பாவாடையை சற்று தூக்கி உள்ளாடையை... படபடவென இழுத்து கழற்றி கொடியில் வீசினாள்... சூரியலட்சுமி.
என்னடி இது என்று பார்த்த அம்மாவுக்கு... அங்க போயி கழட்டதான செய்யணும். அதான்.. என்று ஈ என ஒரு இலுப்பை கழுத்து சரித்து காட்டி விட்டு வேகமாய் வெளியே சென்றாள்.
இவளை... என்று கண்களாலே முனங்கினாள். ஆனாலும் எப்பவும் நடப்பது தானே... என்ற அடுத்த நொடி இயல்பு அங்கே கொடியில் அசைந்து கொண்டிருந்தது.
அதென்ன சரியாய் ஒம்பது மணிக்கு தான் இவளுக்கு வருமா... கையை நீட்டி முணுமுணுத்தார் அப்பா.
"யப்போ... இதுக்கெல்லாம் நேரம் காலம் இருக்கா... வந்தா போக வேண்டியது தான். லூசு மாதிரி உளறிட்டுருக்காத" என்ற சூரிய லட்சுமி.. நீர் நிரம்பி இருந்த பக்கெட்டை தூக்கி கொண்டு சிலுக்கு நடை போட்டுக் கொண்டு டாய்லெட்டை நோக்கி நடந்தாள்.
"டார்ச் இருக்கா..." கத்தினாள் அம்மா. செல்போனை தூக்கி காட்டி புள்ளி வெளிச்சத்தை சொல்லி போனாள். இரவும் குளிரும் இதமென்றால் இதம். வதம் என்றால் வதம்.
லைன் வீடுகளின் வரிசைப்படி.... அதே லைன் வரிசை டாய்லெட்டுகள் அடுத்தடுத்து.
எப்போதுமே டாய்லெட்டுக்கு மின்சாரம் இருந்ததில்லை. வீட்டுக்கு கரண்ட் வர்றதே பெரும்பாடு. இதுல இதுக்கு வேறயா என்று ஒரு முறை பேச்சு வரும் போது பேசியிருக்கிறார்கள். எப்ப மழை வரும்... எப்ப காத்தடிக்கும்... எப்ப மரம் விழும்.. எப்ப புயல் அடிக்கும்.. எப்ப இடி விழும்... என்று ஒன்றும் தெரியாது. ஆதலால் கரண்ட் ரெண்டாம் பட்சம். டார்ச் தான் முதல் வெப்பன்.
இரவு பூச்சிகளின் சத்தம் சிதறிக் கொண்டிருக்கிறது. பூ மரங்களின் அசைவு... யானை மேல் யானை நிற்பது போல. இரவுக்கு பூச்சிகளின் கண்கள். பார்க்க பார்க்க பூதங்களின் நினைப்பு.
ரெண்டாவது டாய்லெட்டில் ஆள் இருக்கிறது என்று இயல்பாகவே தொடரும் பழக்கத்தில் புரிந்து கொண்ட சரவணன் ஐந்தாவது டாய்லெட்டில் இருந்து வெளியே வந்தான். நின்று பக்கவாட்டில் வரிசையாய் நீளும் டாய்லெட் கதவுகளை அனிச்சையாய் பார்த்தான். தகர கதவுகள்... இருட்டில் உடல் மூடி நிற்பதே பயமாய் இருந்தது. அவன் காதுகளில் ஊசி குத்தும் குளிரைத் தாண்டி என்னவோ சூடு. அங்கே என்னவோ வேறு ஓர் உணர்தல் அவனைத் தொற்றியது. கழுத்தை தானாக குறுக்கி இன்னும் கூர்ந்து கவனித்தான். அவன் கால்களில் புலியின் பதுங்கல். என்ன சத்தம் இது... இன்னும் இன்னும் மெல்ல அடுத்ததடுத்த கதவு பக்கம் நகர்ந்தான்.
ஆர்வம் யாரை விட்டது. அனுபவத்தை அப்படியே வாங்கி போர்த்திக் கொள்ளத்தானே ஒவ்வொரு மனமும் திணறி திணறி காத்திருக்கிறது.
நின்று விட்டான். என்ன சத்தம் இது. பூச்சிகளின் இரைச்சலில் மிக கனத்து மூச்சை இலகுவாக்கி விடும் பதற்றம். முதல் டாய்லெட்டின் கதவைப் பார்த்துக் கொண்டே நின்றான். சத்தம் அங்கிருந்து இல்லை. அடுத்திருக்கும் ரெண்டாவது டாய்லெட்டில் இருந்து தான். மெல்ல அந்த கதவோரம் நகர்ந்தவன் என்ன சத்தம் இது... என்று கதவையே கூர்ந்து பார்த்தான். இருட்டு பழகிய இருட்டில் ஒரு நெட்டுக்குத்து சதுரம் இன்னும் சற்று நேரத்தில் கை கால் முளைத்து நகர்ந்து விடும் போலவே. கவனக்குவியலில் வந்து வந்து மோதிப் போகும் காற்றில் நாய் காதுகளைப் போல அங்கும் இங்கும் அசைவதாக தன் காதுகளை நம்பினான். கையில் இருந்த காலி பக்கெட்டை மெல்ல பொத்தினாற் போல தரையில் வைத்து விட்டு இன்னும் சற்று கூர்ந்து கவனித்தான். அவன் கழுத்தில் படும் குளிரின் தெளிப்பு... அவன் உடல் சூட்டில் கொப்பளித்தது.
