இந்த காட்சிகள் உருமாற்றப்பட்டு உள்ளன. அதே காட்சி தீபத்திற்கு வேறு படிமமாய் ஈழத்தில் தென்படுகிறது.

“நள்ளிரவு அதிர கூவுகிற
வெளுறிய கொண்டையுடைய சேவலின்
தொண்டைக்குழியில்
எறிகணைபோய்
சிக்கிக்கொள்கிறது…”

நம் தொண்டைக்குள் குண்டுகள் நெருப்புக் கவளமாய் சிக்கிக் வியர்த்து விறுவிறுத்து அலறுகிறோம்.

அன்பையும், அறத்தையும், தர்மத்தையும், மனித நேயத்தினையும் போதிப்பதற்குத் தோன்றியதாகச் சொல்லப்படும் மதங்கள்.... புத்தமதம், சைவ மதம்...என்று அனைத்தும் ஈழப்போரில் என்ன செய்தன?

“சிலுவை பொறிக்கப்பட்ட எறிகனைகளும்
பிறை பொறிக்கப்பட்ட எறிகனைகளும்
சூலம் பொறிக்கப்பட்ட எறிகனைகளும்
புத்தரின் மூடிய கண்களில்
சுழலும் தர்மச்சக்கரத்திலிருக்கும்
படையினரிடமிருந்து
வந்து விழுந்து கொண்டிருந்தன…”

என்ற கவிஞரின் வரிகளில் அனைத்தையும் இழந்து அம்மணமாய் எல்லா மதங்களும், கடவுளர்களும் பல்லிளித்துக் கொண்டிருப்பதை சாடுகிறார்..

போரின் அவலங்களைத் தாண்டி விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த தீபச்சுடர்களை, மானுடத்தின் ஒளிக்கீற்றுகளையும் செம்மையாய் கவிதைகள் சீராட்டிச் செல்கின்றன..

“நிலத்தில பெரும் பூதம்
நுழைந்து வேர்களைத் தின்றும்
கொல்ல முடியாத மரங்கள்
மீண்டும் தழைக்கின்றன..
அழிக்கப்பட்ட நிலத்தில்
செங்காந்தள் பூக்கள் பூத்திருக்கின்றன…”நம்பிக்கை ஒளிக்கீற்றுகளை அங்காங்கே பூமிபந்தில் விதைக்கின்றன.

இப்படி தீபச்செல்வன் கவிதைகளில் என்னை பாதித்த கவிதைகளைப் பல உள்ளன. போர் எதிர்ப்பு இலக்கியத்தின் மைல் கற்களாய் அவைகள் ஒளிவிடுகின்றன. போர்வெறி பிடித்து அலைகின்ற வல்லரசுகளையும், அதன் அடிவருடிகளான பாசிச இலங்கை-இந்திய அரசுகளின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் செறிவான ஆவணங்களாகும் இவை.

தீபச்செல்வன் தற்போதைய ஈழ இலக்கியம் பற்றி இப்படி குறிப்பிடுகிறார், “ஈழ இலக்கியம் வெறும் கண்ணீர்ப் பிரதிகள் அல்ல. வெறும் இரத்தப் பிரதிகள் அல்ல. லட்சம் உயிர்கள் அசையும் பிரதிகள். வாழ்வை வாழ விரும்பும் சனங்களின் ஏக்கங்கள். அவர்கள் சொல்ல விரும்பிய கதைகள். அவர்கள் சொல்லாது சென்ற கதைகள். ஈழ மக்களின் வாழ்வு. அந்த வாழ்க்கை பல்வேறு கோணங்களில் காண விரும்பும் கனவுகள். ஈழ நிலத்தில் இந்த ஏக்கமும் கனவும் நெடியதாய் விளைந்திருக்கிறது” என்கிறார். அவருடைய கவிதைகளுக்கு இவை சரியாக பொருந்துகின்றன. இதை விட அதிகமாக அவரின் கவிதைகள் பற்றிக் கூறமுடியுமா எனத் தெரியவில்லை

இக்கவிதைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராய்க் களத்தில் அணிதிரண்டுள்ளவர்களின் கடமையாகும்! தமிழ்நாட்டில் ஈழத்திற்க்காக போராடும் மாணவர்களிடமும் இதை கொண்டு சேர்க்க வேண்டும்.

ஊடகங்களின் வெற்று ஆவாரக் கூச்சல்களில், மக்களின் மறதி நோயில் தங்களின் பாரிய போர்க் குற்றங்களை மறைக்கும் குற்றவாளிகளைத் தொடர்ந்து உலகிற்கு அடையாளம் காட்டுவதோடு போர்கள் அற்ற உலகை உருவாக்க நம்முள் ஆயிரம் கேள்விகளை இந்தக் கவிதைகள் விதைக்கும் என்பது உறுதி.!

“லட்சம்பேர் இறந்த பிறகும்
கொல்லப்பட முடியாத நாட்டில்
அங்கங்கள் பறிக்கப்பட்டவர்களின் குழந்தைகள்
ஆரோக்கியமாகப் பிறக்கின்றனர்
இந்தக் குழந்தைகள்
இப்பொழுதே பேசத் தொடங்குகிறார்கள்
நான் கேட்காத இன்னும் பல்லாயிரம் கேள்விகளை
அவர்கள் கேட்பார்கள்..”

அந்தக் கேள்விகள் போர்க்குற்றவாளிகளை மட்டுமல்ல நம்மை நோக்கியும் இருக்கும் என்பதை நாம் மறக்கக் கூடாது!! இந்த கேள்விகளுக்கான தேடல்களும், அதற்கான களங்களும் அதற்கு விடைகளாக இருக்கும்.

 - கி.நடராசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

தீபச்செல்வன் நூல்கள்:

01. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை
காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2008

02. ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
உயிர்மை பதிப்பகம், சென்னை, 2009

03. பாழ் நகரத்தின் பொழுது
காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2010

04. ஈழம் மக்களின் கனவு
தோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2010

05. பெருநிலம்
காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2011

06. ஈழம் போர்நிலம்
தோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2011

07. மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு
ஆழி பதிப்பகம், தமிழ்நாடு, 2011

08. கூடார நிழல்
உயிர்மை பதிப்பகம், தமிழ்நாடு, 2012

09. கிளிநொச்சி போர்தின்ற நகரம்
எழுநா வெளியீடு, 2013

10. எதற்கு ஈழம்?
தோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2013

11. PRAY FOR MY LAND
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு, 2013

Pin It