ஆசிரியையாகப் பணியாற்றும் இளம்பிறை (இயற்பெயர் ச.பஞ்சவர்ணம்) எழுதிய ‘முதல் மனுசி’ தொகுப்பில் முதலிடம் பெறும் கவிதை ‘அப்பாவின் கையெழுத்து’! இதில் கிராமத்துப் பள்ளி மாணவி மதிப்பெண் அட்டையில் தந்தையிடம் கையெழுத்து வாங்குகிறாள் என்பதுதான் கவிதைக்கரு. யதார்த்த வகைக் கவிதையான இதில் கற்பனை கலக்காமல் அழகாக இருக்கிறது. ‘உண்மையே அழகு’ என்பதை நாம் இக்கவிதை மூலம் தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம்.

 பற்கள் மஞ்சள் கறை படிந்திருக்க, தலைக்குத் தடவ எண்ணெய் கூட இல்லாத ஏழைச் சிறுமியின் சொற்சித்திரம் கவிதைக்கு அழகு சேர்க்கிறது. அப்பா சன்னாசியின் அறியாமை சிறுமியின் மனத்தைக் கலப்பையாக உழுகிறது. ஆனாலும் அப்பா, சிறுமி ரேகை வைக்கச் சொன்னதும், ‘யாம்... யாம் ... நான் என்னஃகையெழுத்துப் போடத் தெரியாதவனா?” என்று கேட்பதும், அடுத்த நொடியே, ‘அந்தச் சிலேட்டுப் பலகையை எடுத்து எம்பேர எழுத்தா என்பதும் கல்லாமையின் அறியாமை, தொண்டை தாண்டியும் கசக்கிறது. ஒரு விடியலின் அவசியத்தை தொனிக்கச் செய்கிறது இக்கவிதை!

 போன தடவ மாதிரி
 எல்லார்ட்டையும் காட்டி
 சொல்லிச் சிரிக்காம இருக்கணுமே
 சுப்பிரமணிய சாரு

 என்ற சிறுமியின் கவலை வாசகர் மனத்தைக் கனக்கச் செய்கிறது. அந்த சீட்டிப் பாவாடை அவள் குடும்பப் பொருளாதாரத்தின் குறியீடாக இருக்கிறது.

 ‘சென்னைத் தோழிகள் கேள்வி’ - தமிழில் பிற மொழிச் சொற்கள் கலப்பைப் பற்றிப் பேசுகிறது. இக்கவிதை எழுப்பும் தொனி அர்த்தமுள்ளது. ‘பெரிதும்’ என்ற கவிதை கட்சிகளின் எண்ணிக்கை அதிக முள்ளதை அழுத்தமாகக் கண்டிக்கிறது. மனிதர்கள் பிரிந்து கிடக்கும் அவலத்தை முன் வைக்கிறது.

 பணிக்கால பதிவுகள் - எழுதியவர் பெண் என்னும் அடையாளத்தைக் காட்டுகிறது. ஓர் ஆண் இப்படிச் சிந்திப்பது சாத்தியமில்லை.

 நெகிழ்ந்து போகிறேன்.
 உன்னோடு பேசிக் கொண்டிருப்பதை விட
 உன்னைப் பற்றி

 பேசிக் கொண்டிருப்பதில்
 இன்னும் கூடுதலாக...

இதில் மனிதனைவிட்டுவிட்டு அவன் பிம்பத்தை நேசிக்கும் போக்கு உருவாகிவிடுகிறது.

 ‘கடைசியை அளத்தல்’ -தெளிவாக இல்லை. ‘விருப்பங்கள் பலவும்’ கவிதையின் தொடக்கமே மிரட்டுகிறது. சிக்கலான வெளியீட்டு முறையே இதற்குக் காரணம்.

 பகுதி-5 நம் கவனத்தை ஈர்க்கிறது.
 பிடிக்கவில்லை திரைப்படம்
 பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
 பிடித்திருக்கிறது
 உன்னுடன் உட்கார்ந்திருப்பது

- மென்னையான காதலைச் சிந்தாமல் சிதறாமல் நம் முன்வைக்கிறது இக்கவிதை! ரசிக்க முடிகிறது. ‘உனக்கான கவிதையில்’! சில நயமான வரிகள்:

 கால் மாட்டிக் கொள்ளும்
 வெடிப்புளில்...
 ...........................
 ...........................
 உதிர்ந்து கொண்டிருக்கும்
 தன் இறகுகளை
 பூச்சிகள் இழுத்துக் கொண்டு
 பார்த்துக் கொண்டிருக்கும் பறவைக்கு

இக்கவிதையில் மூன்றாம் பத்தியில் ‘யானை’ குறியீடாகப் பயன்படுத்தப்பட்டள்ளது. ‘இமைக்குள்’ எனத் தொடங்கும் பத்தி, வாழ்க்கையின் தவறான பாதையைச் சூட்டுவதாகத் தோன்றுகிறது. கவிதையில் தெளிவைப் புறந்தள்ளிவிட்டு. புதிர்த்தன்மை உருவாகிவிடுவதில் வாசகர்களுக்கு மேற்சொன்ன யூகம் தோன்றுகிறது. இது தவிர்க்கப்படலாம்.

 தொகுப்பின் தலைப்புக் கவிதை ‘முதல் மனுசி’யில் கர்ப்பிணியின் அனுபவம் பேசப்படுகிறது.

 அசைவது யார்
 சிறகாய் வயிற்றில்?
 சிலிர்ப்பதேன் உடல்
 மெல்லிட துடிப்பில்
 இடமும் வலமும்
 புரண்டு கொண்டிருப்பது
 என்னவாக இருக்கும்
 சிரிப்பு வருவதேன்
 வலியிலும்?

 இக்கவிதையில் ‘சிறகாய் வயிற்றில்’ என்ற வெளிப்பாட்டை நான் வேறு கவிதையில் படித்ததில்லை. கணவனும் மனைவியும் ஆதாம் - ஏவாளாக உருவகப்படுத்தப்படுகிறார்கள். ‘பச்சை இலைகள் உதிர்ந்தன’ என்று தொடங்கும் பகுதியில் பிரசவ வேதனையும், குழந்தை பிறத்தலும் படிமம் கொண்டுள்ளன. கவிதையில் தேர்ந்த சொற்களாலான ஒரு கட்டமைப்பு உருவாகியுள்ளது.

 ‘இப்பவும் என் கிராமத்துல! –நாட்டுப்புறப் பாணியில் அமைந்த பாடலாகும். சரளமான சொல்லோட்டம் ரசிக்கும் படியாக இருக்கிறது. ஏழைகளுக்கான ஆதரவுக் குரல் நன்றாகப் பதிவாகியுள்ளது. முடிவாக இளம்பிறை-கவிதைகளை படித்து ரசிக்கலாம். இது சராசரிக்கும் மேலான ஒரு தொகுப்பு!

 - ஸ்ரீரங்கம் சௌரிராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It