இலக்கியங்கள் வாசிப்பதும், அவற்றைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் ஒரு அற்புதக்கலை. அதுவும் கூட மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கே அது சாத்தியமும் ஆகும். தமிழில் ஒரு காலத்தில் க.நா.சு. உலக இலக்கியங் களைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது எழுத்துக்கள் கூட அவர்குறிப்பிடும் நாவல்கள், நோபல் பரிசு பெற்ற நாவல்களைப்படிக்கத் தூண்டுவதாக அமைந்ததில்லை. நாவலின் கதையம்சங்களை மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

க.நா.சு. வுக்கு அடுத்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்பு எஸ்.ராமகிருஷ்ணன் அந்தக்களத்தில் இறங்கி வெற்றி நடைபோட்டு வருகிறார். உலக இலக்கிய ஆளுமைகள் பற்றி அவர் எழுதிய செகாவின் மீது பனிபெய்கிறது என்ற தொகுப்பு அண்மையில் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. நூலில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்புகளை எப்படியும் நாம் படித்தே தீரவேண்டும் என்ற உந்துதலை எஸ்ராவின் இந்த நூல் நமக்கு வன்மையாக உணர்த்துகிறது. அதைவிட அந்தப் படைப்பாளியின் வாழ்வுபற்றியும் அவரது வாழ்வின் முக்கிய சம்பவங்களையும் அவை அவரது படைப்பில் நிலைத்திருப்பதையும் ஒரு சேரத்தருவதுதான் இந்த நூலின் புதுமையாகும்.

ஒரு படைப்பை அறிமுகம் செய்கிறபோது அந்தப்படைப்பாளியின் வாழ்வுபற்றிய முக்கிய அம்சங்களை எடுத்துக்கூறுவதில்தான் இந்நூலின் மேன்மையான வெற்றி அடங்கியுள்ளது. லியோ டால்ஸ்டாய், தாஸ்தவெஸ்கி, மாக்சிம் கார்க்கி, வான்கா, கோகல், பாசுஅலியேவா, புஷ்கின், வர்ஜினியா உல்ப், பெசோ, எர்னெஸ்ட் ஹெமிங்வே, ராபர்ட்ருவார்க், மாப்பசான், ஹொமுசாய், ஜார்ஜ் ஆர்வெல், அன்டன் செகாவ் போன்ற மாபெரும் இலக்கியகர்த்தாக்களையும் அவர்களது படைப்புலகையும் படித்து முடிக்கிறபோது நம்மை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. இந்த நூல் அறிமுகம் படைப்பாளிகளின் துயரமான வாழ்க்கை நமது நெஞ்சை உலுக்குகிறது.

மகாத்மா காந்தியால் ‘மகான்’ என்று அழைக்கப்பட்ட டால்ஸ்டாயின் இறுதிநாள் பற்றிய விவரணையிலிருந்து நூல் துவங்குகிறது. போரும் அமைதியும், அன்னாகரீனினா, புத்துயிர்ப்பு போன்ற பிரம்மாண்ட இலக்கியங்களைப் படைத்த டால்ஸ்டாயின் இறுதிநாள் அஸ்தபோவ் என்ற ரயில்நிலைய ஓய்வறையில் முடிகிறது. மரணநேரத்தில் கூட தனக்காக பதிமூன்று பிள்ளைகளைப் பெற்று பல குழந்தைகளைப் பறி கொடுத்த மனைவியைக்கூடப் பார்க்காத சோகம் நம்மை வாட்டுகிறது. ஆனால் டால்ஸ்டாய் தனது மகள்களின் மீது பாசமழை பொழிவது வியப்பளிக்கிறது.

