கீற்றில் தேட...

01.

மழை! இடைவிடாப்பெருமழை! பேய்மழை என்பார்களே அதுபோல நிற்காமல் பெய்து கொண்டே இருக்கிறது. வானத்தை யாரோ பெரியதொரு ஆயுதத்தால் குத்திக் கிழித்தாற்போல கொட்டோ கொட்டெ’ன்று மேகம் தொடங்கி பூமி தொடும் நீர்க்கம்பிகளின் நீளத்தை அளக்க, மழைக்கடவுள் இந்திரனாலும் இயலாது. மழைக்கோளாலும் முடியாது.

            இதென்ன இயற்கை மழையா... செயற்கை மழையா...? விண் பிளந்து மேகம் வெடித்து வீழும் தண்ணீர்க் கடப்பாரைகளா....?

            வளைகுடா நாடுகளில் பல பகுதிகளில் இதே போல் பெருமழையாம்...

            உலகின் ரெண்டாவது, பிரம்மாண்டமான சர்வதேச விமான நிலையமான துபாய் விமான நிலையத்தில், சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஓடுபாதையொங்கும் நீரோடும் பாதை... நிற்காத வெள்ளம். மழையில் நனைந்த பறவைகள் போல விமானங்கள் நின்று கொண்டிருக்கின்றன.. கிட்டதட்ட 295 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

            தொலைக்காட்சி ,செய்திகளைக் காணொளி[லி]களாய்த் துப்பிக் கொண்டிருக்கிறது.

            பலரும் நம்பிக் கொண்டிருப்பது போல துபாய் என்பது ஒரு நாடல்ல.... ஐக்கிய அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் ஒன்று.

            ஐக்கிய அரபு அமீரகம் என்கிற UNITED ARAB EMIRATES அரேபிய தீபகற்பத்தின் தென்கிழக்கில் உள்ள தேசம்

1. அபுதாபி

2. துபாய்

3. ஷார்ஜா

4. அஜ்மன்

5. உம் அல் குவெய்ன

6. ஃபுஜாரா

7. ரஸ் அல் கைமா-எனும் சப்த கன்னிமார்களாலானது.

            நான் வசிக்கும் துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரை நகரம். பொதுவாக வெயில் கொளுத்தும் வெப்பப் பிரதேசம். பொதுவாகவே வறண்ட வானிலை. வருடத்துக்கு 100 மி.மீ. க்கும் குறைவாகவே ப்பெய்கிற மழை மறைவுப் பிரதேசத்திற்கு இப்போ என்ன ஆச்சு!        ஏனிந்த கனமழை! கால இடைவெளி இல்லாத கடும் மழை! ...? எதற்கிந்த மாரியாட்டம்?

            ஒரு ‘துண்டிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு மையம், சூடான ஈரமான காற்றை உள்ளிழுத்த மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது.  வளைகுடாப் பகுதி நீண்டகாலம் மழையின்றி இருந்த பிறகு ஒழுங்கற்ற, அளவற்ற மழையைப் பெறுகிறது. இது அரிதான நிகழ்வு! அதனாலென்ன எப்படியும் மினரல் வாட்டர் பாட்டில்கள் இறக்குமதி செய்யப்படத்தான் போகின்றன.

            துபாயின் கனமழைக் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன! சில நிறுவனங்களுக்கு WORK FROM HOME –ம் அனுமதிக்கப்பட்டது.

            நானோ மக்கள் தொடர்பே பணியாய்க் கொண்ட வங்கியாளன்- நானெப்படி வீட்டில் இருந்த பணி செய்ய....? எப்படியாவது வங்கிக்கு கிளம்பி யாக வேண்டும். பார்ப்போம் யாராவது போன் செய்கிறார்களா என்று....

            காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கப்பலின் ஹாரன் சப்தம் போல காற்றின் பேரோசை.... சாலையோர மரங்களின் தலைவிரி யாட்டத்தின் வேகத்தை அளக்க கருவி அது...? வானுக்கும் பூமிக்குமிடையில் ஒரு கருஞ்சுழல்....! சுழன்று சுழன்று நகர்கிறது.... நீண்டு.. நெடிதுயர்ந்த கட்டடங்களும் மறைகின்றன... கருஞ்சுழலில்... பெருவாகனங்கள் ஓரங்கட்டி நிற்க, சிறு வாகனங்கள் எனும் இருசக்கர வாகனங்கள், சிறிய வகை கார்கள் இந்தப் புயலின் அதிவேகத்தை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றன.

            வானிலிருந்து மின்னல் கொடி ஒரு ஒளியால் தீட்டியக் கோட்டோவியமாய் ‘பளிச்’சிட்டு மறைய... இடியொன்றின் பேரோசை. பெருமரம் முறிந்து வேரோடு வீழ்கிறது.

            துபாய் போன்ற நகரத்தில் மழையே அதிகம்...! மழையோடு புயலும் சேர்ந்தால் அதீதம் தான்!  நானெல்லாம் பரவாயில்லை!     பாதுகாப்பான வீடு...! பாதுகாப்பான அடுக்ககம்.          எளிய மக்கள் இந்தப் பெரும் புயலை... பேய் மழையை எப்படி எதிர்கொள்வார்கள்.

            பார்க்கவும், நினைக்கவும் ரத்தக் கொதிப்பின் அளவு கூடுகிறது .தொலைக்காட்சியை த் துண்டிக்கிறேன்.

            துபாயிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள அல்-ஐன் (AL- AIN) நகரில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 256 மி.மீ மழை பதிவாகியிருப்பதால் BBC உறுதி செய்கிறது.

            அல்-ஐன் நகரில் தான் இருக்கிறார் என் இனிய நண்பர் ராமதாஸ்!                        அல் அய்ன், அபுதாபி-யில் இருந்து 160 கி.மீ துபாயில் இருந்து 120 கி.மீ, அல் அய்ன், அபுதாபி அமீரகத்தை சார்ந்த ஒரு நகரம்.

இலக்கியப் பணிகளுக்கெனவே தன்னை ஒப்புக் கொடுத்துக்கொண்ட அணில் தான் ராமதாஸ்

2

- ஷிவம் சார் நாளைக்கு நாம எந்த பிராஞ்ச்க்கு இன்ஸ்பெக்ஷன் போறோம்.

-அது, சரவணப்பெலஹோலா தாண்டி பிந்து...

- ஓ......சென்னராயப்பட்ணா பிராஞ்சா... அப்போ ஒண்ணு செய்யலாம்... அந்த பிராஞ்ச் இன்ஸ்பெக்ஷன் முடிஞ்சப்புறம் மேல்கோட்டை போலாமா சார்.

எனது DRM CABIN உள்ளே தான் இந்த உரையாடல்.    பிந்து எங்கள் மண்டல அலுவலகத்தின் SECURITY OFFICER , விமானப்படையில் MAJOR - ரேங்கில் தேசசேவை செய்து பின், வங்கிப் பணியில் இணைந்தவர். முக்கியமாய் தமிழ் தெரிந்த, வரலாற்று ஆர்வம் மிக்கவர்.

            எங்கள் வங்கியின் ஹாசன், மண்டல அலுவலகத்தில் தமிழ்ப் பேச, தத்தளிக்கையில் கிடைத்த துடுப்பு.... ஆகவே...

            - ஓக்கே பிந்து, கண்டிப்பா போகலாம்... டிரைவர் கிட்ட தகவல் சொல்லிடுங்க.

            கர்நாடகத்தின் தென்பகுதியில் இருக்கும் ஹாசன் நகரைச் சுற்றி பல சரித்திரப் பொக்கிஷங்கள்... யப்பப்பா... எத்தனையெத்தனை...!

            பேலூர், ஹளபேடு, மைசூர், மேல்கோட்டை, திப்பு சுல்தான் கட்டிய நட்சத்திரக் கோட்டை, சரவணபெலகோலா.... திகட்ட திகட்ட கலைப் பொக்கிஷங்கள்!

            வங்கிப் பணியில், மண்டல துணை மேலாளருக்கு, BRANCH VISIT என்பது கட்டாயம். மாதத்துக்கு 10 கிளைகளுக்காவது சென்று, அதன் வியாபாரம், வணிக உத்தி, வாடிக்கையாளர் சேவை எனப் பலவற்றையும் பார்த்து வருதல் பணிகளுள் ஒன்றெனில் கிளையின் பாதுகாப்பு குறித்த அம்சங்களைக் கண்காணிக்க, பிந்து ‘வும் என்னுடன் வருவார்.

0

தொண்டனூர் மன்னன் தேவராயன் ஆழ்ந்த கவலையில் இருந்தான்.

- இதய்ம் கவர்ந்த என் பெரிய எஜமானரே... என்றுமில்லாதபடிக்கு இன்றைக்கேன் தங்கள் கண்களில் கவலை கூடு கட்டி கொண்டிருக்கிறது?

சாந்தலாதேவியின் குரலில் கவலைத் தோய்ந்த அன்பு.

-சாந்தலா... உணரமுடியாதவளல்ல.. நீ! நாம் ஆட்சியாளர்கள் ... அதிகாரம் மிக்கவர்கள். ஆனாலும், தனிப்பட்ட முறையில் நம் பெண் குழந்தை குறித்த கவலை என்னை அரிக்கிறதே.... என்ன செய்ய...நானுமொரு தந்தையாய்க் கவலைக்கொள்கிறேன்…துக்கம் சூழத் தூக்கம் தொலைக்கிறேன்

-உணர்கிறேன் உங்களை எந் மன்னவனே... மகள் மீதான தந்தையின் பாசம் உலகறிந்தது தான்... ஒரு யோசனை.. தவறெனில் மன்னீப்பீர்களென நம்புகிறேன்.

- சொல் சாந்தலா... உன் யோசனைகளையும், அறிவுரைகளும் என் நலத்துக்குத் தானே...தயங்காமல் சொல்!

- சிறியவள் மீதான பெரிய வார்த்தைகள்... ஸ்வாமி! ஸ்ரீரங்கத்திலிருந்து ராமானுஜன் என்ற நாமம் கொண்ட வைஷ்ணவப் பெரியவர்... நம் தேசத்திற்கு விஜயம் செய்துள்ளாராம்.. ஒரு முறை, அவரிடம் நம் மகள் குறித்த கவலைகளைப் பகிரலாமோ...? உகந்ததெனில் பரிசீலியுங்கள் ,தவறெனில் மறந்து இந்த பேதையை மன்னியுங்கள் மன்னரே!

-அடடே....! நானும் கேள்வி பட்டேன்! ராமானுஜன் குறித்த தகவல் என் செவிக்கும் வந்தது.

- பிரபு...... அவர் வைஷ்ணவர்...அவருடனான சந்திப்பை நம் அருகர் வழி வந்த சமணம் ஏற்குமோ.. என்று தான் அச்சப்படுகிறேன்.

- சாந்தலா... மதங்கள்... எப்போதும் நல்வழி காட்டத்தான். நடுவில் வந்தவர்கள் ,ஆரண்ய ஆனைகளை விட மதம் பிடித்த சிலர் தான், அதன் உள்ளர்த்தங்களைத் தமக்கு வாகாக திருப்பி, எளிய மக்கள் மனதையும் மடைமாற்றி விடுகிறார்கள்...கிடக்கட்டும், கண்டிப்பாய் நாளை அவரை, நம் அரண்மனைக்கு அழைப்போம்.உரையாடுவோம், இப்போதைக்கு தெளிவாக உறங்குவோம்.

3

அன்புக்கினிய மஞ்சு... வணக்கம்,

நலந்தானே! கணவரும், மகனும், மகளும் கூடவே நீயும்..

நீண்ட நாட்களுக்குப் பிறகு சிவகாசியில் சந்தித்ததில் நெஞ்சமெல்லாம் இனிப்பு. தோழிகளுடனான உரையாடல் உயிருள்ளது.உணர்வுப் பூர்வமானதுங்கூட.

தீபாவளி மலர்களில் வெளிவந்த படைப்புகள் குறித்து தமிழச்சியுடன் உரையாடினேன்.

திலகபாமா தேர்தலில் பங்கேற்கப் போவதாகக் கூறினார். பிறகுதான் விரிவாகப் பேசணும். தமிழரசியை இலக்கியக் கூட்டமொன்றில் சந்தித்தேன்.

சக்திஜோதியின் அடுத்தக் கவிதைத் தொகுப்பு வருகிறதாம். அமிர்தம் சூர்யா தொகுத்த தீபாவளி மலரைப் படித்து எழுதணும்.

நீ கேட்டிருந்த படி "மரம்” குறித்து கவிதையென (!) ஒன்றினை இணைத்துள்ளேன் .பிடித்திருந்தால் வெளியிடலாம். பிற பின்

அன்புடன்

ஜீவன்

மர வரம்

மரங்குறித்து எழுதுங்களென்றாய்!

 மரமெனில் பூ மலரும்; கனி பழுக்கும் பலன் பலவுமுண்டு. தருக்களாய் பெருகி வளமானால்

மழைபெருகும்: பூமி குளிரும்

விருட்சமெனில் வேர் பாய்ந்து நிழல் பூக்கும்:

பட்சிகளின் இசை மய்யமாக

இலைகளும் மணங்கமழும். எளிய முருங்கையில் "பிரும்மம்”

படைத்தானெங்கள் பிரபஞ்சக்கவி

"புளிய மரத்தின் கதை" சொல்லி பெருவாழ்வைப் பதிந்தான் நாகர்கோவில் நவீனன்

காட்டு வாகையில் கவிதைச் சூடினாள் செல்ல மகள் சக்திஜோதி

“மஞ்சனத்தி்”க்கு இலக்கியபீடமமைத்தாள் …

 தந்தையாய்த் தத்தெடுத்த தமிழச்சி.

தருவழிப்பையும் கருவழிப்பையும்

கவிதையாய்ச் சொன்னதோ வைகைச்செல்வி

வன்னி மரமொன்றில் ஆயுதம் மறைத்த கதை பெரும்பாண்டவம்

காடுகளாய் விரிந்து புகலிடமான வனங்களோ

 தோழமை நிறைந்தவை

வீரம் செறிந்தவை.

