இத்தொகுப்பிலுள்ள 59 கவிதைகளில் 17 தலைப்பில்லாதவை. கவிதையின் பாடுபொருள் பெரும்பாலும் சல்மாவே கூறியபடி ‘தனக்குள்ளேயே வசிக்க நேர்ந்து விட்ட நீண்ட தனிமை’ ஆகும். ஒரே பாடுபொருளை வேறு வேறு சந்தர்ப்பங்களில் எழுதும்போது இவர் காட்டும் பரிமாண பேதம் நம்மை மிகவும் வியக்க வைக்கிறது. இவர் எழுதிய சர்ச்சைக்குரிய வரிகளால் உருவான பிம்பத்திற்கு முற்றிலும் தொடர்பில்லாத அழகான, அற்புதமான கவிதைகளில்பால் எழும் என் பார்வையைப் பதிவு வெய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

 முதல் கவிதை ‘பட வீட்டின் தனிமை’யில்

            கண்கள் பூக்கள் மீதிருக்க

            மனம் தேடிப் போகிறது

            வரைபட வீட்டின்

            தனிமையை

என்பதில் தனிமை தனிமையைத் தேடிச் செல்கிறது என்ற குறிப்பை அறிய முடிகிறது.

            ‘விலகிப் போகும் வாழ்க்கையில்

            பயணத்தில் விலகிப் போகும்

            ஒற்றை மரத்தின் நிழலையும்

என்னோடு அழைத்துப் போக நினைக்கிறேன் என்பதில் நிழலோடான தோழமையும், அந்நிழலின் தனிமை பொறா நிலைமையும் சுட்டப்படுகின்றன.

            வயதை மட்டும் வைத்துக் கொண்டு

            வாழ்வை வழியனுப்புதல்போல்

என்ற உவமை தனிமைத்துயரை உள்ளடக்குகிறது.

            கள்ளிச் செடிகள் மட்டும்தான்

            நம் வாழ்க்கை முழுவதற்குமான

            மலர்ச் செண்டுகளாய்

            அனுப்பப் படுகின்றன

என்ற குறியீட்டியல் சார்ந்த படிமம் வாழ்க்கை மறுக்கப்படுகிறது என்பதை உணர்த்துகிறது.

 தனது மென்மை, மன உறுதி, நேசம், கவிதை, காதல் போன்றவற்றை ஏதேதோ அறிய, ‘உனக்கு மட்டும் என்னைப் புரியவில்லை’ என்று குற்றம் சாட்டுவதுபோல் அமைந்துள்ளது ‘தாம்பத்தியம்’ கவிதை!

‘சுவாசம்’ கவிதை…

            நான் அனுமதிக்கத்தான் வேண்டுமா

            என் சுவாசம்

            நானின்றி நிகழ்வதை

என்று முடிகிறது. சுய பங்களிப்பின்மையோடு அவலச் சுவை மிகுந்து காணப்படுகிறது. புதிய பல சிந்தனைகள் பதிவாகியுள்ளன. ஒரே புள்ளியில் கவனம் குவிதல் என்ற உத்தி இயல்பாக அமைந்து அழகூட்டுகிறது.

            எனக்காக நிகழும் அவை

            நானில்லாமலேயே நடந்து விடுகின்றன

என்ற வரிகள் பூடகத்தன்மையும் தத்துவார்த்தமும் கொண்டு, இருத்தலின் புறக்கணிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

 ‘தடயங்கள் அழிக்கப்பட்ட பிறகு’ கவிதையில் பிள்ளைப்பருவம் பேசப்படுகிறது. இறுதிப் பத்தி வழக்கம்போல் தனிமைத் துயரைச் சொல்கிறது. ‘வெற்றிடங்களிலிருந்து’ கவிதை, பாலியல்கூறு ஒன்றுடன் தொடங்கித் தெளிவின்மையில் தொடர்கிறது.

            ‘நினைவுத் துயர்’-ல் அந்தரங்கமான சோகம் ததும்பி நிற்கிறது.

            நினைவுகளின் அமுதம்

            நினைவுகளின் விஷம்

என்பது நல்ல வெளிப்படு.