எழுத்தாளரின் வாழ்வு பற்றியும், அவரது படைப்புச் சூழல் மற்றும் கதா பாத்திரங்கள் குறித்தும் வாசகருக்கு நேர்காணல் போலக் காட்டுவதும், விளக்கிச் சொல்வதும் எஸ்ராவின் தனிச்சிறப்பான உத்தியாகும், இது புத்தகத்தை நாம் கீழே வைத்துவிடாமல் தடுக்கிறது. டால்ஸ்டாய் தனது கடைசிநாளில் தனது நூல்களின் பதிப்புரிமையை நாட்டுக்கே சொந்தமாக்கிட வேண்டும்; தனது நிலங்கள் அனைத்தையும் அவற்றை உழுது கொண்டிருக்கும் விவசாயிகளுக்கே பிரித்து தந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனது பெயரால் ஒரு பண்ணை அமைத்து அங்கே இளைஞர்களை டால்ஸ்டாய் வாசிகளாக மாற்றிக் கொண்டிருந்தார். அவர் தனது குடும்பத்தைவிட ரஷ்ய சமூகமே முதன்மையானது என்று கருதினார். வியப்பூட்டும் இந்தச் செய்திகள் டால்ஸ்டாய் மீது நமக்கு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்துகின்றன.

கடைசிவரை தனது நோட்டில் குறிப்பு எழுதியவாறு டால்ஸ்டாய் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் எழுத முடியாமல் போனதும் தன் மகளை எழுதச் சொல்கிறார். அவரைத் தனது வீட்டுக்கு வந்து தங்கும்படி கடிதம் எழுதிய ஒரு விவசாயிக்கு தனது இயலாமை குறித்து எழுதி நன்றி தெரிவிக்கிறார். இதுவே அவரது கடைசிக் கடிதமாகும்.

9.11.1910ல் டால்ஸ்டாய் இறந்த தினத்தில் ரஷ்யா முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் வகுப்புகளை விட்டுவெளியேறி அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தினர். அவரது இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். டால்ஸ்டாய் என்ற இலக்கியவாதி தனி மனிதன் இல்லை. அவர் ரஷ்யாவின் ஆன்மா என்று கொண்டாடப்பட்டார். டால்ஸ்டாயைப் பற்றி முழுமையாக விவரங்களை எஸ்.ரா. தெரிவித்துள்ளார். எழுத்தைவிட வாழ்க்கை அதிகப் புனைவும், திருப்பங் களும், புதிர்கள் அடங்கியதாகவும் இருக்கிறது. இதை அந்த மகானின் வாழ்க்கை நமக்கு சுற்றிக் காட்டுகிறது.

அண்டன் செகாவ் பிறந்து 150வது ஆண்டு இது. சிறுகதை உலகின் மிகப்பெரும் மேதையான செகாவின் வாழ்வும் படைப்புகளும் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. சிறுவயதில் சாலையில் கைவிடப்பட்ட குதிரை ஒன்று பனியில் நனைந்தபடி நிற்பதை பார்த்து தானும் பனியில் நிற்கிறார். நீண்ட இரவில் பனி கொட்டி அவரை நடுகங்கச் செய்கிறது. செகாவ் ஒரு நோயாளி. ஆனாலும் அவர் தன்னை வாட்டும் குளிரில் நிற்கிறார். குதிரை இவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மனித வேதனைகளில் முக்கியமானது கைவிடப்படுதலும் நிராகரிப்புமே முக்கியமானது என்பதைத் தனது கதைகளில் உணர்த்துகிறார். செகாவின் மீது பனிபெய்கிறது என்ற கட்டுரை அவரோடும் அந்தக் குதிரையோடும் கொட்டும் பனியில் நம்மையும் நிற்கவைத்துவிடுகிறது.