எண்ணெய் வழியும்

வழுக்கு மரங்களில்

ஏறுவது ஓர் கலை

கல் மரங்களைப் பூக்கச் செய்யுமோ நல் கவிதை

தங்க நாற்கரங்களுக்காய்

தருக்களை அழித்து துயரமெனில்

சந்தன மரக்காரன் ஒருவனுக்காக

சகல மரங்களையும் வெட்டி வீழ்த்திய

"அரச" மரத்தின் விதிகள் புரிவதேயில்லை

புறக்கணிப்பின் உருவகமாய் காட்டுவாகை

கலைகளின் படைப்புன்னதமாய் வாழை

அக அழகியலைப் புஷ்பிப்பது மஞ்சள் கொன்றை

 புறக் கோபத்தின் தீவிரக்குறியீடாய் தீக்கொன்றை

எத்தனையோ மரவரங்கள் என் வாழ்வில்

அந்த யானைக்கால் மரத்தை மறக்க வியலாது மஞ்சு!

அந்தப் பெருமர நிழலிலன்றோ

என் பிஞ்சுக் காதல் கருகியது.

 காய்ந்த சருகுகளின் ஒலியில் கேட்க வேயில்லை .

முதற்காதல் முறிந்த பேரோசை

இருக்கிறாள் அவள்!

யானைமரமும் அங்கேயே..

தொலைந்துபோன என்னைத்தான்

கண்டு பிடிக்க முடியவில்லை.

எந்தப் பறவையாலும்.

பட்ட மரங்கள் துளிர்க்கக்கூடுமோ ?!

@

மரங்குறித்து --

இனிய ஜீவன் வணக்கம் மின்னஞ்சல் பிரித்தேன்

“மரவரம்” நெகிழ்ச்சியைத்தந்தது.

ஆனால் எனக்கு "யானைக்கால் மரம்" பற்றி விரிவாய் உரைநடையில் எழுதேன். உன்னால் முடியும்.

அன்பினிய

மஞ்சு.

4

காலைச் செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது அதிர்ந்தேன். நேற்றிரவு அந்த நிகழ்வில் இருந்தவன்.. என்ற வகையில் பேரதிர்ச்சியாக, ஏற்றுக்கொள்ளவே முடியாத நிகழ்வு என மனம் சொல்லுகிறது. நான் உயிர் பிழைத்தது நற்பலனா...? ஒரு எவர்சில்வர் பாத்திரத்துக்காக 18 பேர் உயிர் விட்டிருப்பது துர்பலனா..?. சிந்தனை வயப்பட்டிருந்த அதே கணத்தில் கை பேசி ஒலித்தது. எதிர்பார்த்த படியே... அன்பரசன் தான்.

- நியூஸ் பாத்தியா தென்னரசு

- பாத்தன்... அன்பு... அதப்பத்திதான் யோசிச்சி கிட்டு இருக்கன்.கரெக்ட்டா ஒன்னோட போன் வர்ரது...

- நாம தப்பிச்சிட்டோம்... ஆனா... இதெல்லாம் பெருந்துயரம்!

ஒரு சின்ன நினைவுச் சுழலோடு நேற்று நிகழ்வுக்கு பயணிக்கலாம்! சென்ற வாரத்தில் பிற்பகலில் ஒரு அழைப்பு...!

0

            அட... இனியன் சம்பத்! என்னுயிர்த் தோழன் ஆதித்யனின் சொந்தச் சோதரன்..நீண்டதொரு காலம் மீண்டதொரு தொலைப்பேச்சு!

- சொல்லும்மா... இனியன்...ஆச்சர்யம்... அதிசயம்..

- அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே... நல்ல சேதியோடு அண்ணங்கூட பேசலாம்ணு தான்...

- அட... அப்டியா... சொல்லும்மா... அம்மா நல்லா இருக்காங்களா... வீட்ல எல்லாரும் நலம் தானே!

இனியன் சம்பத், காலம் தின்று செரித்த, என் ஆருயிர் நண்பன் ஆதித்யனின் இளவல். சென்னை மாநகரில் அண்ணா சாலையில் தம் மத்திய அலுவலகத்தைக் கொண்ட, தேசியமயமாக்கப்பட்ட அரசுடைமை வங்கி ஒன்றில் முதுநிலை மேலாளராக இருப்பவன்.

- வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்கண்ணா... அம்மா தான் கொஞ்சம் தளர்ச்சியா இருக்காங்க.... வயசும் எண்பதுக்கு மேல ஆச்சில்ல.

- அட... எண்பது ஆயிடுச்சா..

- கேப்பீங்களே நல்லா... அண்ணனுக்கே அறுபது முடிஞ்சுட்டில்ல..

- ஆமால்ல.. மறந்தே போச்சு! சரி சொல்லு நல்ல விஷயம்ன்னியே!

- மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கன்! பையன் மெட்ராஸ் தான்! தூரத்து சொந்தம் தான்! பூர்விகம் தலை ஞாயிறாம்.

- எது வேதாரண்யம் தலைஞாயிறா... தெரியும்ல... அங்க தான் நான் மொதமொதல்ல வேலைக்கு சேர்ந்தது.

- அதனாலதான் அண்ணனுக்கு மொதல்ல சேதி சொல்றன். காடந்தேத்தி அய்யனார் கோயில்ல 15ந் தேதி வெள்ளிக்கிழமை கல்யாணம்.. சிம்பிளா... பேமிலி மெம்பர்ஸ் மட்டும் கலந்துக்குற மாதிரி...

- ம்... நல்லதுதான் - ரிஷப்சன் எங்க.

- சென்னைல.. வேளச்சேரி பஸ் ஸடாண்ட் கிட்டதான் ஞாயிற்றுகெழம... 18 ந்தேதி அவசியம் குடும்பத்தோட வந்துடணும்.. பொறவு.. அன்பரசன் அண்ணன் மொபைல் நம்பர் வேணும் .... வாட்சப்ல இன்விடேஷன் அனுப்புறன்... நேர்ல வந்த மாதிரி அண்ணன் நெனச்சி அவசியம் வறணும்.

- அதெல்லாம் ஒண்ணும் நெனக்கலை.. நீ வாட்சப்லே அனுப்பு முடிஞ்சா... லொகேஷன் மேல் அனுப்பு அன்பரசன் நம்பர் குறிச்சுக்கோ 944.........

- தேங்ஸ்ண்ணே... அவசியம் வந்துடுங்க..... அண்ணிய நலம் விசாரிச்சதா சொல்லுங்க.. அவங்களையும் அழைச்சிட்டு கட்டாயம் வந்துடுங்க....

- தம்பி உத்தரவை மீற முடியுமா...?

- காத்துகிட்டு இருப்போம்... பாக்கலாம்.

- நல்லது.. சந்திப்போம்.. பிள்ளைகளுக்கு வாழ்த்துகள்.

0

            இறந்து போன என் நண்பன் ஞாபகங்களின் நினைவு சுழல்... மறக்க முடியுமா?     1980- ஆம் ஆண்டில், அரசு கலைக்கல்லூரியில், இளம் வணிகவியல் துறையில் சேர்ந்த போது அகரவரிசைப்படி உட்கார வைத்ததில் நண்பனாய் அமர்ந்தவன் ஆதித்யன்!

            நண்பன் என்பது சுருங்க சொல்வது; நல்லாசிரியனாய், தொண்டனாய், தோழனாய்.... அறிவார்ந்த விவாத களத்தில் இணையனாய்... ஆதித்யனுக்கு தான் எத்தனை முகங்கள்! ஆதித்யன் பன்முகன்.

            ஒரு சாலையின் ஒரு புறம் என் வீடெனில், மறுபுறம் ஆதித்யனின் வீடு! ஆதித்யனின் வீடு என்பது ஜனநாயகத்தின் மைதானம்! அப்பா, அம்மா-வுடன் வானுக்கு கீழுள்ள எது குறித்தும் விவாதிக்கலாம்.தினமும் ஆதித்யன் வீடு சென்று, அவனுடன் சைக்கிளில் கல்லூரி செல்வது வாடிக்கையானப் பதிகம்!

            ஆதித்யனின் இனிய இளவல் இனியன் சம்பத் எங்களை விட மூன்றாண்டு சிறியவன். நாங்கள் இளம் வணிகவியல் எனில் இனியன், இளம் அறிவியல் படிப்பில் சேர்ந்தான்.

            ஆதித்யன் அப்பாவுக்கு, தஞ்சைக்கு பணி மாறுதல் வர, உடலால் பிரிந்தது எம் நட்பு. ரெண்டு, மூணு முறை, தஞ்சை சென்று நாள் அவனை சந்தித்ததும், அவன் ஒரு முறை என்னை வந்து பார்த்து சென்றதும் ஞாபகத் துணுக்குகள்.

            எதிர்பாராத விதமாக ஆதித்யன் ஓர் விபத்தில் இறந்து போனான்!

            அதிர்ச்சியும் அழுகையுமாய் பேருந்து பிடித்து பார்க்கவும். முடியவில்லை. சுடுகாடு எடுத்து சென்றுவிட்டதாய்ச் சொல்ல... பறந்தோம்... கொழுந்து விட்ட தீயில் ஆதியன்!

            பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஆதித்யன் ... என் நினைவுகளில் இருந்து நழுவி விட.... நீண்ட வருடங்குளுக்கு பிறகு இனியன் சம்பத் - மகள் திருமண அழைப்பு!

5

ஜனநாத சதுர்வேதி மங்கலம், தாலுக்கா சமுத்திரப்பட்டினம் கிராமத்தில், 13 வயது சிறுமி நான்கு நபர்களால் பாலியல் வண்புணர்வுக்குட்பட்டதைக் குறித்த உண்மையறியும் குழுவின் ஆய்வறிக்கை.

 

உண்மையறியும் குழுவில் இடம்பெற்றவ ர்கள்:

V. சந்திரா (இணை அமைப்பாளர், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு)

R. முருகப்பன் (திட்ட ஒருங்கிணைப்பாளர், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்)

K.A.ஆண்ட்ரூஸ் ( தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு)


தர்ம.துரைமுருகன், வழக்கறிஞர்


வனிதா, மாவட்ட மனித உரிமைச் செயல்பாட்டாளர்

 சு. தமிழ்ச்செல்வி எழுத்தாளர்,மனித உரிமை மேம்பாட்டு அமைப்பு

விழி.பா.இதயவேந்தன், எழுத்தாளர்,மனித உரிமை மேம்பாட்டு அமைப்பு

ஆழி.வீரமணி.பத்திரிகையாளர்

சம்பவத்தின் பின்னணி:

            கடல் மாதா தன்னிடமிருந்த குளிர்மையை காற்றின் வழியாக கரைக்கு வாரித்தருகிறாள். கரையோரத் தாவரங்களின் முகத்தில் ஜில்லென்று பூத்த பசுமையின் பூரிப்பு!

            சந்திரகலா அப்போது தான் குளித்து விட்டு வந்து தன் அத்தையின் அறையில் ஆடை மாற்றிக் கொண்டு, தலைவார சீப்புடன், ஹாலில் உள்ள சோபாவில் அமர்கிறாள்...பக்கத்தில் இருந்த ‘ரிமோட்’டை எடுத்து தொலைக்காட்சியை இயக்க, மஹாராஜா, ஆடம்பர ஆடைகளுடன், ‘ஹேய்..... ஹோய்’ என ஏதோ ஒரு மேடையில் கால்நடை மேய்க்கிறார். வேறு சானலுக்குத் தாவ மும்தாஜ் ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா’ என்று கதாநாயகனிடம் விண்ணப்பித்துக் கொண்டிருந்த வேளையில் தான், திறந்திருந்த கதவு வழியாக அவன்கள்... ம்ஹூம்... அந்தக் கொடிய மிருகங்கள் நான்கு வீட்டினுள் நுழைகின்றன. அவர்கள் குடித்திருந்த மதுநெடி... எடுத்திருந்த புலாலின் வாசமும் மின்விசிறிக் காற்றில் அறை முழுதும் வியாபித்தன.

-டேய்... மச்சான், தனியாத் தான் இருக்கா... அப்படியே சத்தமில்லாம போய் அவ வாயப் பொத்து!

பூனையைப் போல மெல்ல நடந்தவன் அவளருகில் செல்கிறான். சட்டெனத் திரும்புகிறாள்.

-அய்யோ! யாராவது வாங்களேன்.

-நாங்க வந்துட்டண்டி செல்லம்... மாப்ள கதவ சாத்துடா...

சட்டென ஒருவன் அவள் வாயைப் பொத்துகிறான். அவள் கண்களில் பீதி!

கைகளால் போராடுகிறாள். மற்றொருவன் இரண்டு கைகளையும் இறுக்கி பிடித்துக் கொள்கிறாள்.

தரைல கெடத்துங்கடா

என்றபடியே தன் கைலியை அவிழ்க்கிறான்

கால்களால் எட்டி உதைத்து தன் எதிர்ப்பைக் காட்ட யத்தனிக்கும் அவளின் இரண்டு கால்களையும் திசைக் கொன்றாக விரிக்கிறான்.

            படாரென அந்தச் சிறுமியின் தாவணியைப் பறித்து தூர வீசுகிறான் கயவன்.

            இளங்குருத்து மானம் மறைக்க இயலாமல் கண்களால் கெஞ்சுகிறது. விழிகளில் இருந்து வழியும் கண்ணீருக்கு நீதி கிடைக்குமா...?

            பாவாடை நாடாவின் முடிச்சை அவிழ்ப்பவனுக்குத்தான் எத்தனை அவசரம்...

            -டேய் அதயேன்... இப்போ அவுத்து கிட்டு இருக்க.. அப்படியே தூக்கு....

            மற்றொருவனோ, ஜாக்கெட் கொக்கிளை கழற்ற பொறுமையில்லாமல் வெறியோடு கிழிக்கிறான்.

            -மச்சான் நீ தான் மொதல்ல ஆரம்பி...

            துள்ளுகிறாள்... எட்டி உதைக்கிறாள் எந்தெந்த வழிகளில் எதிர்க்க இயலுமோ அத்தனை வழிகளையும் தேடுகிறாள்.

-மாப்ள... ரொம்ப கத்துறா டீவி சத்தத்தை அதிகமா வச்சி வுடு!

            வெறியும் கூடுகிறது...

            காமவெறிக்கு கண்ணில்லை.. காலமொல்லை..பொறுமையுமில்லை.

            மதுவின் நெடிவீசும் அந்த நாற்ற வாயை அவளின் உதட்டோடு ஒட்ட வைத்தான்...

            அவள் மீது பரவினான்! பதட்டத்தோடு இயங்கினான்.

            -மாப்ள நீ வந்து முடி...

