மன்னர் ஷேர்ஷாவால் உருவாக்கப்பட்டு மொகலாய மன்னர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு, பின்பு வந்த வெள்ளையர்களால் பிரம்மாண்டமாக மாற்றியமைக்கப்பட்ட இந்திய அஞ்சல் துறையில் பணிபுரிந்தவர் தோழர் நடராசன்.

இந்தியாவிலேயே மிகவும் வலிமை வாய்ந்ததாகக் கருதப்படுவது தமிழக காவல்துறை. 200 ஆண்டு கால அனுபவத்தோடு மாநிலத்தின் மூலை முடுக்குகளையும் தனது இரும்புப் பிடியில் வைத்திருப்பது தமிழக காவல்துறை. கேட்க கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், இந்தியாவிலேயே அதிகம் இராணுவ மயமாக்கப்பட்ட மாநிலம் என்று அரசியல் நோக்கர்களாலும் இலக்கியங்களாலும் கருதப்படும் நிலைக்கு தமிழகத்தை ‘உயர்த்தியது’ இந்தக் காவல்துறை.

தோழருக்கும் காவல்துறைக்கும் என்ன தொடர்பு.? ‘ஆறாத ரணம்’ நடராசன் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு சூழ்நிலைகளில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.

மொத்தம் பத்து சிறுகதைகளில் நான்கு நமது காவலர்களின் பல முகங்களைப் பற்றி பேசுகின்றன. இப்படி விரிந்த தளத்திலும் ஆழமாகவும் காவல்துறையை மிக அரிதாகவே தமிழ் இலக்கியம் அணுகியிருக்கிறது. எனவே, முதல் வாசிப்பில் இந்தக் கதைகளே நமது கவனத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. சிறுகதைத் தொகுப்பின் முக்கியமான கதைகளும் அவைகள் தான்.

சராரசரி மத்திய தர வாழ்க்கை வாழும் எழுத்தாளனால் எழுதப்பட முடியதாவை இவை. இந்த காரணத்தினாலேயே இந்த கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

காவல் துறையைப் பற்றி நமது திரைப்படங்களும் இலக்கியங்களும் இரண்டு விதமான சித்திரங்களைத் தீட்டுகின்றன. ஒன்று நேர்மையே உருவானவர்கள்... நீதி, நியாயத்திற்காக பாறை போல் நிற்பவர்கள்… சொந்த மகனை சுட்டுக் கொல்பவர்கள்… பெற்ற தாயை சிறையிலடைப்பவர்கள்.. இப்படி உணர்ச்சிப் பிழம்பாக ஒன்று.

அதே காவல்துறை அதிகாரி வில்லனாக வரும் போது வேறு ஓவியம். ஊழலில் மூழ்கித் திளைத்து கொடூரங்களுக்கு உறைவிடமாகி, பாலியல் பலாத்காரம் செய்து மேலும் மேலும்…..

“ஆயுத பூசையின் மகிமை” என்று ஒரு கதை. காவல்நிலையம் ஆயுத பூசை கொண்டாடுகிறது. ஒட்டு மொத்த காவலர்களும் வசூல் வேட்டையில் இறங்குகின்றனர். ஒவ்வொரு காவலருக்கும் அவரவர் பதவிக்கும், அந்தஸ்திற்கும் ஏற்ற வகையில் வசூலுக்கான கடைகள் ஒதுக்கப்படுகின்றன. இன்ஸ்பெக்டருக்கு பெரிய ஸ்டோர்கள் என்றால், புதிய கான்ஸ்டபிளுக்கு தெருவோரக் கடைகள். சுருக்கமான நேரடியான வாக்கியங்களோடு, கேலியும் கிண்டலுமாக நகர்கிறது கதை.

இன்னொரு கதை “கடா மீசை”. மீசை வளராத ஒரு கான்ஸ்டபிள் கடா மீசை வைத்த காவலர்களிடையே சிக்கிக் கொண்டு படும் அவஸ்தைதான் கதை.

