ஒலிக்காத இளவேனில் - நூலாய்வு

 பயங்கரவாத்திற்கு எதிரான போர், இறுதி யுத்தம் என்றெல்லாம் இராசபக்சேக்களால் சித்தரிக்கப்பட்ட தமிழ் இனவழிப்பு முடிவடைந்துவிட, அதன் பின்நிகழ்வுகள் நீடித்துவரும் ஒன்றாக, நேற்றுவரை போராளிகளாகவும், மாவீரர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் இருந்து வந்தவர் மீதான போற்றிப்பாடல்கள் இன்று வசைகளாக மாறிவிட்டன.
 
 விடுதலையின் மீட்பர்களான தமிழ் ஆயுத தாரிகள் குறிப்பாக பெண் விடுதலைப் போராளிகள் களச்சாவடைந்தது பற்றியல்ல அவர்கள் சோதனை சாவடிகளில் வைத்து காட்டிக் கொடுத்தவர்களால் கைது செய்யப்பட்டதோ, சிங்களப்படையிடம் சரணடைந்த பின்னர் தடுப்பு முகாமுக்குள் வைக்கப்பட்டதன் பின்னரானவையே முக்கியத்துவம் பெறுவதாய் இருக்கின்றன. இவை ஒருபடித்தான அல்லது நிலைத்த பார்வை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
 
 தந்தைவழி உரிமை சமூகமாகவும் தனிஉடைமை, முதலாளித்துவமாகவும் தமிழ்குமுகாயம் தன்னை வடிவமைத்துக்கொண்ட காலந்தொட்டு கொற்றவை, சிவனியமான, பத்தினி - பரத்தை இவ்விரு முனைகளுக்கிடையேனான காலமாகி வந்த கருத்துருவாக்கம் சொல்லாடல் வழி நேற்று போராளியாக களமாடிய வீரப்பெண்கள் இன்று பரத்தமைக்குத் திரும்பிவிட்டதாக பேசுகிறது.

 ஆணாதிக்க உலகு பெண்ணுடலில் செய்யும் அரசியல் வர்க்கங்களையும், இனங்களையும் தேச எல்லைகளையும் கடந்துள்ள இன்று மீண்டும் தமிழ் பெண்கள் வன்னியிலிருந்து வலுவில் எடுக்கப்பட்டு, குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு சிங்களப்படையணிகளில் இணைக்கப்படுவதாகவும் இதன்மூலம் தாம் இனத்துவ சமநிலையை பேணுவதாக உலகுக்கு சிங்கள தலைமை சொல்லிக்கொள்வதாக இருப்பினும், அதற்கு அப்பெண்கள் பிடிவாதமாக தமது இணைப்பை மறுத்துவரும் நிலையில் சிங்களபடை அதிகாரிகளால் அவர்கள் பாலியல் விருப்பங்களுக்கு, வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாகவும் மேலதிகமான செய்திகள் உலவுகின்றன.
 
 பெண்ணிண் உடலை முன்நிறுத்தி கட்டமைக்கப்படும் இவ்வரசியல் வழி போராளி பயங்கரவாதியாவதும் பத்தினி, பரத்தையாவதுமாக பெண்ணுடல் மீதான புனித அரகியல் உலகமயச்சூழலில் வேகப்படுத்தியும் தமிழ்நிலத்தின் ஆணாதிக்க பார்வையை கூர்மைப்படுத்தி வருவதான நிலையில் அதற்கு எதிரான புதிய மரபை பேசுவதாக, பேணுவதாக இருக்கிறது ஒலிக்காத இளவேனில் கவிதை தொகுப்பு.

 போர் ஒன்றை சிறப்பாகச் செய்து முடிக்கும் என்றால் அது பேரழிவின் சாம்பலை குவித்துவைப்பதைத்தான் சொல்லவோண்டியிருக்கும், போர் என்றால் அதுபோர்தான் அதற்கென்று வேறுபெயரோ பொருளோ இருப்பதில்லை உலகின் மிக பழமையானதும் நவீனமானதுமாக இதுவரை போர் ஒன்றே இருந்து வருகிறது.
 