            அவன் மெல்ல மெல்ல தன் சுய நினைவை இழந்து கொண்டிருந்தாள்.... எதிர்ப்பின் ஆயுதங்கள் மழுங்கிப்போக மயக்கத்தின் கைப்பிடிக்குள் ஆட்பட்டிருந்தாள்..

            கடல் அலைகளின் சீற்றம் …காற்றில் வெப்பம்...

6

துரோணர் வினவினார்:

கிளை தெரிகிறதா?அர்ஜுனா மரம் தெரிகிறதா?

இல்லை குருவே தெரியவில்லை குருவே

வேறு என்னத் தெரிகிறது...?

இலக்கு... மரத்தின் மீதுள்ள பறவை..

அதுமட்டுந்தான் தெரிகிறது குருவே..

விடு பாணத்தை...!

மனதுள் குருவை நினைத்தான்.குருவே நமஹ!

செலுத்தினான் பாணத்தை.. வீழ்ந்தது பறவை!

திலீபன் துப்பாக்கி வழியாக குறிபார்த்தான்:

மனசுக்குள் அப்பாவை நினைத்தான்!

"ஜெயம் உன் பக்கம் தான்... துவக்கு!" அப்பா மனசுக்குள்ளிருந்து ஆசிர்வதித்தார்...விரல்கள் விசையை அழுத்தியது.சீறியது தோட்டா...சிதறியது இலக்கு!

கூடியிருந்த கூட்டம் 'பட பட' வென்று கைதட்ட பெருமிதமாய் நிமிர்ந்தான். தூரத்தில் நின்றிருந்த அப்பா கம்பீரமாய்க் கட்டைவிரலை உயர்த்தினார்.

0

பரிசளிப்பு முடிந்தது; பெருமிதப் பதக்கம் கனத்தது. சென்னை லயோலாக் கல்லூரியில் நடந்த தேசிய மாணவர் படையைச் சார்ந்த மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் தேர்ந்த வீரனாய்த் திரும்பும் திலீபனை பெருமிதத்துடன் பார்த்தார் அப்பா!

ஹ! என் மகன்'

”ஏம்ப்பா கிளம்பலாமா...”

“ போய் பாத்ரூம் போய் மொகத்த அலம்பிட்டு என்.சி.சி யூனிபாரத்தை மாத்திட்டு வந்துடு. நான் காஃபி ஷாப்-ல இருக்கன்”

”சரிங்கப்பா... அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்.”

எழும்பூர் தெற்கு நோக்கி பயணிக்கிற விரைவுவண்டி காத்திருக்கிறது. தந்தைக்கும் மகனுக்குமாக.

”திலீபா... பர்ஸ்ட் கம்பார்ட்மெண்ட் -க்கு போயிடு இறங்கறதுக்கு வசதியாக இருக்கும்”-“

 கூட்டம் நிரம்பி வழிந்தது.சாமான்கள் வைக்கும் பகுதியில் நிரம்பியிருந்த கூட்டத்தினரிடம் பணிந்து பேசி மகனுக்கு இருக்கை ஏற்பாடு செய்துவிட்டு கதவருகே வந்து நின்று கொண்டார் மகேசன்.

கம்பார்மெண்ட்டின் ஒரு பக்க கதவு சாத்தியிருந்தது. திறக்க முயன்றார். கைப்பிடியை தன் பலமுள்ள அளவு அழுத்தியும் கதவு திறக்கவில்லை. மேலே 'லாக்' ஆகியிருக்கிறதா... இல்லையே ஏன் நிறக்கவில்லை, கதவு திறக்க முடியுமானால் படியில் அமர்ந்து காற்று வாங்கிய படி பயணம் செய்யலாம் முடியவில்லை மூடிய கதவுக்கு அருகே ஒரு துண்டை விரித்து அமர்ந்து, கையில் இருந்த வார இதழைப் பிரித்தார்.

7.

நீங்கள் சிற்றிதழ் ப்ரியரா நண்பரே....! அப்படியாயின் ராமதாஸை உங்களுக்கு தெரிந்திருக்காமல் இருக்காது. ஐக்கிய அமீரகத்தின் அல் அய்ன் - நகருக்கும் பண்ருட்டி - சேமக் கோட்டைக்கும் என்னத் தொடர்பிருக்க முடியும்? அந்த தொடர்பின் பெயர்தான் ராமதாஸ்!

            முகநூல் நண்பராக அறிமுகமாகி, நான் பணி நிமித்தமாக துபாய் சென்றபின் சிலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டவர், திடீரென ஒருநாள் அழைத்தார்.

- அண்ணே வெள்ளிக்கிழமை காலையில் பதினொரு மணிக்கு துபாய் வர்ரண்ணே... உங்கள சந்திக்கலாமா...?

- என்ன கேள்வி ராமதாஸ்! கண்டிப்பா வரணும்! உங்களுக்கு சேர்த்து சமைச்சு வைக்கிறேன். இந்த உரையாடல் நிகழ்ந்தது புதன்.

வெள்ளியன்று துபாய் பேருந்து நிலையம் இறங்கியவருக்கு, என் வீட்டின் இருப்பிடத்தையும் வீட்டுக்கு வரும் வழியையும் கைபேசியில் கூகுள் மேப் வழியாக அனுப்பி வைத்து விட்டு, சமையலைத் தொடர்ந்தேன்.

- ராமதாஸ் வருவதற்குள் ஒரு சிறு குறிப்பு.... என்னைப்பற்றி தான்!

நான், ஆனந்தன்! இந்தியாவின், மிகப் பெரிய வங்கினுள் ஒன்றான குஜராத் வங்கியில், முதுநிலை மேலாளராக பணியாற்றுகிறேன். ஐக்கிய அமீரகத்தில் முதுநிலை மேலாளராகப் பணி.அமீரகம் சாராத வங்கிகளில்,இந்தியாவை சேர்ந்த எங்கள் வங்கிக்கு மட்டுமே, ‘வங்கிப் பணி’ செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அமீரகத்தில் 7-கிளைகள் துபாயில் மட்டுமே 3- கிளைகள் துபாயின் பிரதானக் கிளையில் ஏற்றுமதி இறக்குமதி பிரிவில் பணியில் இருக்கும் நான் தனியன்! குடும்பமெல்லாம் தமிழகத்தில்! சின்ன வயசில், தொடங்கிய வாசிக்கும் பழக்கம் 52 வயசுக்கு எழுத்தாளன் முகத்தையும் வழங்கி இருக்கிறது. இலக்கிய உலகில் என் புனைப்பெயர் அன்பானந்தன்.

போதுமே உங்கள் சுயதம்பட்டம் என, உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கும் அதே தருணத்தில் தான் அழைப்பு மணி ஒலித்தது.

- வாங்க ராம்தாஸ்.... வாங்க... உள்ள வாங்க...

- வர்ரண்ணே.... நல்லாயிருக்கியளா.....ஒருவழியா... முகநூல் தரிசனம் இன்னைக்கு அண்ணனோட முக தரிசனமா ஆயிடுச்சு....

- எழுதறவங்களுக்கு பேசவா சொல்லித் தரணும்! சோபாவுல... ஒக்காருங்க... நல்லா கம்போர்ட்டபிளா ஒக்காருங்க என்ன சாப்பிடலாம்! ‘டீ’யா காப்பியா?

- டீ’ யே மதுரம்ண்ணே!

-அட்றா சக்க... வந்த ஒடனேவா... இந்தாங்க மொதல்ல ஜில்லுன்னு தண்ணியக் குடிங்க.. டீ போட்டு எடுத்துட்டு வர்ரன்.

தமிழ்நாட்டின் மருதம் சார்ந்த ஒரு கிராமத்தில் பிறந்து வயிற்றுப்பாட்டுக்காக இந்தப் பாலை நிலத்தை தேர்ந்தெடுத்த இந்த ராமதாஸ் தனி மனிதனாக செய்த சாதனைகள் தான் எத்தனையெத்தனை....!

மறந்து போன பல சிற்றிதழ்களை ஒளிப்படமாக்கி தொலைந்து போன பழைய நூல்களை டிஜிட்டலில் வாழ வைத்த சாகசக்காரன்.

.           அதில்லாமல் அகால இடைவெளியோடு ஓர் சிற்றிதழ்! தமிழ் கூறும் நல்லுலகம் எந்த சிற்றிலக்கியவாதியை வாழ வைத்திருக்கிறது! கவிதையோ, கதையோ எழுதும் கொம்பு முளைத்த இலக்கியக்காரனில் பாதிப்பேர் சந்தா கட்டுவதில்லை; சிற்றிதழைப் பரவலாக்குவதில்லை... ஆனால் எல்லா இதழிலும், தனது படைப்புகள் வரணும்! தனது படைப்புகள் மட்டுமே வரணும் என்கிற பேராசை பிடிச்சவன்கள் அல்லவா... தமிழ் இலக்கிய வியாதிகளில் சிலபேர்! அதுவும் முகநூல் என்ற ஒன்று பெரும் மைதானமாய் விரிய ஊருக்கு நூறு பேர் கவிஞர்கள்! எழுத்தாளர்கள்! விமர்சகர்கள்! இதை வயிற்றெரிச்சலில் சொல்லவில்லை! என் படைப்புகளை படிக்க விரும்பாதவன் படைப்பை நானெதற்கு படிக்கணும்’ என்கிற கடுகுள்ளம், வெறும் லைக், கமெண்ட்க்குள் படைப்பிலக்கியத்தை சுருக்கிவிட்டதே என்கிற ஆதங்கம் தான்! இந்கே தான் ராமதாஸ் எனும் உன்னதன் பெருங்கலைஞனாக, மாமனிதனாக உயர்கிறான்.

            பண்ருட்டியை சுற்றியுள்ள, திருவதிகை, சேமக்கோட்டை சுடுமண் சிற்பங்கள், நாவுக்கரசர் பிறந்த திருவாமூர், சுந்தரர் அவதரித்த. ஸ்தலம் . தடுத்தாட்கொண்ட திருவெண்ணெய்நல்லூர் - என வரலாறு, புராணம் குறித்த தகவல்களை தன் சிற்றிதழில் தொடர்ந்து எழுதி வந்த ராம்தாஸ், சமகாலப் படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தத் தவறவில்லை, இது தானே ஒரு இலக்கியவாதியின் பணி !பாலையின் வியர்வையில் குளித்த ‘திர்ஹாம்கள்’ ரூபாய் வடிவெடுத்து சிற்றிதழை வண்ணமாயமாக்கின!

- டீ ரெடி...... பிறகு பேருந்து பயணமெல்லாம் எளிதாக இருந்ததா...

- அதண்ணே ரெண்டரை மணிநேரம்... பஸ்ஸூல ஒக்காந்து ஒரு புஸ்தகத்த பிரிச்சா துபாய் வந்துடப் போகுது.

-எழுத்துப்பணியெல்லாம் எப்படி போகுது?

-அண்ணா... தமிழ்ஈழப் போராட்டதளங்களை மையப்படுத்தி ஒரு நெடுங்கதை எழுதலாம்ணு மனசுல ஒரு நெனப்பு ஓடிகிட்டு இருக்கு எப்போ டேக் ஆப் ஆகும்னு தெரியல

- அதெல்லாம் திட்டமிட்டா கச்சிதமா முடிச்சிடலாம். சரி.... என்னப் ப்ரோக்ராம் இன்னைக்கு ராமதாஸ்...

- அண்ணே.. ஒங்க கிட்ட சொல்றதுக்கென்ன! இன்னும் ரெண்டு மாசத்துல, வேலைய விட்டுட்டு ஊர்ப்பக்கமே போயிடலாம்னு பாக்குறன். திருவாமூர் பக்கமா கொஞ்சமா நிலம் வாங்கி போட்டுருக்கன்... பயிர் பண்ணலாம்... ஒரே பொண்ணு... +2 இந்த வருஷம்.. கடலூர்ல ஏதாவது காலேஜ்ல சேக்கணும்.. பண்ருட்டில எங்கயாவது ஜெராக்ஸ் கடைய போட்டுகிட்டு ஒக்காந்துடலாம்னு பாக்குறன்...

- நல்ல விசயம் தானே... ஏன் கொரல்ல சுணங்கல்...?

- டீ, அருமையா இருக்குண்ணே... அது வேற ஒண்ணும் இல்லைண்ண.. கம்பெனிகாரன்க பாஸ்போர்ட்ட திருப்பி குடுக்குறதுக்கு யோசிக்கிறானுங்க...! விசா கேன்சல் பன்ற செலவு... புதுசா எவனையாவது வேலைல சேக்கனும்… விசா எடுக்கணும் அது ஒரு செலவு... எனக்கு மொத்தமா பணம் செட்டில் பண்ணனும்... என்னைய.. இப்போ போவாத.. போவாத-ன்னு நெருக்குறான்க....

- அடடே... பெரிய அதிகாரிங்க இருப்பாங்களே யாராவது... பேசிப் பாக்குறது தான...!

- அதுவும் பேசிட்டண்ணே.. கம்பெனிக்கு மொதலாளி அரபிக்காரன் தான்! அவனோட அஸிஸ்டென்டு ஒருத்தன் நம்ம கேரளா முஸ்லீம்தான்... அபுபக்கர்னு. அவர் மூலமா குடும்ப சூழ்நிலையெல்லாம் சொல்லி, என்னைய விட்டுற சொல்லுங்க... ஆச்சு வந்து 27 வருஷம் காலம் தனியாவே போச்சு... இனிமேலாவது குடும்பத்துக்கூட கொஞ்ச காலம் இருக்கணும்னு... சொல்லி கேட்டுருக்கன். பாக்கலாம்...! இது வாடகை வீடாண்ணே...!

- இது எங்கள மாதிரி இந்தியாவுல இருந்து, டிரான்ஸ்பர்ல வந்தவங்கணுக்கான குவார்ட்டர்ஸ்... ரெண்டு பெட்ரூம், ஹால், கிச்சன், கட்டில், சோபா... கேஸ் ஸ்டவ் எல்லாமும் பேங்க்கே கொடுத்துடும்.

- சூப்பர்ண்ணே... இங்க தனியார் கம்பெனில எல்லாம் எப்படி தெரியுமா..

-கேள்வி பட்டிருக்கேன்... வாராவாரம் ரூம் க்ளின் பண்ண ராமநாதபுரத்து காரரு முத்து-ன்னு வருவாரு அவரு தான் சொல்வாரு... ஒரே ரூம்ல 8 படுக்கை 16 படுக்கையெல்லாம் அடுக்கடுக்கா இருக்குமாமே!

