ஐடி கம்பெனிக்கு அடிமாடா போயிருக்கலாம். வாத்தியாரா ஆகி வாய்க்கட்டோடு தான் வாழ வேண்டி இருக்கு.
குபேரன் வாசலில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். சனிக்கிழமை சக்கரை பொங்கல் மாதிரி இனித்துக் கொண்டிருக்கிறது. வாரம் முழுக்க மாடு மேய்க்கறது கூட சுலபம். இந்த மனுஷ குட்டிகளை மேய்க்கறது.. புல் திங்கறத விட கொடுமை.
பாரு.. பெரிய மங்காத்தா அஜித் மாதிரி நினைப்பு. எப்பவும் ஹா ஹா ஹான்னு எல்லா பல்லும் தெரியற மாதிரி சிரிச்சிகிட்டே தான் இருப்பானாம். பக்கத்து வீட்டு பவர் ஸ்டார பாத்துட்டு தான் புலம்பறார் நம்ம வாத்தி. அவனுக்கென்ன எப்பவும் செல்போனும் செல்பியும் தான். இந்த சாவு வீட்டுல போயி செத்தவன் கூட செல்பி எடுப்பானே ஒரு கிரகம் புடிச்சவன்... அவனுக்கு ரெப்ரெசென்டடிவ் இவன் தான். ஒன்பதாம் கிளாஸ் ரெண்டு வாட்டி. ஆனாலும் மூஞ்சில ஒரு கவலை கிடையாது. துளி கண்ணியம் கிடையாது.
தலையில் கை வைத்து சாய்ந்து அமர்ந்த வாத்திக்கு.... சக்கர பொங்கலா இனிச்ச சனிக்கிழமை மெல்ல வழக்கம் போல வீதியை வேடிக்கை பார்த்து வேலில போறத எடுத்து மண்டைக்குள்ள விட்டுக் கொண்டிருந்தது.
எதிர் வீட்டு வள்ளிக்கா புள்ள வினிதா.. பத்தாங்கிளாஸ் பதுமை. மூஞ்சில மேக்கப் இல்லாம வெளிய போவாது. அப்டியே போனாலும்... அது நான் இல்ல என் தங்கச்சின்னு கதை விட்டுட்டு வந்திரும். முக்கா காலுக்கு பேண்ட்டு. அது என்ன வினி.. இந்த லெப்ட் கால்ல கருப்பு கயிறுன்னா... ஸ்டைல்ண்ணாம்பா. முதல்ல எல்லாம் பேய் புடிச்சா தான் இப்பிடி கால்ல கைல கயிறு கட்டுவாங்க. இப்ப சும்மாவே கட்டிக்குதுங்க. பள்ளிக்கூடத்துல இன்னும் மோசம். ஸ்டைல்லாம் தாண்டி... அவனவன் சாதிக்கும் சாமிக்கும் வித விதமா கலர் கலரா கட்டிட்டு வர்றான். கேட்டா தனி மனித சுதந்திரம்ங்கறான். அழுத்தி கேட்டா அடிக்க ஆள் கூட்டிட்டு வர்றான். சில இடத்துல அவனே அடிக்கவும் செய்யறான்.
உனக்கென்ன வந்துச்சு.. வேலைக்கு போனமா வந்தமானு இரு. அதெல்லாம் தாண்டி நம்ம இதுனு ஒன்னு இருக்குல்லடா. அதை நம்ம பசங்க காட்ட தான் செய்வாங்க. அது நம்ம பசங்களுக்கே உண்டான கெத்துடா.
சொன்னது வாத்தியோட அண்ணன். புடும்பன். வீட்டுத் தலைவன். புல்லட் தான் பலம் என்று வாதாடுகிறவன்.
இவனுங்களும் படிக்க மாட்டானுங்க. படிச்சவன் சொன்னாலும் கேட்டுக்க மாட்டானுங்க. அறிவா பேசினாலும் அண்ணன பார்த்தா அடங்கி ஒடுங்கிருவாரு வாத்தி.