 இதுவரையிலான போரின் வன்முறை போரின் அவலம் போர் திராது பெருக்கும் குருதி, கண்ணீர் யாவையும் மனிதக்குலத்திற்கே பொதுவெனினும், அதன் தீர்மானகரமான வெற்றியும், தோல்வியும் பெண் உடலின் வெளியில் நாட்டப்படுவதாகவே இருக்கிறது.

  தினவெடுத்து தனது நாவுகளை திசையயங்கும் சுற்றும் போரும், போரின் அடங்கா பேரவாவும் ஓர் ஆண் குறியே . அதன் என்றைக்குமான கிழிக்கும், கிழிபடும் வெளிப் பெண்ணுடலே.

 நடக்கும் போர்களனைத்தும் சொல்லும் செய்தி ஒன்றுதான் . பெண் என்பவள் காலந்தோறும் வென்றடக்கப்பட வேண்டியவர்கள் என்பதே அது அதனால்தான் போர்க்களத்திலும் காப்ராண்களிலும், பதுங்குகுழிகளிலுருந்தும் வரும் பெண்களின் குரல்கள், கவிதைகள் முக்கியத்துவமுடையனவாகின்றன,
 
 இலங்கையின் தமிழீழப்பிரதேசத்தில் கடந்த 30-ஆண்டு கடும் சமரில். பட்டியல் இடப்படாத இழப்பீடுகளுக்குள் அடங்காத அழிவுகளுக்கு மட்டுமே தொடர்ந்து ஆளாகிவரும் சமூகத்தின் பெண்களின் நிலைகுறித்து முக்கியமாக விளிம்பு நிலை பெண்கள் பற்றியதான விவாததிதிற்கோ அல்லது அதற்கு அப்பாலும் கூட செல்லும் எந்தவொரு முயற்சியும் சிறப்பானதொரு கவனத்தை பெற்றுக் கொள்வதாயில்லை. ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் உள் ஒடுங்கிய அல்லது உள்ஒடுக்கப்படும் பெண்களின் மெலிந்த குரலானது மேலெழும்பியதாய் இருக்கவில்லை.

 நிலத்தை ஆக்கிரமித்து நிற்கும் சகோதர இனத்திற்கு எதிராகவும் அதே வேளை சக இன ஆதிக்கத்திற்கும் பொதுவான ஆணுலகுடனான கருத்தியல் மோதல் ஊடாகவும், கலாச்சார கண்ணி வெடிகள் பலவற்றைக் கடந்தும், ஆள்கடத்தல், படுகொலை, பாலியல் வல்லுறவு இவற்றுக்கு முகம் கொடுத்தவாறே போர் பகுதியை கடந்து சுரண்டலற்ற, வன்முறையற்ற, ஆணதிக்கமற்ற மாற்றுவெளி ஒன்றுக்கான நீதியான கனவுகளுடன் வாழ்நிலத்தின் எஞ்சிய நினைவுகளை, புலப்பெயர் தனிமையை முன் வைத்தும் ஒலிக்கிறது புலப்பெயர் பெண்களின் ஒலிக்காத இளவேனில் கவிதை தொகுதி.

 வட அமெரிக்காவை களமாகக் கொண்டு அதே வேளை கனடாவிலிருந்து ஏறக்குறைய பெண்களின் முன் முயற்சியில் வெளிவந்துள்ள முதல் பெண்ணிய பதிப்பும், வெளியீடும் இதுவாக இருக்கலாம் சூழலியல் போராளியும், சமூக செயற்பாட்டளாரும் மறைந்த றோச்சல் ஹார்சன் அவர்களின் சிறந்த சூழலியல் நூலான றீஷ்யிeஐமி றீஸ்ரீrஷ்ஐஆ தலைப்பைக் கொண்டு ஒலிக்காத இளவேனிலாக ஒலிக்கிறது. இம்பெற்றுள்ள பெண்களின் க(விதை)லகக் குரல்

 எல்லா வகையான சமனற்ற போக்கிற்கு எதிராகவே இக்கவிதாயினிகள் தமது கவிதை கணையை தொடுக்கிறார்கள்.

