என்ன ஜி இவன எங்கிருந்து புடிச்சீங்க... பேச்சை புடுங்குவானு பாத்தா மைக்க புடுங்கிட்டுருக்கான்...
சிறப்பு விருந்தினர் அமரானந்தா அலுங்காமல் காதில் கிசுகிசுத்தார்.
எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருக்கானே. என்ன கணக்கு இது. ரெண்டு இடத்தில் வேறு கை தட்டி விட்டேன். அப்போதே தாவோ நாற்காலியை சரி செய்வது போல வந்து.... "இப்ப எதுக்குணா கை தட்டின. அவன் ரெண்டாயிரம் நாலாயிரம் ஆறாயிரம்னு ஒரு படத்துல மெண்டல்ஸ் சொல்லுவாங்களே... அது மாதிரி 127, 189, 250னு பேஜ் நம்பரை சொல்லிட்டுருக்கான்... ஆமா..... உன் கவிதைய பாராட்டி பேசினாவே யாரோ கவிதைனு கை தட்டுற ஆள்தான நீ.. ஆனா இதெல்லாம் எங்களால தாங்க முடியாதுனா.. வெடிகுண்டு வீரனை விட்ருந்தா கூட வெரைட்டி வெரைட்டியா பேசி விட்டிருப்பான்..." காதை கடிக்கத்தான் இல்லை. வெடித்து விட்டு போனான்.
கூட்டத்தில் இருந்து பாபி கூட வாட்ஸப்பில் செய்தி அனுப்பி விட்டான்.
"என்னடா இவன் திடீர்னு வெடிமுத்து மாதிரி பேசறான். வெடிமுத்துக்கே வேட்டி அவுந்து கிடக்கு. இவன் இன்னும் ரெண்டாயிரத்தை விட்டே வரல போல..."
கண்களால் அமைதிப் படுத்திக்கொண்டே வெடிமுத்துவை.... ச்சே.. பேச்சாளரை கவனித்தேன். கலக்கம் உள்ளே கடகடத்தது. கண்களில் மிரட்சி வருவதைத் தடுக்க முடியவில்லை. ஆமா... கதைக்குள்ளயே வர மாட்டேங்கிறானே. அட டேபிளை வேற குத்தறான்.. இப்ப எதுக்கு காமனல்லாம் இழுக்கறான். மேடையில் அமர்ந்திருப்பதே பாடையில் அமர்ந்திருப்பது போல ஆகி விட்டதே.
பட்டிமன்றம் மாதிரி திடீர்னு திரும்பி காமெடி வேற பண்றான். அது காமெடின்னு சொன்னா... காம்ம்மனின் மாம்ம்ம்மன் கூட மன்னிக்க மாட்டான்.
"குனிஞ்சு புல்ல வெட்ட முடியலயாம்... தலைக்கு மேல ரெண்டு மூட்டை வேணும்ணானாம்..." இன்னொரு பேச்சாளர் பின்னிருந்து எட்டி என் காதில் கிசுகிசுத்தார்.
அமரானந்த ஸ்வாமிகள்... நெல்லையிலிருந்து கொண்டு வந்த அல்வாவை உருட்டிக்கொண்டே .... "ஜி இப்ப சொல்லுங்க... வீசி அடிச்சறேன்... என்னால தாங்க முடியல" என்றார்.
அமரானந்தாவையே கோபத்துக்குள்ளாக்கி விட்ட பேச்சாளர் பகட்டுவீரன் அவ்வப்போது கையைத் தூக்கி தூக்கி யாருக்கோ சபதம் வேறு போட்டுக் கொண்டிருக்கிறான். யார்னால கெட்டு போனவன் இவன்... திரை இந்தப் பக்கம் இருக்க.. இன்னும் படம் போடல... போடுவாங்கன்னு விடிய விடிய சுவத்த பாத்துட்டு உக்காந்துட்டுருந்த மோடுமுட்டி மாதிரில்ல இருக்கான்.