மனதுக்குள் முன்னமே வந்து உக்காந்துவிட்ட இருள் புரிந்த பயம்... அவனை அசையாமல் நிற்க செய்தது. இன்னொருவர் டாய்லெட்டை உள்ளே ஆள் இருக்கும் போது இப்படி இத்தனை அருகே நின்று பார்ப்பது தவறுதான். உணர்ந்தே இருக்கிறான். ஆனால் சூழலில் என்னவோ மாற்றம் இருப்பதையும் உணர்ந்தபடியே இருக்கிறான். ஆகவே அப்படியே நின்றான். அப்படி நிற்பது உள்ளே இருப்பவருக்கு தெரிந்து பிரச்சினை வந்து விட்டால்... அது பற்றி வந்த யோசனையை அவன் ஆழ்மனம் வாங்கிக் கொண்டிருக்கும் எதோ ஒன்றை.... ஒன்று அமிழ்த்தி கொண்டே இருக்க.. அவன் அனிச்சை அவனை மெல்ல திரும்ப செய்தது. அவன் பின்னால் என்னவோ இருப்பது புரிந்து விட்டது. உடலை அசைக்காமல் மெல்ல திரும்பினான்.
இருபதடி தூரத்தில் கண்கள் பளபளக்க பாய தயாராக அமர்ந்திருக்கிறது ஒரு சிறுத்தை.
*
இத்தனை கிட்டத்தில் சிறுத்தையை பார்ப்பதை எப்படி உணர்வது. உணர்வு நின்றது போலவே நம்பினான். வேறு வழியே இல்லை. உள்ளே யார் இருந்தாலும்.. கதவை தட்டத்தான் வேண்டும். தள்ளினான். அங்கிருந்து அவன் டாய்லெட்டுக்கு எட்டு எடுத்து வைக்க விடுமா என்று தெரியவில்லை. இப்படி இருட்டை ஊடுருவும் பார்வைக்கு எதிரே நிற்கும் வல்லமை யாருக்கு தான் இருக்கும். கரைந்து காற்றோடு போய் விட்டால்கூட பரவாயில்லை. தோன்றும் போதே அழியும் நினைப்பை எப்படி புரிவது. நினைக்க நினைக்க வேர்க்கும் நிலையை அப்படியே நின்று ஒரு நடுங்கும் சிலையை உருவாக்கிக் கொண்டிருந்தான். உள்ளே இருந்து வந்த கிசுகிசு முனங்கல் இப்போது இல்லை.
உள்ள யாரு.. ப்ளீஸ்... வெளிய சிறுத்தை... கதவ திறங்க என்று கிசுகிசுத்தான். காதில் பேசுவது போல இது காதே பேசுது போல.
அந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு பேராய் சொன்னவன்.. சட்டென சூரியலட்சுமிக்கா... என்று சொல்லும் போது அவனையும் அறியாமல் நிறுத்தினான். அவ்வப்போது இரவு எட்டுக்கு மேல் டாய்லெட்டுக்கு போவதை பார்த்த ஞாபகம் சட்டென்று வந்து கன்னத்தில் அறைந்து விட்டு போனது.
அவளே தான். அக்கா... சூரிக்கா... வெளிய சிறுத்தை... கதவை திற.. என்னால எந்தப் பக்கமும் நகர முடியல. என்னையே பாக்குதுக்கா... அக்கா ப்ளீஸ்... ப்ளீஸ்.... ஐயோ...- அவன் வாயில் இருந்து குளிர் புகை கிளம்பியது. சனியன் மாதிரி இப்படி உக்காந்து பார்த்துட்டுருக்கே... நம்மளதான் பாக்குதா.. இல்ல... தூங்கிட்டுருக்கா... நாம நிக்கறது தெரியுமா. மிருகத்துக்கு முன்னால மாட்டிக்கிட்டா அசையக் கூடாது.. அப்பிடியே நிக்கனும்னு தாத்தா சொல்வது நினைவுக்கு வர... அசைய மறுத்த அவனை அவனே அசையாமல் பார்த்தான். கால்கள் நடுங்கின. அதே நேரம் அவனையும் அறியாமல்... வேகம் கூடி... வேர்வை கூடி.. பின்னால் கதவை அவன் முதுகு தள்ள தொடங்கி விட்டது. இவன் வெளியிருந்து தள்ள.. உள்ளிருந்து திறக்காமல் அணை கொடுத்தபடி சூரியலட்சுமி இருக்க... - ஐயோ அக்கா... நான் விளையாடல... இதுலல்லாம் விளையாடுவாங்களா... ஒரே ஒரு ஜம்ப் பண்ணுச்சுனா என் மேலதான் உக்காரும்... அவ்ளோ பக்கத்துல இருக்குக்கா.. ப்ளீஸ்... திற... -கிசுகிசுத்துக் கொண்டே பாதி வார்த்தைகளை முழுங்கி.. பாதி நடுங்கி.. தள்ள தள்ளவே கதவு திறந்து விட்டது. உள்ளே சட்டென்று உள்ளே சென்று வேகமாய் ஒதுங்கி கதவை மீண்டும் அடைத்து கொண்டியிட முயற்சித்தான். கொண்டி பிய்ந்து தொங்குகிறது. அப்படி என்றால் அவள் திறந்து கொடுக்கவில்லை. இவன் தள்ளியதில் கழன்று கொண்டிருக்கிறது. எப்படி வந்தானோ... அப்படியே கதவை பார்த்தே நின்றான். கதவு சும்மா சாத்தியிருந்தாலும்... அதுவே ஒரு பாதுகாப்பை தரத்தான் செய்கிறது.