-ஆமாண்ணே... எங்க லேபர் குவார்ட்டர்ஸ் பரவாயில்ல... ஒரு ரூம்ல மூனடுக்கு மூணடுக்கா ஆறு படுக்கை.. அட்டாச் பாத்ரூம், ஒரு டீவி... அது எந்த நேரமும் ஓடிக்கிட்டே இருக்கும்... ஏதாவது ஒரு பாஷை பேசிகிட்டு பாடிகிட்டு!

- ஒரு வகைல, வேற வேற நாட்டுக்காரங்க, பாகிஸ்தானி, பங்காளதேஷி ன்னு புதுசா தொடர்புகள் கிடைக்கிறது அனுபவம் தானே...!

-ஆமாண்ணே! என்ன பாஷை ஒரு பிரச்னை... அவன் சொல்றது நமக்கு புரியாது... நாம சொல்றது அவனுக்கு புரியாது...நம்ம இந்தியாவுல இருந்து வந்தவங்கூடவே இந்த பிரச்னை.. இந்திக்காரன் சொல்றது என்னன்னு எனக்கு புரியாது... நான் பேசுறது அவனுக்கு ஆவாது! ஓரளவு நமக்கு சாதகமா இருக்குறது மலையாளம்,.. ஆனாலும் கேரளாக்காரனுக்கு தமிழ்நாட்டுல எந்தவூர்க்காரனும் ‘பாண்டிப்பய’ தான்!

-சாப்பாடு எல்லாம் எப்படி... ராமதாஸ்...

- அதெல்லாம் சமையல் செஞ்சி, ‘பேக்’ பண்ணி குடுக்குறதுக்குண்ணே பிரைவேட் கம்பெனிங்க இருக்கு.. நம்ம தமிழ்நாட்டு சாப்பாடு வேணும்னு சொல்லிட்டம்னா சாம்பார், ரசம், பொறியல், கூட்டு-ன்னு குடுத்துடுவாங்க வடக்கன்களுக்கு ரொட்டி, தால் இருக்கணும் பச்ச வெங்காயம் இல்லன்னா செத்தே போயிடுவான்.

- உங்க கம்பெனி, இதுதான…Al ain General Public Contracting Company L.L.C, Al ain இது லேபர் காண்ட்ராக்ட் கம்பெனி தான,அநேகமா எங்க பிராஞ்ச் கஸ்டமர்ன்னு தான் நினைக்கிறேன்

- மொதல்ல.. இங்க உள்ளூர்ல எந்தெந்த கம்பெனிங்களுக்கு எந்த மாதிரி லேபர் வேணும்னு கேட்டுக்குவோம்ண்ணே...! ஸ்கில்டு லேபர்.. அன்ஸ்கில்டு லேபரான்னு பிரிச்சுக்குவோம் அந்தந்த கம்பெனிங்க தேவைக்கேத்த மாதிரி நம்பர்ல விடியற்காலை சாப்பாடு பார்சல குடுத்து பஸ் ஏத்தி விட்டுவாங்க... சாயந்திரம் வேல முடிஞ்சு, அதே பஸ்ல கூட்டு வந்து குவார்ட்டஸ்ல எறக்கி விட்டுடுவாங்க.. வெள்ளிக்கெழமை ஓய்வு நாள்... அதுலயும் வெளிவேலைக்கு ரூம் கிளீனிங் போல போறவங்க சில பேர் உண்டு.

- ஆமாமா... என் வீட்டுக்கு வர்ர முத்து அப்டி வர்ரவருதான்... இன்னைக்கும் சாயங்காலமா வருவாரு..

-எந்த நாட்டுல இருந்து லேபரா வந்தாலும் பாஸ் போர்ட்டை வாங்கி வச்சிக்குவாங்க.. புடிச்சாலும் புடிக்கலைண்ணாலும் கான்ட்ராக்ட் காலம் வரைக்கும் இங்க யூ.ஏ.இ-ல மூணு வருஷம்- கட்டாயமா இருந்தாகணும்.ரொம்ப வற்புறுத்துனா ஆளவிட்டு அடிச்சி பாலைவன மணல்ல பொதச்சிடுவானுவோ

- அப்புறம் ஏன் உங்கள விட மாட்றாங்க.... பாஸ்போர்ட்டை குடுத்து பணத்த செட்டில் பண்ண வேண்டியது தான.

-அது தாண்ணே.... எனக்கு புரியல... நானும் லேபரா சேந்தவன் தான்.... கொஞ்சம் வேலயக் கத்துகிட்டு இன்னைக்கு ஆபீஸ்க்குள்ள இருக்குறன். அதனால தான் சிற்றிதழ்ங்க... புக்ஸ் எல்லாம் ஆபீஸ்லேயே வச்சி ஸ்கேன் செய்ய முடியுது... மெயில்ல அப்டேட் பண்ண முடியது.எனக்கோ ஜாதகத்துல ’சகடை யோகம்’.அப்ப்டித்தான் வறுத்தெடுக்கும்.

-அதென்ன ’சகடை யோகம்’ ராமதாஸ் புதுசா இருக்கே…!

-ஜனன ஜாதகத்துல குரு இருக்குற எடத்துல இருந்து 6,8,12 ல சந்திரன் நின்னா சகடயோகம் நு சொல்லுவாங்க.சகடைன்னா சக்கரம்னு அர்த்தம்.இதுபோல அமைப்புள்ள ஜாதகர் வாழ்க்கையில ஓய்வு ஒழிச்சலில்லாம சக்கரம் போல சுத்திக்கிட்டே இருப்பாங்க…அதேசமயம் இந்த ஜாதகர் ஓய்வில்லாம ஒழைச்சுகிட்டே இருந்தாலும் அதற்குண்டான நற்பலனையும் சம்பாத்யம் செல்வம் எல்லாமும் அடைவாங்க சொல்லுவாங்க…நானும் சக்கரத்தாழ்வார் போல சுத்திக்கிட்டே இருக்கன்..

- சரி நல்லதே நடக்கும்.. மனச வுட்றாதீங்க... மதியத்துக்கு மீன் குழம்பு, மீன் வறுவல், சிக்கன் பிரியாணி, வெள்ளைச் சோறு போதும் தானே!

- அண்ணே... வூட்டு சாப்பாடு சாப்ட்டே பல காலம் ஆச்சி... பழையது வெங்காயம் குடுத்தாக்கூட அமிர்தம் தான்! சாப்புட்டு சாயந்திமா ‘தெய்ரா’ போறேன் அங்க சில நண்பர்கள் இருக்காங்க... பிறகு அங்கவந்து கௌம்பி ஷார்ஜா போயிட்டு வலங்கைமான் நூர்தீன் ரூம்ல தங்கி, சில ஃபிரண்ட்ஸ்ஸ பாத்துட்டு,, காலைல ஷார்ஜாவுல இருந்து அல்அய்ன் கௌம்பிடறேன். சரியா…அண்ணே இந்த ஹைகூ வை கொஞ்சம் பாருங்க ..தேறுமா சொல்லுங்க”. காகிதத்தை கொடுத்தார்:

வறண்டு மணலோடும் நதி

தொண்டை தீய்ந்த தாகம்

உயிர் சுரக்கும் ஊற்று

-அடடே..அபாரமா இருக்கே ..அடுத்த இதழ்ல வெளியிட்டுருங்க..

8

- தேவரீர் வருக! தொண்டனூர் ராஜ்யம் தங்களை வணங்கி வரவேற்கிறது.

- ராமானுஜர் அரண்மனைக்குள் நுழைந்த போது உணர்ந்தார். எல்லோர் முகத்திலும் ஏனிந்த வறட்சி... இருண்மை...துயரத்தின் பூடகம்! யார் முகத்திலும் ஏன் மகிழ்ச்சியில்லை அரண்மனையின் சுவர்களும் சொல்லவொண்ணா சோகம் பூசிக் கொண்டிருக்கிறதே….

-நீர் சுரந்த விழிகளுடன், சாந்தலா... ராமானுஜரை வணங்கினாள்.

-தேவரீர் நம் அரண்மனை நிலவரம் அறிவீரா...?அவள் குரலில் துயரத்தோய்வு.

-அறியேன் அரசி...

-எங்கள் மகளை, எங்கள் ஹொய்சளக் குலக்கொழுந்தை இளவரசி தேவதத்தையை பிசாசோ பேயோ பிடித்திருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் பொருளாறியா உரையாடல், திடீரென – வீல்..வீலென அலறல்... சட்டென துகில்களைக் களைந்த ஒட்டம். என்ன வகையான நோயிது என்றே புரியவில்லை ஸ்வாமி.

-புரிகிறது... உங்கள் வேதனையை உணர்கிறேன்.. சிம்மாசனத்தில் இருப்பர்களை பெருங்கவலைப் பீடித்தால் ஆட்சி எங்ஙனம் சிறக்கும்.. சரி... தாங்களும், மன்னரும் மட்டும் இளவரசி இருக்கும் அறைக்கு என்னை அழைத்து செல்லுங்கள்.குழந்தையைப் பார்க்கலாம்.

            தேவதத்தை தனியே அமர்ந்திருந்தான்.. பேதைப் பருவத்திலிருந்து பெதும்பைக்கு செல்லும் வயது...எதிரே இருந்த பழக்கூடையும் பட்சணங்களும் விரல் நுனியும் தொடாமல் இருந்ததை கவனித்தார்.

-மகளே... இங்கே வா...

-புதிய குரல் கேட்டதும் தேவதத்தை விழித்தாள்… கண் விரித்துப்பார்த்தாள்....! ராமானுஜரின் விழிகளை நேருக்கு நேராய்ப் பார்த்தாள்! அடாடா... என்னை நோக்கும் கண்களில் தான் எவ்வளவு ப்ரியம்... எவ்வளவு அன்பு... எவ்வளவு சாந்தம் .யாரிவர்? மெல்ல எழுந்தாள்.. வண்ணசீரடியால் பைய நடந்து அரசி அருகே வந்தாள்...

-மகளே... உன் பெயரென்ன...?

-அப்பாவும் அம்மாவும் அழைப்பது தேவதத்தா... தத்தை என்பதால் தான் எனைக் கூண்டுக்குள்ளேயே வளர்க்கிறார்கள்.

ராமானுஜர்க்கு புரிந்துவிட்டது. இது சுதந்திரம் கேட்கும் கிளி! உலகை சுற்றிப் பார்க்க விரும்பும் கிளி... ஞாலத்திலிருந்து கிடைக்கும் அறிவை, கபாலத்துக்குள் செலுத்தும் கிளி...

-அருகே வா மகளே...

-மெல்ல நடந்து வந்து ராமானுஜரின் அருகமர்ந்தாள் பாவைமகள்.

-சொல் மகளே... கூண்டு வேண்டாம் வேறென்ன வேண்டும் தத்தைக்கு.

- தோட்டம் வேண்டும்.. தோட்டத்து பூக்களுடன் பேச வேண்டும். தேனெடுக்க தாவும் பட்சிகளுடன் பாட வேண்டும். பட்டாம்பூச்சியாய் பறக்க வேண்டும்.. ...பாடங்கள் வேண்டாம்… பாடல்கள் வேண்டும். ருசி மிக்க இசை வேண்டும்... யுத்தம் வேண்டாம்... யுத்தத்தின் சத்தம் வேண்டாம்... மாறாக... ஏற்றப்பாட்டின் எளிமை வேண்டும். தாலாட்டின் உயிர்மை வேண்டும்.கொஞ்சும் குழந்தைகள் கூட்டத்தின் குளிர்மை வேண்டும்..

-ஆஹா... கருவிலே திருவாய்ந்தவள் நீ மகளே... அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே… எடுத்துக்கொள்... உணரத் தலைப்படு... ஊர் சுற்று... உலகம் படி... அதுவே நல்லவென எல்லாம் தரும்!

-தங்கள் சித்தம் குருவே!

- வல்லமை மிக்க வல்லப மன்னரே... தாய்மையின் பொறுப்பு கூடிய அரசியே... தங்கள் இருவருக்கும் இந்த இளசின் மென்மனம் புரிந்திருக்கும் என நம்புகிறேன். இளவரசி ஏங்கும் உலகை காட்டுங்கள்... அவளுக்கென புதியதோர் உலகம் சிருஷ்டியுங்கள்.. குழந்தைகள் உங்கள் வழியாக உலகுக்கு வந்தவர்கள் மட்டுமே... அவர்களுக்கான உலகம் பெரிது. இனிது.. புதிது.. அதை உணர அனுபவிக்க அவர்களுக்கு வாய்ப்பளிப்பதே நன்மை பயக்கும்.

- உத்தரவு ராமானுஜரே... இனி எங்கள் மகள் விருப்பமே எங்கள் வழி...

-மகளே.... கேட்டாயா... அருகே வா... இந்த காவேரி ஜலத்தை அருந்து.. இதுவே நல்மருந்து... பிறகு நல்லாடைத் திருத்தி வா... பெற்றோருடன் உரையாடு. உறவாடு!

- ஒரு தேன்சிட்டு தத்தி தத்தி உள்ளறைக்கு ஓடியது.

- நன்றி மறவோம்... ராமானுஜரே...

-இவ்வுலகம் இனியது வான் இனிமையுடைத்து... காற்று இனிது... நீர் இனிது நிலம் இனிது...

ஆண் நன்று பெண் இனிது. மனிதர் மிகவும் இனியர்!எல்லா உயிரும் இன்பமெய்துக! எல்லா உடலும் நோய் தீர்க.யாம் விடைபெறுகிறோம்.

-தன்யரானோம் ராமானுஜரே..ஹொய்சள ராஜ்யம் தங்களுக்கு பெருங்கடன் பட்டிருக்கிறது..நன்றி மறவோம்.

- அரசனுக்குத் தான் கடன் பாக்கி வட்டி,அசல் எல்லாம்..எம்மைப்போன்றவர்க்கு நாராயணனின் பொற்பாதமே போதும்.விடைபெறுகிறேன் அரசே..

9

இனிய மஞ்சு

மரவரத்தின் கடேய்சிப் பகுதி மனரணம்,

இன்னமும் ஆறாத இளமையின் காயம் விரிவாய் ஒரு கதை போல! எழுதியிருக்கிறேன்,படித்துப்பார்.திருத்தங்கள் சொல்லு

“”எழுத மறந்து போனதொரு புதினத்தின் கிழிந்த பக்கங்கள் எதிர்பாராத இரவொன்றில் கூவி அழைத்ததுன் குறுஞ் செய்தி:

"உன் அன்பை பத்திரமாக என்னிதயத்தில் வைத்திருந்தேன்:

பின்பு தான் தெரிந்து. உன் அன்புதான் என் இதயத்தைப் பத்திரமாக வைத்திருக்கின்றது” என்று.கண நேரம் மவுன வனத்துக்குள் நான்!

