நேற்று மகள் கைபேசியில் அழும்பொழுது ஆறுதல் சொல்லித் தேற்ற முடியவில்லை. தலையின் பின்புறம் வலி அதிகமாகி கண் விழிக்க முடியவில்லை என்றார். பிறகு எழுந்து நடந்தால் தலை சுற்றுகிறது என்னப்பா செய்வது என்றார்.
நான் பெங்களுரூ கிளம்பி வந்து அழைத்து வருகிறேன் என்று சொன்னேன். அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்ததால் அடிக்கடி போனில் பேச முடிந்தது.
தோழர் பார்த்திபனை சென்று பார்க்கச் சொல்லச் சொல்லலாமா என்று தோன்றியது. அவர் மகள் சேவும் மனைவியும் ஊரிலிருந்து வந்துவிட்டார்களா என்று தெரியவில்லை. இரண்டு நாளைக்கு முன்புதான் அவர் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அவரின் வேலை நேரமும் தெரியவில்லை. அவரிடம் உதவி கேட்கவும் தயக்கமாக இருந்தது. அவர் திருமணத்திற்குப் பிறகு படும் சிரமங்கள் நன்கு தெரியும். அவரை அசௌகரியப்படுத்த வேண்டாமென முடிவெடுத்து மகளிடம் மறுபடியும் பேசினேன்.
ஒரு வழியாக பேசி முடித்து அவர் அங்கிருந்து கிளம்புவதாகத் தீர்மானித்து டிக்கெட் போட முடிவெடுத்தோம்.
வழக்கமாக டிக்கெட் போடும் மஞ்சள் பேருந்து ஆஃப்பில் தேடியபொழுது ஊருக்கு வரும் இரண்டு பேருந்துகளைப் போல மூன்றாவது பேருந்து ஒன்றையும் காண்பித்தது. அதில் பேருந்து நடுவில் லோயர் பர்த் இருந்தது. டிக்கெட்டை அந்தப் பேருந்திலையே போட்டு டிக்கெட்டை மகளுக்கு அனுப்பிவிட்டு,
"இரவு 8:30க்கு பஸ்ஸூம்மா பிக்கப் எலக்ட்ரானிக் சிட்டி போட்டிருக்கேன்."
"சரிப்பா."
"வலி எப்படிம்மா இருக்கு."
"ரொம்ப மோசமாக இருக்குப்பா."
ஆறுதலாக பேசி தூங்கச் சொன்னேன்.
இரவு பேருந்து கிளம்ப அரை மணி நேரம் வரை அந்த நிறுவனத்திடமிருந்து டிரைவர் கைபேசி நம்பர் பேருந்து நம்பர் எதுவும் வரவில்லை.
"அப்பா. டிக்கெட் புக் பண்ணும்போது நம்பர் கரைக்டாக குடுத்தீங்களாப்பா."
"பல முறை பார்த்து உன் நம்பர் தான்ம்மா கொடுத்தேன்."
"எனக்கு எந்த மெசேஜூம் வரலைப்பா."
பதட்டமானவர் டிக்கெட்டில் இருந்த நம்பருக்கு தொடர்பு கொண்டால் பல முறை முயன்றதற்கு போனை எடுத்தவர்கள் உங்களுக்கு மெசேஜ் வரும் என்று சொல்லி வைத்து விட்டார்களாம்.
அவர்கள் கிளம்புவதாகச் சொன்ன நேரம் வர இன்னும் இருபது நிமிடங்கள் தான் மீதமிருந்தது.
நான் அவர்கள் கொடுத்த நம்பருக்கு போன் செய்தேன்.
"சார். இன்னும் கொஞ்சம் நேரத்தில் மெசேஜ் வரும் சார்."
"சார். நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கங்க. உடல்நிலை சரியில்லாமல் அங்க நிக்கிறாங்க. டிரைவர் நம்பர் தரலைன்னாலும் பரவாயில்லை. வண்டி நம்பராவது கொடுங்கள் சார்."
"அது மாதிரி நாங்கள் கொடுக்கக்கூடாது சார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மெசேஜ் வரும்."
