கீற்றில் தேட...

வேத நிலா... வெப்பம் தொலைந்த வானத்தை வெறித்து நின்றாள்.

அவள் காத்திருப்பு... கணம் கூட கூட கனம் கூட்டிக் கொண்டிருந்தது. எங்கிருந்து ஆரம்பிப்பது. எதன் போக்கில் தேடுவது. புலப்படும் எல்லாமும் புலம்பலில் சேருமா. கிட்டத்தட்ட இரண்டு மாத பழக்கம். எங்கிருந்தோ வந்த எல்லையில்லா அன்பு. அப்படி ஓர் உறவு கொண்டு விட்டாள். சின்னஞ் சிறிய பறவைக்கும் அத்தனை பெரிய வானம்தான் சாலை. நீலமும் வெண்மையும்.... வெளிர் நீலமும் கரு நீலமும்... கும்மிருட்டு நன் பகலும் என எத்தனை எத்தனை ஒளி பூச்சுகள் தான் அதற்கு. உள்ளங்கையில் உட்கார்ந்தால் உலகத்தை சுமக்கலாம் போல. அப்படி ஒரு துள்ளல் அதன் அருகில். இதயத்தின் அளவில் ஓர் உருவத்தின் அழகு.

வேத நிலா வேண்டி விரும்பிய வரம் அல்ல... இது. வந்த பிறகு வனம் புரிந்த மனம் இது.

அந்தி சாயும் நேரத்தில் ஆயுள் சேர்ந்த கவளம் போல உள்ளங்கை நெல்லிக்கனியாக வந்த சிறு பறவை அது. மொட்டை மாடி தோட்டத்தில்... முகிழ்ந்த வெற்றிலைக் கொடி இடையே வளைந்த கிளை ஒன்றில் வந்து அமர்ந்த அதற்கு... குளிர்கால சூடு தேவை போல. வந்தமர்ந்த அது விடியும் வரை பறந்து செல்லவில்லை. குட்டி தலையை தன் இறகுக்குள்ளே சொருகிக் கொண்டு... என்ன ஒரு தூக்கம். உழைத்த களைப்பு. உண்ட களைப்பும் தான் போல. பொத்தினாற் போன்ற உவமை அது. புசுபுசு கவிதை தான் அதுவோ.

அடுத்த நாளும் வந்தது. அடுத்த நாளும் வந்தது. முதலில் விளையாட்டாய் பார்த்தவளுக்கு பிறகு அதை பார்ப்பதே வேலையாய் போனது.

தொடர்ந்து... பின் மாலை பொழுதும்... முன்னிரவு விழுதும் சேரும் நேரத்தில் வந்து விடும். விடி காலையில் கிளம்பி விடும். மனிதக் குரல் கேட்டால் வந்தமர்வது தாமதமாகிறது. அங்கும் இங்கும் கத்திகொண்டே சுற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்த வேத நிலா.. ஒதுங்கி நின்று அமைதி காத்தாள். யாரும் இல்லை என்று உணர்ந்த அது.. பிறகு மெல்ல வந்து அதனிடத்தில் அமர்ந்து கொண்டது.

சடக் சடக் என திரும்பி திரும்பி பார்த்து... உடலை அசைத்து... உணர்வை நம்ப வைக்க அது சற்று நேரம் போராடும். நம்பகமான இடம் தான் என்று தன்னையே நம்ப செய்யும் முன் எச்சரிக்கை அது. முகம் சுழன்று மூச்சு இயல்பானதும்.. முசுக்கென நெஞ்சுக்குள் தலையை புதைத்துக் கொண்டு... அப்புறம் கும்பகர்ண தூக்கம் தான்.

அடுத்த நாள் அடுத்த நாள் என்று நாட்கள் நகர... அதன் வருகை ஓர் இயல்பு நிலைக்கு வந்திருந்தது. அவள் வாசம் அதற்கும் புரிய தொடங்கி விட்டது. அவள் குரலுக்கு தலை சாய்க்க கற்றுக் கொண்டது. பேர் வைத்து அழைக்கும் அளவுக்கு பிரியம் வளர... நாட்கள் பறந்தன.

பறவை "அருவி" ஆனது.

ஏய் குருவி மாதிரி ஏய் அருவி... குட்டி அருவி... சின்ன அருவி.. இங்க பாரு அருவி... இந்தா அருவி... கொஞ்சம் தண்ணி குடி அருவி... கொஞ்சம் சோறு தின்னு அருவி... என்று பேச்சு பேச்சாக உபசாரமும் பலமானது. என்னமோ எல்லாம் புரியற மாதிரி கழுத்தை ஆட்டி ஆட்டி கேட்டுக்கறத பாத்தா புரியும் தான் போல. வேத நிலா ஆச்சரியப்பட்டாள். அள்ளிக் கொள்ள முற்பட்டாள். ஆனாலும் அந்த சின்ன இடைவெளியில் இசை கசிவதை உணர்ந்தே இருந்தாள்.