பக்கத்து வீட்டு பரமானந்தம் பையன் சத்தி... படிக்கறது ஏழாவது தான். ஆனா.. எழவு வாய தொறந்தா இருக்கற கெட்ட வார்த்தைக்கெல்லாம் புது அர்த்தம் சொல்வான். அகராதி ஆப் புணர்ச்சி விதி. சாதி பேர சொல்லி தான் முதல்ல கெட்ட வார்த்தையை ஆரம்பிப்பான். அப்டியே அவன் அப்பன் புத்தி. அதுல அவன் ஆத்தாகாரிக்கு பெருமை வேற. இந்த நடிகர்களுக்கு பாலூத்துவானே.. அதான்.. கட் அவுட்டுக்கு. அதுல முத ஆளா நிக்கறது யாரு. அவன் அண்ணன் தான். அஞ்சாங்கிளாஸ் தாண்டலயே. தம்பிக்கு ஒன்னுன்னா வந்து தாறுமாறு தகராறு செஞ்சுட்டு வீர பரம்பரைடான்னு செவுத்த பார்த்து கத்துவான். பாக்கறவன்லாம் தெறிச்சிருவான்.
அடுத்த வீட்டு புள்ள அநியாயத்துக்கு அடக்கம். எப்பவும் போன்ல தான். சாட்டிங்... டேட்டிங்... கெட் டுகெதர்னு ஆல்வேஸ் பிசி. படிப்பு 11 தான். அப்புறம் ரீல்ஸ்ல தன் சாதிய உயர்த்தி உயர்த்தி புருவத்தை தூக்கி தூக்கி பேசுவா. வீட்டை சுத்தி காட்டுவா. வளக்கற நாயை கொஞ்சி காட்டுவா. நாக்கை துருத்தி சங்க அறுத்துருவேன்பா. ஒரு அடிபட்ட கோமா ஸ்டேஜ் நினைவலைகள் மாதிரி பிட் பிட்டா பேசுவா. 16K பாலோயர்ஸ் இருக்காங்க.
எங்கேயோ ஆரம்பித்த யோசனை அப்படியே அடுத்த கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டது வாத்திக்கு.
அஞ்சாவது ஆறாவது தான் படிக்குதுங்க. சைக்கிள்ல வீலிங் பண்ணுதுங்க. இந்தா முருகப்பன் கைய உடைச்சிகிட்டு கட்டுப்போட்டு உக்கார்ந்திருந்தாலும்.. கோச் வேலை பண்ணிட்டு இருக்கானே. அட குறும்பு இருக்க வேண்டியது தான். அது இத்தனை கொடூரமா இருக்க கூடாதுல. இதுல அப்பன்களுக்கு பெருமை வேற. நேத்து ஒருத்தன்... பின்னால உக்காந்துக்கிட்டான். ஆறாங்கிளாஸ் தான் படிப்பான் அவன் பையன். அவனை டிவிஎஸ் ஓட்ட விட்டு பின்னால உட்கார்ந்து அப்படி ஒரு பெருமை. கருமம். கையில பீடி வேற. சின்ன பையன்கிட்ட வண்டிய குடுத்தா அப்புறம் அவன் தனியா இருக்கும் போது ஓட்ட தான செய்வான். பீடி வாசம் பழகினா குடிச்சு பாக்க தோணும் தான. முறுக்கிட்டா வண்டி ஓட்டிடறதா நினைச்சுக்குதுங்க. நிறுத்த தெரியணும். இங்க கட்டுப்பாடு தான் பிரச்சனை. அதுக்கான அளவும் தெரியல. அதோட ஆழமும் புரியல. எல்லாருமே ஹீரோ மனநிலைல சுத்தினா எப்பிடி. விளங்குமா வாழ்க்கை திரை.
பள்ளிக்கூடத்துல.... ஊருக்குள்ள.... போற எல்லா இடத்திலேயும் தான் பார்க்கிறானே.
இப்பெல்லாம் ஒருத்தனும் பீல் பண்ணவே மாட்டேங்கிறானுங்க. தோல்விக்கு உக்காந்து யோசிக்கறவன் தான் வெற்றிக்கு போராட ஆரம்பிப்பான். இங்க எதிர் வினையே இல்லயே. வெத்து கோபம் மட்டும் மாட்டு கொம்பு மாதிரி முந்திகிட்டு வந்தா விளங்குமா. இந்த சாதிக்காரனை அந்த சாதிக்கார பயலுக்கு புடிக்க மாட்டேங்குது.. அந்த சாதிக்காரங்களை இந்த சாதிக்காரங்களுக்கு புடிக்க மாட்டேங்குது. இந்த தொழில்நுட்பம் எல்லாம் வந்து மறுபடியும் மனுஷங்களை பிரிச்சு தான் வெச்சிருக்கு போல.