"சாயந்திரத்துலேர்ந்து ஏழு மணி எட்டு மணின்னு சொல்லி இதுவரை எந்த மெசேஸூம் வரலை. இன்னைக்கு விடுங்கள் சார். இனிமேலாவது ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி மெசேஜ் போடுங்கள்."
கொஞ்ச நேரம் கழித்து மகள் பேசினார். டிரைவர் நம்பர் கொடுத்தார்கள். அவரிடம் பேசிவிட்டேன் வந்து கொண்டு இருக்கிறேன் என்று சொன்னதாக சொன்னார். தலைவலி தற்பொழுது இல்லை என்றும் சொன்னார்.
"பின்னாடி எம் 5 மால் போயி ஏதாவது சாப்பிட்டு ரூமுக்கு போறீயாம்மா."
"வாலின்டைன்ஸ் டேனால.ஒரே ஹார்டா தொங்குதுப்பா."
"அங்க ஓடுற டிஸ்பிலேய்ல பாரூ. அண்ணன் கம்பெனி விளம்பரம் வரும்."
"இப்ப அது ரொம்ப முக்கியமாப்பா."
வழக்கமாக கிண்டலடிப்பதுபோல் பேசி சிரித்துவிட்டு கைபேசியை வைத்துவிட்டேன்.
பத்து மணி நெருங்கியும் பேருந்தில் ஏறிவிட்டதாக போன் வராததால் நானே மகளுக்குப் பேசினேன்.
"டிரைவர் காலைக் கட் பண்ட்றாருப்பா."
டிரைவர் நம்பரை வாங்கி நான் பேசினேன்.
"சார். எலக்ட்ரானிக் சிட்டியில வெயிட் பண்றாங்க சார்."
"சார். நான் வந்துகிட்டு இருக்கேன். தொடர்ந்து போனடிச்சா. நான் வண்டி ஓட்டுறதா. போன் பேசிக்கிட்டே இருக்கிறதா. நான் ஏத்தாம வந்தால் கேளுங்கள் சார். அங்க ஒரு பாட்டி உட்கார்ந்து இருக்கும் பாருங்கள். அதோட நிற்கச் சொல்லுங்கள்." என்றார்.
நான் மகளுக்கு போன் செய்து விவரங்கள் சொனேன். அந்த பாட்டி கும்பகோணம் போவதாகவும் அவருக்கு மெசேஜ் வந்திருப்பதாகவும் சொன்னார்.
எனக்கு அவர்களின் தந்திர புத்தி விளங்கியது. பஸ் டிக்கெட் புக் செய்யும் போது ஊருக்கு கீழே bus stand pick up என்று போட்டு விட்டு அதன் கீழே Might require you to change the vehicle என்று போட்டு இருந்தது நினைவுக்கு வந்தது. நீங்கள் வாகனத்தை மாற்ற வேண்டியிருக்கலாம் என்று ஆங்கிலத்தில் போட்டு நூதன ஏமாற்றை செய்து இருக்கிறார்கள்.
டிரான்சிட் கும்பகோணம் அல்லது குறைந்தபட்சம் நேர்மையாக டிரான்சிட் என்று போட்டிருந்தாலாவது கொஞ்சம் சுதாரித்து இருக்கலாம். ஊருக்குள் வராமல் பைபாஸ் வழியாக போகும்போல நாம் காலையில் அங்கு சென்று அழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தது பெரும் தவறாகி விட்டது.
இரவு பத்து மணிக்கு பேருந்தில் ஏறிவிட்டதாக மகள் போன் செய்தார். படுக்கையில் அமர்ந்து ஜன்னல் துணியை இழுத்தபோது அதன் கம்பி தலையில் விழுந்து வலி கொடூரமாக இருக்கிறது என்று அழுதார். பேருந்து வாகன நெரிசலினால் தாமதமாகவில்லை, ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி டிக்கெட் ஏத்துகிறார்கள் என்று பாட்டி திட்டிக் கொண்டிருப்பதாக சொன்னார்.
இங்கு வழக்கமாக வரும் இரண்டு பேருந்துகளில் பின்பக்கமாக இருக்கைகள் இருந்ததால் இந்த பேருந்தில் டிக்கெட் எடுக்க வேண்டியதாகி விட்டது.
