எவ்வளவு நேரம்தான் இந்தத் தேநீர் குவளையைக் கழுவிக் கொண்டிருப்பேன்? நொடிமுள் நகர நகர கடிகாரத்தின் செங்கற்கள் கட்டளையின் கைகளால் பிடுங்கப்பட்டு ஒவ்வொன்றாய் விழுந்து கொண்டிருக்கின்றன. முழுதும் முடிகையில் நான் வெளியேற நிச்சயம் ஒரு துளை கிடைத்துவிடும்.
எத்தனையோ முறை என்னோட கம்பனி மேனேஜருக்கு சொல்லிச் சொல்லிப் பார்த்தேன், என் விசா முடியப் போகுது சீக்கிரம் ரினீவ் பண்ணுயான்னு. என்னைக் காணும்போதுதான் நினைவு வருவது போல அவர் பாவ்லா செஞ்சதுதான் மிச்சம் போல; ஒண்ணும் நடக்கலன்னு இப்பத்தான் தெரியுது. என்ன காரணம்னும் தெரியல. இப்ப நான் வேலை செய்யுற இந்த கம்பனி (அமீரக அரசாங்கத்திற்கு உட்பட்ட வேளாண்மை அலுவலகம்) என்னோட நேரடி கம்பனி கிடையாது.
இந்தியாவிலிருந்து சப்ளை கம்பனிதான் என்னய வேலைக்கு எடுத்து இங்க அனுப்பி வச்சது எல்லாம். வேற இடம் மாதிரி இங்க அத்தனை வேலையெல்லாம் இல்லை. பலதியா (கவர்ன்மெண்ட்) ஆஃபீஸ்ல அப்படி என்ன வேலை இருக்க போவுது.
ஆபிஸ் பாய்னுதான் பேரு... சும்மா டீ, காப்பி போட்டுக் கொடுத்துகிட்டு இருக்க வேண்டியதுதான். யாராவது பெரிய முதிர்மாருவ (அரசு அதிகாரிகள்) வந்தா மட்டும் ஃபைலுகள அதிகமா தூக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் அலையுற வேலையிருக்கும்.
நான் வந்த புதுசுல இங்க இருக்குற யாரும் எங்கிட்ட அவ்வளவா பேசினதில்ல. வேணும்ங்கிறதுக்கு ஃபோனு வரும். அப்புறம் வெளில தெரியிற கட்டாந்தரையை வெறுச்சிப் பார்த்துக்கிட்டு ஊர் ஞாபகத்துல ஒழண்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.
அப்பதான் ஒரு நாள் எனக்கும் அந்த யோசனை வந்திச்சி! சுத்தியிலும் இருக்கும் சிமெண்ட்டு பாதைக்கும் ஆஃபீஸுக்கும் இடையில் செவ்வக செவ்வகமாய் மண்தரை கெடக்கே...! அதுல எதையாவது முளைக்க வச்சா என்னன்னு.
சாம்பிளுக்கு வரும் விதைங்கள்ல கொஞ்சத்தை முதிர்க்கிட்ட கேக்குபோதுதான் முதன்முதலா அந்த மனுசன் கொஞ்சம் சிரிச்சாரு. ஆச்சர்யம் என்னன்னா உடனே விதைங்கள கொடுத்து உற்சாகப்படுத்தி உடனே வேலைய ஆரம்பிக்கச் சொன்னதுதான்.
அந்த ஆனந்தத்தில் பாலைவனத்துல நிக்கிற பனிச்சிலை போல அசைஞ்சிக்கிட்டு இருந்த அவரோட கந்துரா உடுப்புல சுடு காத்து மோதி எம்மேல ஜிலு காத்து வீசிச்சின்னாப் பாத்துக்குங்களேன்!