நீயா - இதை அனுப்பியது நீதானா? உன்னிடமிருந்து தான் இப்படியோர் செய்தியா. என்னையே நம்பமுடியவில்லை!

ஆனால் சகி/ உன் தகவல் வர வெகு தாமதம்! நாட்களல்ல... மாதங்களல்ல. வருடங்கள்.சற்றேறக்குறைய 25 ஆண்டுகள்.அடி பைத்தியக்காரி... உனக்குத் தெரியுமோ?

உன்னை முதன் முதலாக பார்த்த அந்தப் பகல்போதில் பசைபோட்டு மனசுக்குள் ஒட்டிக் கொண்டவளே...! அந்த 18 வயதில் தெரியாது... அதன் பெயர் காதலா..... காம ஈர்ப்பா என ... ஆனாலும், love at first sight என்பார்களே... அது மாதிரி உன் புன்னகை பூசிய முகம் எனக்குள் பதிந்தது! வகுப்புத் தோழியாக நீ வாய்த்தது பாக்கியமன்றி வேறென்ன? உன்னிடம் பேச என்னவெல்லாம் செய்தேன்! 'எப்படியெப்படியோ நடந்து, உரையாடும் பேறு பெற்றேன்! ஹ! சொர்க்கமடி அந்தப் பொழுதுகள்!

விடுமுறைகளில் நீ உன் ஊருக்கு சென்ற மறுநாளே உள்நாட்டுக் கடிதமெனும் நீலப்பறவை என் கூடடையும்! எனக்கு ஆண்கள் வரிசையில் முதல் பெஞ்ச்சில் முதலிடம்... நீயோ பெண்கள் வரிசையில்... ஏது வேறு பெண்கள்...? நீ ஒருத்திதான் 65 மாணவர்களுடன்... யாருமறியாமல் கண்களால் பல கதைகள் பேசிக் கொள்வோமே ஞாபகம் இருக்கிறதா... அசைன்மெண்ட் மார்க்கா... டெஸ்ட் மார்க்கா... அன்றி ரிசல்ட்டா... சாப்பிட்டாயா. என்ன படம் — எல்லாமும் கண்ணாலேயே கேட்டு கண்ணாலேயே பதில் சொல்லி....ஆஹா... அதுவோர் அதியற்புத திறமை...ரசனை! என்னால் மறக்க முடியாதடி!

நாமிருவரும் நம் வகுப்புத் தோழர்களும் Account Tiution படித்த செல்வராஜ் சார் கணக்கியலை காற்றில் விரல்களால் வரைந்துதான் பாடம் நடத்துவார் நம்மிருவரின் விழிகளால் ஆடிய விளையாட்டு... அடடா அடடா! ‘பருவமே புதிய பாடல் பாடு!’

மூன்று வருடத்தில் இரண்டு வருடம் எப்படியெல்லாமோ கழிந்தது. ஒரே ஊரில் இருந்தோம்! உன்னைக் கோயிலில் பார்த்தால் ஓர் கவிதை.. தியேட்டரில் பார்த்தால் ஒரு கவிதை! அந்த நாளிலேயே என்னைத் தொடர்ச்சியாய் கவிதை எழுத வைத்தவள் நீ!

கவிதைகளா அவை. பால பருவத்தின் பாட பேதங்கள்! மூன்றாம் ஆண்டின் ஓர் வறண்ட பிற்பகலில் இடியொன்றை இறக்கி வைத்தாய். உனது தோழி மூலமாக எனது காதலை ரகசியமாய் தூதனுப்பியிருந்தேன். நம் ஊரின் அடையாளச் சின்னமான அந்த யானைக்கால் மரத்தின் அடியில் நின்று அதிர்ச்சி சேதியைச் சொன்னாய்.

"எனக்கும் என் மாமாவுக்கும் தான்னு நான் பொறந்தப்பவே முடிவாயிடிச்சி! இனி நான் நெனச்சா கூட மாத்த முடியாது. ஆனா. நீ எனக்கு. எப்பவும் நண்பனா இருக்கணும்... இந்த யானைமரம் சாட்சி.இருப்பியா''.

"உயிர் பாதி போனதே உடல் பாதி தேய்ந்ததே . உள்ளமும் ஓய்ந்த நிலையே! ஒரு பாதி சொந்தமும் உற்றதே மரணக் கலையே! மனிதனுக்கென்ன விலையோ! சொந்தமென்றருளுவாயா?"

மலர் பாதி வீழ்ந்ததே மதி பாதி வீழ்ந்ததே

துயர் பாதி கொள்ளவோர் உயர்வானத் தோழியைச்

பாவிக் கவிஞா! கண்ணதாசா! மனசைப் படிக்கிறயாடா.! பொங்கி வந்த கண்ணீரைப் புன்சிரிப்பால் அணைக்கட்டி தேக்குகிறேன்.

'சரிப்பா! நிச்சயம் நல்ல ஃப் ரெண்டா இருப்பேன் இது சத்தியம்!"

உன் கரந்தொட்டு சத்தியம் செய்ததை சப்தமில்லா சாட்சியாய் பார்த்துக் கொண்டிருந்தது யானைக்கால் மரம்.

ஒவ்வோர் ஆண்டும் உனது திருமண நாளில் வாழ்த்தனுப்புவதோ.. வாழ்த்து சொல்வதோ இன்றளவும் தொடர்கிறது. வயிற்றுப் பிழைப்பென்ற நாய் விரட்டியதில் எங்கெங்கோ சுற்றிவிட்டு ஓர் நாளில் ஊர்வந்த போது தான் அந்த சோகச்சேதி தெரிந்தது. — உனது கணவரின் அகால மரணம்.

நம்மோடு இணைந்த நண்பன் இதயனோடு உன்னைப் பார்க்க விரைகிறேன்.விழிகளில் நீர் வழிய நிற்கிறாய்: உடல் குலுங்க... ஆணாயிருந்தால் தோள் தொட்டு ஆறுதல் சொல்லலாம். எதுவும் செய்ய இயலாமல் நானும் நண்பனும் மவுனமாக வெளியேறினோம்!

எதுவும்பேசாமல் நாங்கள் சென்ற இடம் மதுக்கடை.

சமீப காலமாக உரையாடல்களின் போது ‘டா’போட்டு ஒருமையில் பேசுகிறாய்! சிதேகிதன் கேட்டான் "எம் பிரண்டு எவ்ளோ பெரிய வேலைல இருக்கான் தெரியுமா ? அவனுக்கு கீழே நாறு பேர் வேலை செய்றாங்க நீ இன்னாடான்னா “வாடா போடா’ன்றியே

“நீ போடா தடியா. நான் அவன் அப்டிதாண்டா கூப்புடுவன். ஏய்.. ஒனக்குப் புடிக்கலைன்னா சொல்லுடா. ஆளவுட்டு கேக்குற..."

யானை மரச் சத்தியம் ஞாபகம் வந்தது.

“ஒனக்கு எப்டிப் புடிக்குதோ அப்டி கூப்பிட்டுக்கடி*

“என்னது “டி”யா'

ஆமாண்டி”

சரி போடா"

டேய் என்னங்கடா நடக்குது இங்ன" — சிநேகிதனுக்கு கேள்விகள் ஆயிரம் அவன் தோளைத் தொட்டு மெல்லத் தட்டினேன்.

'அமைதியாயிரு' ஆறாத காதலின் வேராழமும் தூய நட்பின் நுணுக்க சுகந்தமும் உனக்குப் புரியாது சினேகிதா... அமைதி கொள்!" எப்போதோ எழுதியக் கவிதை நினைவுக்கு வருகிறது.

மிக நீண்ட பகலிரவுகள் பல கடந்து தொடர்ந்து கொள்கிறேன் முதல் அழைப்பிலேயே கிடைக்கிறாய்

"வழக்கமா கல்யாண நாளுக்கும்

பொறந்தநாளுக்குத்தான பேசுவ

இப்ப என்ன புதுசா

நலமறிந்து மகிழ்ச்சி. ஒரே கல்லூரி என்பதறிந்து பெருந்திகைப்பு.

உன் மகளும் என் மகனும் பயில்வது

"ஆச்சர்யமா இருக்குதில்லடி ரெண்டு பேரும் ஒரே இடத்துல நம்மளப் போலவே “சும்மா ஔராதடா அவளுக்கு 20 அவனுக்கு 18 உளறிய வயதெல்லாம் உதிர்ந்து விட்டது தோழி இப்போது இதயத்தின் விருப்பமெல்லாம் நம் வாரிசுகளும் தொடர வேண்டுமே நம் தோழமையை என்பது தான்."

-இனிய ஜீவன்

படித்தேன் படித்தேன் படித்தேன் எப்போதாவது உன் ஊருக்கு வந்தால்

அந்த யானைக்கால் மரத்தைக் காட்டுவாயா டா!

அன்பின்

மஞ்சு

@

அடடா... அப்படி ஒன்று இருக்கிறதா அந்த யானைக்கால் மரம் இருக்கிறதா?அழித்து விட்டார்களா. சினேகிதனை அழைத்தேன்.“எடுடா வண்டிய… ரயில் நிலையம் – ஆங்கிலப் பள்ளி. அதோ. அதோ கம்பீரமாக நின்று கொண்டிருந்தது யானைக்கால் மரம். அருகில் சென்று அடிமரத்தை வருடினேன்.

மேலிருந்து ஓர் தளிர் பறந்து என் தோள் மீது அமர்ந்தது கண்ணுக்குள் பொங்கியதை நண்பனறியாமல் துடைத்துக் கொண்டேன். இதமானத் தென்றலின் துண்டொன்று வருடிச் சென்றது.

10

            வேளச்சேரி பேருந்து நிலையத்தில் இறங்கும் போது திருமண விழாவின் பதாகைகள் பளபளத்தன! வருபவர்களை வரவேற்றன!

            திருமண மண்பத்துக்கு பதாகைகளே வழிகாட்டின! மணமகனின் தந்தை பேரும் புகழும் வாய்த்த ஓர் அரசியல் கட்சியின் உடைந்த துண்டில், மாவட்ட செயலாளராக இருந்தார். அந்த கட்சிப் பிரிவின் பெருந்தலைகளின் முகங்கள் பெருஞ்சிரிப்பு பேனர்ஜிகளாக வரவேற்றார்கள்! புன்னகை பூக்கும் பூனைகள்!

            சீரியல் பல்புகளால் வண்ண விளக்குகளின் சரவரிசை! சாரட் வண்டியில் பூட்டப்பட வேண்டிய குதிரை சாவகாசமாக புல் தின்று கொண்டிருக்க, அடர் சிவப்பு, சீருடையில் பேண்டு வாத்தியக் குழு.... ஆசுவாசமாய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க... குழுவிலிருந்து விலகிய ஒரு கலைஞன் பீடி வலித்து கொண்டிருந்ததை தைல ஓவியமாய் வரைந்திருப்பின் உலகப்புகழ் பெறக் கூடும்.

            வாசலில் வாழை, தென்னை, பனைக் குலைகள் பிரம்மாண்டமாய் வரவேற்றன.மாநகரத்தில் எங்கே கிடைக்கின்றன இந்த இயற்கை அழகுகள்…அருமைகள். பிரம்மாண்டமான இரும்பு கேட்-டின் இரு புறமும் கறுப்பு நிற சபாரி உடையில் பவுன்சர்கள், மணவிழாவுக்கு வருபவர்களின் வாகனங்களை திசை திருப்பி பார்க்கிங் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். வழக்கம் போல நான்கு சக்கரங்களுக்கு சல்யூட்! இரு சக்கரங்களுக்கு லேசான புன்னகை! என்னைப் போன்ற கால்நடைகளுக்கு இறுகிய முகத்தோடு... “தோ அப்பாலிக்கா போ.... போய்... ரைட்ல திரும்பு”

            திரும்பினேன்!

            வைபவ அரங்கம் மிக விஸ்தாரமாக இருந்தது. நிகழ்வு மண்டபம் சற்றேக்குறைய 1000 பேர் அமரக்கூடிய வகையில் நீள. அகலத்துடன், அதே அளவில் பக்கத்திலேயே உணவுக் கூடம்.

            உணவுக்கூடத்தின் எதிராலான வராண்டாவில் பில்டர் காஃபி, பாய்லர் டீ, பஞ்சுமிட்டாய், பானிபூரி, பாதாம் பால் என விதவிதமான ஸ்டால்கள்... அதற்குரிய ஆடை வடிவமைப்புகளோடு.

            ஃபில்டர் காபி குடிக்கலாமெனத் தோனியது. ஸ்டாலை நெருங்கினேன். ஒரு மாமா, உடலெங்கும் திருநீற்றுப் பட்டை, பூநூலுடன், வாஞ்சை நிறைந்த குரலில், “என்ன வேணுண்டா அம்பி” என்றார்!

“டபுள் ஸ்ட்ராங்கா ஒரு காஃபி கொடுங்கோ மாமா” டபரா செட்டில் கலந்து கொடுத்தார்.தம்ளரில் மேல் நுரைப்பூவின் நூதன சங்கீதம்!

ஃபில்டர் காபியின் சுவையே தனீச்சுவை தான்!ஆதித்யன் கலந்து தந்த ஃபில்டர் காபியின் சுகந்தம் ஞாபகத்தில் ’கமகம’த்தது.

            நிகழ்வரங்கின் உள்ளே வந்தவன் மேடைக்கருகே சற்றுத் தள்ளி நான்காம் வரிசையில் முதல் இருக்கையில் அமரப் போனேன்.

 ஒவ்வொரு நாற்காலியிலும் ஒரு செய்தித்தாள்!         அன்றைய மாலைப் பதிப்பான, மக்கள் மலர், மாலைக்குரல் என இரண்டு மாலைத் தாள்களும் அனைத்து நாற்காலிகளிலும் என் நாற்காலியில் மக்கள் மலர்!

            கடைசிப் பக்கத்தில் முழுப்பக்க விளம்பரம்! மணமகனின் தந்தை வெண்ணுடையில் புன்னகைபூக்க.. அவருக்கு மேல் நின்று வணங்கும் பணிவான முன்னாள் முதல்வர் புகைப்படம் வணக்கம் கூறியது.