காலத்துக்காக எழுதின கதையை காமத்துக்காக என்று மாற்றி விட்டவனை என்ன சொல்வது. அட போதும்ம்பா நிறுத்திக்கோ.. என்று ஜாடை காட்டும் போது எடுத்தானே உலக நாயகன் குரலை. வெலவெலத்து போனோம். மேடை மீது அமர்ந்திருக்கும் சான்றோர்கள் சறுக்கு விளையாட்டில் தொங்குவது போல பார்த்தார்கள். அரங்கத்தில் அமர்ந்திருப்போர் இதெல்லாம் தவறுங்க என்பது போலவே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவனா... என்னென்னமோ பேசிட்டுருக்கான்.
எனக்கு ஒரு நிமிசம் மட்டுமில்ல. ஒவ்வொரு நிமிசமும் தலை தலையா சுத்துது.
உன் புக்க பத்தி பேச சொன்னா அவன் மூக்க பத்தி பேசிட்டு இருக்கான்... பார்த்தாலும் பாவமா தான் இருக்கு... பக்குவமா எடுத்து சொல்லி அனுப்புங்கப்பா என்றார்... வெளியூர் விருந்தாளி. வெள்ளரி சிரிப்பை தந்து விட்டு வெறி கொண்டவனானேன்.
தாவோ மீண்டும் வேகமாய் ஓடி வந்தான்.
என்ன என்று கண்களாலே கேட்டேன். என் காதருகேயே வந்து விட்டான்.
"அண்ணா இவன் பக்கத்து மேடைக்கு போக வேண்டியவன்ணா. மாறி வந்து இங்க பேசிட்டுருக்கான்.." என்று தலையில் அடித்துக் கொண்டான்.
திக்கென கண்கள் விரிய பார்த்தேன். அட ஆமா... நமக்கு வர வேண்டியவர் வர முடியாம என்ன விட நல்லா பேசற... நம்ம டாபிக் தெரிஞ்ச ஒருத்தர் இருக்கார். அனுப்பி வைக்கறேனு சொல்லவும்... வந்தது அவர்தான்னு நினைச்சிட்டேன்... இப்ப என்ன செய்யறது.. படபடப்போடு பார்க்க பார்க்க ஒரு வழியாக பேச்சை முடித்துக் கொண்டு மைக்கை விட்டான். மைக் ஜவ்வு மிட்டாய் மாதிரி நசுங்கி போயிருந்தது.
என் மாமியார் வேற... ஓடி வந்து "ஏனுங்க... புக்கே 350 பக்கம் தான். அந்த தம்பி 389 னு சொல்லுதுங்க..."னு ஓனபத்திர பானாண்டி மாதிரி போட்டுக்கொடுக்க...
ஐயோ அத்தே கொஞ்சம் அமைதியா இருங்க என்று அமைதிப் படுத்தினேன். இன்னும் படபடப்பில் இருந்து நான் வெளியேறவில்லை. மற்றவர்களும் தான்... மந்திரித்து விட்டது போலவே பார்த்தார்கள்.
"இலக்கியத்துல இதெல்லாம் சாதாரணமப்பா" என்று சொல்லிக்கொண்டே அமரானந்தா எல்லாருக்கும் கையில் கல்லாய் இருந்த அல்வாவை சீரியஸாக பிச்சு பிச்சு கொடுத்தார்.
சிரித்து விட்டோம்.
நிகழ்வு முடிந்து வெளியேறுகையில் மழையில் தொப்பலாக நனைந்தபடி ஒருவர் எங்கள் அருகே வந்து.. "நிகழ்வு.... பேச...." என்று இழுத்தார். நாங்கள் ஒரு கணம் உற்றுப் பார்த்துக் கொண்டே இன்னும் பலமாக சிரிக்கத் தொடங்கினோம்.
அப்படியாக.... ஹா ஹ ஹா...!
- கவிஜி