மின் வாரியத்தில் பணி புரிந்து ஒய்வு பெற்ற மின் பொறியாளர் சா.காந்தி எழுதிய "தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும், காரணமும் தீர்வும்" என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மின் வெட்டு அதிகரித்துள்ள நிலையில், மின் கட்டணம் வேகமாக உயர்ந்துள்ள சூழலில், தமிழக மின் வாரியத்தின் உள்ளே நடக்கும் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் நடக்கும் குளறுபடிகளின் பின்னணியில் இப் புத்தகம் மிகுந்த முக்கியத்துவம் பெருகிறது.

உலகமயமாக்கல், தாராள மயமாக்கல் என்ற பொருளாதார தத்துவங்கள் 1990களின் பின் பகுதியில் நம் நாட்டில் கோலோச்சத் துவங்கிய பின்பு, நமது எல்லா சட்டங்களும் மக்கள் நலன் என்ற பாதையிலிருந்து மெல்ல விலகி தனியார் லாபம் என்ற கணக்குக்கு மாறி விட்டது. (டங்கல் திட்டம் காவல் துறை, ராணுவம் தவிர எல்லா துறைகளையும் அரசு தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் எனக்கூறியது)

கடந்த 2001 ஆண்டு வரை ரூ 387.67 கோடி லாபம் பார்த்த தமிழக மின்சாரவாரியம் அதற்கு அடுத்த ஆண்டே ரூ. 110.13 கோடி நட்டத்தை சந்தித்தது. இந்த கால கட்டத்தில்தான் தனியார் முதலாளிகள் மின்சாரம் உற்பத்தி செய்ய கால் ஊன்றுகின்றனர். அரசு புதிய மின் உற்பத்தித் திட்டங்களுக்கு நிதி உதவிகளை நிறுத்துகிறது. 2003 ஆம் ஆண்டு நம் நாட்டில் புதிய மின்சார சட்டம் வருகிறது. இது மாநில அரசின் கையிலிருந்த மின் துறையை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டுக்கு மாற்றுகிறது. ஒய்வு பெற்ற அதிகாரிகள் நீதிபதிகளைப் போல செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில் தனியார் நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்குக் கூடுதல் தொகையை மின்வாரியத்திடமிருந்து பெறமுயன்று வெற்றி பெற்றன.

தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் செலவு செய்த மூலதனத்தொகையைக் கூட மின் வாரியம் தனியாருக்குத் தர உத்திரவு இடப்பட்டது. மின் வாரியத்தின் வருவாய் தனியார் மின் முதலாளிகளைத் தாலாட்டவே பற்றாக்குறையாயிருந்தது. புதிய மின் நிலையங்கள் இல்லாத நிலையில் மின் பற்றாக்குறை அதிகரித்தது. தனியார் முதலாளிகள் ஒரு யூனிட்டுக்கு ரூ 2 மின்கட்டணத்தை ரூ7 வரை விலை வைத்தனர். சில நெருக்கடியான சுழலில் ரூ17.78 காசுகள் வரை நீண்டது. ஜி.எம்.ஆர் ,பி.பி.என். மதுரை பவர், சாம்பல்பட்டி, நெய்வெலி எஸ்.டி.சி.எம்.எஸ் ஆகிய தனியார் பன்னாட்டுக் கம்பெனிகள் பெருத்த லாபம் அடைந்தன.

மின்சார ஒழுங்கு முறை ஆணையமோ வருடம் தோரும் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என உத்தரவும் இட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு - நவீன தாராளமயக் கொள்கையின் விழைவு. மக்கள்மயமாக்கலுக்குப் பதிலாக மின்சாரம் ஒரு சில தனியாருக்கு சொந்தமானதாக மாறிவருகிறது. மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்துறையை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 2003 மின்சார சட்டத்தை நொறுக்காமல் மக்களுக்கு விடிவில்லை என்பதை தகுந்த புள்ளிவிபர மற்றும் பிற சான்றுகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர். இந்தப் புத்தகத்தினை உருவாக்க பெரிதும் உதவியதாக டாக்டர் ஆர். ரமேஸ் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இப் புத்தகம் மிகுந்த கவனம் பெறவேண்டியது அவசியம். அரசியல் இயக்கங்கள் இது குறித்து விவாதத்தைத் துவங்க வேண்டும்.

வெளியீடு: ஆழி பப்ளிகேசன்,மே 17 இயக்கம்,பெரியார் திராவிடர் கழகம்.

1A திலகர் தெரு,பாலாஜி நகர்,துண்டல்,அய்யப்பந்தாங்கல்,சென்னை 600 077 போன் 9940147473

- ச.பாலமுருகன்

Pin It