இரண்டு ஆசான்கள் என்ற கட்டுரையில் அண்டன் செகாவ், மாபசான் ஆகிய இரண்டு இலக்கியச் சிகரங்களை எஸ்ரா ஒப்பியல் ஆய்வுசெய்கிறார். இந்த இருவரையும் ஆழ்ந்து கற்றுத் தேர்ந்தவர்கள் எந்தக் கதையையும் சுலபமாக எழுதிவிடமுடியும் என்று எழுத்தாளர்களுக்கு எடுத்துக்கூறுகிறார். இருவருமே நாற்பது வயதுகளில் இறந்து போனவர்கள். இருவருமே தங்கள் நூற்றுக்கணக்கான சிறுகதைகளைப் பதிமூன்று தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறரர்கள். இருவருமே வாழ்வின் பெரும் பகுதியைப் பயணங்களிலும் எழுதுவதிலும் கழித்திருக்கிறார்கள். சொந்த வாழ்விலும் இருவரும் இளமையில் துயரமான அவல வாழ்வில் உழன்றிருக்கிறார்கள்.

செகாவ், மாபசான் ஆகிய இருவரின் கதைகள் பெண்களின் அகவுலகைப் பெரிதும் விவரிப்பவை. மனித அவலங் களைப் பிரதிபலிப்பவை. மனித அவலங்களைப் பிரதிபலிப்பவை. ஒதுக்கப்பட்ட மனிதர்கள் மீது இருவரும் அக்கறையுடன் எழுதியவர்கள். செகாவ், 40 வயதிலும் மாபசான் நாற்பத்திரண்டு வயதிலும் மரணமடைந்தனர். அதிலும் மாபசான் மோசமான முறையில் காலமானார். என்ற செய்தி இதுவரை அறியாத செய்தியாகும். ஆனால் இந்த இருவரும் சூறாவளியைப்போல் எழுதிக் குவித்தார்கள்.

ரஷ்ய இலக்கிய மகுடங்களில் ஒன்றாய் திகழ்ந்தவர் தாஸ்தவெஸ்கி. அவரது இளமைப்பருவம் ஆறாத மனத்துயரங்களோடு கடந்தது. அவரது தந்தை மிகயில் அந்திரேவிச் பெரும் குடிகாரர். தன் மனைவியைச் சந்தேகித்துச் சித்ரவதை செய்தே சீக்கிரம் சாகடித்த குடிகாரர். குடிபோதையில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளைத் தரக்குறைவாகத் திட்டியதால் அவர்கள் பச்சைச் சாராயத்தை வற்புறுத்தி வாயில் ஊற்றினர். பின்பு அவரது வாயையும் மூக்கையும் இறுக மூடியதால் மூச்சுமுட்டி இறந்தார். இந்தக் கொலைக்கு அந்த விவசாயிகள் இருவரின் மகள்களை இவர் சீரழித்ததாய் கூறப்பட்டது. தந்தையின் கொலைச் செய்தியைக் கேட்டதும் தாஸ்தவெஸ்கி உடல்நடுநடுங்கக் கீழே விழுந்தார். கையைக் காலை உதைத்தார். டாக்டர் வந்து பார்த்துவிட்டு இது காக்காய் வலிப்பு என்றார். அவருக்கு அதிர்ச்சியில் முதல் தடவை காக்காய் வலிப்பு ஏற்பட்டது அப்போதுதான். அது அவரது வாழ்வின் கடைசிவரை தொடர்ந்தது.

தாஸ்தவெஸ்கியின் முதல் படைப்பு “பாவப்பட்ட மக்கள்” பெரும் பாராட்டைப் பெற்றது. அது ரஷ்ய இலக்கியத்தின் முதல் சமூக நாவல் என்று கொண்டாடப் பட்டது. கோகலை மிஞ்சிய படைப்பாளி என்று புகழ்ந்தனர். இது தாஸ்தவெஸ்கிக்கு எழுதுவதில் பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது. அவரது படைப்புகள் தனிரகமானவை. அவர் நாலரை ஆண்டுகள் ஜார் ஆட்சியாளர்களால் சைபீரியச்சிறையில் கொடுமையை அனுபவித்தனர். அவரது வாழ்வின் எல்லா அம்சங்களையும் தனது படைப்புகளின் கதாபாத்திரங்களில் உலவவிட்டவர். இந்நூலில் எஸ்ரா அவரது வெண்ணிற இரவுகள் நாவலைப்பற்றி திறம்பட்ட ஆய்வினை முன்வைத்துள்ளார்.

