அனார் கவிதைகள் - ‘உடல் பச்சை வானம்’ தொகுப்பை முன்வைத்து…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

 ‘உடல் பச்சை வானம்’ இலங்கைக் கவிஞர் அனாரின் (இயற்பெயர்: இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம்) மூன்றாவது கவிதைத் தொகுப்பாகும். இதில் 34 கவிதைகள் உள்ளன. இவை காலச்சுவடு, அணங்கு, உயிர் எழுத்து, புதிய பார்வை, குங்குமம், கலைமுகம், கூராயுதம் மற்றும் பல இதழ்களில் வெளிவந்துள்ளன.

 புதிய சிந்தனைகள் நவீனத்துடன் சேர்ந்து மொழி வளத்தை அள்ளிக் கொண்டுவந்து நம் முன் கவிதைகளாய் நிற்கின்றன. ஆங்காங்கே தலைகாட்டும் இருண்மை, கவிதையை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் செய்து விடுகின்றன. சில கவிதைகள் மீள் வாசிப்பைக் கோரும் அடர்த்தியைக் கொண்டுள்ளன.

“அனாரின் கவிதை வரிகளில் பெண் நீராக, ஊற்றாக, நதியாக, மழையாக, கடலாக, நிலமாக, மலையாக, காற்;றாக, மூச்சாக, ஊழிப் புயலாக, ஒளியாக, அனலாக வடிவெடுக்கிறாள்.” என்கிறார் சுகுமாரன்.

 ‘கண்களால் புல்லாங்குழல் வாசிப்பவள்’ என்ற கவிதைத் தலைப்பே வாசகனை உள்ளுக்குள் இழுத்து விடுகிறது. கவிதையின் தொடக்கத்தில் அமைந்துள்ள படிமம் கவனத்தை ஈர்க்கிறது.
 ராட்சதப் பௌர்ணமி நிலா
 நிறைமாதக் கர்ப்பிணி வயிற்றில் மினுக்கமாய்
 என் கையில் வந்திறங்குகின்றது
 ………ஒளிப்பந்தெனத் ததும்புகின்றது.

என்ற வரிகளில் காட்சி நன்றாக இருக்கிறது.
‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக…’ என்ற திரைப்பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

 பௌர்ணமி அடிவானத்தில்
 பெரும் மகோன்னதக் கனவு
   காட்சியாகத் தெரிகிறது
 நான் கண்களால்
 புல்லாங்குழல் வாசிக்கத் தொடங்குகின்றேன்.

மேற்கண்ட பகுதியின் கடைசி இரண்டு வரிகள் “அற்புதமாக காட்சியை சலிப்பின்றி ரசிக்கிறேன்” என்பதைத்தான் கவிதை மொழியில் பேசுகிறது என நான் நினைக்கிறேன். இந்த வெளிப்பாடு அற்புதமாக இருக்கிறது.

 என் உள்ளங் கைகளில்
 இப்போது பெரும் வானவில் ஒன்றின் முனை
 ஊன்றியுள்ளது

என்ற கற்பனை அவ்வளவு ரசிக்கும் படியாக இல்லை.

 பசலையைப் பின்னும் மாயச்சிலந்தி
 ஒளியின் கூந்தலை விரித்துப் போட்டிருப்பாள்

என்ற வரிகள் ‘ஒரு பெண் மாலையில் முழு நிலவைப் பார்த்தபடி கற்பனையில் ஆழ்ந்திருக்கிறாள்’ என்ற கவிதைக் கருவை நமக்கு உணர்த்துகிறது. இது ஒரு நல்ல கவிதை!

 ‘நீர் நடனம்’ மூன்று பத்திகளைக் கொண்டது. இரண்டாம் பத்தியில் சொல்லாட்சி பிரமிக்க வைக்கிறது. ஆனால் மையமற்றுச் சொற்கள் சுழல்கின்றன. எனவே பொருள் முழுமையாக விளங்கவில்லை.

 சாரலாய்… தூவலாய்
 சல சலக்கும் சிற்றாறுகளாய்… புலன்கள் பிரிந்து
 முன் வைக்கும் நீரின் கலைகள்
 நீச்சலிடும் தண்ணீர்ப் பாதங்கள்
 சூட்சுமமாய் நெருங்கியும்… விலகியும்…
 குமிழிகள் கொப்பளித்து வெள்ளமாய்த் திளைக்கும்
 கோடி வேட்கையின் இணைவு சூழ…

என்ற வரிகளில் நல்ல கட்டமைப்பு கொண்டது ‘கோடி வேட்கையின் இணைவு’ என்பதால் பாலியல் சார்ந்த விஷயம் என எண்ணத் தோன்றுகிறது.

 சுவையில் மதர்ந்த நடனம்
 மேன்னையின் திறவுகோலாகித்
 தன்னையே திறக்கின்றது

‘நடனம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்ற கருத்தைத்தான் மேற்கண்ட கவிதையின் இறுதிப் பகுதி விளக்குவதாகத் தெரிகிறது. ‘நீர் நடனம்’ என்பதற்கு என்ன பொருள் என்றால், கவிதையில் மூன்றாம் வரி (என் நீர்உடல் நடனமிடுகின்றது) தெளிவுபடுத்துகிறது. கவிதையைப் படித்தவுடன் ஏற்படும் வாசகர் பிரதியில் யூகங்கள் அதிகமாவது குழப்பத்தையும் ஏற்படுத்தலாம்; ஏற்படுத்துகிறது.