என்ன குபேரன்.. நீங்க நம்ம ஆளா இருந்துகிட்டு அவங்களுக்கு சப்போர்ட் பண்றீங்க. கேட்காத மீசை இல்லை.
சாதிக்குள்ள என்ன அடைக்காதீங்கன்னு வாத்தி வீட்லயும் மன்றாடுது. சமூகத்திடமும் மன்றாடுது. எதையுமே புரிஞ்சுக்காம நீங்க உங்க ஆளுங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்கன்னு எட்டாங்க்ளாஸ் பையனோட அப்பா வந்து எகிறிட்டு போனத என்னனு சொல்ல.
தலைக்குள் யோசனை வண்டி வண்டியாக இந்த சிறு பிள்ளைகள் பற்றி தான் ஓடிக் கொண்டிருக்கிறது. சிறு பிள்ளைகளா இவர்கள். கிறுக்கு சல்லைகள். நாளைய இந்தியா இப்படி சினிமா பின்னாடியும் சாதி பின்னாடியும் ஓடுனா விளங்குமா. சினிமாலயா... வர்ற படமெல்லாம் கத்தி குத்து வெட்டு பவுடர் போத ரேப். இந்த சாதிக்காரன் ஒரு படம் எடுத்தா அந்த சாதிக்காரன் வேற ஒரு படம் எடுக்கிறான். விவாதம் தொடர்ந்தா பரவால்லயே. விதண்டாவாதம்ல தொடருது. எப்பிடி விடிவு வரும். சாதி அரசியலுக்கு சின்ன புள்ளைங்க பலி ஆகறத எப்படி பொறுத்துக்க முடியும்.
என்ன வாத்தியாரே... அந்த..... சாதி புள்ள கூட பழக்கமாமே. வேண்டாம். நாமெல்லாம் கண்ணியமா வால்ர கூட்டம். நம்ம ரேஞ்சுக்கு அங்கல்லாம் கை நனைக்காதீங்க.
சொல்லிட்டு போறது பல்லு போயி.. சொல்லும் போன எழுவது வயசு ஆத்தா. இன்னும் எத்தன நாளைக்கு சாதிய தூக்கிட்டே அலைவீங்க. கேட்க கேட்க அவள் போய் விட்டாள். பெருசுங்களே இப்பிடி சாதி பின்னால் ஒளிந்து ஒப்பனை போட்டுக்கிட்டு இருந்தா.. சிறுசுங்க என்ன பண்ணும். ஓப்பனா தான் பண்ணும்.
அடை மழைக்கு ஒதுங்கிய கோழியின் நடுக்கம் மனதுள் வந்து போனது வாத்திக்கு.
வீட்டுக்குள் அண்ணி... சமைத்துக் கொண்டிருக்கிறாள். உள் அறையில் பெரியவன் பிரகாஷ் விஜய் படித்துக் கொண்டிருக்கிறான். பேர் பிரகாஷ் தான். அவன் சேர்த்துக் கொண்டது விஜய்.
ஆனாலும் அவன் கையில் செல்போன். வேகமாய் உள்ளே சென்ற அண்ணி.... செல்போனை பிடுங்கி எறிவது போல பாவித்தாள். உடலில் காளியின் தோரணை. அப்படியெல்லாம் வீசி விட மாட்டாள் என்று அவனுக்கும் தெரியும். பூமிக்கே அச்சாணியாக இருந்தது போல போட்டோவில் பார்த்துக் கொண்டிருக்கும் மாமனாருக்கும் தெரியும்.
சொன்னா புரியாதா உனக்கு. டென்த் இந்த வருஷம். கொஞ்சம் அடக்கிட்டு படி. அப்பன் படிச்சிருந்தாதான புள்ளைக்கு புத்தி இருக்கும். கேடுகெட்ட வீட்டுல வந்து மாட்டிகிட்டு இதுங்களுக்கு வடிச்சு கொட்டியே வீணா போயிருச்சு வால்க்கை.
வெளியே அமர்ந்திருந்த வாத்திக்கு இது வழக்கம் தான். எழுந்து சற்று தள்ளி அமர்ந்து கொண்டான். வேப்ப மர காற்றுக்கு வெற்றிலை போட்ட கிழவி வேஷம்.