 போரின் அலைக்கழிப்பிற்கிடையே, இடப்பெயர்வும், இயலாமையும், சோர்வும், தனிமையும் நிலையற்ற வாழ்விற்கிடையே அபூர்வமான தருணங்களில் தம்மை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்த பெண்களையும் சிலரது விடுதலை நோக்கிலான போர் பெருமித சுயமிரக்க வகையிலான தொகுப்புகளையுமே அறிந்திருக்கும் நமக்கு ஒலிக்காத இளவேனில் வேறுவிதமான அதிர்வுகளைத் தருகிறது.

 நெருக்கடி மிகுந்த களச்சூழலில் களச்சூழல் என்று ( களச்சூழல் என்று குறிப்பிடுவது தமிழர் வாழ் போர்ப்புலப் பகுதி) எழுதினால் கொல்லப்படவும், எழுதாவிட்டால் வெல்லப்படுவதுமான சாத்தியங்கள் கொண்டு வாழும் பெண்கள். மூச்சு முட்டும் அக்கணத்திலிருந்து வெளியேறுவதுமாய் இருக்கின்றனர்.

 யுத்த பிரதேசத்திற்கு அப்பாலும் தமது தரிப்பை காத்திரமாக பதிவு செய்ய கவிதை, அதன் வீச்சை இப்பெண் மொழிக்கு வழங்கியுள்ளது.

 தம்பிள்ளைகளை வன்முறைக்கு, தாம் பெயர்ந்த நிலங்களின் அரசியல்களுக்கு பறிகொடுக்கும் அவலத்தையும், விளிம்புகள் எனப்படும் சமூகத்தின கீழ்நிலைகளாய் இருப்பவர்களை நோக்கிய அவதானங்களை முன்வைத்தலுமே என்று தொகுப்புரையில் பிரகனப்படுத்துகிறார்கள் இப்பெண்கள்.

 80-களில் முனுமுனுப்பாய் அரும்பி அதன் இறுதியில் காட்டாற்று வெள்ளமாய் பிரவகித்த இலங்கை பெண்கள் தொடர்ந்து ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் யாருக்கான யுத்தம் என்பதையும் கூட விரைவில் இனம் கண்டுகொண்டனர்.

  இனம், மொழி, தேச எல்லைகள் யாவற்றையும் கடந்து அவை ஆணுலகு என்ற ஒன்றை மட்டுமே பிரதிநிதப்படுத்துவதை, பிரபாவின் உனது இனம் அரசியல் ஆண்மொழி என்ற நெடுங்கவிதை உறுதிபட மொழிகிறது.
 
   எனக்கு தெரிந்தவற்றூடாக
   உன்னை மறுக்கிறேன்
   நிராகரிக்கிறேன்
   எதிர்க்கிறேன்
   எந்த குற்ற உணர்ச்சியுமின்றி
     - ஒலிக்காத இளவேனிலின் மைய இழையாக இக்குரலே உரத்து முழங்குவதாக இருக்கிறது.

 ஆண்களின் கொடிய வன்மம் மிகுந்த இப்போரானது, பெண்களை அம்மணப்படுத்தி, வன்புணர்ந்து சொல்லொணாத வதைகள் செய்து நிலத்திலிருந்தும், தரிப்பினின்றும் அப்புறப்படுத்திவிட முனைகின்றன. உலகின் எழுதப்படாத போர் அறமாக வன்புணர்வும், கூட்டு வல்லுறவும் பெண்கள் மீது ஓர் ஆயுதமாக நுழைத்தெடுக்கப்படுகின்றன. எல்லா போர்களும் பெண்களுக்கு எதிராகவே செய்யப்படுவதால் போர்களுக்கு எதிரான பொருளாக, வடிவமாக பெண்களை இருக்கின்றனர். மிகத் தனிப்பட்ட முறையில் அதிகப்படியான தாக்குதலுக்கும், உருக்குலைவுக்கும் உள்ளாகும் பெண்கள். நம்மை தக்க வைத்துக்கொள்வதற்கான எவ்வகை போராட்டமும் முன்னெடுப்பும் ஒருவகையில் யுத்தங்களுக்கு எதிரானவைதான்.