இத்துனூண்டு உயிர்... எவ்ளோ பத்திரமா தன்னை அடை காத்துக்குது. எப்படி ஒரு படைப்பு இந்த பறவை. விடிந்தும் விடியாமல் உணவு தேடி பறந்து விடுகிறது. பிறகு சரியா சூரியன் அஸ்தமிக்க அஸ்தமிக்க... இரவு சூழும் நேரத்திற்கெல்லாம் கூடடைந்து விடுகிறது. பறக்கும் இடமெல்லாம் சொந்தங்களை உருவாக்கி கொண்டு செல்லும் மென் சப்தம் இல்லையா. நம்பும் வரை தான் பதற்றம். நம்பி விட்டால் பிறகு அது தான் நம்பிக்கை. சின்ன வயிற்றுக்கு தேவை எல்லாம் உள்ளங்கை குவியல் அளவு இரை தானே. வயிறு நிரம்பிய பறவையிடம் இறையைக் காணலாம். தூங்கும் அழகைப் பார்த்தவளுக்கு துண்டு வானம் துகில் கொள்கிறது. அந்த சின்ன கிளையின் மெல்லிய அசைவு ஓர் ஊஞ்சல் நினைப்பை கொடுக்கலாம். குச்சி கால்களை தாங்கும் உயிர் தண்டுகள் அல்லவா அது.

யோசனை கிளை பரப்புகிறது.

இது கூடு பிரிந்த பறவையா... கோபித்துக்கொண்டு வெளியேறிய பறவையா. வழி மாறிய பதுமையா... தூர தேசம் செல்ல வந்த மிதவையா. யூகிக்க முடியவில்லை. தனிமை விரும்பி போல. பெரும்பாலும் பறவைகள் தனிமை விரும்பிகள் தான் என்று அவளே எண்ணிக்கொண்டாள். யாரைத் தேடி அலைகிறதாம். யாருக்கு காத்திருக்க இதுவாம்.

என்ன அருவி...இன்னைக்கு லேட் ஆகிடுச்சு போல என்று கேட்டால்... தலையை குத்திக் கொண்டு உடலை ஒரு சிலிர்ப்பு சிலிர்க்கும் அளவுக்கு பேசுபொருள் புரிய நேர்ந்து விட்டது என்று தான் நம்ப வேண்டும். அவளுக்கு அதன் பாஷை புரிந்து விட்டதா.. அதுக்கு அவள் பாஷை புரிந்து விட்டதா... தெரியவில்லை. ஆனால் பேச்சு சிரிப்பு பாட்டு என்று முன் இரவு நேரங்களில் இசை முளைக்கும் மொட்டைமாடி வெளி. முகம் பார்க்கத் தொடங்கி விட்டது. மனம் நோக்க தெரிந்து விட்டது. மற்ற குரலுக்கு அமைதி காக்கும் அருவி... அவள் குரலுக்கு ஆசை பூக்கும்... உடல் திருகி.

உன்ன மாதிரியே நானும் ஆகிட்டா என்னை கூப்டுட்டு போயிருவீள. இல்ல என்ன மாதிரியே நீ ஆகிட்டா இப்பிடி பறக்க வேண்டிய தேவை இருக்காதுல. வேண்டாம். வேண்டாம். மனுஷங்க மாதிரி வேண்டாம். நான் உன்ன மாதிரி ஆகிடறேன்.. சரியா. எனக்கும் பறக்கணும்னுதான் ஆசை. ம்ஹும் பேராசை.... என்று பேச பேச இனிப்பாள்.

தானியத்தை கொத்திக் கொண்டே தலை கோதி விடுவது போல பார்க்கும். பார்த்தாலே பரவசம் தான் பறவை வசம்.

ஆனாலும் நண்பர்கள் சொன்னார்கள். பறவை சகவாசம் பாதி தான். எப்ப பறக்கும்னு தெரியாது. கூடி கொஞ்சினாலும்... கடமைன்னு வந்துட்டா கிளம்பிடும். வானமா பாசமா என்றால் வானம் என்றே சொல்லும். கிட்டயா தூரமா என்றால் தூரம் என்றே நம்பும்.

குளிர் கால நாட்களில் சூட்டுக்கு வந்திருக்கிறது. வெயில் காலம் தொடங்க.. வருகை நின்று விட்டது. முதல் நாள் இயல்பாக எடுத்துக் கொண்டாள். முன்னொரு முறை கூட இடையே ஓரிரு நாட்கள் வராமல் இருந்திருக்கிறது. இடையே எங்காவது புத்தி மாறி போதி ஏறி இருக்கலாம். அடுத்த நாள் வந்து விட்டது. அப்பாடா என்றிருந்தது.