வேத நிலாவும் தான் டென்த்... அவுங்க வீட்டுல இப்பிடியா டார்ச்சர் பண்றாங்க.. முனகினான்.. பிகில் பிரகாஷ் விஜய்.
அவ யாரையாவது கட்டிக்கிட்டு போயி மல்லாந்துருவா. நீ அப்பிடியா. குடும்பத்தை காப்பாத்த வேண்டாம். மரியாதையா சொல்றேன்.. ஒழுங்கு மரியாதையா முன்னூறு மார்க் தாண்டிரு. அவ்ளோ தான் சொல்வேன்.
அவனை திட்டிக்கொண்டே கவனித்தவளுக்கு சின்னவன்.. பிரியதர்சன்... கதவோரம் நின்று கிசு கிசுவென போன் பேசிக்கொண்டிருந்தது புலப்பட்டு விட்டது.
பெருசே இங்க பிச்சை எடுக்குதாம்.. இதுல சிருசுக்கு சின்ன வீடு கேக்குதாம். அடி வௌக்குமாத்தால... என்று எகிறியவளை உணர்ந்து விட்ட பிரியதர்சன்... ஓடியே விட்டான்.
சாதி விட்டு சாதில பொம்பள தேடற இத சொல்லணும். போனை குடுக்காதன்னா கேட்டா தான...
ஜாடையாக இல்லை. நேராகவே தான் கத்துகிறாள். வேப்ப மரத்தில் இப்போது வெப்பம் கூடி விட்டது. இன்னும் கொஞ்சம் நகர்ந்து கொண்டான் வாத்தி.
படிக்கறது ஒன்பதாவது. சித்தப்பன்கிட்ட கெஞ்சி கூத்தாடி பெரும் பொழுது அவன் போனை இவன் தான் வெச்சிருப்பான்.
நான்காவது வீட்டு சிவராமன் பையனும் தான் இருக்கான். எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டான். இதுக்கும் சிவராமன் மாதிரி ஒரு குடிகாரனை பாக்கவே முடியாது. வேட்டியோட வீட்டுக்கு வந்த நாள் கம்மி தான். இப்பெல்லாம் போகும் போதே வேட்டிய கழட்டிட்டு தான் விடுவா... சரோஜா. அவன் பொண்டாட்டி. ஆனா அவன் புள்ள மணி மணியா படிப்பான். சாதி பாக்க மாட்டான். எல்லார் கூடவும் சமமா பழகுவான். எப்பிடிடா இப்பிடி இருக்கன்னு பசங்க கேக்கும் போதெல்லாம் சொல்வான். நிறைய படிங்க. சாமி சாதி வெட்டி சுமைன்னு புரிஞ்சிடும்பான். அவனை பாக்கும் போதே ஒரு பளிச் தோற்றம் தான் இருக்கும்.
அப்பன் சரியா இருந்தா புள்ளா சரியா இருக்க மாட்டேங்குது. புள்ள சரியா இருந்தா அப்பன் சரியா இருக்க மாட்டேங்கறான். கிழடுகட்டைங்க... வெத்து கவுரவம் பாத்துகிட்டே மகா ஈகோயிஸ்ட்களா இருக்குதுங்க. வீதிக்கு வீதி சண்டை. ஊருக்கு ஊரு சண்டை. சாதிக்கு சாதி சண்டை. ஒரே சாதிக்குள்ளயும் சண்டை. ஏன் மனுஷங்க இப்படி இருக்காங்க. மூத்த தலைமுறை தலைல முள்ள சுமந்துக்கிட்டு இருக்கு. இப்ப இருக்கற தலைமுறை தலைல செல்ல சுமந்துக்கிட்டு இருக்கு.