            தூரத்தில்

            என்னையோ

            வேறு யாரையோ

            கூப்பிடும் ஒற்றைப் பறவை

என்னும் படிமம் கவிதைக்கு வலிமை சேர்க்கிறது. ‘ஒற்றைப் பறவை’ என்பது ‘என்னைப் போலவே பறவையும் தனிமையில்’ என்ற குறிப்பைத் தருகிறது. ‘ஒரு பறவை’ என்று சொல்லியிருந்தால் மேற்கண்ட பொருட்செறிவு வாசகனுக்குக் கிட்டாமல் போகும். ‘எழுதி முடிக்காத பாதிக் கவிதை’ என்ற வரி குறியீடு எனக் கொண்டால் அந்த வரி அர்த்த கனம் தருகிறது.

‘இந்தக் கனவுகளிடம்’ கவிதையில்… ஆன்மாவிற்கு ஓரிடம், சிறிது ஒளி, மனபலம், உத்திரவாதம், அனுதாபம், கொஞ்சம் அதிர்ஷ்டம், சித்திரத்திற்கு வேண்டிய வண்ணங்கள், நம்பிக்கை, அவகாசம் - என எதைத் தரக் கூடும் என்று கேட்கிறார் சல்மா! இதில் நல்ல தெளிவும் நேர்த்தியான சொல்லாட்சியும் இயல்பாக அமைந்துள்ளது.

            இன்னும் கூட எழுதி முடிக்கப்படாத

            சித்திரத்திற்கு வேண்டிய

            வண்ணங்களை

என்ற வரிகளில் ‘.இன்னும் கூட’ என்ற வெளிப்பாட்டின் நயம் ‘இப்போதே மிகவும் தாமதம்’ என்ற பொருளைத் தருகிறது.

            ‘புறக்கணிப்பு’ ஒரு வேண்டுதலை முன் வைக்கிறது.

            கூடு தேடிச் செல்லும்

            பறவைக் கூட்டம்

            பொருட்படுத்துவதேயில்லை

            உனது வீட்டுத் தோட்டத்தின்

            ஒற்றை மரத்தினை

‘ஒற்றை மரம்’ இங்கும் சிறப்புக் கவனம் பெறுகிறது. தனியாய் இருக்கும் எதனுடனும் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளும் போக்கு காணப்படுகிறது.

 ‘எனது சித்திரம்’ தன் மீதான கவன ஈர்ப்பைக் கோருகிறது. ‘உனக்கு இசைவான வர்ணங்களை நீ தீட்டக் கூடும்’ என்பதில் ஆண் மன உணர்வுகளுக்கு இடமளிக்கும் போக்கு ஒரு நல்ல தோழமையை இயல்பாக முன்மொழிகிறது.

            அச்சித்திரம் வரையப்பட்டிருக்கிறது

            சில அழுத்தமான கோடுகளால்

என்பதில் பெண் மன விருப்பங்களின் பங்களிப்பு சூசகமாக வலியுறுத்தப்படுகின்றன. இது ஒரு நல்ல கவிதை!

 ‘உன் நினைவெனும் புதைகுழி’ ஓர் அருமையான காதல் கவிதை!

            உன் நினைவுகள்

            கடும் பனியின் நிசப்தமாய்

            என்னோடிருக்க

என்ற வரிகள் - குறிப்பாக ‘ கடும் பனியின் நிசப்தம்’ – மிகவும் பொருட்செறிவு கொண்டது. குளிர்வது போல் தொடங்கி மிகவும் கடுமையாய்த் தண்டித்து விடும் இயல்பு கொண்டதே அப்பணி! கவிதையின் நான்காம் பத்தியில்…

            மெழுகின் ஒளியில்

            சுவரில் வளர்ந்து ததும்பும்

            நிழல்கள் போல

என்பதில் துல்லியத் தன்மையோடு ஓர் உவமை பளிச்சிடுகிறது.

 புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்!’ இதுவே இத் தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதை எனக் கொள்ளலாம். இக்கவிதையின் பதினைந்து பத்திகளிலும் நிம்மதியின்மை அலசப்படுகிறது. ‘இன்னொரு மாலை! என்பது மணமாலை! புதுப்புது படிமங்களை அடுக்குகிறார் சல்மா!

            கூண்டுகளுள் எழும்பிய

            வீடுகள் தமது பரப்புகளை

            அதிகரித்ததின் நோக்கம்

            என்னைப் பயமுறுத்துவது மட்டுமே

வீடுகளின் பரப்பு அதிகரிப்பது என்பது அசாதாரண படிமத்தை முன் வைக்கிறது. சாத்தியமின்மை இங்கு கவித்துவம் கொண்டு கவிதையை அழகு செய்கிறது.