"அறிவில்ல... டாய்லெட்டுக்குள்ள... ஐயோ..." பற்களை கடித்தபடி கிசுகிசுத்தாள்.
"சாரிக்கா...வேற வழி தெரியல. உயிரை விட மானமா பெருசு. மானத்தை கழுவிக்கலாம். உயிர் போச்சுன்னா வராதுக்கா. நான் திரும்ப மாட்டேன். இப்படியே நிக்கறேன். தப்பா நினைச்சுக்காத..."
அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உள்ளே குற்ற உணர்வும்... வெளியே கொலை வெறியும் ஒன்றையொன்று சந்திக்க ஆவலாக இருப்பதை நினைத்தாலே குமட்டியது.
கதவைத் தட்டும் போதே எழுந்து கொண்டாள் போல. அப்பாடா என்று ஒரு சின்ன நிம்மதி அவனுக்கு. வியர்வை சூழல் உள்ளே இனம் புரியாத வெக்கை அடிக்க... அவன் தேங்க்ஸ்க்கா என்று மூச்சு வாங்கினான்.
"தப்பா நினைச்சுக்காதக்கா...." மறுபடியும் மறுபடியும் சொன்னான். நின்னுட்டுதான இருக்க என்று உறுதிப் படுத்திக்கொண்டே நின்றான். அவளின் மூச்சும் அனல் அடித்தது.
"உனக்கு முன்னமே தெரிஞ்சிடுச்சா வெளிய சிறுத்தை இருக்கறது.." - கிசுகிசுத்தான்.
ஆமா.. என்றாள் அதே கிசுகிசுப்போடு.
இவர்களின் மூச்சைத் தாண்டி இன்னொரு மூச்சு சுழலும் துல்லியத்தை அவனால் திக்கென உணர முடிந்தது.
அக்கா உனக்கு என்ன பண்ணுது...ஏன் மூச்சு திக்குது.. என்றான்.
இல்லையே.. என்றவள் குரலில் ஒரு ஆட்டம். கொஞ்சம் அமைதியா இருங்....என்று கிசுகிசுப்புக்கு மீறிய கிசுகிசுப்பில் படபடக்க.. என்னக்கா யார்கிட்ட பேசிட்டுருக்க.. என்று சட்டென்று பாக்கெட்டில் இருந்த செல்போனை ஆன் செய்ய அதில் இருந்து ஊடுருவிய வெளிச்சம்... சட்டென உள்ளே ஒரு வெளிச்ச கீறலை தெளித்து விட... அதே வேகத்தில் கழுத்தை திருப்பி பின்னால் பார்க்க முயற்சிக்க... பட்டென்று அவள் கை மொபைலை மறைத்தது. ஆப் பண்ணு என்று கத்துவது போல பற்களை கடித்தபடி முனங்கினாள். கிட்டத்தட்ட கட்டளை அது. இன்னொரு கை அவன் முகத்தை மீண்டும் முன் நோக்கியே திருப்பியது. பயங்கர வேகம்.
ஆனால் வெளிச்சம் வந்த அந்த நொடியில் அவனுக்கு தெரிந்து விட்ட காட்சி கோலம்... "என்னக்கா கால் உடைஞ்ச சிற்பம் மாதிரி நெளிஞ்சிட்டு நிக்கற. என்னாச்சு...!" என்றான். என்னமோ சரி இல்ல.. என்று கதவை நோக்கி திரும்பிய முகம் நடுங்கியது. பின்னால் என்ன நடக்கிறது என்ற படபடப்பு அவன் கண்களில் டாய்லெட் இருட்டை சுழற்றியது.
"ஒன்னும் ஆகல. அமைதியா சிறுத்தை போயிருச்சானு கதவை திறந்து பாரு..." என்றாள்.
"நீ யார்கிட்ட பேசின..." என்று மீண்டும் கேட்க... தலையில் சொத்தென்று ஒன்று வைத்து..." சொன்னதை செய்டா..." என்றாள். வார்த்தையில் அழுத்தம். அதிலும் நடுக்கம்.