வீதி முக்குல இளந்தாரிங்க வரிசையா உக்காந்து இருக்கானுங்க. ஆனா ஒருத்தனும் ஒருத்தன் கூடவும் பேசிக்க மாட்டேங்கிறான். எல்லார் தலையும் குனிஞ்சு தான் இருக்கு. பக்கம் இருக்கறவங்ககிட்ட பேசறத மறந்து தூரத்துல இருக்கறவங்ககிட்ட பேசிட்டே இருக்கறது பேரு வியாதி இல்லாம வேற என்ன. எல்லோரும் தன்னை கவனிக்கனும்னு என்னன்னவோ பண்றாங்களே. ஏன் இப்பிடி கவன ஈர்ப்புக்கு அடிமையானாங்க. பெருசு சிறுசு குழந்தை கிழடுனு எல்லாருமே வீடியோ முன்னால கிறுக்கத்தனம் ஏன் பண்ணுதுங்க. பரிணாமம் ஏன் இப்படி பின்னாடி போக ஆரம்பிச்சது. புருஷன் பொண்டாட்டி வாழ்க்கய அப்படியே லைவா காட்டுதுங்க... ஏன். எங்க போறோம் என்ன பண்றோம் ஏன் பண்றோம்... எப்படி பண்றோம் எல்லாமே வீடியோவா மார்றது ஆபத்து இல்லையா. தனக்கு தானே பேசிக்கிறான். தனக்கு தானே சிரிச்சுக்கறான். தனக்கு தானே சோக பாட்டு பாடிக்கறான். ஏன் அறிவுரை சொல்லிட்டே இருக்கானுங்க.
வாத்திக்கு யோசனை தலையை போட்டு அழுத்தியது. நான் ஏன் இதெல்லாம் யோசிச்சிட்டு இருக்கேன். அத்தி பூத்த மாதிரி சேர்ந்தாப்புல ரெண்டு நாள் லீவு கிடைச்சிருக்கு. ஜாலியா பாட்டு கேட்டுட்டு படம் பார்த்துட்டு இருக்கலாமே. எதற்கு இத்தனை அழுத்தம். காதல் பிரச்சனையை சரி செய்ய யோசிக்கலாம். அதை விட்டு.... இதய ஜன்னலில் எட்டி பார்க்கும் காதலி வேறு... பாடை கட்டாமல் விட மாட்டாள் போலயே. சமூகம் சார்ந்த சிந்தனை உள்ளவனுக்கு உள் குத்துகள் ஏராளம். உள்ள குத்துகளும் தாராளம்.
சிறுசுங்க தப்பு பண்ணினா தட்டி கேட்க வேண்டிய.... தப்புனு சொல்லி திருத்த வேண்டிய பெருசுங்க பண்ணறது இன்னும் கேவலம். பேசுறதெல்லாம் புறணி. பார்க்கறதெல்லாம் வன்மம். நினைக்கறதெலாம் பொறாமை. பக்கத்து வீட்டுக்காரன விட ஒரு படி அதிகம் வெச்சு வீடு கட்டிரனும்ங்கறது தான் வாழ்நாள் லட்சியம்..
இப்பிடி டிவிய சத்தமா வெச்சா எப்படி படிக்கறது...
ஆறாம் வீட்டு ஆர்த்தி கத்திக் கொண்டே வாசல் வந்து திண்ணையில் அமர்ந்து விட்டாள்.
பாருங்க சார்... நாளைக்கு மன்த்லி டெஸ்ட்...எங்கம்மா மத்தியான சீரியல்.... என்ன மங்கயோ மண்டயோ... பாத்தே ஆவனும்னு பேய் புடிச்ச மாதிரி கத்துது. அப்புறம் எப்பிடி படிச்சு... பாஸாகி கலக்டர் ஆகி... தலையில் அடித்துக் கொண்டவளுக்கு ஆறுதல் என்ன சொல்ல. ஓட்டுக்கு காசு... நோம்பிக்கு இனாம்... வாழ்றதுக்கு சீரியல்ன்னு இருக்கற பெண்களை நாட்டின் கண்கள் என்று எப்படி சொல்ல. வாத்திக்கு தலைக்குள் ஆயிரம் ஓடுகிறது. ஆயிரமும் ஓடுகிறது.
யாருக்குமே மரியாதை இல்லை. பேக் ஐடில பச்சை பச்சையா திட்டறானுங்க. வக்கிரம் வகை வகையா தலை விரிச்சு ஆடுது. இதுல தங்கம் போல சில பசங்க புள்ளைங்க இருந்தா அவுங்களை அவுங்க பெத்ததுங்களே இப்பிடி வெச்சு செஞ்சிடுதுங்க. நீ எப்படி வாழணும்னு வாழ்ந்து காட்டுனா தான்.. உன் புள்ள ஒரு வாழ்க்கை பாடத்தை கத்துக்க ஆரம்பிக்கும். நீயே நாக்கை தொங்க போட்டுக்கிட்டு டிவி முன்னால கிடந்தா... அதுங்களும் அப்படி தான் செல்போன் முன்னால பல் இளிச்சிட்டு கிடக்கும். மீன் துண்டை எடுத்து போன் மாதிரி காதுல வைக்குது ரெண்டு வயசு வாண்டு. அதை பார்த்து பெருமை பொங்கும் சிரிப்பு பெத்ததுங்களுக்கு. கருமம். எங்க கொண்டு போயி விட்டிருக்கு பார்த்தீர்களா... பாவிங்களா.