 இலங்கையில் நிகழ்ந்த 83 ஆம் ஆண்டின் யூலை கலவரங்களின் மைய சிதைவாக இருந்தவர்கள் பெண்களே. கணவனை, குழந்தைகளை, சகோதர, சகோதரிகள், தாய் மற்றும் தந்தையர் யாவரும் பறித்தெடுக்கப்படவும் அவர் கண்ணெதிரே வன்புணர்வுக்கும் படுகொலைக்கும் பெருமளவு ஆளான அவர்கள். விடுதலை இயக்கங்களோடு தம்மை நிர்பந்தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டிவந்தது.

 ஒடுக்கப்படும் தேசம் ஒடுக்கப்படும் பெண்கள் என்பதற்கான விடுதலையை முன்வைத்த விடுதலைக்கான இயக்கங்கள் பெண்களிடம் கையளித்தோ ஆண்குறியயன நிமிரும் துவக்குகளையே பால்மாற்றமான இத்தகு போராட்டம் யாருக்கானது?
    
    திணிக்கப்பட்ட காலை
    திணிக்கப்பட்ட எழுத்து
    திணிக்கப்பட்ட ரசனை
    திணிக்கப்பட்ட குறி

இவற்றோடு யுத்தங்களையும், ஆயுதங்களையுமே சொல்லிக் கொள்ளலாம் ஜெபா! (திணிக்கப்பட்ட காலை -பக்-55) 

    உங்கள் தேசம், உங்கள் மொழி, உங்கள் இனம், உங்கள் குரல் யாவையும் எப்புலம் பெயர்ந்தாலும் ஒன்றதான் அது மீசைகளால் ஆனது என்பதாக இருக்கிறது பிரதீபாவின் விரல் சுட்டி பேசும் இவ்வரிகள்
    
    வீதிகளில்
    தோழர்களுடன் செல்கையில்
    உன் இனத்தவன் ஒருவன்
    எங்களில் யாரேனும் ஒருத்தியை
    உன் இனத்து மொழியிலேயே
    வேசைகள் என்று
    எம் பால் உறுப்புகள் சொல்லி கத்துவான்
    அவர்களை எவ்வித அடையாளமுமின்றி
    ஆண்கள் எனவே
    அழைத்து பழகுவோம்.
     (உனது இனம் அரசியல், ஆ ண்.மொழி)
        பக்-127
    
      -நிலமீட்புக்காக (தாயகம்!) ஆக்கிரமிப்பு மற்றும் சகல விதமான உரிமைகளுக்காகவும் குருதி சிந்தி உயிர் பலி கொடுத்து தியாகங்கள் பல செய்து போராடுவதாக சொல்லும் நிலத்துப் பெண்களின் குரலோ வேறுவிதமாக இருக்கிறது. எல்லைகளுக்குள் சிக்கிக் கொள்ளாத வலிகளையும், காயங்களையும் வழியும் குருதியும் கொண்ட அப்பெண்கள் நீதியற்ற மரணத்தையும், நியாயப்படத்தப்படும் போர்களையும் விலகி நின்று பார்க்கிறார்கள் எனவேதான் அவர்களது அறப்பாடு உலகொடு பெறுவதாக இருக்கிறது.

    நியாயமற்று
    வெறித்தனமாக
    ஒரு மரணத்தை நியாயப்படுத்தவோ
    மரணத்திற்கப் பழகியோ போகாதவரை
    அவர்களுடைய எந்த மொழியும்
    எனது மொழியே........
 
     (பிரதிபா - உனது இனம் அரசியல் ஆண் மொழி பக் - 130)

  தமிழ் தேசியவாதியோரும் கேட்க செவியுள்ளோரும் கேட்க கடவர்!

