நூல் அறிமுகம்
இந்திய விவசாயிகள் இயக்கத்தின் வரலாறு | ஹர்கிஷன் சுர்ஜித், தமிழில்: பேரா. ஆர். சந்திரா | பக்: 160 | ரூ.60
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு முன்பும், பின்பும்-அது செங்குருதி சிந்திய வரலாறுதான் என்பதை இந்நூல் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளது ! இந்நூலை சுதந்திரப் போரட்ட வீரரும், இந்திய விவசாயிகள் இயக்கத்தின் முதன்மை மைந்தர்களில் ஒருவரும், மார்க்சிய புதல்வருமான காலம்சென்ற ஹர்கிஷன்சிங் சுர்ஜித்- எழுச்சியும், வீரமும் இழையோட எழுதியுள்ளார். அவருடைய எழுத்துக்கு சற்றும் வலுகுறையாமல் தமிழில் தனது அனுபவ சாரலில் இன்று எளிய தமிழில் இயல்பாகத் காத்துக் கொண்டிருக்கலாம். விவசாயத்தைத் தவிர!” என்று கூறிய இந்திய ஆளும்வர்க்கத்தின் பிரதிநிதி நேரு, பிரிட்டிஷ் இந்தியாவின் வீறு கொண்டெழுந்த விவசாயிகள் எழுச்சியை, இதை தட்டிஎழுப்பிய சங்கத்தை இப்படியாகப் பார்க்கிறார்.
ஆம், அதை எப்படி வெறுக்கிறார் பாருங்கள்- “...இன்றைய சூழலில் கிசான் சபா (விவசாயிகள் சங்கம்) என்பது தேவையே இல்லை. இது பைத்தியக்காரத்தனம்! விவசாயிகள், சங்கம் சேர்ந்து போராடுவதை அனுமதித்தால், நாடு சோசலிசத்திற்கு சென்றுவிடும்” நேரு இதை உணர்ந்ததாலேயே ‘பைத்தியக்காரத்தனம்’ என்று சொல்லி, எச்சரிக்கை செய்து இருக்கிறார் ஆம்! இந்திய விவசாயிகளின் கிளர்ச்சி எப்படியெல்லாம் நிகழ்ந்தன? இதோ முத்தாய்ப்பான ஒன்று. அதுதான் தெலுங்கானா புரட்சி!
‘... அடக்குமுறையை எதிர்கொண்டு 3 ஆண்டுகள் இயக்கம் வளர்ந்தது. அது, 21 அக்டோபர் 1951ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த 5 ஆண்டு காலத்தில் 4000 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 10,000 பேர் 3 முதல் 4 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் எண்ணில் அடங்காது. கிட்டத்தட்ட 50,000 பேர் போலிஸ் மற்றும் ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர்” இத்தகைய கொடும் அடக்குமுறைக்கு ஆளாக்கப் பட்டது ஏன்? எதற்காக?
“...நிலங்கள் புரட்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. நலகொண்டா, வாரங்கல் மற்றும் கம்மம் மாவட்டங்களில் உள்ள 16,000 சதுரமைல் பரப்பில் 30லட்சம் மக்கள் வசித்த 3000 கிராமங்கள் விடுவிக்கப்பட்டு, “கிராமராஜ்” நிர்வாகத்தின் கீழ் வந்தது, குறைந்தபட்சம் கூலி நிர்ணயிக்கப்பட்டது. 10 லட்சம் ஏக்கர் நிலம் ஏழைகளுக்கும், நிலமற்றவர்களுக்கும் வழங்கப்பட்டது. 2000 கொரில்லா குழுக்களும், 10,000 வீரர்களும் கொண்ட மக்கள் ராணுவம் கீழ் ஆட்சி நடந்தது. தினமும் 2 வேளை உணவு உண்டனர்”
நேருவையே நிலைகுலையச் செய்தது எது? விவசாயிகள் எழுச்சிதான். இதுபோல், மேற்கு வங்கத்தில் தோபா கிளர்ச்சி, கேரளத்தில் மாப்ளா கிளர்ச்சி. பஞ்சாபில் குருத்துவாரா கிளர்ச்சி. இதுபோல் பீகார், அஸ்ஸாம், காஷ்மீர், ஒரிசா, உ.பி., திரிபுரா, தமிழகம் என நாடெங்கும் பெரும் புரட்சி அலைகள் புயலாக வீசியதை இந்நூல் மிகச் செறிவாகப் பதிவு செய்துள்ளது.