            உடைந்து போன முன்னாள் ஆளுங்கட்சியின் ஒரு பிரிவின் முக்கியத் தலைவர்கள்... கூடவே தஞ்சை மாவட்டத்தின் முக்கிய சாதிப் பிரிவு ஒன்றின் தலைவர்களாக கருதப்பட்டவர்கள்... மூன்று இஞ்ச் அளவில், பொன்மன வள்ளல் புன்னகைக்க அரைசாண் அளவில் மறைந்த தலைவி சிரித்துக் கொண்டிருக்க சரிக்கு சமமாய் 20 ரூபாய் இனிஷியல் தலைவரின் ஆனந்தப் புன்னகை!

            நடுவில் ஒரு துண்டில் போனால் போகுதென்று, மணமகன், மகள் புகைப்படம்.!

            பத்திரிகையில் புன்னகைக்கும் பெரிய மனிதர்கள் வருவார்களா...? வந்தார்கள்! பிரம்மாண்டத்தின் தேவராட்டம் தான்!

            மண்டபத்தின் நுழைந்தவன் ஆதித்யனின் அம்மாவைத் தேடினேன்!

            சென்ற வருஷம் அப்பா இறந்துபோன சமயத்தில் தஞ்சை செல்ல முடியாத சூழலில், இப்போது தான் அம்மாவைப் பார்க்கப் போகிறேன்.            உடைவார்களா... அழுவார்களா... அம்மாவை எப்படி எதிர்கொள்வது?

            கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்! அம்மாவைக் கண்டேன்!            இரண்டாம் வரிசையில் உறவுகளோடு அமர்ந்திருவரின் அருகில் சென்றேன்.

            “வணக்கம்மா... நல்லா.. இருக்கீங்களா?”

            ‘இருக்கிறேன் என்பது போல மவுனமாக தலையாட்டியவர் கண்களில் நீர் முத்து! முகத்தில் அடர் சோகம்!

            “நீ நல்லாயிருக்கியா... ஓம் பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் சவுக்கியமா...”

            இதற்கிடையில் அன்பரசன், மனைவி, மகள், பெயர்த்திகளுடன் அரங்கினுள் வர... கையசைத்து அருகில் வரச் சொன்னேன்...

            அம்மாவை நெருங்கிய அன்பரசன், பாதம்தொட்டு வணங்கிட... அவன் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாங்க அம்மா!

            அம்மாவுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போதே... அரங்கின் ஒரு திசையில் இசைக் கலைஞர் ராஜேஷ்வைத்யா வீணையை தயார் படுத்திக் கொண்டிருந்தார். அருகே இருந்த டிரம்ஸ்-ன் ‘தபதப இடைத் துண்டு

 அடடே... இனியன் சம்பத்.... எங்களை நெருங்கி ‘அண்ணன்களா வணக்கம்’ .... இதுதான் மகன்...தினகரன்”

            தினகரன் எங்களை வணங்கிட, நாதஸ்வரமும் தவிலிசையும் பொழிந்தன இசைமழையை!

இனியன் சம்பத்,மகன் உதவியுடன் நாங்கள் மேடைக்கு சென்று நாளைய மணமக்களை வாழ்த்தி அன்பளித்து திரும்பினோம்.

-அண்ணா நான் போய் மத்த பேர ரிசீவ் பன்றன்..கட்டாயம் சாப்ட்டு தான் போகணும்.

-இடெல்லாம் கடமையில்லியா..நீ போய் மத்த வேலயப்பாரு ரெண்டு நாள் கழிச்சு பேசலாம்.

11

மதுராந்தகம் வட்டம், மோச்சூரைச் தவர் லட்சுமணன் (லேட்). இவருடைய மகள் சந்திரகலா.(பெயர் மாற்றப்பட்டுள்ளது) (13 வயது) மதுராந்தகம் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சென்ற மாதத்தில் சமுத்திரப்பட்டினம் கிராமத்தில் தனது சித்தி சுப்புலட்சமி வீட்டிற்கு சென்றுள்ளார். சந்திரகலா, அபிராமி (5 வயது), மற்றும் சங்கீதா (பக்கத்து வீட்டில் வசிக்கும் குழந்தை 10வயது) ஆகியோர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் போது விஜயகுமார், சிவக்குமார், மணிகண்டன் மேலும் ஒருவர் ஆகிய நான்கு பேர் வீட்டின் முன்புறம் வேலிக்காக கட்டப்பட்டிருந்த தென்னை ஓலையைப் பிரித்துக்கொண்டு வீட்டிற்கு உள்ளே நுழைந்துள்ளனர். ஒருவன் மட்டும் வெளியில் காவலுக்கு நின்றிருக்கின்றான். மற்ற மூவரும் வீட்டிற்குள் சென்று அங்கே டி.வி பார்த்துக்கொண்டிருந்த சந்திரகலாவை பலவந்தமாக உள் அறைக்கு இழுத்துச்சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

சத்தம் வெளியே கேட்டுவிடாமல் இருக்க தொலைக் காட்சியின் சத்தத்தை அதிகரித்துள்ளனர். அப்போது அபிராமி மற்றும் சங்கீதா ஆகியோர் முன் அறையில் இருந்திருக்கின்றனர். சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டில் இருந்த ராஜேஸ்வரி (சுப்புலட்சுமியின் கணவரின் தம்பி மனைவி) தனது ஒன்றரை வயது குழந்தை தேவி, சுப்புலட்சுமியின் வீட்டின் முன்பு தண்ணீர் தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு குழந்தையைத் தூக்குவதற்காக அங்கு வந்திருக்கிறார்.

தனது குழந்தையிடம் பேசிக்கொண்டே வீட்டின் முன்பு வரும்போது அங்கு 16 வயது மதிக்கத்தக்க ஒருவன் நின்று கொண்டிருந்ததையும் வீட்டின் உள்ளேயிருந்து மூன்று பேர் வெளியே ஓடி வருவதையும் கண்டு சத்தம் போட்டுள்ளார். அந்த நான்கு பேரும் ஏற்கனவே ஓலையைப் பிரித்த வழியாகத் தப்பித்து ஒடியுள்ளனர். அதற்குள் ராஜேஸ்வரியின் சத்தம் கேட்டு அருகில் இருந்த ஊர் மக்கள். ஓடிய நபர்களைத் துரத்திப் பிடித்துள்ளனர். பின்பு ஊர் மக்களே கோட்டகுப்பம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். கோட்டகுப்பம் காவல்நிலைய காவலர்கள் மாலை சுமார் 6.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். பின்பு பாதிக்கப்பட்ட பெண் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அன்று இரவே சந்திரகலாவின் அம்மாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் காலை சந்திரகலா மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மதுராந்தகத்திலுள்ள தனது சொந்த வீட்டிற்கு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். காவல் துறை பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012ன் சட்டப் பிரிவு 6 ன் கீழ் குற்ற எண்.5/2015ல் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளது.

உண்மையறியும் குழு கண்டறிந்தவைகள்:

  • இரு சிறுவர்கள் உட்பட நான்கு இளைஞர்கள் சேர்ந்து சிறுமி சந்திரகலாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். நான்கு பேரில் ஒருவர் அரசியல் மற்றும் சமூக ரீதியாக செல்வாக்குடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆகும். இதனால் இவர்களை பகைத்துக் கொண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாதிப்புற்றோருக்கு ஆதரவாக சாட்சியமளிக்க தயங்குகின்றனர்.
  • ஒரு குற்றம் தொடர்பான அடிப்படையான சந்தேகத்தைக் கட்ட விசாரிக்காயால் இவ்வழக்கின் விசாரனை அதிகாரியாக உள்ள ஆய்வாளரின் போக்கு குற்றவாளிக்கு சாதகமாக உள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
  • தொடர்ந்து கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாகவம், அந்தக் குடும்பத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர்தான் இதில் முதன்மைக் குற்றவாளியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாவும், இந்த முறைகேடான செயல்குறித்து கிராமத்திலுள்ள சில மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இந்த செல்வாக்கான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் காரணமாகவே இந்த பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
  • குற்றமிழைத்த நால்வரில் இருவர் இவ்வளவு விரைவாக பிணையில் வெளிவந்துள்ளனர். ஆனால் பாதிப்புற்ற சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இதுவரை நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை.

உண்மையறியும் குழுவின் பரிந்துரைகள்:

  • பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட சிறுமியை உள்நோவாளியாக சேர்க்காமல், உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளாமல், இழிவுபடுத்துகின்ற வகையில் நடந்துகொண்ட புதுவை மருத்துவமனை மருத்துவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
  • தந்தை இல்லாத நிலையில், அன்றாடக் கூலி வேலைக்கு சென்று வரும் தாயாரின் பாலமளிப்பில் தற்போது பள்ளிக்கு சென்று படித்துவருகின்ற சிறுமிக்கு, உரிய கவுன்சிலிங் அளிக்கப்படுவது. இவரது குடும்பச் சூழலைக் கருத்தில்கொண்டு பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிட உயர்நிலைக் கல்வி வரையிலான செலவுகள் அனைத்தையும் அரசு, குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்.
  • செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வெளியிலிருந்து சாட்சிகளையும், ஆதாரங்களையும் களைப்பதற்கும், அழிப்பதற்குமான வாய்ப்புகள் அதிகமுள்ளது. எனவே வெளியில் உள்ள இருவரின் பிணை மனுவினை ரத்து செய்யவேண்டுமென்றும், பாதிப்புற்றவர்கள் சுதந்திரமாக சாட்சியமளிப்பதற்கு வகை செய்யும்நோக்கில், வழக்கு விசாரணை மற்றும் பிணைவழங்கப்படக்கூடாது. நீதிமன்றத் தீர்ப்பு வருகின்றவரை

குற்றச் செயல்கள் நிகழ்வதற்கு அடிப்படை காரணமாக உள்ள கள்ளச்சாராயம் விற்பனை உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவதுடன் விற்பவர்கள் மீது உடனடியாக குற்றவியல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

12

தாம்பரத்தில்.. 'திபுதிபு'வென ஏறியது கூட்டம்.

”யண்னா வண்டி செங்கல்பட்டு நிக்குமா”

”நிக்கும் ஏறிக்குங்க..”

”ஏங்க அந்த கதவ திறந்து வையுங்களேன் திறக்க முடில சார்.”

”நீங்க வேணுமின்னா முயற்சி செய்யுங்க”- வந்தவர் முயற்சித்தார்.ம்ஹூம் செங்கல்பட்டில் வண்டி மெதுவாய் ஊர்ந்து நிற்காமலே வேகம் பிடித்தது.

”ஏம்ப்பா... செங்கல்பட்டு நிக்குமுன்னு சொன்னாங்களே ”

”தெரியலப்பா... நிக்கலயே ...”

”இது சூப்பர் பாஸ்ட் -டுங்க எங்கயுமே நிக்காது தாம்பரம் விட்டா விக்கிரம சதுர்வேதி மங்கலம் தான் நிக்கும்.”

”அய்யய்யோ நான் செங்கல்பட்டு போவனும்பா”

”நான் காஞ்சிபுரம் வண்டிய புடிக்கணும்பா…இன்னாபா இது பேஜாரா பூடிச்சி”

”ஏங்க நீங்க எங்க எறங்கப்போறீங்க..”

”நான் மதுரை அண்ணாச்சி”

வண்டி திண்டிவனம் தாண்டியது மகேசன் கதவருகே இருந்தபடியே தூரத்தில் இருந்தவரிடம் சைகை காட்டி மகனை அழைத்தார். வழியில் படுத்திருந்தவர்கள். உட்கார்ந்திருந்தவர்களைத் தாண்டி கதவருகே வந்தான் திலிபன். விக்கிரசதுர்வேதிமங்கலத்தில் காத்திருக்கும் விபரீதம் தெரியாமல்... காஞ்சிபுரம் போக வேண்டியவர் உடன் வந்தவரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

“ ஏம்ப்பா 20 ரூவா இருந்தா குடேன். ”

”20 ரூவாதான் வச்சிருக்கேன்.”

”விக்கிரசதுர்வேதிமங்கலத்திலிருந்து இப்போ மெட்ராசுக்கு ஏதாவது வண்டி இருக்கா... செங்கல்பட்டு திரும்பி போவணும்”

”இப்போ எதுவும் இல்லைங்க...”

”ஏங்க உங்ககிட்ட 20 ரூவா இருக்குமா... ப்ளீஸ்”

மகேசன். சட்டைப்பையிலிருந்து 20 ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.

”ஏங்க ஸ்டேஷன்ல ஸ்குவாடு இருப்பாங்களா?”

 ”பெரும்பாலும் இப்போ இருக்கமாட்டாங்க இறங்கனவுடனே வேகமா நடந்து வெளிய வந்துடுங்க நெறய ஷேர் ஆட்டோ வரும் பஸ் ஸ்டாண்டு போயிட்டிங்கன்னா செங்கல்பட்டுக்கு அடிக்கடி பஸ் போகும்.”

வண்டி விக்கிரம சதுர்வேதி மங்கலத்தை நெருங்கியது . மகேசனும் திலீபனும் பைகளை எடுத்துக் கொண்டு தயாராயினர் மணி இரவு பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது.

துரதிர்ஷ்டவசமாய் வண்டி முதல் பிளாட் பார்மில் நின்றது. மூடியிருந்த கதவு பிளாட் பாரம் பக்கமாக இருக்க எதிர்த்திசையில் குட்ஸ் லைன்கள் பக்கம் குதித்து தண்டவாளம் கடந்து போக எத்தனித்தனர் மகேசனும் திலீபனும். செங்கல்பட்டு இறங்க வேண்டிய மூணுபேரும் அவசரம் அவசரமாய் இருப்புப்பாதைகளை தாண்டி மிக வேகமாய் நடக்க இருப்புப்பாதை அருகில் இருந்த இரயில்வே இருப்புப்பாதை காவலரின் குரல் ஓங்கி ஒலித்தது.

13

கொட்டும் மழையிலும் பேப்பர்கார கடமை வீரன் வாசலில் தினத்தந்தி யை வீசி விட்டு சென்றிருக்கிறான்.. தினத்தந்தி துபாய் பதிப்பில் பார்வைக்கு படாத ஒரு மூலையில் சின்னஞ்சிறு செய்தியாக ராமதாஸ் பதிவாகியிருக்கிறார்.