அவர் தந்ததில் கத்திரி, வெண்டை, மிளகா, பாவக்கா, பூசணி, வெள்ளரின்னு முலாம் பழம் வரை எல்லா விதைங்களுமே இருந்துச்சி. தண்ணிக்குப் பஞ்சமில்லை. மோட்டார் இருக்கு, டூயுபும் இருக்கு. ஆனா இந்த மண்ணுல எதுவும் வளருமா? நல்லா சின்ன மம்பட்டியால மண்தரை வெட்டி வெட்டி மெத்தை மாதிரி மண்ணை உதிரியாக்கி விட்டேன்.
மெத்தை மாதிரி நடக்க நடக்க காலெல்லாம் உள்வாங்குது. ஆஃபீஸ்ல வேலப்பாக்குற அத்தனை பேருக்கும் ஆச்சிரியம்தான். அவங்க எல்லாருமே என்னைய அன்பா பாத்தது எனக்கும் கூட அன்னைக்கு முழுக்க சந்தோசமா இருந்திச்சி. தண்ணியப் பாச்சி முதிர் குடுத்த மக்குன குப்பை உரத்தை கலந்தேன்.
தண்ணியும் குப்பையும் புதுமண்ணுல கலந்து சுகமான சூட்டுல பூமி இழுத்திச்சி. இந்த மண்ணை நம்ம பதத்துக்கு மாத்துறதுக்கே ஒரு வாரம் ஆச்சி. தினமும் சாயங்காலம் வந்து வந்து வெட்டி வெட்டி கலந்து பரப்பி விடுவேன்.
விதைங்கள போட்டு முதல்ல வந்தது இந்த முலாம்பழச்செடிதான். தட்டை தட்டையா அதோட எலையப் பாக்கும்போது தாமர எலையில சோறுகட்டுன ஞாபகம்தான் வரும். அப்புடியே குடை போல கத்திரிச் செடியும் அதைப் பிடிச்சிகிட்டு பாவக்காயும் வர ஆரமிச்சது. அத அதிசயிச்ச ஆளாளாக்கு கண்ணுலேயும் அத்தனை சந்தோசம்!
நாளாக நாளாக முலாம்பழச்செடி கொடியாகி வாட்டையிலேயும் (பாதையிலேயும்) நல்லாப் படற ஆரம்பிச்சது. குண்டு குண்டா கனத்த கண்டங்கத்திரி போல அதோட காயைப் பார்க்கணுமே..! ஊதாச்சாயம் சொட்டிகிட்டு கத்திரிக்காயும், இளஞ்சிவப்புல வெண்டக்காயும் அப்படியே முந்திக்கிட்டு வர ஆரம்பிச்சது.
என்னோட இந்த திடீர் விவசாயப் புரட்சியினால் ஆஃபீஸ்ல எல்லோருக்கும் நானும் திடீர் தோஸ்தாயிப் போனேன்.
இப்பெல்லாம் ஒரு முறைக்கு ரெண்டு முறையா சாயா வாங்கிக் குடிக்கிறாங்க. மேஜையில சின்னதா ஒரு தாளை நகர்த்தி வைக்கனும்னாக் கூட எனக்குதான் 'ஆர்முகம்ம்...!'னு ஆடர் வருது.
இந்த கம்பனிக்கு வர ஒரு மாசம் இருக்கப்பவே என்னோட மேனேஜருக்கு சொன்னேன். ஸார் விசா முடியப் போவுது. சீக்கிரம் பாத்து ரினீவ் பண்ணுங்க சார்ன்னு. மேஜையோட கண்ணாடி மேல் விரல்களால் தாளம் போட்டபடி குனிஞ்சி பாத்துக்கிட்டே 'சரிப்பா'ன்னாரு. அப்போதிக்கு அவர் சொன்ன சொல்லை நம்பி, மேற்கொண்டு எதுவும் பேசாமல் நானும் வந்திட்டேன்.