அதோடு, சுதந்திர இந்தியாவில் துவக்கத்தில் கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் உள்ள அரசுகளை, அதன் சாதனைகளால் பிற மாநிலங்களில் எழுந்த போராட்டங்களை இந்நூல் பட்டியலிட்டுள்ளது. இந்தப் போராட்ட அலைகளை அடக்க வேண்டுமென்றால், அதற்கு காரணியாக இருக்கும் இடதுசாரி அரசுகளை அகற்றிட எத்தகைய தரங்கெட்ட, சதிவேலைகளை காங்கிரஸ் கட்சியும், இந்திய ஆளும் வர்க்கமும் அனுதினமும் செய்தன என்பதையும், 1995 ஆம் ஆண்டு வரையிலான 60 ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகளையும் இந்நூல் பதிவுசெய்துள்ளது.
தற்போது கூட சிலரிடம், அஇவிச கொடியின் சிவப்பு நிறமும், அதிலுள்ள அரிவாள், சுத்தியல் சின்னமும் இல்லாமல் இருந்தால், இன்னும் விரைவாக இலக்கைச் சென்று அடையலாமே என்கிற எண்ணம் உள்ளுர உண்டு. இது அன்றும் இருந்திருக்கிறது என்பதுதான் கூடுதல் செய்தியாகும். அப்படியும் 3 ஆண்டுகாலம் அரிவாள் மட்டுமே பதித்த கொடியும் இருந்திருக்கிறது.
“.... 1951ல் அரிவாள், சுத்தியல் சின்னமிட்ட கொடியின் கீழ் போராட்டங்கள் நடத்தி வெற்றிகண்டவர்கள்தான், பிற்காலத்தில் இந்த சமரச போக்கைக் கடைபிடித்தவர்கள்! அஇவிச பெங்கால் அமர்வில், கொடியில் வெறும் அரிவாள் சின்னம் மட்டுமே இருக்க வேண்டுமென்றும், அதன்மூலம் நிறைய காங்கிரஸ்காரர்கள் சங்கத்திற்கு வருவார்கள் என்ற கருத்தும் பெரும்பான்மை கருத்தாக முன்னுக்கு வந்துது. இந்த நம்பிக்கை நிறைவேறவில்லை என்பது மட்டுமின்றி, முதலில் கொடியிலிருந்த தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய சுத்தியல் சின்னத்தை இழந்ததால், தொழிலாளர்களுடன் இருந்த முக்கிய இணைப்பை இழக்க வேண்டி வந்தது. அதன்பின் 1969ல் பொர்சூல் அமர்வின் போது, அஇவிச கொடியில் அரிவாள் சுத்தியல் சின்னம் மீண்டும் பொறிக்கப்பட்டது” (பக்கம் : 94)
ஆக இதுபோன்ற அமைப்பு ரீதியான கேள்விகளுக்குக் கூட இந்நூல் பொருத்தமான பதிலை பதிவு செய்துள்ளது. மேலும், 75 ஆண்டுகள்தான் கடந்துள்ளது; ஆனால், ‘நாட்டில் ஒன்றும் நடக்கவில்லையே’! என்று ஏக்கப்பெருமூச்சு விடுவோருக்கு- “...1936ல் அஇவிச துவங்கப்பட்ட பொழுது, முதல் மாநாட்டில் முன் வைத்த கடமைகள் அனைத்தும் நிறைவேற்றி முடிக்கப் படவில்லை. ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் நடத்தியுள்ள போராட்டங்கள், இயக்கங்கள், செய்துள்ள தியாகங்கள் அந்த நோக்கங்களை அடைய நிச்சயம் உதவும்” (பக்கம் : 158)
எவ்வளவு பெரிய நம்பிக்கை விதையை ஊன்றியிருக்கிறார் இதுதான் இன்றைக்குத் தேவை. அதை இந்நூல் வாசிக்கும் அனைவரும் நுகரமுடியும்; இதுவே இந்நூலின் வெற்றி! இதற்கு பேரா. ஆர். சந்திரா அவர்களின் தமிழாக்கம் பெரும் துணை புரிந்திருக்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய நூல் மட்டுமல்ல; கிராமப்புற மக்களை எழுச்சி கொள்ளச் செய்திடும் வரலாற்றுப் பெட்டகம் இது.