நவீன வளர்ச்சி மனுஷங்களை இப்பிடி குரங்காகிடுச்சே. மனதின் தலையில் அடித்துக் கொண்டான் வாத்தி. மாற்றி யோசித்த எவ்வழியும் மானுட பிசகு தான் முன்னுக்கு போகிறது. உடலின் தலையிலும் அடித்துக் கொண்டான்.
வாத்தியின் பார்வை ஐந்தாம் வீட்டு ஆறுமுகத்தின் பையன் மேல் விழுந்தது. அவன் ஆக்கிரமிப்பு வீதியையே புரட்டும். வாத்தியாரையும் திருப்பி விட்டது. எப்பவும் கண்டெண்ட் தான். ரீல்ஸ் தான். தனியா போன் முன்னால ஆ ஓ ன்னு ஏதாவது அறிவுரை சொல்லிட்டே இருப்பான். இடைல திடீர்ன்னு வலிப்பு வந்தவன் மாதிரி ஆடுவான். இல்லாத மீசையை முறுக்கிட்டே இருப்பான். நடையே ஒரு தினுசா தான் இருக்கும். கையை றெக்கை மாதிரி தூக்கிக்குவான். என்னென்னவோ பேசுவான். சோழன தாத்தாம்பா. பாண்டியனை பங்காளிம்பா. சேரனை சேக்காளிம்பான். பத்தாவது இன்னும் தாண்டல. மூணு அட்டெம்ப்ட். எல்லாத்துக்கும் கருத்து சொல்வான். க்காலிங்கறது அவன் சேனல் பேர். ஆனாலும் ஆறுமுகன் பொண்டாட்டி அதான்.. அவன் அம்மா... என் புள்ள படிக்காத மேதைன்னு பொண்ணு தேடிட்டு இருக்கா. அப்படியே சேனலுக்கு லைக் போடுங்க... சாப்ஸ்கிர்பி பண்ணுங்கனு கெஞ்சிட்டிருக்கா. பெத்த மனம் பித்து இல்லையா. த்தூ...க்காலி.
பள்ளிக்கூட பசங்களே இந்த ரேஞ்சுனா கல்லூரிக்காரனுங்கள சொல்லவே வேண்டாம். ஒரே பைக்ல மூணு நாலு பேர் போறதும்.. ஹேல்மேட் போட மாட்டானுங்க. பைக்ல கண்ணாடி வெச்சுக்க மாட்டானுங்க. ஓவர் ஸ்பீட். ஒழுக்கமா அப்படினானு கேப்பானுங்க. இப்பெல்லாம் ரோட்லயே புள்ளைங்கள கட்டி புடிச்சுகிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டானுங்க. அதுங்களும் கட்டிக்குதுங்க. ஆண் பெண் சமதர்மம் இப்பிடி கேவலப் பட்டுருக்க வேண்டாம்.
வீதி சுற்றிய வாத்திக்கு மூச்சுக்கு காற்று வேண்டும் போல. மீண்டும் வேப்ப மரத்தடியே வந்து சேர்ந்தான். எல்லாமே அனிச்சை தான்.
எல்லா பெத்தவங்களுமே இப்ப இருக்கற பசங்க புள்ளைங்க அய்யயோ மோசம்னு சொல்லுதுங்க. ஆனா தம் புள்ளைங்களை அந்த லிஸ்ட்ல வைக்கறது இல்ல. அப்போ யார் தான் இந்த புல்லிங்கோ...
தலை குழம்பிய வாத்திக்கு பசி.