உடல்நிலை சரியில்லாத போது சிறிய அசௌகரியம் என்றாலும் பரவாயில்லை என்று இங்கு நேரடியாக வரும் பேருந்தில் டிக்கெட் எடுத்திருக்க வேண்டும்.
நானே மறுபடியும் போன் செய்தேன்.
“ஹாட் பேக்கை தலைக்கு வச்சுக்கம்மா. சுடுதண்ணீர் தேவைப்பட்டால் ப்ளாஸ்கிலேர்ந்து எடுத்துக்கொள். தேவைப்பட்டால் கால்பால் மட்டும் போட்டுக்கோ.”
“நிறைய இடத்தில் நின்னு வர்றாங்கப்பா.”
“பஸ்ல ஆட்கள் இருக்காங்களா.”
“முன்னாடி நானும் பாட்டியும் பின்னாடி இரண்டு மூன்று பேர் இருப்பாங்க போலப்பா.”
“நான் முழிச்சுக்கிட்டுதான் இருப்பேன். எப்போ வேண்டுமானாலும் எனக்குப் பேசிக்கம்மா.”
தந்திரமாக ஏமாற்றப்பட்ட வெறுப்பு கன்சியூமர் கோர்ட்க்குப் போவதற்கு சிந்திக்க ஆரம்பித்து விட்டது. அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் வக்கீல் ஜெ.குமார் சாருக்கு போன் செய்த போதுதான் நேரம் கடந்து செய்கிறோமே என்று தோன்றினாலும் காலை கட் செய்யலாமென நினைக்கும்போது அவர் பேசிவிட்டார்.
“சார்.சொல்லுங்க.என்ன இந்த டைம்ல.”
“சாரி. சார். நேரத்தை கவனிக்காமல் பேசிவிட்டேன். காலையில் பேசுறேன் சார்.”
“நாளைக்கு ஹைக்கோர்ட்ல ஒரு கேஸ் அதுக்காக பிரிப்னபேர் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீங்கள் என்னான்னு சொல்லுங்கள்.”
நடந்தவைகளை சொன்ன பிறகு மஞ்சள் பேருந்து ஆப்பின் முகவரி, பயணித்த பேருந்தின் தலைமை அலுவலக முகவரி, டிக்கெட் காபி, வேறு ஆதார ஆவணங்கள் இருந்தால் எடுத்துக்கொண்டு ஜூனியரிடம் காலையில் கொடுக்கச் சொன்னார். அதை விட எளிமையானது குளத்துக்கரையில்தான் பஸ் வந்து நிறுத்திக் கிடக்கும் உங்கள் தம்பியை பஸ்ஸை வீட்டிற்கு எடுத்துக்கிட்டு போகச் சொல்லுங்கள். பஸ் ஓனர் நேராக வீட்டுக்கு வருவான் என்று சொல்லிவிட்டு சிரித்தார். சட்டப்பஞ்சாயத்தை கட்டப் பஞ்சாயத்தாக செய்யச் சொல்கிறார். இங்கு பல விசயங்கள் இப்படித்தான் நடக்கிறது.
மஞ்சள் பேருந்து கஸ்டமர் கேருக்கு போன் செய்து விவரங்கள் சொன்னாலும் இயந்திரத்தனமாக பேசிக் கொண்டிருந்தார்கள். கோவம் தலைக்கேற
“மேடம். உங்களுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் யாருன்னே எனக்குத் தெரியாது. என் மன உளைச்சலுக்கு காம்பன்சேசன் நான் கேட்கவில்லை. பஸ்க்காரர்கள் செய்யும் பிராடுத்தனத்திற்கு மஞ்சள் பேருந்து ஏன் உடந்தையாக இருக்கனும்.”
“சார். பிராடுன்னு பேசாதீர்கள் சார்.”
“மஞ்சள் பேருந்து ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து எனக்குத் தெரியும். அதை எப்படி ஆரம்பித்தார்கள்ன்னு உங்களுக்குத் தெரியாது. நான் பேசுறத ரெக்கார்ட்ப் பண்ணிக்கங்க. எனக்கு எந்தப் பயமும் இல்லை.”