கத்திரிக்காய், வெண்டைக்காயையெல்லாம் ஓரளவு முத்தின பிறகு. பொதுவா எல்லாருக்கிட்டேயும் வேணும்கிறவங்க பறிச்சிக்கீங்கன்னு சொல்லி வச்சிருந்த நான் முதல்முதலா பழுத்த ரெண்டு முலாம் பழத்த துண்டு துண்டா வேண்டி எல்லோருக்கும் கொடுத்தேன். நன்னாரி டீ நாக்குல பட்ட மாதிரி அத வாங்குறப்ப அப்படியொரு எட்டாத ருசி எல்லாரு முகத்திலேயும்!
கடைசியா நானும் ஒரு துண்ட வாயில எடுத்து வைக்கும்போதுதான் விசா நெனப்பு மறுபடியும் வந்து நுனியில உப்புக் கரிக்க ஆரம்பிச்சது. அன்னைக்கு சாயங்காலமும் மேனேஜருக்கு போனு போட்டேன். அப்பவும் சரிப்பான்னு மட்டும்தான் சொன்னார். எனக்கு சொரத்தே இல்ல. செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச மறுபடியும் கம்பனிக்கு வந்துட்டேன்.
மேலே இருக்கிற கருத்த மேகத்துக்குள்ள கண்ணு போகுது. மழை பேஞ்சாலும் இப்படியே நின்னுகிட்டு நான் தண்ணீர் பாய்ச்சுவேன். நனைஞ்சுக்கிட்டே அழுவணும். நினைக்கும் போதே அழுகை வருது. ஓரிரு முறை இந்த ஆஃபீஸ் முதிர்கிட்டேயும் சொன்னேன். அவர் நிச்சயம் எங்க மேனேஜர்கிட்ட பேசியிருப்பார். ஆனாலும் அப்புறம் அவரும் பிடி கொடுத்து ஏதும் பேசல. நானும் பொறத்தாடியே வழியக்கப் போயி என்னாச்சி ஏதாச்சின்னும் கேக்கல. ஏதோ ஒரு சலிப்புல விட்டுட்டேன்.
நேத்து ராத்திரிதான் ஃபோன் வந்திச்சி நான் வேலைக்குப் போற ஆஃபீசோட பழைய ஆஃபீஸ் பாய் லீவு முடிஞ்சி திரும்ப வந்துட்டானாம். நாளை எனக்கு அங்கே கடைசி டியூட்டியினும், அப்புறம் ஒரு வாரம் கேம்பிலேயே இருந்துவிட்டு விசா கேன்சல் பண்ணின அப்புறம் இந்த நாட்டுலேர்ந்து கிளம்பிறணும்னு மேனேஜர் சொன்னார். நான் கொஞ்சம் நப்பாசை வச்சிருந்தேன், அந்த (அரபி) முதிராவது ஒரு விசா ஏதும் ஏற்பாடு செய்வார்னு. ஹ்ம்ஹூம்!
காலையிலிருந்து நா(ன்) ஒரு நெலையில இல்ல. யாரையும் பாக்க முடியல, பேச முடியல. எதுவுமே புடிக்கல; புரிபடல! வச்சி வளத்த செடிகளப் பாத்தாக்கா பொத்தி காத்த பக்குவமெல்லாம் பட்டுப்போகுது.
இதோ அந்த கடிகாரம் காணாமல் போய் விட்டது! பூஜியத்தை காட்டிப் போய் வா என்கிறது இந்த சில கால அண்டை உலகம்.
கட்டிப்பிடித்தும், கை அசைத்தும் ஒவ்வொருவரையும் கடந்து வருகிறேன்…
கடைசியாக வழிகளைச் சுற்றி இந்த தழைகள் தாங்கிய மலர் வளையம்..! எப்படியாவதுப் பிழைத்துக் கொள்ளுங்கள் என் தாவரங்களே..!
நானும் எப்படியாவது பிழைத்துக் கொள்கிறேன்.
நடக்க நடக்க தரை அதிர்கிறது.
ஏதோ ஒரு பூமியும் அந்த ஊரின் தண்ணியும் போதுமானதாய் இருக்கிறது கொஞ்சம் வாழ்ந்து மடிவதற்கு.
- இத்ரீஸ் யாக்கூப்