கடிந்து கூட கொண்டாள்.

"எங்க போன நேத்து. நைட்டுக்கு தண்ணிக்கு என்ன பண்ணின.. எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா.. கவனமா வந்தரனும்ல அருவி. உனக்காக இங்க காத்திட்டிருக்கேன்ல....!"

இன்னும் ஏதேதோ பேசினாள். அது தூங்கி விட்டது. அப்படித் தான் இந்த முறையும் நினைத்தாள். நாளை வந்து விடும். ஆனால் வரவில்லை. அடுத்த நாளும் வரவில்லை. முகம் சோர்ந்து விட்டது. அடுத்த நாளும் வரவில்லை. உடல் கூட சோர்ந்து விட்டது. அடுத்த நாளும் வரவில்லை. வாய் விட்டே கூப்பிட ஆரம்பித்து விட்டாள்.

மொட்டைமாடி விளிம்பில் நின்று அருவி.. அருவி என்று நாய்க்குட்டியை அழைப்பது போல அழைத்தாள். குரலில் நடுக்கம் கூடிக்கொண்டே போனது. பார்க்கிறவர்களுக்கு லூசுத்தனமாக தெரிந்தது. அவளன்பை அருவி அறியும். அருவி... பேசும் என்று சொன்னால் இவர்கள் நம்புவார்களா. அவள் கத்துவதை நிறுத்தவில்லை. வெளியே வரும் போதெல்லாம் அழைத்துப் பார்த்தாள். கூப்பிடுவதற்காகவே வெளியேவே நின்றாள். இனம் புரியாத சோகம். இனம் புரிந்த தடுமாற்றம். உருவம் அற்ற அழுகை. உள்ளம் உருளும் தவிப்பு. இப்படி ஓர் உறவை அவளும் யோசிக்கவில்லை. இப்படி ஒரு பிரிவை அவள் அன்பும் ஏற்கவில்லை.

அருவி... அருவி என்று கூவி கத்துவது... சற்று அருகே கொத்தாய் வந்து போகும் பறவை கூட்டத்திடம் சொல்லி விடுவதாகவே இருந்தது. எந்தப் பறவையிடமும் பதில் இல்லை.

மானுடக் கதறல்களைப் பறவைகள் கண்டு கொள்ளாது... என்றார்கள்.

அதா அங்க போகுது பார் என்று தோழி சொல்லும் போது கூட... மறுத்தாள். இல்லை அருவியை எனக்கு தெரியும். அதன் வால் இத்தனை பெரிதாக இருக்காது. றெக்கையில் இன்ன வண்ணம்.. இந்த சேர்மானம் என்று அப்படியே மனதில் கொண்ட உருவத்தை வெளியில் பறந்து காட்டினாள்.

அதன் பிறகு ஓரிரு நாட்களில் வேத நிலாவை காணவில்லை என்று அவர்கள் வீட்டில் தேட ஆரம்பித்திருந்தார்கள். என்ன விஷயம் ஒன்றும் யாருக்கும் விளங்கவில்லை. எங்கு போயிருப்பாள்.. அப்படி என்ன பிரச்சனை... எதுவும் புரிபடவில்லை. ஒரு வாரமாகவே சோர்ந்து இருந்ததாக தான் தெரிகிறது. அருவி அருவி என்று புலம்பிக் கொண்டிருந்ததாக செய்தி.

"என்னது... நான்சென்ஸ்.. ஒரு சின்ன பறவையை தேடி போயிருப்பாளா... என்ன பேச்சு இது... அப்பிடியே போனாலும் எங்கன்னு போயி தேடறது.. ஏதாவது அர்த்தம் இருக்கா....?"

ஒரு பக்கம் திட்டினாலும்.. ஒரு பக்கம் பதற்றமும் இருக்கத் தான் செய்கிறது. பைத்தியம் ஆகி விட்டாளோ.. வீட்டை விட்டு போகும் அளவுக்கு என்ன விதமான நிலை இது. ஒரு பறவைய தேடி போறதெல்லாம் சுத்தமான கிறுக்குத்தனம் இல்லாம என்ன. அவ அப்டியெல்லாம் போயிருக்க மாட்டா. அவளுக்கு வேற என்னவோ பிரச்சனை.

ஆளாளுக்கு அர்த்தம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அன்று இரவு வழக்கம் போல 'அருவி' வந்து விட்டது. கூட இன்னொரு பறவையும் இருந்தது.

- கவிஜி