“ரெக்கார்ட் ஆகிட்டுதான் இருக்கு சார்.”
“என்னோட லீஸ்டான ரிக்கொஸ்ட் ஒன்னுதான் மேடம். உங்கள் டிஸ்ப்ளேயில டிரான்சிட் கும்பகோணம் என்று போட வேண்டாம். டிரான்சிட்ன்னு மட்டும் போட்டால் போதும் மேடம். அது போதும். என்னைப்போல் எதிர்காலத்தில் யாரும் பாதிக்கப்படக்கூடாது.”
என்னை லைனில் காத்திருக்க வைத்துவிட்டு கொஞ்சம் நேரம் கழித்து,
“உங்கள் புகாரை எங்கள் பேனலுக்கு அனுப்பி இருக்கிறேன். தகுந்த நடவடிக்கை எடுப்பாங்க சார்.”
“ஒரு வாரத்தில் அங்கு மாற்றப்படாமல் இருந்தால் நான் கோர்ட்டுக்கு போயிருவேன். மேடம்.”
அவருக்கு அளித்த பயிற்சியின் படி நன்றி சொல்லி வைத்துவிட்டார்.
கூகுளில் அந்த பஸ்ஸின் பெயரை தேடி போன் நம்பரை எடுத்துப் பேசினால் இது டிராவல்ஸ் நீங்கள் டிரான்ஸ்போர்ட்க்கு பேசுங்கள் என்றார். டிரான்ஸ்போர்ட் நம்பருக்குப் பேச முயன்றால் சுவிட்ச் ஆஃப்ல் இருந்தது. சர்ச் செய்ததில் ஜூம் செய்து பார்த்தால் தலைமை அலுவலகம் காரைக்கால் என்று போட்டு இருந்தார்கள். நாளைக்கு காரைக்கால் குணாவுக்குப் போன் செய்து அவர்கள் யாரென்று விசாரிக்கச் சொல்ல வேண்டும்.
மகளுக்கு போன் செய்யலாமா என்று நினைத்தேன். அவரே போன் செய்யட்டும் என்று தூங்க ஆரம்பித்தேன்.
அதிகாலையில் 5:30க்கு மகள் கும்பகோணம் வந்துவிட்டதாக சொன்னார். தலைவலி குறையவில்லை என்றார். பாட்டி பைபாஸில் இறக்கி விட்டதற்கு சண்டை போட்டதாம். தான் மட்டும் பேருந்தில் இருப்பதாகச் சொன்னார் . இன்னொரு பேருந்தில் மாற்றி விடுகிறோம் என்று சொல்லிவிட்டு பின் இருக்கைக்கு டிரைவர் படுக்கச் சென்று விட்டதாக சொன்னார். எனக்கு கவலையாக இருந்தது.
என் கவனக்குறைவுக்கு என்னையே நான் நொந்து கொண்டேன். நடைப்பயிற்சியின் இடையில் 06:30க்கு மாற்றி ஏறிய பேருந்து கிளம்பி விட்டதாகச் சொன்னார். நான் வீட்டில் குளித்து முடித்தபோது தஞ்சாவூர் வந்துவிட்டதாகச் சொன்னார். பல இடங்களில் நின்று வருவதாக சொன்னார்.
அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு நேற்று நடந்தவைகள் எல்லாவற்றையும் டைப் செய்து லேப் டாப்பில் வைத்து விட்டேன். ஸ்கிரீன் ஷாட் எடுத்தது மகள் அனுப்பிய இரண்டு பேருந்துகளின் புகைப்படங்கள் நேற்று நடந்த உரையாடல் பதிவுகள் எல்லாவற்றையும் மஞ்சள் பேருந்து என்ற போல்டரில் சேமித்து வைத்துவிட்டு வேலை பார்ப்பவர்கள் வந்ததும் கிளம்பிவிட்டேன்.