ஒன்றும் புரியவில்லை. ஆனால் என்னவோ சரியாக இல்லை. இப்படி வந்து மாட்டிகிட்டோமே என்பதாக யோசித்தபடியே... மெல்ல கதவைத் திறந்து அந்த இத்துணூண்டு சந்து வழியாக இருட்டில் சிறுத்தையை தேடினான். அதே நேரம் அப்பப்போ முன்னே வந்து வந்து நெளிந்தவள்... 'உனக்கு இப்பகூட உன் வேலை தான் முக்கியம்ல..' என்று பின்னே தலையை கோணம் சரித்து வாய்க்குள்ளாகவே முனங்கினாள். சூரியலட்சுமி முனங்குவது என்னவென்று புரியாவிட்டாலும்.. என்னவோ சொல்கிறாள் என்று யோசித்தபடியே கவனத்தை மட்டும் முதுகில் கொண்டு சிறுத்தையை தேடினான். என்னனு கேட்டா இன்னொன்னு தலைல விழும்.
எப்படியும் சும்மா தான் நிக்க போறோம். பண்ற வேலையை பண்ணுவோம்னு தான் என்று வந்த பதில் குரல் சற்று கிசுகிசுப்பை தாண்டி வந்து விட்டது.
உள்ளே இருந்து இன்னொரு குரல்... என்று உணர்ந்த தருணம் சட்டென தலையை உள்ளே இழுத்து வேகமாய் திரும்பி நின்றான் சரவணன்.
அனிச்சை அவன் அலைபேசியை ஆன் பண்ணி விட்டது. அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அல்லது முயலவில்லை. தலைக்கு மேலே வெள்ளம் போன நிலை அது. மங்கிய வெளிச்சத்தில் கால் உடைந்த சிலை போல நிற்கும் அவளும்.. அவளுக்கு பின்னால்.. அவளை ஒட்டி இறங்கி ஏறி நிற்கும் யார் அது... வெளிச்சத்தை அப்படியே மெல்ல அசைத்து முகத்துக்கு நேராக காட்ட... வெளிச்ச கூச்சமும் சேர்ந்து கண்களை சுழித்தபடி சுவற்றுப் பல்லி போல அவள் முதுகில் ஒட்டி நின்றிருந்தது புதிதாக வந்த மேனேஜர்.
என்னக்கா இது... அய்யயோ என்று வேகமாய் அவனையும் அறியாமல் அவன் கை வெளிச்சத்தை கீழே கொண்டு வர... அவள் அலைபேசியை மறைத்து பிடித்து இழுத்தாள். அலைபேசியை பிடித்து இழுக்க அதில் நடந்த தள்ளுமுள்ளில் முன் பின் நகர்ந்து ஒரு சின்ன போராட்டம் நடக்க... அவளோடு சேர்ந்து பின்னிருந்த மேனேஜரும் கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட விரல்காரன் போல வேறு வழியின்றி அங்கும் இங்கும் அந்த சுவற்றுக்குள் அலைக்கழிக்கப்பட்டான். ஏற்கனவே தாவு தீர்ந்து தகிடதத்தோம் போடற நேரம்... இப்ப இந்த கிறுக்குபய வேற பார்த்து... ஐயோ... விஷயம் வெளிய தெரிஞ்சா மானம் மப்புல தொங்குமே... நினைப்பே பிராண்டி எடுத்தது.
"அட மொபைலை விட்டுத்தொலை... அதான் பார்த்துட்டான்ல.. இனி என்ன மறைக்க..." குரல் கோலம் போட்டது.
"அதுக்கு டார்ச் அடிச்சு தெளிவா காட்ட சொல்றயா... போயா... சொட்ட்ட... ஆமா இப்பகூட விலக மாட்டியா... எலி வங்குல கிளி காலு மாட்டுன மாதிரி... " அவள் இவனோடு செல்போன் சண்டையிட்டுக் கொண்டே அவனோடு முன் பின் தள்ளலில்... மூச்சு வாங்கினாள்.
"அடேய் கிறுக்கு சரவணா... இவனுக்கு ஈஸி பண்ணி குடுத்துட்டு இருக்கடா... என்னைய அசைச்சு அசைச்சு... "
பேச்சு பேச்சாக இருந்தாலும்... செல்போன் லைட்டை வெளியே விடாத அவள் உள்ளங்கை இன்னும் பலமாக இறுக்கி பிடிக்க... அவனிடம் இருந்து செல்போனை பிடுங்கி விட.. அதே வேகம் பின்னோக்கி அவளை சரித்து விட்டது. அந்தச் சரிவு மேனேஜரை சுவற்றோடு வைத்து சொருகி விட்டது. மேனேஜரின் உச்சமும் காலி. மிச்சமும் காலி. பலமிழந்த நொடி இவள் தள்ளவும் சுவற்றில் மோதி விழுந்து விட்டான். மூவருக்கும் நிகழ்ந்த தள்ளுமுள்ளு அந்த நொடியில் ஐயோ என்ற சத்தத்தில் திக்கென நின்றது.
இப்ப எதுக்கு எவ்ளோ தள்ளுமுள்ளு. செல்போனை அமத்திருக்கலாமே. ஆர்வம் ஆசையை தூண்டி இருக்கும் போல. தன்னை தானே நொந்து கொண்டான் சட்டென உடல் சூடான சரவணன்.