வீட்டுக்குள் சென்றான். அமர்ந்து சாப்பிடத் தொடங்கினான். பரிமாறிக்கொண்டு எழுந்த அண்ணி வேகமாய் உள்ளே அறைக்குள் பதுங்கிய பிரியதர்சனை தாவி பிடிக்க முனைந்தாள். அவன் சந்தில் குனிந்து ஓடியே விட்டான். ஓட்ட பந்தயத்துல கலந்துகிட்டா நாட்டுக்கே கப் வாங்கிட்டு வரலாம். இப்பிடி வீதிக்குள்ளயும் வீட்டுக்குள்ளயும் ஓடி என்னத்த ஆக போகுது. இந்த வீதிக்குள்ள குறுக்கு சந்துல பைக் ஓட்டி சீன போட்டு வீணா போவானுங்களே. இவனுங்களையெல்லாம் அடிச்சு கொன்னா என்ன. என்ன கொல்றதா. அடிக்க பிரம்ப தூக்கினாவே பள்ளிக்கூடத்துல... போறவன் வாறவன்லாம் வெச்சு செய்வான்.
எண்ணத்தை விட்டு விட்டு எண்ணெய் கத்திரிக்காயை எடுத்து விழுங்கினான் வாத்தி.
காலைல இருந்து குசுகுசுன்னு என்னவோ பேசிட்டே இருக்கான். யார்கிட்ட பேசறான்னு தெரியல. பெரியவன் படிக்கறான்ல.. இவனுக்கு என்ன கேடு. எல்லாம் உங்கொண்ணன சொல்லணும். மீசைய முறுக்கிக்கிட்டு ஊர் வம்புக்கு போயி போயி அதே புத்திதான் அவனுக்கும். அம்மாகாரியின் புலம்பல் சமையலறைக்கும் சாமி அறைக்கும் இடையே சாமியாடிக் கொண்டிருந்தது. ரத்த கொதிப்பு மாத்திரை வேற முடிஞ்சிருச்சு. வாங்கணும்.
பிரியதர்சன வேப்ப மரத்துக்கடியே நின்று உலகத்தையே இவன் தான் கழுவி சுத்தம் செய்கிறவன் மாதிரி கிசுகிசுத்தான். இல்லாத மீசையை முறுக்கிக் கொண்டான். கரண்டிய தலையை கோதிக் கொண்டான். காற்றில் குத்தி குத்தி பேசினான். நாக்கை கடித்துக் கொண்டான். ஒரு முக்கிய சினிமா நட்சத்திரத்தின் உடல்மொழி. இவன் உடலில் பார்க்க சகிக்க வில்லை.
டேய்... பிரியா.... அரை பரிச்சல கணக்குல எட்டு மார்க்காமா என்று கலாய்த்து ஓடிய மேல்வீட்டு மகாலட்சுமியை பார்த்து தன்னை சற்று வளைத்து உடலை கீழ் நோக்கி காட்டி என்னவோ ஜாடை செய்தான்.
கோபம் நெற்றியில் புளியங்கொட்டையை தேய்த்து விட்டது போல... ஒரு குரங்கின் கோஷ்டி மோதல் தலைவனை போல அங்கும் இங்கும் தாவினான்.
சுவாரஷ்யம் அப்படி. பக்கவாட்டு வாசலில் நின்று கண்கள் விரிந்து பார்த்த கண்மணிக்காவுக்கு காக்கா வலிப்பே வந்திருக்கனும். கதவை அடைத்துக் கொண்டு உள்ளே ஓடியே விட்டது. என்ன ஆட்டு ஆட்டறான்... தலையை ஆட்டிக்கொண்டது.
பக்கத்து வீதியில் ஒரு பிளாட் இருக்கிறது. அங்கிருக்கும் மக்களும் தான் வாழ்கிறார்கள். பிள்ளைங்களுக்கு உயிர் இருக்கிறதா என்றே தெரியாத அளவுக்கு அமைதியோடு. ஊரே ஆற்றில் அடித்துக் கொண்டு போனாலும் மொட்டைமாடியில் ஜம்மென்று நின்று நாங்க நல்லா இருக்கோம். பயப்பட வேண்டாம் என்று ஊருக்கு லைவ்- ல் முகம் பார்த்து பேசிக்கொண்டிருப்பார்கள். பள்ளி... டியூசன்.. மியூசிக் வகுப்பு.. நடன வகுப்பு.... லட்சிய கோச்.... படிச்சு நல்ல வேல வாங்கி நல்ல பெண் பார்த்து கட்டி / நல்ல பையன் பார்த்து கட்டி செட்டில் ஆகி விட வேண்டும். ஓட்டு அரசியல்... சாதி அரசியல்... பொருளாதார அரசியல்.. பெட்ரோல் அரசியல்... அரிசி அரசியல் எது பற்றி நமக்கென. பாடம் உண்டு. நாம் உண்டு. வேலை உண்டு. நாம் உண்டு.