நான் சாமியார் மடம் வந்தபோது அந்த பேருந்து தூரமாக வந்து கொண்டு இருந்தது. நேரம் ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
பேருந்து நிறுத்தியதும் நான் முன் பக்கமாக நின்று பேருந்தை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். மகள் களைப்புடன் இறங்கி வந்து என் வண்டியில் ஏறிக்கொண்டார். முன்பு பார்த்ததை விட ரொம்பவும் இளைத்துப் போயிருந்தார்.
“தலைவலி எப்படிம்மா இருக்கு.”
“சுத்தமாக இல்லைப்பா.”
“என்னம்மா சொல்றே.”
“தெரியலைப்பா. சுத்தமாக வலி இல்லைப்பா. நீங்கள் ஏதாவது மேஜிக் பண்ணிட்டீங்களாப்பா.”
“ஏய்…லூசு நான் ஒன்னும் பண்ணலை. வீட்ல குளிச்சிட்டு ரெஸ்ட் எடு. டாக்டருக்கிட்ட டோக்கன் போட்டிருக்கேன். ஒரு செக்கப் பண்ணிக்கிறுவோம். ஒரு வாரம் லீவு போட்டிருக்கியே. ஏதாவது பிரச்சினை வருமாம்மா.”
வண்டி மணிக்கூண்டை கடந்து செல்லும்போது ட்ராஃபிக் போலிஸ் வணக்கம் சொல்லிவிட்டு செய்கையிலையே மகளா என்று கேட்டார். ஆமாம் என தலையாட்டினேன்.
“சொல்லும்மா”
“அதெல்லாம் வராதுப்பா . அவுங்க தான் ஊருக்கு போயிட்டு கிளியர் பண்ணிட்டு வாங்கன்னாங்க. அப்பா… கும்பகோணத்திலிருந்து நான் மட்டும் தான் பஸ்ல தனியா வந்தேன்ம்பா. பயமா இருந்துச்சு”
இதைக் கேட்டதும் எனக்குள் இருந்த கோபம் எல்லாம் மாறி இரக்கம் சூழ்ந்து விட்டது. அதற்குள் வீடு வந்துவிட்டது. அவரை வீட்டிற்கு போகச் சொல்லிவிட்டு குளக்கரை நோக்கி சென்றேன். அங்கு அந்த பேருந்தைக் காணவில்லை.
கைபேசியை எடுத்து நான் எடுத்த புகைப்படத்தில் ஜூம் செய்து பார்த்தேன். டிரைவரும் அவரது அசிஸ்டென்ட்டும் கலவரமாக என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். கண்டவர்களிடம் திட்டு வாங்கி வழியில் எல்லாம் டிக்கெட்டுகள் ஏற்றி அவர்களை நினைத்தாலே பாவமாக இருந்தது.
‘மன்னிச்சுருங்க தோழர். என் மகளை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி’
நீதி மன்றம் போனால் ஏதாவது ஒரு அரசியல் நாய் வரும், இல்லை ஒரு ரவுடி நாய் வரும். அந்த நாய்கள் எல்லாம் ஏதாவது ஒரு வேலைக்காரர் பெயரில்தான் இதுபோன்ற பிராடுகளை செய்வார்கள். அங்கும் வேலைக்கார்கள்தான் வருவார்கள். ஏனோ வழக்கு போடும் எண்ணமே வரவே இல்லை.
பாட்டி ஒருவர் தர்மம் கேட்டு கையை நீட்டினார். என்னிடம் சில்லறை எதுவும் இல்லை. நூறு ரூபாயைக் கொடுத்து போனில் பேருந்து ஓட்டி வந்தவர்களின் புகைப்படத்தை ஜூம் செய்து காட்டி இவர்கள் நல்லா இருக்கனும்ன்னு வேண்டிக்கங்க பாட்டி என்றேன்.
பாட்டி என்னை வினோதமாகப் பார்த்துவிட்டு ஏதோ முணு முணுத்துக்கொண்டு சென்றது.
காலை வெயில் உக்கிரமாக இருந்தது. எனக்குள் மட்டும் வெளிச்சொல்ல முடியாத குளிர்மை பரவியது. அந்த தோழர்களுக்கு அன்றைய நாள் முழுவதும் மனம் நன்றி சொல்லிக் கொண்டே இருந்தது.
- ரவி அல்லது