அல் அய்ன் பாலை வனத்தில் தமிழக வாலிபர்

மர்ம மரணம்.

            அல் அய்ன், நகரில் பிரபல தொழிலகம் ஒன்றில் ஊழியராக பணி புரிந்து வந்த தமிழ்நாட்டின், பண்ருட்டி பகுதியைச் சார்ந்த ராமதாஸ் என்கிற வாலிபர் தொழிலகத்தின் அருகிலுள்ள பாலைவனப் பகுதியில் மர்மான முறையில் இறந்து கிடந்தார்... இது குறித்து அல் அய்ன், போலிசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர்.

ராமதாஸ் இறந்து போன தகவல் மழை இடியை விட பெரிதாய் எனைத் தாக்கியது.மிகத் தாமதமாகத் தான் தெளிந்தேன்.ஓய்வில்லா ஒரு சக்கரம் சுழலுவதை நிறுத்தியிருக்கிறது.

14

மேல்கோட்டை, மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரம் தாலுக்காவில் இருக்கிறது.

மேல்கோட்டைக்கு, திருநாராயணபுரம், யதுகிரி என வேறு நாமங்களும் உண்டு.... இப்போதைக்கு ஆங்கில ‘சுருக்’கில் ‘மேல்கோட்’ ஹொய்களர்கள் ஆட்சி நடந்த இடம். இங்கொரு கோட்டை இருந்ததாகவும், இந்தப் பிரதேசம் ஒரு இராணுவத்தள மையமாக இருந்திருக்கலாம் எனவும் சரித்திரர்களின் ஊர்ஜித மாகா தகவல்கள்.

            கோபால ராயபுரத் தூண்களை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது...

            சூப்பர் ஸ்டார் ராக்கம்மாவை கையைத் தட்ட சொன்ன இடம் இது தான்..

            ஏலமலக் காட்டுக்குள்ளே என பாண்டியன், மலேசியா வாசுதேவன் குரலில் உச்ச ஸ்தாயியில் ஏங்கிய இடமும் இது தான்!

            ஜிங்குச்சான் ஜிங்குச்சான் என மீனா வண்ணங்களை குழைத்த பாடல் பெற்ற ஸ்தலம்.

            தூண்களில் புன்னக்கும் நங்கைகள் ஹொய்சளக் கலைஞர்களின் கை வண்ணம்.

            எங்கோ ஒரு தூணில் சாந்தமாய் புத்தர்....

            குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வா யில் குமிழ் சிரிப்பும் என... நடிகை ஷோபனா பைய நடந்து பரதம் ஆடிய பசுங்குளம்.

- ருசியான தகவல்களாக தேடி பிடித்திருக்கிறாய் பிந்து....

- அதிகாரிகளுக்கு மஸ்கா பூசுவதும் கூட அலுவலக கடமைகளில் ஒன்றாகிவிட்டதை புதிய மேலாண்மைப் பள்ளிகள் சொல்லித்தருகின்றன.இன்னும் சுவாரஸ்யங்கள் மேல்கோட்டையில் இருக்கவே இருக்கு சார்.

- அதையும் சொல்லிடுங்க....இல்லன்னா... என் தல வெடிச்சுடும்.

- சார் ஒரு ரிக்கொஸ்ட்... டிரைவர் நசீரின் குரல்.

-சொல்லு நசீர்.

-உங்க தல வெடிக்கும் போது கொஞ்சம், காரை விட்டு வெளியே வந்துடுங்க.. இன்னும் காருக்கு இன்சூரன்ஸ் ரினீவல் பண்ணலை.

-ஓங்கவலை ஒனக்கு... பிந்து நாளைலேயிருந்து வேற டாக்சி.. வேற டிரைவர் பாருங்க...

-அய்யாசாமி... எம் பொழப்புல மண்ணள்ளிப் போட்றாதீங்க...

-ராஜவீதிக்கு இறங்கினோம்... சில இடங்களில் தமிழ் விளம்பரப் பதாதைகள்.

ஸ்ரீரங்கத்திலிருந்து ராமானுஜருடன் அய்யங்கார் சமூகத்தினர் சிலர் இங்கு வந்து தங்கி விட்டதாய் ஒரு ஐதீகக் கதை.

- இன்னும் என்னென்னக் கதைகள் இருக்கு பிந்து..

-இருக்கு சார் நாலஞ்சு.... உண்மையிலேயே கேக்க சுவாரஸ்யமா இருக்கும்.

-அப்போ சொல்லி முடிச்சுடு.

‘சுருக்’ கதை-01

-ஒவ்வொரு கோயிலுக்கும் மூலவர் சிலை ஒண்ணு இருக்கும்... உற்சவர் சிலை என்று இருக்கும்.

-அது தெரிஞ்சுது தானே

-இங்க மலைமேல யோக நரசிம்மர்... திருநாராயணர் கோயில்ய உற்சவர் சிலையை டில்லி சுல்தானோட முஸ்லீம் படைகள் கொண்டு போயிருச்சாம். இங்க இருக்குற ஹொய்சள மன்னர், ராமானுஜரைக் கூப்பிட்டு...

-ஐயன்மீர் தாங்கள் டில்லி சென்று, சுல்தானைக் கண்டு, உற்சவரைக் கொண்டு வருவீராக என உத்தரவிட்டார்.

-மேல்கோட்டையிலிருந்து டில்லிக்கு பல்லக்குப்பயணம்.

டில்லி பாதுஷா-வும் ராமானுஜரை பார்த்ததும் மரியாதை செலுத்தி வினவினார்.

-என்ன வேண்டும் ஸ்வாமிகளே...

-மேல்கோட்டையின் செல்லப்பிள்ளையின் உற்சவ விக்ரஹம் ஒன்று போதும் பாதுஷா.

-தன்னிடமிருக்கும் அத்துணை விக்கிரஹங்களையும் பாதுஷா எடுத்து வந்து காட்சிப்படுத்த ராமானுஜர் தேடுவது அந்த தொகுப்பில் இல்லை.

- இதிலில்லை.. ஆனால் இங்கு தான் இருக்கிறது!

-ஸ்வாமிகளே... பூடகப் பேச்சு புரிவதில்லை... வெட்டு ஒன்று துண்டு ரெண்டென ‘பளிச்’ சென பகருங்கள்.

-பாதுஷாவின் செல்ல மகளின் அறையில் விளையாட்டுப் பொருட்களோடு என் செல்வ நாராயணன் சிலையும் உனது.

- அட... அப்படியா...

-மகளே பீபி... இந்த அந்தணர் சொல்வது உண்மை தானா...

- எனக்கு தெரியாதே... வாப்பா என்னிடம் கடவுள் இல்லை.. பொம்மைகள் தான் உள்ளன.

-இடையில் புகுந்த ராமானுஜர்

-எழுந்து வா செலுவ நாராயணா- என்றழைக்க, பொம்மைக் குவியலில் இருந்து ஒரு மாயம்! ம்ஹூம் மாய யதார்த்தம்! ஒரு பொம்மை எழுந்தது..நடந்தது

- இவன் தான் என் செலுவநாராயணன்…வா..நாராயணா வா..

-நான் தரமாட்டேன்... இளவரசியின் பிடிவாதம்.

சுருக் கதை 02

- சரி குழந்தாய் நீயும் வா என்னுடன் ராமானுஜர் அழைக்க - சின்னமகள் செல்வ நாராயணனோடு புறப்பட்டாள்.வழியில் கள்வர்கள் சில பல்லக்கை மறித்து கொள்ளையிட முயற்சித்ததும் நிகழ்ந்தது.அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது...

புலையர்... தீயர் ... தீண்டத் தகாதவர் என ஒதுக்கியே வைத்திருந்த கூட்டத்தின் வீரர்கள். பலர் கள்வருடன் போரிட்டு அவர்களை ஓட ஓட விரட்டினர்.வெற்றி கண்டனர்.

-ஆன்மீகப் பலம் மிகுந்த ராமானுஜர் காப்பற்றப்பட்டார் அரசரின் தவப்புதல்வி காக்கப்பட்டாள்... முக்கியமாயந்த விக்கிரகம். கள்வரால் எவ்வித சேதாரமுமின்ற காப்பாற்றப்பட்டது.

ராமானுஜர் திருவாய் மலர்ந்தார்.

-உழுகுடி சோதரரே.. உழைக்கும் கூட்டமே. வீரத்தின் விளை நிலமாய் உங்கள் தீரத்தை கண்டேன். இக்கணம் முதலாய் நீங்கள் புலையர் அல்ல. திருக்குலத்தார் - என அழைக்கப்படுவீர்கள். நாராயணன் சன்னதியின் வாசல் வரை வர உங்களுக்கு உரிமை உண்டு. மேல்கோட்டை வைரமுடி நாராயண உற்சவத்தில் திருக்குலத்தாருக்கும் ஒரு திருநாளுண்டு.

சுருக்கதை 3

            இளவரசிக்கு தங்க விக்கிரத்தின் தாளாத காதல். ஆனால் சனாதனம் பற்றி அறியாள் சிறியவள்!          அவள் வேறு மதம் என்பதால் அவளைக் ஆலயத்தினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

இளவரசியோ தவத்தில் அமர்ந்தாள்... செல்வனோடு மனதால் கலந்தார். யாயும் யாயும் யாயாகியரோ.

தகவல் சற்று தாமதாமாகவே ராமானுஜருக்குப் போனது. இளரசியின் மனம் உணர்ந்தார். .... உள்ளே சென்று வழிபட அனுமதிக்கு ஆக்ஞையிட்டார்.

            கோயிலுள்ள நுழைந்தவள் பகவானுடன் செம்புலப் பெயல் நீராய் ஒன்றறக் கலந்தால் பீபி நாச்சியார் என அழைக்கப்பட்டாள்.

கதையெல்லாம் ருசிதான்... லாஜிக் பல இடத்துல இடிக்குது! அதுவும் சனாதனம் பத்தி பேசுநா எல்லா கோர்ட்லயும் கேஸ் போட்டு அலைய வைப்பானுவோ... இதே போல ஒரு கதை ஸ்ரீரங்கத்துலேயும் உண்டே. இங்க பீபி நாச்சியார் அங்க துலுக்க நாச்சியார்….சமணத்தை எதிர்க்கும் சனாதன மதம் இஸ்லாமியத்தை ஏற்கும்... ஏன்னா... பாதுஷா வோட பவர்... இந்த தொன்மக் கதையில நிறைய கேள்விகள் கேக்க முடியும்... விவாதிக்கவும் முடியும்... ஆனா இப்போ வேனாம்.

- அப்படின்னா... தெய்வங்களுக்கு மதம் பிடிப்பதில்லை...ன்று தானே அர்த்தம் சார்.

-யப்பா நசீர்.. யாருக்குமே மதம் புடிக்காம இருந்தா தான் நல்லது.. நீ ரோட்ட பாத்து ஓட்டு...

ஏன் சார்... இப்போ வேணாம்...-பிந்துவின் குரல்

-ஏன்னா... ரொம்ப பசிக்குது!

15

- சரி சாப்பிடப் போலாமா... காலையில வேல இருக்கு... சீக்கிரமா கௌம்புனா... டிராபிக்ல மாட்டாம வூடு போய் சேந்துடுவோம்.

- அதுவும் சர்தான்... நானும் சீக்கிரம் கௌம்புனா பஸ் பிரச்ன இருக்காது.: - என்ற படியே உணவுக் கூடத்தை நோக்கி நடந்தோம்.

            உணவுக் கூடம் நிகழ்வு மண்டபம் போலவே விஸ்தாரமாக இருந்தது.

            ஐந்து வரிசைகளுக்கு ஒரு உணவு பரிமாறும் குழு, விருந்தினர் உட்காரச் காத்திருந்தனர்..           மேசைமேல் பசிய வாழை இலை... உடன் பிளாஸ்டிக் போத்தலில் குடிநீர்... அழகிய முரண்!

            கிடைத்த இடத்தில் அமர்ந்தோம், முதலில் நானும் என் பக்கத்தில் அன்பரசன், பிறகு அவன் துணைவியார்... அப்புறம் பெயர்த்தி.

            “ஸ்வீட் ஆரம்பிங்கப்பா...”- விதவிதமாய் பட்சங்கள் இலையில் விழுந்தன. சிப்ஸ், பொறியல், வறுவல் என வழக்கமானவைகளோடு, வித்யாசமாக சிறிய மண் குடுவையில் பாதாம் சீர்... ச்சிலென்று அலங்காரங்களைத் தொடர்ந்து இட்லி, தோசை, சப்பாத்தி, நெய் சோறு என அணிவகுப்பு.

            அறுபது வயதுக்கு எதை சாப்பிட வேண்டுமோ, எவ்வளவு சாப்பிட வேண்டுமோ ... அதை மட்டும் சாப்பிட்டேன். அன்பரசன் பக்கத்து இலைக்கும் கேட்டு வாங்கியதையும் கவனிக்கத் தவறவில்லை.பக்கத்து இலை அவன் பேத்திக்கானது.

            கையலம்பி வெளியில் வர, டிஷ்யூ பேப்பர் விநியோகம்....   ம்ம்.. ராஜ வாழ்க்கை தான்!

            பிறகு ஒரு மூலையில் இரண்டு பெண்கள் பீடா மடித்து கொண்டிருக்க, அந்த மூலைக்கு நடந்தோம்... பிறகு ஐஸ்கிரீம் விநியோகம்... நான் மட்டும் வாங்கவில்லை.

            உணவுக் கூடத்தின் வெளி வழியாக பவுன்சர்கள் உணவருந்தியவர்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். வெளியே வந்து காரிடாரில் நடந்து பின் மீண்டும் வரவேற்பு நிகழ்விடத்துள் வரவேண்டும். வரவேற்று மண்டபத்தின் வாசலில் சிறு கூட்டம் வந்தவர்க்கெல்லாம் தாம்பூலப்பை விநியோகம்.

            பிங்க் வண்ணத்தில் ஒரே மாதிரி சேலையணிந்த, மூன்று பெண்கள் தாம்பூலப்பைகளை விநியோகித்து கொண்டிருக்க, கூட்டம் மெல்ல மெல்ல அதிகமாக பவுன்சர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் அந்த பெண்களுக்கு பாதுகாப்பாகவும் நின்று கொண்டிருந்தனர்.

- தாம்பூலப் பை வாங்கவா... இவ்ளோ அலப்பரை.

- தாம்பூலம்னா வழக்கம் போல தேங்கா பழம் போடலையாம்.