 ஒலிக்காத இளவேனில் இத்தொகுப்புக் கவிதைகளை வாசிக்க, வாசிக்க முன்னொரு பருவத்தில் எங்கோ ஒலித்த குரலாகவோ மீண்டும் மீண்டும் செவிப்பறைகளை அறைகிறது.யுத்த மேகம் கவிந்திருந்த 80-களில் தமிழீழப் பெண்கள் சமூக ரீதியாக தம்மை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த புரட்சிகர நேரம்

   1985 - ஈழ பெண்கள் விடுதலை முன்னணி
    தமிழீழப் பெண்கள் விடுதலைக் கழகம்
    சுதந்திரப் பறவைகள் 
     - என்பன போர் முனையிலும்,
   84-87 - அன்னையர் முன்னணி,
     யாழ் பல்கலை. பெண்கள் முற்போக்கு சங்கம் 
    
     பெண்கள் ஆய்வு வட்டம்
 பூரணி
  - போன்ற சுயாதீன அமைப்புகளும், வடக்கு மற்றும் கிழக்கு, கொழும்பிலும் இயங்கிய சூர்யநிலா போன்ற பெண்கள் சுயமுன்னேற்ற இயக்கங்களுடாகவும் பல பெண் படைப்பாளிகள் அடையாளப்பட்டனர்.  ஊர்வசி, செல்வி, அவ்வை, மைத்ரேயி, மைதிலி, சங்கரி, தர்ஷினி, அம்மன்கிளி, மசூறாமஜிட், சிவரமணி என்றவாறு அலை, அலையயன ஓயாது கிளம்பிற்று பெண்கள் படையணி.
  
 இவர்களில் பெண்கள் நிலை பற்றியும் பெண்நிலை வாதத்திலும் நின்று பேசினார்கள். இனம் மற்றும் ஆயுதமேந்தும் புரட்சிகர பெருமிதங்களிலிருந்து விடுபட்டு அ.சங்கரியின் சொல்லாத சேதி (கவிதை தொகுப்பு -86) பல புதிய சேதிகளை சொல்வதாக இருந்தது.

 சிங்களரின் பாரிய படையயடுப்பான ஒபரேசன் லிபரேசன் நிகழ்வுக்கும் பிறகு( 86-87) இந்திய படையினரின் வருகையும், மோதலும் (87-89) பெரும் அழிவுகளை ஏற்படுத்தியதினூடாக மேஜர் பாரதி போன்ற பெண் போராளிகளின் கவிதா ஆயுதம் மற்ற போராயுதங்களிலும் ஆற்றல் மிக்கதாகவிருந்ததை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

 பிரகானகாலங்களில் அமைதிப்படையினர் வெளியேற்றம் (89-90) சகோதரக் குழுக்களிடையே எழுந்த ஓயாத மோதல்கள் (90-91) உச்சமடைந்தபோது விரைவிலேயே களத்திலிருந்தும், இயக்கங்களிலிருந்தம், சுயாதீனமிக்க பெண்கள் வெளியேறத் துவங்கினர். அவர்களது முகமும் போராயுதமும் மாறத்துவங்கிற்று.

 இக்கரைக்கும், அக்கரைக்குமாக தேசியவாதிகளும் தேசத்துரோகிகளுமாக ஒரே நாளில் மாறிப்போனதைக் கண்டு வெறுகல் ஆறு திகைத்து குருதியால் நிரம்பிற்று.

 இரஜனிதிராணகம படுகொலைக்கு ஆளானார். செல்வி, சிவரமணி போன்ற அறியப்பட்ட முகங்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகினர்.

  வெள்ளை வான் கடத்தல் காரர்களும், சீருடையற்ற கலாசார காவலரும் நிழலாக மாறி பின்தொடர்ந்தனர் அதனால்தான்

    எனது கைக்கெட்டியவரை
    எனது அடையாளங்கள்
      யாவற்றையும்
    அழித்து விட்டேன்
என்ற வாறு சிவரமணி இவ்வுலகைவிட்டு கெதியாக வெளிக்கிட்டு தமது சிறகை விரித்தார்.
 செல்வி விடுதலை குழுக்களால் சிறைபடுத்தப்பட்டு பின்னர் காணாமல் போகடிக்கப்பட்டார்., சர்வதேச விருதுகளால் கூட அவரை விடுவிக்க இயலவில்லை. இலங்கை பெண்கள் அமைப்பு இன்று ஏந்திய செல்வி நீ எங்கிருக்கிறாய்? என்ற பதாகையின் கேள்வி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

 ஒலிக்காத இளவேனில் இன்னொரு குரல் கிருஷாந்தி இரட்ணராஜாவின்,

    இங்கே என்னுடைய இயற்கை ரசிப்பும்
    இனிமையான ஒரு மாலைக் காட்சியும்
    எதிர்காலத்தின்
    வாழ்க்கைப் போக்கை பற்றிய கற்பனையும்
    எழுதப்படாமற் போய்விட்டன.