 சுவர் தாண்ட முடியாத கால்கள், மூச்சுக் காற்றில் கந்தக நெடி, பிற உயிரினங்களின் தாம்பத்தியம், பதற்றமான இரவு, டீ குடிக்கக் கூட ஆர்வமின்மை, கூண்டுக்குள் எழும்பிய வீடுகள், சுவர்களுக்குள் உருவாகிவிட்ட தோட்டம், அந்தரங்கத்தை உறுதி செய்ய முடியாத மொட்டை மாடி, வசதியில்லாத இருக்கை என விரக்தியின் எல்லைக்கே போய் விடுகிறது கவிதை!

            என் குழந்தை

            தன் தொட்டிலைத்

            தரக் கூடுமெனில்

            உறங்குதல் சாத்தியமாகலாம்

என்ற கவிதையின் முத்தாய்ப்பு கவிஞர் கண்ணதாசனின் “என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே!” என்ற சொற்களை (புதிய பறவை) நினைவூட்டுகிறது. மிக எளிய சொற்களால் நேர்படப் பேசித் தனிமையின் கொடுமையை அழுத்தமாகச் சொல்லியுள்ளார் கவிஞர்!

‘இரண்டாம் ஜாமத்தின் கதை’யில் வலுவான ஒரு படிமம் காணப்படுகிறது.

            சுவரோவியத்தில் அமைதியாக

            அமர்ந்திருந்த புலி

            இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்

            என் தலைமாட்டில மர்ந்து

            உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது

‘புலி’ காமத்தின் குறியீடாகச் சொல்லப்பட்டிருக்கிற எனலாம். தாம்பத்தியம் இக்கவிதையின் பாடுபொருள். பிரசவக் கோடுகள் பற்றிய கவலை பெண்ணுக்கும் ஆணுக்கும்…! வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை’ என்னும் வெளிப்படு சுருக்கென்கிறது.

‘மிரட்டல்கள் தோய்ந்த கவிதையின் கரு, ஆண் - பெண் பிணக்கு! இதில் அழகான சிந்தனைகளும், அற்புதமான வெளிப்படுகளும் காணப்படுகின்றன.

            எந்த நேரமும் ஒடுங்கியே கிடக்கும்;

            பாதாள உலகம் வரை கூடப் பயணித்து

            கடும் சாபங்களுடன் திரும்பியிருக்கிறேன்

என்ற சொற்கள் அவமானத்தை – மனம் உடைந்து போன சோக சம்பவத்தை உள்ளடக்குகிறது.

            மலை முகட்டின் உச்சியில் நின்று

            சரியத் தயாராய்

            அந்தக் கல்

என்ற படிமம் பூடகத்தன்மையோடு கடும் எச்சரிக்கையும் செய்து நம்மை நாற்காலி விளிம்பில் உட்கார வைக்கிறது.

‘பயணத்திற்குப் பிந்தைய வீடு’ என்ற கவிதை ‘சோதனைக் களம்’ என்ற கருத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. வீடு அந்நியப்பட்டுத் தெரிதல், சலிப்பூ+ட்டுதல்’, தாழிடப்பட்ட அறை உருவாக்கும் இறுக்கம் எனப் பல நிலைகள் பேசப்படுகின்றன. மன உளைச்சல் இக்கவிதையில் விரவிக் கிடக்கிறது.

இத்தொகுப்பின் கடைசிக் கவிதை ‘நீங்குதல்..!

            இந்த மரங்கள்

            என்றைக்கேனும்

            இங்கிருந்து செல்லக் கூடும்

            திரும்புவதில்லை யெனும்

            வைராக்கியத்தோடு

இதில் மனத்தில் ஊறிப்போன சூன்ய தரிசனம் வெளிப்படுகிறது. மரங்கள் இருப்பதை எண்ணி அவற்றை ரசித்து மகிழ முடியவில்லை. மாறாக அவை ஒருநாள் இல்லாமல் போகும் என்ற எதிர்கால இழப்பை இப்போதே உணர்தல் விரக்தியின் - தாழ்வு மனச் சிக்கலின் - வெளிப்பாடு!

இத்தொகுப்பு ஒரு வகையில் வித்தியாசமான தொகுப்பு ஆகும். பல நல்ல வெற்றிக் கவிதைகளைக் கொண்டுள்ளதால் வளமான இலக்கிய அனுபவம் வாசிப்பில் கிட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சல்மாவின் சொல்லாட்சி நல்ல கவிதைச் சக்தி கொண்டு கலை நேர்த்தியுடன் இணைவது ஆரோக்கியமானது.

 

Pin It