இ.ஷர்மிளா பத்திரிக்கையாளர். கதை, கவிதை, நாடகம் ஆகிய வடிவங்களில் நாட்டம் கொண்டவர். சமூகப் பணியில் ஈடுபாடு மிக்கவர் என அறிமுகப் படுத்தப்படுகிறார். இந்தப் புத்தகம் பற்றிய காவ்யா பதிப்பகத்தார் குறிப்பு:

 கதையா பாடலா எனக் குழப்பம் வந்தபோது
 கதைப்பாடல் ஆயிற்று
 கதையும் பாடலும் கலந்தாலும் அதுதான்
 கதையா கவிதையா என்ற குழப்பம்
 கதையும் கவிதையும் கலந்த இணக்கம்
 கதைக் கவிதையா? கவிதைக் கதையா?
 இரண்டும் தான்
 உருவம் எப்படியிருந்தாலும் என்ன?
 உள்ளடக்கம் முக்கியம்.

ஒரு படைப்பிற்கு உள்ளடக்கம் மட்டும் முக்கியம் என்பது என்ன இலக்கியக் கோட்பாடு? எப்படிச் சொல்ல வேண்டும் என்பது முக்கியமில்லையா? உள்ளடக்கமும் வெளியீட்டு முறையும் நன்றாக அமைந்தால் தானே படைப்பு வெல்லும்!

ஜெயகாந்தன் ‘வாழ்த்துரை’ தந்துள்ளார். “கவிதை நடையில் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார் செல்வி இ.ஷர்மிளா” தொடக்கமே ஒரு விமர்சனத்தின் முக்கிய பகுதியாக அமைந்து விட்டது. இந்தப் புத்தகத்தில் 152 பக்கங்கள் உள்ளன. இது சிறுகதையா?

நா.காமராசன் அணிந்துரை தந்துள்ளார். அதில், மொத்தத்தில் இது ஒரு நெடுங் காவியமாகத்தான் தெரிகிறது. சமூக அவலத்தை எழுதுவதுதான் உண்மையான கவிஞன். இதில் ஷர்மிளா மிகவும் உயர்ந்து விட்டார். என்பதே என் மதிப்பான கருத்தும் கூட. என்கிறார். மேற்கண்ட கூற்றில் வாக்கியப் பிழையும் உள்ளது.

எழுத்தாளர் பெ.சு.மணியும் அணிந்துரை தந்துள்ளார். இவர் தன் பங்கிற்கு நான்கு பக்கங்கள் ‘நயங்கள்’ சொல்லிச் சொல்லிப் பாராட்டியிருக்கிறார்.

‘பைத்தியக்காரி’ என்ற புத்தகத்தின் கருதான் என்ன?

பெ.சு. மணி கூறுகிறார்.

“தாய், தந்தை, தங்கையுடன் மகிழுந்தில் இராமேஸ்வரம் பயணம் களமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. ‘பைத்தியக்காரி’யின் கையேடு கண்டெடுக்கப்படுகிறது. கையேட்டை அவ்வப்போது பயணத்தில் கிடைத்த இடைவெளியில் ஊன்றிப் படித்து உணர்ச்சிவசப்பட்டவளாய் சலதி வெளியிடும் சிந்தனையோட்டங்கள்”

இத்துடன் ஈழத்தில் இனவெறியில் கொன்று குவிக்கப்படும் தமிழர்களைப் பற்றியும் இப்புத்தகத்தில் பேசப்படுகிறது.

என் பார்வையில் இப்புத்தகம் மிகச் சாதாரணமான வாசிப்புத்தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆசிரியருக்கு மொழிநடை சரியாக வாய்க்கவில்லை. அச்சிட்டிருக்கும் முறையைப் பார்க்கும்போது கவிதை வடிவம் போல் தெரிகிறது. ஆனால் படித்தால் உரைபோல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக….(பக்கம் 41)

பின்பு நானாய் நானாய்
தன்னந்தனியாகச் சென்று
குளுக்கோஸ் புட்டி
ஏற்றிவிட்டு வந்தேன்
அருகில் உள்ள மருத்துவமனையில்!

ஓரளவு தேவலையாய் இருந்தது

அன்று பிற்பகல் மூன்று மணி இருக்கும்
அப்பத்தாவை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்
சிறிது நேரத்தில் வந்துவிட்டாள்!
அவளைக் கண்ட மாத்திரத்தில்
பெருமூச்சு விட்டேன்.

மேலே உள்ளது வடிவத்தால் கவிதை. எழுத்து முறையில் சாதாரண – மிகச் சாதாரண நேர்த்தியற்ற உரைநடை.

மற்றொரு எடுத்துக்காட்டு…(பக்கம் 93)

பக்கத்து வீட்டுக்காரரைத்
தொடர்பு கொண்டேன்
தொலைபேசியில்
‘அப்பாவிடம் அவசரமாகப் பேசணும்’
என்றேன்.
‘அவரில்லை’ என
அடுத்த கணத்தில் பேசினாள்
அவரின் மகள்
அறிவிருக்கா இல்லையா? என்றேன்
ஏன் இப்படிச் செய்கிறார்
உன் அப்பன்?
ஒழுங்காக இருக்கச் சொல்
பின் விளைவுகளைச்
சந்திக்க நேரிடும்
என எச்சரித்தேன்.

மேற்கண்ட பகுதியில் கவித்துவம் எங்காவது இருக்கிறதா? எனவேதான் எழுத்து லாவகம் ஷர்மிளாவுக்கு இன்னும் கைவரவில்லை.

ஷர்மிளா இளவயதுக்காரர்தான். அதனால் நல்ல நோக்கத்தில் சொல்கிறேன்… முதலில் தற்கால இலக்கியம் படிக்க வேண்டும். வசன கவிதை எழுத விரும்பினால் பாரதி, கண்ணதாசன், என்.ஆர்.தாசன் போன்றவர்களைப் படிக்க வேண்டும். நல்ல உரைநடை படிக்க வேண்டுமென்றால் வ.ரா., சுந்தர ராமசாமி, சுகுமாறன், தமிழ்நதி. ச.தமிழ்ச் செல்வன், க.முத்துலிங்கம் ஆகியோரைப் படிக்க வேண்டும். யதார்த்த இலக்கியம் என்றால் சி.சு.செல்லப்பா, கரிச்சான் குஞ்சு, உரைநடையிலேயே புதுக்கவிதை நயம் வேண்டுமென்றால் உமா மகேஸ்வரி போன்றவர்களைப் படித்துப், பயின்று தெளிந்தால் நல்ல மொழிநடை நிச்சயம் வாய்க்கும்.

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Pin It