*
சூரியலட்சுமியிடம் இருந்து அப்படியே விலகி சுவரோரம் சரிந்த மேனேஜரை உடலால் தாங்கி நிறுத்த போராடினாள். அவளின் பாவாடை அதுவாகவே கீழே இறங்கி விட்டது. அவனிடமிருந்து பிடுங்கிய செல்லை அவனிடமே கொடுத்து விட்டு... வேகமாய் திரும்பி தன் நெஞ்சுக்குள் இருந்த தன் மொபைலை எடுத்து டார்ச்சை காட்டினாள். கண்கள் மூடியபடி சரிந்து அப்படியே உட்கார்ந்து கிடந்தவன் பலமாக மூச்சிரைத்தான். அவன் கை அனிச்சையாக தலையைத் தடவிக் கொண்டிருந்தது.
திக்கென திக்கு தெரியாத அந்த நான்கு சுவரும் இன்னும் குறுகி இறுக்குவதாக தோன்றியது. சரவணாவும் தன் அலைபேசியை நீட்டி டார்ச் அடித்தான். மூச்சு முட்டும் வெக்கையில்... அந்த அறைக்குள் அரூபம் மிதப்பதாக பட்டது.
என்னக்கா இது... வெளிய சிறுத்தைன்னு உள்ள வந்தா.. இங்க இந்த கறுத்த கெடா இப்பிடி விழுந்து கிடக்கறான்...
சரவணன் கிசுகிசுத்தபடியே படபடக்க.. மேனேஜர் மீதே சரிந்தும்... நின்றும் சூரியலட்சுமி அவனைத் தட்டி தட்டி உலுக்கினான். அவள் முதுகில் சில்லிடும் ஒழுகல் அவ்விருட்டின் வாலை நெளித்துக் கொண்டிருந்தது.
கன்னத்தை தட்டி தோள்களை பிடித்து உலுக்கி எழுப்பினாள். அவன் முனங்கி கொண்டே கண் விழித்தான். முகம் அருகே குவிந்திருக்கும் அவளின் பெரு முகம் அவனை அச்சத்தில் ஆழ்த்தியது. ஆவென பார்க்க செய்தது. தூக்கத்தில் இருந்து விழித்தவனின் பதட்டத்தை அவன் கண்கள் கொண்டன. அதுவும் அத்தனை அருகே ஏறி இறங்கும் அந்த சிறு வெளிச்சத்தில் முகமும் முகத்தின் நிழலும் ஒன்றோடொன்று கலந்து தெரிவது பூதத்தை பார்ப்பது போல தான். அவன் மிரண்டான்.
நான் தான் நான் தான் என்பதாக கையை அமர்த்தி அமைதிப் படுத்தினாள். எச்சில் விழுங்கி நிதானத்துக்கு வந்த மேனேஜர் மெல்ல எழுந்தான். அவள் உதவினாள். என்ன வகையான காட்சி இது என்று நடப்பதை... கூட நின்றே எட்டி பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன்.
"புல்லட்ல பெரிய பூவா மாதிரி போவான். இங்க கக்கூஸுல என்ன வேலை இவனுக்கு. ஒரு முட்டுக்கு தாங்கல. இந்த மிரளு மிரளறான். இவனெல்லாம் ஒரு மேனேஜர்...."
முனங்கிய சரவணன் கதவை ஒட்டி நின்றான். "என்ன கருமம் இது. இப்பிடி வந்து சிக்கிட்டேன்...."- கிசுகிசுத்தான்.
ஐயோ புலம்பாதடா... சிறுத்தை போயிருச்சானு பாரு.. - அவளும் கிசுகிசுத்தாள்.
"தம்பி... உனக்கு சுலபமான வேலை போட்டு தரேன். விஷயம் வெளிய வராம பாத்துக்கோ..."- திக்கி திணறி மேனேஜரும் கிசுகிசுத்தான்.
ஆழமாய் முன்னே நிற்கும் இரு நிழலையும் பார்த்து விட்டு... பொதுவாக கேட்டான் சரவணன்.
"எத்தனை நாளா இது நடக்குது....?"
அவனையே பார்த்தாள் சூரி.
"என்னடா இந்தக்கா ஒம்பது மணிக்கு ஒம்பது மணிக்கு டாய்லெட் போகுதேனு யோசிச்சேன். இப்பதான விஷயம் புரியுது..."
"புரிஞ்சிடுச்சுல... சூப்பர். இப்ப சிறுத்தைகிட்ட மாட்டிக்காம வீட்டுக்கு போகணும். அதுக்கு வழிய பாரு....." அவள் அவள் கிசுகிசுப்பை வித்தியாசமான பாவனையோடு கரகரத்தாள்.
"கொஞ்சமாவது உனக்கு பயம் இருக்கா... இதெல்லாம் என்ன சூரிக்கா...! ஐயோ யோசிக்கவே முடியலயே..." அவன் கதவை திறந்தபடியே கிசுகிசுத்தான்,
"தம்பி வேலை... ஈஸி பண்ணிடலாம். இத விடு.. வெளிய போக வழி பாரு..." மேனேஜர் அவர் பங்குக்கு பால் போட்டார்.