- பின் என்னவாம்... எதுக்குதான் இந்தக்கூட்டம் அலமோதுது. உணவருந்த பின் உள் வந்தவர்கள் மெல்ல மெல்லப் பெருகினர். தாம்பூலப்பை வாங்கி வந்த ஒருவரிடம் அன்பரசன் விசாரித்தான்.

-அண்ணே.. பையில என்னன்ன.. விசேசம்...

-ஏதோ எவர் சில்வர் பாத்திரம் வச்சி தர்ராங்க....

- பையை பிரித்து பாத்திரத்தை எடுத்து காண்பித்தார். நல்ல வெயிட்டான ஸ்டெயின்லெஸ் பாத்திரம்... பால் குண்டான்.. போல... மூடி போட்டு கைப்பையோடு கூடிய கனமானப் பாத்திரம்.

பாத்திரம் பார்த்தவர்களுக்கு பேய் பிடித்து விட்டது...

- சரி நாமளும் தாம்பூலம் வாங்கிடுவோம்.

- ஏம்மா.. பாப்பாவை வச்சிகிட்டு ஓரமா நில்லு... தாம்பூலம் வாங்கிகிட்டு வந்திடுறோம். பாத்திர படையெடுப்புக்கு தயாரானோம்.

- உள்ளே நுழையவோ முடியவில்லை.. நாலுபேர் காலை மிதித்து சில பேரை இடித்து தான் முதல் வட்டத்துக்குள் நுழைய முடிந்தது.

-பொம்பளங்க மேல ஏறி வுழுந்துகினு வர்ராங்களே... ஆம்பளவுளா,,, இவுங்கெல்லாம்...

            வசவுகளைக் கேட்கும் நேரமா இது... மனசுக்குள் ஒரு வெறி வைராக்கியம்! எப்படியாவது முட்டி மோதி ஒரு பையை வாங்கிடனும்!

            பத்துக்கும் மேற்பட்ட பவுன்சர்கள்,, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். உள்ளே வந்தவர்களை கைமுஷ்டியால் ... தோள்ப் பட்டையால் தடுத்து நிறுத்தும் பணியில் தோல்வியே கண்டனர்.. ஆண்களும் பெண்களுமாய்க் கூட்டத்துக்குள் நுழைய எல்லாவித முஸ்தீபுகளையும் மேற்கொள்ள, நாங்களிருவரும் இரண்டாவது வட்டத்துக்குள் நுழைந்து, விநியோகிக்கும் மேசையை நெருங்கிவிட்டோம்.

“எங்க கை வைக்கிறான் பாரு”- யாரோவின் கோபப்புலம்பல்

“யோவ் காலை மிதிக்காதீங்கய்யா...

“நெருக்காதீங்கப்பா... அய்யோ... ‘புடிச்சு தள்ரான்ங்களே”

ஒரு வழியாய் இருவருக்கும் ஆளுக்கொரு பை கிடைத்து. அந்த சக்கர வியூகத்தை உடைத்து கொண்டு வெளியில் வருவது வெகு பிரயத்தனமாய் இருந்தது. அதைவிட வாங்கிய தாம்பூலப்பையை. காப்பாற்றிக்கொள்வது, பெரும் பாடாய்ப் போனது.

            ஆடைகள் நனைந்து முகமெல்லாம் வியர்வை வழிய, வாசலுக்கு வந்து சேர்ந்தோம்.

            -இன்னொரு பை கேட்டிருக்கலாமேங்க! பெரியவனுக்கு ஒண்ணு.. சின்னவனுக்கு ஒண்னு குடுத்திருக்கலாம்.

            “என்னாது.. இன்னொன்னா.. இதுக்கே இந்தப் போராட்டம்”

            எல்.இ.டி திரையில், முன்னாள் முதல்வர் போலவே பேசும் பல குரல் வித்தகரை காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.

            “உங்களில் ஒருத்தி நான்

            உங்களால் நான்

            உங்களுக்காகவே நான்” - கூடி நின்ற கூட்டம் கை தட்டி ஆரவாரித்தது.

            இரண்டாம் பந்தி முடிந்து வந்த கூட்டம், முன் வந்தவர்களின் கையை, பாத்திரம் இருந்த பையைப் பார்த்தவுடன் ஏதோ, போருக்குப் போவது போல் நின்றிருந்த கூட்டத்தின் மீது பாய்ந்தது.           அவ்வளவு தான் நான் பார்த்தது.

- சரி என்னோட வண்டி தூரத்துல பார்க் பண்ணி வச்சிருக்கன். நான் இந்தப் பக்கமா கௌம்புறேன்.

- ஓக்கே அன்பு.. நானும் பொடி நடையா நடந்தா பஸ் ஸ்டாண்டுக்கு போயிடுவன்.. வர்ரம்மா...

-வாங்கண்ணா... அண்ணிய விசாரிச்சன்னு சொல்லுடுங்க!... வேறு வேறு திசைகளில் கிளம்பினோம்.

            அதற்குப்பின், வேளச்சேரி பேருந்து நிலையம் வந்து, பேருந்துக்கு அல்லாடி பின் கிடைத்ததில் ஏறி அமர்ந்து தி.நகர் வந்து வீடு சேர்ந்தவன், களைப்பில் உறங்கி விட... எழுந்தவனுக்கு காத்திருந்தது அந்த துயரச் செய்தி.

திருமண வரவேற்பில் தள்ளுமுள்ளு,

18 பேர் உயிரிழந்த பரிதாம்

34 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடம்

நல்லவேளை இறந்து போனவர்களின்… ம்ஹூம் தள்ளுமுள்ளினால் கொல்லப்பட்டவர்களின் முகங்களை மறைத்திருந்தார்கள்.. ஊடகத்துக்கும் அறமுண்டோ!தொலைக்காட்சியின் காமிரா சுழன்று மேடையைக் காட்டியது.

இறந்து போன தலைவி விரல்காட்டி புன்னகைக்க அருகில் தற்போதைய அணியின் தலைவர் பெருஞ்சிரிப்புடன் கை கூப்பி வணங்கி கொண்டிருக்க.

“அய்யோ... யம்மா... எங்கள வுட்டுட்டு போயிட்டியே...

‘டேய்... எம் புள்ள எங்கடா’

‘யோவ்.. எந்திரிய்யா... மாமா... எந்திரி மாமா...’

ஓலங்கள்! துயர அரற்றல்கள்!அழுகையின் பேரொலி.. கூடவே தொலைக்காட்சி இணைத்த துயரம் வழியும் ஷெனாய் இசை!

காட்சிப் பின்னணியில் சோகம் ததும்பும் குரலில் நிகழ்வை வர்ணித்துக் கொண்டிருந்தார்.செத்துப் போனவர்களைப் பார்த்து துயர் கொள்வதா...?உயிர் தப்பியதை நினைத்து ஆசுவாசப்படுவதா...

தொலைக்காட்சி க்ளிப்பிங்ஸ் பார்க்கவே பெருந்துக்கம். வீழ்ந்து கிடந்த பெண்கள்... குழந்தைகள்... ஆடைகள் கலைந்து அலங்கோலமாய்....ஓரிரண்டு ஆண்களும் தரையில் வீழ்ந்து கிடந்தார்கள். அவர்களுக்கு அருகில் உருண்டு கிடந்த எவர்சில்வர் பாத்திரங்கள்.இல்லையில்லை பிச்சைப் பாத்திரங்கள்!

16

 சைக்கிள் ஸ்டாண்டில் விட்டிருந்த இருசக்கர வாகனத்தை எடுக்க வேகமாய் நடந்த திலீபனை அதட்டியது ஒரு போலீஸ்காரர் குரல்

”டேய், இங்க வாடா...?அவன் யார்ரா உங்களோட வந்தவன் யோவ் நீயும் வாய்யா...”

காஞ்சிபுரம் போக வேண்டியவன் நடுங்கி கொண்டிருந்தான். மகேசன் மகனை அழைத்தார்.

“ஏம்ப்பா வா இப்படியே போய் வண்டிய எடுத்துக்கலாம்...”

”ஏய்.., யார்யா அது இங்க வாய்யா ஸ்டேஷனுக்கு… யார்யா நீ எங்கிருந்து வார...” சீருடைக்காவலர் அதட்டிய குரலில் உலக அதிபதியின் மமதை இருந்தது.

”சார்... கொஞ்சம் ரெஸ்பெக்ட் குடுங்க.. நான் பேங்க்ல ஒர்க் பண்றன். இது என் சன்…லயோலா காலேஜ்ல என்.சி.சி ட்ரெயினுங்கு போய் வர்ரோம்”

"பேங்க்ல வேல் செய்றன்ற..லைன கிராஸ் பண்ணக்கூடாதுன்னு தெரியாதா..”

”சாரி சார் அது தப்புதான்! ட்ரெயின்ல ஒரு பக்க கதவு லாக் காயி தெறக்க முடியல.. அதனால இந்த பக்கம் இறங்கிட்டோம். வண்டிய ஸ்டாண்டில் விட்டிருந்தோம் எடுக்கப் போனோம்”

“ எங்கயா இருக்குற அசலூரா..”

”நாங்கள்ளெல்லாம் லோகல்தான்! டிஜஜி ஆபிஸ் கிட்ட வீடு எங்க அண்ணனும் உள்ளுர்ல இன்ஸ்பெக்டர் தான்”

"டேய் இதுதான் உனக்கு மரியாதை நீ லோகல்னா பெரிய இவனா..”

”சார் நான் அப்படியெல்லாம் சொல்லல... பின்ன உங்க வூட்ல இன்ஸ்பெக்டர் இருந்தா நாங்கல்லாம் புடுங்கறதுக்கு இருக்குறமா”

அதற்குள் ஓடிப்போன ஒருத்தனை பிடித்து இழுந்து வந்தனர் இரு காவலர்கள். இன்னொருத்தன் போய் விட்டிருந்தான்.

"தேவ்டியா மவன் எவ்ளோ தூரம் ஓடிட்டான் சார் வக்காளி கழட்றா சட்ட பேண்ட்ட தாயோளி… எங்கள் ஓட வுட்டுட்டு வேடிக்க மயிறா காட்ற…”-வார்த்தைக்கு வார்த்தை லத்தி பேசியது.

அடிபட்டவன் கதறினான்.

”அய்யா அய்யா வுட்ருங்கய்யா. என் சம்சாரத்துக்கு ஒடம்பு சரி இல்லைங்கய்யா அதாங்கய்யா வேகமாகப் போனேன்”

”டிக்கட் இருக்காடா தேவ்டியா மவனே”

”இருக்குங்குய்யா.. தோ பாருங்கய்யா பாக்கெட்ல வேற என்ன இருக்கு”

பாக்கெட்ல இருந்த பணத்தை செல்லுலார் பேசி யெல்லாம் எடுத்து மேசை மேல் வைத்தான்.

”எங்கடா வூடு”

”மாரியம்மன் கோயில் தெருங்கய்யா”

”சரி திரும்பி பாக்காம ஓடு..யோவ் இது யாருய்யா - பெரிய அதிகாரியின் குரல்.

 ”இவுக பேங்க்ல வேல செய்யுராறாம் இது இவரு மவனாம்”

”மவனா.. தம்பி மாதிரியல்ல இருக்கு ஐடென்டி கார்டு..இருக்காய்யா”- பயணப்பையிலிருந்து எடுத்துகாட்டினார் மகேசன்.

“ இவன் இன்னாயா பண்றான்”

”+2 படிக்கிறான் சார் லயோலா காலேஜ்ல என்.சி.சி ட்ரெயினிங் போய்த் திரும்புறோம்”

”சரி 3000 ரூபாய் ஃபைன் ஆவும் கட்டிட்டு போ! ”

”சாரி சார் என்கிட்ட இப்போ அவளோ பணமில்ல”

”அதுக்கு என்ன மசுத்துக்கு லைனை கிராஸ் பண்ண…”

முதலில் அதிகாரம் செய்தவர் மகேசனை தனியே அழைத்ததால் காவல் நிலையத்துக்குள் திலீபனும் உள்ளே சென்றான். உள்ளே தேசத்தலைவர்கள் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.

 அகிம்சாமூர்த்தி அண்ணல் சிரித்துக் கொண்டிருந்தார். துப்பாக்கிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு காவலர் அந்த ராத்திரியிலும் ஒரு எந்திரத் துப்பாக்கியை மும்முரமாய் துடைத்துக் கொண்டிருந்தார்.

”ஏம்ப்பா பைல எவ்ளோ தாம்பா இருக்கு?”

அதிகாரம் பணிவாய் வினவியது.

”இருநூறு இருநூத்தம்பது இருக்கும் சார் நாங்க போய்

சாப்புடனும்”

”சரி கைல இருக்குறத குடு நான் அய்யாகிட்ட பேசிக்கிறேன்.இல்லைன்னா நாளைக்கு வந்து பைன் கட்டணம் மூவாயிரம்ருவா..”

வெளியே காஞ்சிபுரத்தானின் அழுகுரல் கேட்டது.

"வேணாங்கய்யா... வேணாங்கய்யா..."

எந்திரத் துப்பாக்கியை துடைத்தவன் மேசைமேல் வைத்து விட்டு வெளியே வேடிக்கை பார்க்கப் சென்றான்.

மகேசன் பட்ட அவமானங்களை நினைத்து பையில் இருந்த இருநூறு ரூபாயை எடுத்து காவலரிடம் தந்தார்.

”சரி ரெண்டு பேரும் கெளம்புங்க நான் அய்யா கிட்டே பேசிக்கிறேன் இப்படியே போங்க”- காவல்நிலையத்தின் முன் வாசல் வழியாக மகேசனும் திலீபனும் வெளியே வந்தார்கள்.

அப்பா நீங்க போய் வண்டிய எடுங்க நான் தோ வர்ரன்.

திலீபன் திரும்பவும் காவல் நிலையத்துள் நுழைந்தான்.

 மகேசன் சைக்கிள் ஸ்டாண்டில் இருந்த வண்டியை பணம் செலுத்தி எடுத்து வந்து ஸ்டார்ட் செய்யும் போது காவல் நிலையத்துள்ளிருந்து சராமரியாகத் துப்பாக்கியின் ஓசை கேட்டது.திலீபன் கம்பீரமாய் வெளியே வந்து கொண்டிருந்தான் கூடவே காஞ்சிபுரத்தானும்..

மகேசன் வண்டியை ஸ்டார்ட் செய்தார்.

- அன்பாதவன்