மறைந்த எழுத்தாளர் நகுலன் அவர்கள் "எழுத்தாளனுக்கும், வாசகனுக்கும் நடுவில் வார்த்தைகள் நிற்கின்றன. அவைகளைத் துடைத்தெறிய வேண்டும்..." என்று ஒரு கவிதையில் கூறியிருப்பார். 'எழுத்தாளனும், வாசகனும் சந்திக்கும் ஒரு ஒற்றைப் புள்ளியை உருவாக்குவதே ஒரு நல்ல படைப்பின் நோக்கம்' என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய கூற்றே. கவிஞர் ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவர்களின் "உரிய நேரம்" தொகுப்பைப் படித்து முடிந்ததும், நகுலனின் அளவுகோல் இவருக்கு ஆதரவாகவே உள்ளது என்ற முடிவுக்கு வர முடிந்தது.

 தனக்கான பிரத்யேகமான கவிதை மொழியை உருவாக்கிக் கொண்டவர்களே நல்ல கவிஞர்களாகத் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்ற நோக்கில் பார்க்கும்போது, புதுக்கவிதைக்கும், நவீனக் கவிதைக்கும் இடைப்பட்ட ஒரு மொழியைக் கவிஞர் கையாண்டுள்ள விதம் பாராட்டத் தக்கது.

 காட்சிப் படிமங்கள் தொகுப்பில் அங்கங்கே விரவிக் கிடந்து நல்ல வாசிப்பனுவத்தைத் தருகின்றன :-

 * " அழித்து முடிந்ததும் வியர்வையாய் ஓவியனின் முகம்
    கண்ணீர் சொரிந்தது"

 * " கொட்டும் மழையில் கோழியின் வயிறே கூரையாக,
    சிறகுகள் சுவர்களாக நனையாத அந்தச் சிறு இடத்தில்
    தெரிந்தன ஐந்தாறு ஜோடி சிறிய ஈர்க்குச்சிக் கால்கள்"

 * " வானத்துக்கும், பூமிக்குமாய் நிற்கும் பிரம்மாண்ட இசைக்கருவியின்
    நரம்பு வரிசை போல நீர்த்தாரைகள்
    விழுந்து கொண்டிருக்கின்றன".

பால்யப் பருவத்து நினைவுகள் நம் எல்லோர் மனங்களிலும் அழியாச் சுடர்களாய் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. இதைப் பாடாத கவிஞர்கள் வெகு சொற்பம். ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவர்களும் அந்தக் கவலைகளற்ற பால்யப் பருவத்துக்குத் திரும்பிச் செல்ல முடியாத கையறு நிலையைப் பல கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார். அதில் என்னைக் கவர்ந்த வரிகள் :-

 * "ஆறில் நடந்த சம்பவத்தை இன்று நினைக்கையில் என் வாழ்க்கை
  வரைபடத்தைக் காற்று முகத்தில் அறைந்த சூசகம் இப்போது
  புரிகிறது"

• "நான் எதிர்பார்த்தது போலவே தாத்தா இந்தா என்றார். ஓட்டைக்
 காலணாவை வாங்கி, இடது கை சுண்டு விரலில் மாட்டிக்
 கொண்டேன். உலகம் என் கைக்குள் வந்தது"

 60 வயதைக் கடந்தவருக்கு காதல் வயப்பட்ட ஒரு 20 வயது இளைஞனின் அதீத கற்பனை எப்படிச் சாத்தியம்? கவிஞனுக்கு மட்டுமே இது சாத்தியம் என்பது கீழே உள்ள வரிகளைப் படித்ததும் புரிந்தது.

• "ஆளில்லாத கிரகம் ஒன்றைக் கொக்கி போட்டு நிலவில்
   தொங்கவிட்டு நாம் ஊஞ்சல் ஆடிப் பார்த்தால் என்ன?"

 வெகு சாதாரணமான கவிதைகள் சில தொகுப்பில் அங்கங்கே தலை காட்டுவது தவிர்க்கப் பட்டிருக்கலாம் :-

• "ஊசிப்போன உணவை ஒதுக்குப் புறமாக எடுத்து வைத்து கையைக்
  கழுவினாள் எஜமானியம்மாள்! அது வேலைக்காரிக்காக!"
                    ( சாதாரண சிந்தனை)

• "கடவுள் ஒரு பேராசைக்காரக் குழந்தை இல்லையேல்
  பொழுதுபோக்காக விளையாட, ஏன் இத்தனை உயிரினங்கள்?"
                     ( பழைய கற்பனை)

• " நண்டைப் பிடித்துத் தோளில் தொங்கும் சிறிய நீர்க்கலயத்தில்
   போட்டான்!  இதுகண்டு, தேர்தலில் நம்பி வாக்களித்து ஏமாந்த
   மக்கள் என் நினைவில் வருவதேன்?"
       ( தேவையற்ற விளக்கம்)

• " நூறு வருடத் தவம் இயற்றும் மூதாட்டி சலிப்பதேயில்லை!
   வாழ்க்கையின் மகத்தான செய்தியன்றைச்
   சொல்லிய வண்ணம்...."
                     ( தேவையற்ற விளக்கம்)

• " குறித்த இடத்திற்கு ஐந்து நிமிடங்கள் தாமதமாகச் சென்றேன்!
   நண்பரைப் பார்க்க முடியவில்லை! அடுத்த சந்திப்பில் விபரம்
   சொன்னேன்! அவர் அங்கே தான் வரவில்லை என்றார்."
                       ( உரைநடை)

 ஒரு இலக்கிய விமர்சகராகப் பரவலாக அறியப் பெற்ற ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவர்கள், ஒரு கவிஞராகத் தன்னைப் பிரகடனம் செய்யும் விதமாக இக்கவிதைத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார். இடர்பாடுகளைத் தாண்டி தொடர்ந்து முன் சென்றால், நற்கவிஞர்கள் சபையில் இவர் ஒரு நாற்காலியைத் தன்வசமாக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது என்ரு துணிந்து கூறலாம்.

  *************************************

   வெளியீடு : சௌ. ராஜேஷ்,
      'கி' நி2, ஆனந்த் அவென்யூ,
      மேலூர் சாலை,
      ஸ்ரீரங்கம், திருச்சி - 620006.
      அலைபேசி - 80120 56485.

   பக்கங்கள் : 100

   விலை   : ரூ. 95/-.

  *************************************

- பா.சேதுமாதவன்

Pin It