"எவனாவது பாத்தா என்னை என்ன நினைப்பான்... ஐயோ சிறுத்தை நாயே... இப்பிடி வந்து இதுங்ககூட என்ன சேர்த்து இப்பிடி அசிங்க படுத்திட்டியே...." இருட்டில் தன் மீதே மோதிக்கொண்டது போல உணர்ந்தான். மெல்ல கதவைத் திறந்து செங்குத்து நீள் கோடு இருட்டில் வரைந்தான்.
சிறுத்தை அசையவே இல்லை. அப்படியே படுத்து பார்த்தபடியே இருக்கிறது. சிறுத்தை மேல் இருந்த பயமே போனது போல உணர்ந்தான்.
என்னது... இப்பிடி உக்காந்துட்டுருக்கு. இங்க நடக்கற கசமுசாவுக்கு காவல் மாதிரி. விலக்கிய கதவை கொஞ்சமாக திறந்தபடி அப்படியே சிறுத்தையையே பார்க்க.. சிறுத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சிறுத்தையும் பழகி விட்டது போல பயம் விட்டிருந்தது. இதுங்க உள்ள பண்ணின விஷயத்துக்கு சிறுத்தை மேட்டர் ஒண்ணுமே இல்லங்கற மாதிரி ஒரு இது.
சிறுத்தை பார்வையா இது... சிலுக்கு பார்வை மாதிரி... ஒன்னு அட்டாக் பண்ணு... இல்ல எந்திரிச்சி போ... இப்பிடி படுத்துட்டு பார்த்துட்டே இருந்தா எவ்ளோ நேரம் இங்கயே நிக்கிறது...
பின்னால் மீண்டும் அதே சத்தம்...
யோவ் கொஞ்சமாவது நியாயமா இருக்கா. வெளிய சிறுத்தை கவ்விட்டு போக ரெடியா இருக்கு. உள்ள மண்டை வீங்கி நின்னுட்டு மறுபடியுமா.
சரவணா அதை விரட்டி விட வழி இருக்கானு பாரு... என்று ஏறி இறங்கி பேசும் சூரியலட்சுமி... அதான் தெரிஞ்சிடுச்சுல. அப்புறம் மறைச்சு என்ன...என்றாள்.
என்ன இவ இப்படிருக்கா... ஒருவேளை கிறுக்கியா இருப்பாளோ. வெளிய பாக்கும் போது.. குத்துவிளக்கு மாதிரி வீதிக்கே டார்ச் அடிச்சிட்டு போறது.... இப்ப பாரு.... ஐயோ ரைமிங்கா வந்து தொலைக்குதே... வாயை அடக்கிக் கொண்டான்.
தம்பி.. சொன்னது தான். உனக்கு ஈஸியான வேலையா போட்டு தரேன். நமக்குள்ளேயே இருக்கட்டும். மேனேஜர் முனங்கலோடு முனங்கலாக மூச்சில் பேசினார்.
சரிங்க சார். அதுக்காக இப்ப கூடவா... நானும் ஒரு வாலிப பையன்னு யோசிங்க சார்.. யக்கோ... அப்ப நீ நல்லவ இல்லயா... - அவனுக்கு ஒன்றும் புரிபடவில்லை. ஆனாலும் வேலை மேட்டர்ல கிட்டத்தட்ட கவிழ்ந்து தான் போனான் சரவணன்.
ஏன் இத பண்ணினா கெட்டவளா ஆகிடுவேனா... உங்கப்பாவ பாம்பு கொத்தினப்ப நான்தான தூக்கிட்டு போயி காப்பாத்தினேன்... கெட்டவ அப்பிடி பண்ணுவாளா.. இதுக்கும் உங்கப்பா என்ன மடக்க எத்தனை வாட்டி ட்ரை பண்ணிருக்கார் தெரியுமா.
வாய்ப்பு இருக்கு. நினைத்துக் கொண்டான். நியாயம் கேக்கற நேரமா இது. எப்பிடி இந்த பயத்துல இப்படி ஒரு வேலைய பண்ண முடியுது. கடவுளே... அசிங்க புடிச்ச ஆட்களோடு நிக்க வெச்சு... ஏய் சிறுத்த... நீயெல்லாம் ஒரு மிருகம். மனுஷப்பயல விட மட்டமான ஆள்யா. எப்பிடி வேடிக்கை பார்த்துட்டுருக்க பாரு.
இப்போது அவனையும் அறியாமல் கதவை நன்றாவே திறந்து விட்டிருந்தான். உள்ளே புழுக்கமும்... அவர்களின் நெருக்கமும் அவனை அனிச்சையாகவே வெளியே தள்ளி விட்டிருந்தது.
ஆனாலும் சார்... இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.
அட ஓவரா இருந்தாதான் இப்ப என்ன... எப்பிடியும் உள்ள சும்மாதான் நிக்க போறோம். ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும்...
ஐயோ... இதெல்லாம் எப்பிடி சகிச்சுக்கறதுனே தெரியலையே.... வேலை வேற சுலபமா போட்டு தர்றேன்னு சொல்லி இருக்கான்.. இத போயி ஏன் வெளிய சொல்லிட்டு... யோ சிறுத்தை... கொஞ்சம் அந்தப் பக்கம் போயா. போகணும்.. எவ்ளோ நேரம் இப்பிடியே இந்த கருமத்துக்கு காவல் காக்கறது. சிறுத்தை அடிச்சே செத்துருக்கலாம் போல...- அவன் முனங்கி கொண்டே பட்டும் படாமல் பக்கெட்டை தூக்கியபடி...மெல்ல வலது பக்க சுவற்றை ஒட்டி நகர்ந்தான்.