      - இக்கவிதை எழுப்பும் கேள்வியும்  அசாதாரணமான சூழலும் நிலைமை இன்னும் மாறிடவில்லை என்பதைதான் சொல்கிறது. செல்வி, சிவரமணி, போன்றோர் இவ்வரிகளின் ஊடாக எழுந்து நினைவாக அடங்குவதை தவிர்க்க முடியவில்லை கிருஷாந்தி இன்று நம்முடன் இருக்கவில்லை.

 களத்தைவிட்டு, புலத்திற்கு பெயரும் இழப்பதற்கு ஏதுமற்ற இப்பெண்கள், தம்மோடு பெரும் சுமையயன வலிகளையும், கொல்லும் தனிமையையும், ஒருபோதும் அழுது தீரா கண்ணீரையும் அவர்தம் எழுத்தின் சன்னங்களாக்கி சகலரையும் துளைத்து விடுகிறார்கள். ஏற்கனவே புலப்பெயர்வு தரும் வாழ்தலின் நெருக்கடிகளை அரவிந்தன், விஜேந்திரன் போன்றோர் எழுதி சென்றிருப்பினும், பெண்கள் தம்மை அச்சுறுத்தம் அயலக இரவுகளை, பொழுதுகளை, தனிமைகளை சொல்வது இப்போதுதான்.

     பல்க்கனி கம்பிகள் மீறி
     ஒரு உயிர் கூட்டின் சிதைவு
     புலம் பெயர்வில்
     அவள் கறை படிந்த
     இன்னுமோர் குருதித் துளி
      (-துர்க்கா, உலகம் துண்டிக்கப்பட - பக் 83)
  
புலப்பெயர்விலும் யாழ்ப்பாணத்து அதே கிடுகு வேலிகள், மேலெழும்பி, பின்தொடர்ந்து குறுக்கும் நெடுக்குமாய் நின்று மறிக்கின்றன. பெயரும், நிலமும்தான் வேறு கொங்கிரீட், கிறில் கம்பிகள் நியுயார்க் கனேடா சிறையிடப்பட்ட பெண்கள் ஒன்றுதான்.

    .....  தகர்க்க முடியாது
     நெருக்கமாய்
     உயர்ந்து
     காற்றைப் பறிக்கும்
     சுவர்கள்
     வெறுமையாய்
     வேட்கையில்லாது
     எதிர்படும் காலங்கள்
     நேசிப்பதற்கும்
     நேசிக்கவும்
     வெறித்தபடி
     மரணம் மட்டும்

      (-துர்க்கா, குரூரமான சுவர்களுக்குள் பக் : 82)

 பெண்களை போன்றே புலம்பெயர்ந்து வரும் இந்த ஆண்களுக்கு வழக்கம்போலவே எவ்வித தடைகளும் இருப்பதில்லைதான் களத்தில் நின்ற (!) இந்த முன்னாள் போராளி வீரர்கள் என்ன செய்கிறார்கள். அங்கு அவர்களுக்கான களம் எது? வடக்கிலிருந்து பெயர்த்து எடுத்துவந்த மரபுவேலியை "பதியன் ’’ போடுவதும் அதை காப்பாற்றி வளர்ப்பதுமாகவே இருக்கிறது. பல தேசிய இனப் பெண்களை பகடிப்பது, நிழல் உலக வன்முறைக் குழுக்களுடன் இணைந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதுமாக நடக்கிறது. இவ்வாறான ஒருவகை கலாச்சாரத்தினுள் வீழ்வது கறுப்பு சேரிகள் எனப்படும் இதுபோன்ற கீழ்நிலைப் பகுதிகளை மேற்குலகு திட்டமிட்டே பிரித்துவைக்கும் வேலைத்திட்டத்தின் ஒருபகுதியாகும் என்கிறார்கள் எனினும் புலப்பெயரும் பெண்கள் இவ்வகை சொந்த நிலத்து ஆண்களால் கண்ணுக்குப் புலப்படாத ஒருவகை கண்ணிகளால் பிணைக்கப்பட்டடுள்ளனர் என்றுதான் சொல்லவேண்டும் அதனால்தான் துர்க்காவின் கவிதை இப்படி சொல்கிறது.