 ‘உக்கிரம்’ கவிதை தூக்கு தண்டனை தேவையில்லை என்பதைக் குறித்துப் பேசுகிறது.
 …...தீர்ப்பெழுதுகின்றவர்களின் மொழி
  ஓநாயின் கண்களைப்போல் திகிலூட்டுகின்றன.

என்ற வரிகள் தூக்கு தண்டனைக்குக் கவிதை சொல்லி எதிர்நிலை எடுத்துள்ளார் என்பதைச் சொல்லுகிறது.

 அதிகாரத்தின் கொடுங்கோன்மை
 தூக்குமேடைச் சடலத்தில் விறைத்திருக்கிறது.

என்ற வெளிப்பாட்டில் காணப்படும் தற்குறியேற்ற அணி அழுத்தமான பதிவு கொண்டு, கவித்துவம் காட்டிப் போகிறது.

 நீதியின் பெயரால்
 கழுத்தை நெறிப்பதற்காக
 தொங்க விடப்பட்ட தூக்குக் கயிறு
 எல்லாவற்றையும் முடித்துவிடுமா?

என்ற கேள்விக்குப் பிறகு ஒரு காட்சி கரிசனம் காட்டுகிறது.
 பின் கட்டப்பட்ட கைகளுக்குள்
 வலித்து வியர்வையில் மணக்கிறது
 மனித உடற்சூடு

 ‘பாறை இயல்’ பூடகத்தன்னை கொண்ட கவிதை! பாறையின் இயல்புகள் உறுதியாகவும் நிலைப்பாட்டில் வலிமை கொண்டு நிற்பதும் எதற்கும் அசைந்து கொடுக்காததும் ஆகும். பாறை, ஆண் மனத்திற்குக் குறியீடாகச் சொல்லப்படுகிறது. ஒரு பெண் ஒர் ஆணை விரும்புகிறாள். ஆனால் அவன் இவளுக்குப் பச்சை கொடி காட்டவில்லை என்பதே கவிதையின் கரு. இந்த ஒருவரிச் செய்தியை கவிதையாக்க மெல்ல மெல்ல வார்த்தெடுத்திருக்கும் விதம் ரசிக்கத் தக்கதாக இருக்கிறது.

 என்னுள் பாறைகள் வளர்ந்து கொண்டிருப்பது
 உனக்குத் தெரியாது

என்ற வரிகளில் பெண் மனம் உணர்த்தப்படுகிறது. ஒரு பெண்ணின் வலுவான ஆசையின் இயல்புகள் பற்றிய ஒரு விளக்கம் அடர்த்தியானது.

 மரணத்தின் உச்ச இலக்குகளில்
 அசைகின்ற பாறையின்
 சமிக்ஞை அதன்; நோட்டம்
 …. காத்திருப்பு

 மிகவும் பொருமைகளிலிருந்து
 பின் வெடிக்கின்ற எரிமலை மூச்சு
 தணல் குழம்புகள்…
 மௌனத்தின் உள்ளே இருக்கிறது

என்ற வெளிப்பாட்டில் சொல்லாட்சி வலிமையாக அமைந்துள்ளது. படிமச் சிறப்பு ஒளியூட்டுகிறது. பெண் மன ஆசை நிறைவேறாவிட்டால் என்ன ஆகும்! விடை தருகின்றன கீழ்க்கண்ட வரிகள்…

 எதனால் கற்கள் விளைகின்றன
 பின் முற்றிப் பாறைகளாகி
 மலைகளாக ஊதுகின்றன

என்ற குறியீட்டியல் சார்ந்த கேள்விகள் நிலைமையைத் தெளிவுபடுத்திவிட்டன! மனம் நிலை கொள்ளாமல் அல்லல் படுகிறது என்பதை கீழ்க்கண்ட வரிகள் விளக்குகின்றன.

 இறுகிய திரைக்குள்
 திறந்து விரியும் கதவுகள் தாண்டி
 எதிரொலிக்கும் சிரிப்பின்
 விசும்பலின் கருகல் நெடி
 கசப்பின் தீராத இருளில் படர்கிறது

அந்தப் பெண் வெறுப்புற்று விலகியதைச் சொல்வதுடன் கவிதை முடிகிறது.

மற்ற கவிதைகளைப் படிக்கும் போது நான் ரசித்த வரிகள்…

1. ‘அக்காவுக்குப் பறவைபோல் சிரிப்பு’ என்பது ஒரு கவிதைக்கான தலைப்பு
…அக்காவின் சிரிப்பு
பறவையைப் போல் பறந்து செல்லும்

2.  நீ எனக்கெழுதிய கடிதங்களில்
 அந்நியமான காலடி ஓசைகளும்
 பயங்கரமான நடுக்கங்களுமிருந்தன
     (முந்திரி… பக்கம்38)
3. கசங்கிய போர்வை நுனி எழும்பி
 ஓவியமென நெளிகின்றது
     (பானன்… பக்கம்28)
4. விரல்களில் விசித்திரமாய் நீ பார்க்கும்
 அவ்வொளிச் சாறு
 அதிசய பானமாகி விடுகின்றது
     (இரண்டு பெண்கள்)

நிறைவாக கவிதையின் தீராத பக்கங்கள் வழி அனார் எதிர்காலத்தில் இன்னும் பல நல்ல கவிதைகளைத் தருவார் என நாம் நம்பலாம்.

Pin It