பயிற்சியின் போதே காவலர்களுக்கு KILLER INSTINCT எனப்படும் முரட்டுத்தனமான அடக்கியாளும் உணர்வுகள் விதைக்கப்படுகின்றன. மிரட்டலாகவும் அதட்டலாகவும் பேசுவதும் முறைப்பதும் அவர்கள் குணங்களாக பயிற்சி காலத்திலேயே அவர்களிடம் ஒட்டிக் கொள்கின்றன. சிவிலியன்கள் மிரட்டப்பட வேண்டியவர்கள், மக்களை பயப்படுத்தி வைக்காவிட்டால் சட்டம் ஒழுங்கைக் காப்பற்ற முடியாது என்று அவர்கள் உண்மையாகவே நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட போலிஸ்காரர்கள் பயபக்தியாக வசூல் செய்து ஆயுத பூசை கொண்டாடும் போது, மீசை வளர்க்கப் போராடும் போது ஏதோ டாம் ஜெர்ரி கார்ட்டூன் பார்ப்பது போன்ற உணர்வு வருகிறது. எப்போது நினைத்துக் கொண்டாலும் புன்னகையை வரவழைக்கும் கதைகள் இவை. காவல் நிலையம் ஒட்டுண்ணியாக வாழ்கிறது என்று ஆசிரியர் சொன்னாலும் இந்தப் புன்னகை வந்தே தீர்கிறது என்றால் அதற்கும் அவர்தான் காரணம். (தோழரே! இப்பொதெல்லாம் போலிஸ்காரர்கள் எவ்வளவு ஸ்டைலாக மீசை வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?)

ஆனால் காவலர்களைக் கேலிப்பொருளாக்கி வஞ்சம் தீர்த்துக் கொள்வதல்ல ஆசிரியரின் நோக்கம் என்பதை வெளிப்படுத்துகின்றன மற்ற கதைகள்.

காவல்துறை என்பது ஓர் அமைப்பு. அந்த அமைப்பு 200 ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது. பிரிட்டிஷ் பேரரசின் நேரடிப் பார்வையில் கவனிப்பில் சீராட்டி வளர்க்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் மக்கள் போராட்டங்களை அடக்க அரசுகள் திணறிக் கொண்டிருக்கையில் புரட்சிகர, தமிழ் விடுதலை அமைப்புகள், இஸ்லாமியப் போராளி அமைப்புகள் முளையிலேயே நசுக்கப்படுவதற்கு இந்த அசுர வலைப்பின்னலும் திறன் வாய்ந்த ஒழுங்கமைப்பும், செயல்படும் முறையும் தான் காரணம். தேவாரம், விசயகுமார் போன்ற தனிமனிதர்கள் ஊடகங்களுக்காக முன்னிறுத்தப் பட்டாலும், இந்த அமைப்பு முறையே அதன் ‘சாதனைகளுக்கும்’ காரணம். இது சினிமாவிலும் சரி, இலக்கியங்களிலும் சரி சரியான விதத்தில் காட்டப்படவில்லை என்று தோன்றுகிறது.

இந்த அமைப்பின் மீது கொஞ்சம் வெளிச்சம் பாய்ச்சிகிறார் ஆசிரியர். “மாற்றப்பட்ட பயோடேட்டா” என்ற கதை.. சிறிய கதைதான். போதுமான விவரங்கள் இல்லாதது போலவும் தோன்றுகிறது. அதற்கு பலமாகவும் இருக்கிறது. முகமற்ற பெயற்ற போலிஸ் அதிகரரிகள் முற்போக்குவாதி ஒருவரை விசாரிக்கின்றனர். கேள்விகள்…… அடி உதை….. கேள்விகள்….. என்று தொடர்கிறது. அந்த விசாரணை அனைத்தையும் ஆவணப்படுத்தி தொகுத்து வைக்கும் குமாஸ்த்தா முறையைத் துல்லியமாகவும் அதே நேரம் மூர்க்கத்தோடும் செயல்படுத்துகிறது. ஒரு விசாரணைக்குப் பின்பு சுகந்திரமான ஒரு குடிமகன் சந்தேகத்திற்கு இடமானவனாகி உளவு இயந்திரத்தின் முரட்டுப் பிடிக்குள் கொண்டுவரப்படுவதை இக்கதை பேசுகிறது. முதல் கதையான கீற்றும் கூட இதே விதமான கதைத்தான். ஆசிரியர் இதை ஒரு தொடக்கமாக மட்டுமே கருத வேண்டும் இன்னும் விரிவாக சொல்லப்பட வேண்டியவை இக்கதைகள்.