    அவரின் மகள்
    இவரின் மனைவி
    உங்களின் தாய் என்பதை விட
    நான் என்பதாக
    விட்டுச் செல்ல விரும்புகிறேன்
    எனக்காக என் சுவடுகளை
      (அவரின் மகள் பக்:80 )

 தனிமையை எரித்து கண்காணிப்புகளை தகர்த்து வாழ்தலை நம்பிக்கையோடும், உறுதிபடவும் மொழிகிறது மற்றொரு புலப்பெயர் குரல்.     

     நீங்கள் எச்சரித்தது போலவும் இல்லாமலும்,
    ஆனாலும்
    வாழ்வேன்!
    என் எல்லாக்
    காயங்களிலிருந்தும்
    உடைவுகளிலிருந்தும்
    நோவுகளிலிருந்தும்
    ஆத்திரங்களிலிருந்தும்
    ஏமாற்றங்களிலிருந்தும்....
       ( - கொளசல்யா, கூட்டாட்சி பக் 101 )

 இந்த நெடிய குருதி பெருக்கும் போராட்டம் பெண்களுக்கு நாளை வழங்கும் தேசம் எத்தகையது. பொதுவான கனவுகளின் நீரோட்டத்தில் அடையாளமற்று கரைத்துவிடும் அச்சம் விடுவதாயில்லை. அனாரின் அச்சம் நிழல்போல நீண்டு படர்கிறது.

    மலர்களின் பார்வைகள்
    அந்தியில் ஒடுங்கிவிடுகின்றன
    அவைகளின் கனவுகள் மாத்திரம்
    காற்றில் அலைகின்றன
    என் கவிதைகளைப் போல

     - சிவரமணியின் முன்பு ஒலித்த குரலும் இதுதான். அனாருக்கும் - சிவரமணிக்கும் இடையே கடந்து வந்த இந்த கவிதையும் காலமும் இன்னும் தன்னளவில் கரைந்து விடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

 80 களில் அவ்வாறே சிவரமணி மிகுந்த நம்பிக்கையோடு "உலகை மாற்றுவோம் வாருங்கள் தோழியரே ’’ என்ற அறை கூவல் பின்னாட்களில்

   நாங்கள் எழுந்தோம் உலகை மாற்றுவோம் வாருங்கள் தோழியரே என்று அறைகூவல் பின்னாட்களில்

     நாங்கள் எழுந்தோம் உலகை மாற்ற அல்ல
     இன்னொரு இரவை நோக்கி
      -என்று விசனத்தோடு கூவி தேய்ந்திற்று அக்குயில்

 நிலமும், பெண்ணுடலும் வேறு வேறு அல்ல நிலத்தின் மீதான ஆதிக்கமும், அதிகாரமும், சுரண்டலும், பெண்ணையும் சுரண்டுவதாகிறது. உடைமை சமூகத்தின் வழி பெண்ணுடலும் நிறுவமையப்பட்டிருக்கும் நிலையில் அரசு, குடும்பம், மதம் போன்றவை மேலும், மேலும் இறுகிக் கொண்டுள்ளன. மண்ணையும் அதனூடாக பெண்ணையும் வரலாற்று காலந்தொட்டு பிணைக்கப்பட்டுள்ள கண்ணிகளை நாம் புரிந்துகொள்வோமானால் இக்கவிதைகள், இப்பெண்மொழி யாவற்றையும் புரிந்துக்கொள்வது எளிதாகிவிடும்.

      நூல் : ஒலிக்காத இளவேனில்
         (கவிதை தொகுப்பு)
      தொகுப்பு : தான்யா, பிரதிபா கனகா-தில்லைநாதன்.
      முதலாம் பதிப்பு - டிசம்பர் 2009
      வெளியீடு : வடலி
      விலை  : 135.00
      பக்கம்  : 172

(காலச்சுவடு மே 2013 இதழில் வெளியான கட்டுரையின் முழுமையான வடிவம்)

Pin It