யக்கோ... நீ வேணா அடுத்த ரவுண்ட் முடிச்சிட்டு போ... நான் கிளம்பறேன். பயப்படாத.. விஷயம் வெளிய போகாது என்று சொல்லியபடியே நகர்ந்து... பூனையைப் போல சுவரை கீறிக் கொண்டே நகர்ந்தான்.
அது நகராது போல. கிளம்பு பாத்துக்கலாம் என்று அவளையும் போக சொன்னான் மேனேஜர். களைத்த உடலில் கனத்து கிடந்த தகிப்பில் பெருமூச்சு வாங்கினான். அவள் அலைபேசி வைப்ரேட் ஆனது. சுவரோரம் நின்று சிறுத்தையைப் பார்த்துக் கொண்டே அலைபேசியை ஆன் பண்ணி காதுக்கு கொடுத்தாள்.
"ஏ சூரி... கிறுக்கி.. எவ்ளோ நேரம். என்னத்தை பண்ணிட்டுருக்க. சரி சரி பலா மரத்து வழியா வராத. பெருசு நின்னுட்டு இருக்கு. குறுக்கு வழியா பூந்து ஓடியாந்திரு.." அம்மாதான். கிசுகிசுத்தாள். அப்பா போனை அணைத்தார்.
இங்க சிறுத்தை.. அங்க யானை.. இது ஒரு பொழப்பு.. என்று அப்படியே கையில் காலி பக்கெட்டோடு நடக்கத் தொடங்கியவள்.. முன்னே பதுங்கி பதுங்கி படபடப்போடு சென்று கொண்டிருந்த சரவணனை... ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் என்று சமிக்கை கொடுத்து நிறுத்தினாள்.
என்ன என்பதாக நின்றவன்... திரும்பி பார்த்தான். அத்தனை இருட்டிலும் திருட்டுத்தனமாய் மேலும் கீழும் பார்த்தான். இத்தனை நாள் இப்படி பார்த்தானா என்று தெரியாது. இப்போது உள்ளிருக்கும் சற்றுமுன் கண்ட காட்சிக் கோலங்கள் உதிரத் தொடங்கி இருந்தன.
"குறுக்குல போ.. பலா மரத்து வழில பெருசு.." என்றாள்.
ஐயோ அவன் வேறயா... வீட்டுக்குள் சென்றால் போதும் என்றாகி விட்டது சரவணனுக்கு. டாய்லெட்டுக்குள் இருந்தே அவனால் இன்னும் வெளிய வர முடியவில்லை.
அவளை அரூபமாய் மேய்ந்தவன்... "என்னக்கா இப்படிலாம் பண்ற...." இழுத்தான்.அதிர்ச்சியில் இருந்து அவன் மீளவில்லை.
"என்ன இப்பிடியெல்லாம்... ஆள் கிடைச்சா நீ பண்ண மாட்டியா. கொய்யா மரத்து புதர்ல உக்காந்து நீ பண்றதெல்லாம் தெரியாதுன்னு நினைச்சிட்டியா... போடா மூடிட்டு..." என்று சொல்லி அவனைத் தாண்டி வேகமாய் குறுக்கு வழியே நடந்தாள்.
டாய்லெட்டுக்குள் இருந்து ஆடையை சரி செய்தபடி வெளியேறிய மேனேஜர் வேகமாய் சிறுத்தையிடம் சென்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அந்த சிறுத்தை பொம்மையை தூக்கி தோளில் வைத்தபடி நடக்கத் தொடங்கி விட்டான்.
என்ன ஒன்னு...கருமம்... பலா மரத்து வழில.
*
இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல...
இல்ல இல்ல ஊர்ல பாதி பேர் நினைச்சான்.
அதென்ன வேண்டியவங்களுக்கு மட்டும் பக்கத்து காட்டுல வேலை ஒதுக்கறது..
கொஞ்சம் கொஞ்சி நெருங்கினா ஓட்டி செய்யாமலே ஓட்டி போட்டுக் குடுக்கறது...
அதிகாரத்தை மத்தவங்க பலவீனத்துல பயன்படுத்தறது..
கொஞ்சம் எதுத்தா... ஒத்து வரலனா... கேள்வி கேட்டா.. உண்மையா நின்னா... தூக்கி யானை காட்டுல அடிக்கறது...
எத்தனை பேரு சாபம்.. மிதிபட்டே செத்துட்டான்...
ஆனா பக்கத்துல ஒரு சிறுத்தை பொம்மை அம்மாம் பெருசு கிடந்துச்சு... அதுதான் ஒன்னும் புரியல...
ஊருக்குள் ஆளாளுக்கு பேச்சும் கிசுகிசுப்பும். வதந்தியில் தீ பற்றினால்... ஊருக்குள் அது குரங்காட்டம் ஆடும்தானே. ஆடியது.