“ஆறாத ரணம்” இந்த தொகுப்பிலுள்ள அற்புதமான கதை.

நகைச்சுவையாகவும், கேலியாகவும், இழையோடும் சோகத்தோடும் அதுவரை பேசிவந்த ஆசிரியர் அடியோடு மாறி விடுகிறார். காவல்துறையால் பிடித்துச்செல்லப்படும் ஒருவர் அவரது ஊனத்தைச் சுட்டிக்காட்டி இரவு பகலாகச் சித்திரவதைச் செய்யப்படுகிறார். காயங்கள் ஆறிவிடுகின்றன. வலி மறந்து போய் விடுகிறது. பல ஆண்டுகள் கழித்து வேறு சொற்கள் வேறு ஒரு நாளில் வேறு ஒரு இடத்தில் சூழலில் அந்த சொற்கள் ஏற்படுத்திய ரணம் வெடித்து வெளிவருகிறது…….

இது வேறு நடராசனோ..? அந்த ஆழம், வலி, உளவியல் பார்வை, ஊடுருவிப் பாயும் சொற்கள். முற்றிலும் வேறு தளத்தில் வேறு விதமான எழுத்தில் தனித்து நிற்கிறது ஆறாத ரணம்.

இந்த ஆறாத ரணம் தான் இந்த சிறுகதை தொகுப்பின் அடிநாதம். மதுரையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையில் தோழர் தொடர்புப்படுத்தப்பட்டு பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். 19 ஆண்டுகள் கண்காணிப்பு, அலைச்சல், அலைகழிப்பிற்குப் பின்பு குற்றமற்றவர் என்று முடிவு செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். சிறுகதைத் தொகுப்பில் முன் நிற்கும் நகைச்சுவை உணர்விற்கும் கீழே இழையோடும் மெல்லிய சோகத்தை இந்தப் பின்னணியிலேயே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

விமர்சனம் சொல்ல எதுவும் இல்லையா என்றால் இருக்கிறது. குட்டிப்பையனின் பொம்மை, வானம்பாடி ஆகிய இரண்டு கதைகளும் முடிவுறாதவை போலவும், சற்று விளக்கமாக எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.

குடிசைப் பகுதி எளிய மக்களின் மலம் கழிக்கும் உரிமையைக் கூட களவாடும் சிங்கார சென்னை, மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய “ஒய்யார கொண்டை”, ஆடு, மாடு, நாய் வளர்ப்பதிலும் வெளிப்படும் ஆணாதிக்கம் என்ற இந்தச் சிறுகதை தொகுப்பில் உள்ள மற்ற கதைகளும் அதிர்வுகளைத் தருகின்றன.

காவல்துறையின் பலவேறு முகங்களைக் காட்டும் பல்வேறு வர்ணஜலங்களுக்கு முன்னே இக்கதைகள் சற்றே நிறமிழந்தது போலத் தோன்றினாலும், கதைகளில் தென்படும் உள்ளார்ந்த மனித நேயமும் எளிமையும், வெற்றுப் பகட்டின் மீதான வெறுப்பும் மறக்க முடிவானவைகளாக நினைவில் ஆழப்பதிந்து தான் விடுகின்றன.

ஆனால் இந்த விமர்சனங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை. வித்தியாசமான பின்னணிகளோடு தொட்டவுடன் கீழே வைக்க முடியாமல் உள்ளிழுத்துக் கொள்கின்றன கதைகள். சிக்கலற்று எளிமையாகவும், நேரடியாகவும் பேசும் இதுபோன்ற கதைகளை படித்து நாளாகிவிட்டது.

ஒரு உண்மையான கம்யூனிஸ்டுக்குரிய நேர்மையோடும், கடின உழைப்போடும் நடராசன் தன்னை மறுபரிசீலனைக்கு உட்படுத்திக் கொண்டு விட்டார் என்பதற்கு இந்த அழகான கதைகளை விட வேறென்ன ஆதாரம் இருக்க முடியும்?

கிடைக்குமிடம்: முரண்களரி படைப்பகம், 34/25, வேதாச்சலம் தெரு, காந்தி நகர், சின்ன சேக்காடு, மணலி, சென்னை-68. விலை: ரூ.60 /-

Pin It