மாக்சிம் கார்க்கி தன் வாழ்க்கைப் பாதையில் சந்தித்த மனிதர்களைப் புனைவுடன் தனது கதைகளில் நடமாட விடுகிறார். அவரது வகை வகையான கதைகளிலிருந்து வகைவகையான கதைகள் பிறந்துள்ளன. கார்க்கியின் சிறுகதைகளில் சிரஞ்சீவித்தன்மை கொண்டதாக இன்றும் திகழ்வது இசர்கில் கிழவியின் கதைதான். இன்றைய மாந்திரீக எதார்த்தப் படைப்புகளுக்கெல்லாம் முன்னோடிப்படைப்பு அது. கார்க்கியின் கதைகளில் அடைபடாத தான்தோன்றித் தனமான நாயகர்கள் டாங்கோ, லாரா, லோய்கோ சோபார் கதையில் அவர்களைப் படிக்கும் போது வாசிப்பது போல இருக்காது. நம்ம ஊரில் பார்ப்பது போல இருக்கும்.இசர்கில் கிழவியின் இளம் பருவத்துக் காதல் அனுபவங்கள் கார்க்கியின் இளம் பருவத்தின் சாட்சி போலவே இருக்கிறது என்கிறார் எஸ்ரா. தஜிகிஸ்தான் பெண் எழுத்தாளர் பாசுஅலியேவா எழுதிய மண்கட்டியைக் காற்றடித்துப் போகாது என்ற சிறந்த நாவலை நூலில் அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர்.

இந்த நாவலை தோழர் பூ.சோமசுந்தரம் மூலத்தின் சுவை குன்றாமல் கவிதை நடையில் தமிழாக்கம் செய்துள்ளார். சுவாரியப் பழமொழிகளும், மலைகளும் பனித்துளிகளும், கிழவர் உமர்தாதாவும் நம்மை அந்த மண்ணுக்கே இட்டுச் செல்லும். புஷ்கினின் சூதாட்ட ராணி கதையும் ஜப்பானிய எழுத்தாளர் ஹரூகி முரகாசையின் பிறந்தநாள் கதையும் அருமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

வான்கோவின் தம்பி என்ற கட்டுரையை ஓவியர்களும், வீடில்லாத புத்தகங்களை எழுத்தாளர்களும் அவசியம் படிக்க வேண்டும். வர்ஜினியா உல்ப் ஒரு பென்சில் வாங்குவதற்கு கடைவீதிகளையும் காட்சிகளையும் பார்த்து எழுதியிருப்பது அற்புதமான ரசனை அனுபவத்தைத் தருகிறது. கடலும் கிழவனும் நாவலை எழுதி நோபல் பரிசு பெற்றவர் எர்னஸ்ட் ஹெமிங்வே அவரது நெருங்கிய சகாவான அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் ருவாக் எழுதிய கிழவனும் சிறுவனும் என்ற நாவல் பற்றிய கட்டுரை மிகச்சிறந்த அனுபவங்களைத் தருகிறது.

ஹெமிங்வே எழுத்தாளராகப் பரிணமிப்பதற்கு முன் அவர் கற்ற பாடங்களை வாசித்தால் அனைவருக்கும் பயன்படும். அதேபோல் இடதுசாரிக் கண்ணோட்டமுடைய பெர்கரின் ஓவியங்கள் பற்றிய கலை விமர்சனம் பற்றிய கட்டுரையும் பயனுள்ளதாகும். படைப்புலகம் பற்றிப் பரந்து விரிந்த ஞானம் உள்ள ஒருவரால்தான் இதுபோன்ற ஒரு நூலை எழுத முடியும். இதைப்படிக்காமல் அதை உணர முடியாது. எஸ்.ராவின் இந்த அருமையான நூலை உயிர்மை பதிப்பகம் சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது.

Pin It