*
நீ அன்னைக்கு யானை நிக்கற விஷயத்த அவன்கிட்ட சொல்லி இருக்கணும்ல. அப்ப விட்டுட்டு இப்ப அழுதுட்டு இருந்தா என்ன பண்றது...- அந்த ஊர் சின்ன ஆஸ்பத்திரியில் நர்ஸாக இருக்கும் தோழி மரியா தோண்டினாள்.
ஆமா... ஏன் சொல்லாம விட்டோம்.... - யோசித்தபடியே.. அப்புறம் சும்மா சும்மா நினைச்சா கூப்ட்டறது.... அசிங்கமா இல்ல. கக்கூஸுல வெச்சு.. நினைச்சாலே கேவலமா இருக்கு...- சூரியலட்சுமி புலம்பினாள்.
அததான் முன்னமே சொன்னனே... பெரியவங்ககிட்ட சொல்லிடலாம்னு... நீ வேண்டான்னுட்ட...
சொன்னா என்னாகும்.. சாட்சி இருக்கான்னு கேப்பாங்க. சாட்சி வெச்சுட்டா இத செய்வாங்க. அவன் விவரமா ஹெல்மெட்டோட தான் வர்றான். எதாவது சொல்லி தப்பிச்சிட்டு நம்ம பக்கமே பிளேட்டை திருப்பி... திரும்பவும் சோலைக்காட்டுக்கு மாத்தி விடுவான். எவளாள ஆகறது. காலைல ரெண்டு மணி நேரம். திரும்ப சாயந்திரம் ரெண்டு மணி நேரம். அதுக்கப்புறம் வந்து சோறாக்கி குழம்பு வெச்சு... இதுங்க ரெண்டையும் கவனிச்சு... ம்க்கும்...நடக்கற காரியமா. நடந்து நடந்து சாகறதுக்கு... கால தூக்கிட்டு பேசாம நிக்கறது பரவால்லனு தோணுச்சு...
இப்ப வேண்டா வெறுப்பா பேசற மாதிரி பேசற.. ஆனா அவன் கூப்படற அன்னைக்கு குளிச்சு.. பூ வெச்சு பொட்டு வெச்சு புது வளையல் மாட்டி சீவி சிங்காரிச்சு... சென்ட் கிண்ட்டெல்லாம் போட்டுக்கிட்டு போவ... எனக்கென்னவோ உனக்கும் புடிச்சுதான் போனன்னு தோணுது...
ஏய் எதயாது உளராத... ஆமா புடிச்சு...அதும் கக்கூஸுல வெச்சா.... போடி.
கதை விடு என்பது போலவே கண்களில் குறுகுறுப்போடு அவளையே பாத்தாள் தோழி.
என்ன பாக்கற.. அப்ப உனக்கு நம்பிக்கை இல்ல. ஏற்கனவே தொங்கிட்டு இருக்கற நிலத்துல கட்டடம் கட்டடமா கட்டி பார்த்தீல்ல... எவ்ளோ பெரிய நிலச்சரிவுன்னு. என்னாச்சு... சிக்கி அப்பாவுக்கு கால் ரெண்டும் போச்சு.. அம்மாக்கு கை ரெண்டும் போச்சு. நான் என்ன பண்ண. இப்பிடி அட்ஜஸ் பண்ணிதான் காலத்தை ஓட்ட வேண்டிருக்கு. அதுக்காக அதுவே ஆசையாகிடுச்சுனு சொல்ல சொல்றியா.
தோழி மரியாவோடு இந்த மாலை... ஆஸ்பத்திரி வளாகத்தில் பேசிய பேச்சு மனதுக்குள் ஒத்தையடியாய் நீண்டு கொண்டே இருந்தது. நெஞ்சுக்குள் ஓடிக்கொண்டே இருந்த இனம் புரியாத தவிப்பை எதைக்கொண்டும் அடக்க முடியவில்லை. டாய்லெட் பக்கெட்டில் நீரூற்றிக் கொண்டு டாய்லெட்டை நோக்கி கிளம்பினாள். மணி இரவு 9.
டாய்லெட்க்கு கரண்ட் வேணும்னு மனு போடறதெலாம் இருக்கட்டும். புள்ள முப்பத தாண்டிட்டா... எப்பிடியாவது இந்த வருசமாவது கல்யாணத்தை முடிச்சிடனும். புள்ள தனியா ரெம்ப கஷ்டப்படறா.. - அம்மாகாரி கண்களில் பாதி சொற்கள். மீதி கண்ணீராய் கொட்டியது. முட்டியோடு மழுங்கி இருந்த கையில் முகத்தை வளைத்து தேய்த்துக் கொண்டாள். இந்தக் கை தானும் இருப்பதாக துடித்தது.
விழுந்திருந்த குறுஞ்செய்தியை விரித்துப் பார்த்தான் சரவணன். "இவ எதுக்கு மெஸேஜ் போட்ருக்கா..." கண்கள் விரிந்து கொண்டே இருந்தது.
"9 மணிக்கு அங்க வா. வந்து அக்கா லொக்கானு கூப்பிட்ட.. அவ்ளோ தான்..."
- கவிஜி