உணவு முடிந்த பிறகும் உள்ளே ஓட்டம் பயங்கரமாக இருந்தது வாத்திக்கு.
அவன் கண்கள் நாலா திசைகளிலும் சுழன்றது. பார்க்கும் இடமெங்கும் பள்ளம் போலவே உள்ளே ஒரு அரிப்பு. நல்ல மனிதர்கள் கொஞ்சமாகவும்... நஞ்சான மனிதர்கள் அதிகமாகவும் ஆகி விட்டதாக ஒரு கட்டடம் அவனுள் எழும்பிக் கொண்டே இருந்தது. சிறுசுகள் மித மிஞ்சிய கற்பனைகளில் வாழ்வதாகப் பட்டது. உள்ள உணர்வுகளை விட்டு வெளியேறி ஓர் இயந்திர வாகில் வாழ்வதாக தோன்றியது. பெற்றோர்களின் கவனம் பணம் செய்வதிலும்.. பவுசு செய்வதிலும் தான் இருக்கிறதோ. தங்களின் இயலாமையை பிள்ளைகளின் மேல் திணிக்கும் தொடர் ரேஸ் தோற்று வியாதி போல.. அழிக்கவே முடியாது போல தான். கவன ஈர்ப்பில் கரை தாண்டும் இளைஞர்கள் கட்டற்ற வேகத்தில் இருப்பதை உணராமலா.
பிரியதர்சா... சாமி அறைல என்ன பண்ற... வந்து கொட்டிக்கிட்டு போ...
அம்மாகாரி கத்துவது அவனுக்கு கேட்கவில்லை. அலைபேசியில் மறுமுனையோடு மும்முரமாக பேசிக்கொண்டிருந்தான்.
அப்பிடி என்ன தாண்டா பேசுற... சாமி அறைக்கு எகிறிய அம்மாவின் கைப்பிடியில் இருந்து வழக்கம் போல தப்பித்து ஓடி விட்டான். சொல் பேச்சு துளி கேட்பதில்லை. திருவிழால ரோட்டை மரிச்சிகிட்டு பெரிய மனுஷ தோரணையில இடுப்பை இடுப்பை ஆட்டி நாய் புணர்ற மாதிரி ஆடிட்டு இருப்பானுங்களே.... அவனுங்கள உருக்கி ஒருத்தனா செஞ்சா இவன் கிடைப்பான். அப்படி ஒரு கேடு கெட்டது. அவுங்கம்மாவை என்ன பாடு படுத்தறான். கழுத்தோட நாலு வைக்கணும். வாத்தி சித்தப்பனுக்கு கோபம் பீறிடுகிறது.
எத்தனை விதமான சிறுவர்கள்.... எத்தனை விதமான பெற்றோர்கள். படிக்க ஆசைப்படறவனுக்கு வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குது. வாய்ப்பு கிடைக்கறவன் படிக்க மாட்டேங்கிறான். முன்னெல்லாம் பதின் பருவத்துல கவனச் சிதறல் மட்டும் தான் இருந்துச்சு. இப்ப காண்டு ஏறி கிடக்குது. மிதமிஞ்சிய மூர்க்கம்... தன்னை ஹீரோவா நினைச்சிக்கற கிறுக்கு... அவுங்கள சொல்லி குத்தம் என்ன. சமூகமே அப்பிடிதான இருக்கு. இப்ப யாருக்குமே கை தட்ட மனசு வர்றது இல்லயே. எல்லாரும் மேடை ஏறணும்னு ஆகிருச்சு. லைக்குக்கும் ஷேர்க்கும்... சேருக்குள்ள குத்திக்கறான். கிணத்துக்குள்ள குதிக்கிறான். இந்த பில்டிங்க்லருந்து அந்த பில்டிங்க்கு தாவறான். தண்டவாளத்துல ஸ்லோ மோஷன்ல நடக்கிறான். தலைகீழா குதிக்கறான். புத்தி ஒரு நிலைல இல்ல. பண்றதே கிறுக்குத்தனம். இதுல பெரிய மனுஷ பகுமானம் வேற. நான் பெரியவன்ங்கற எண்ணம் தன்னை சிறுசாக்கிடும்னு எப்ப தெரியும். ஆர்வம் தப்பில்ல. ஆர்வ கோளாறு அபாயம். அதை முறைப்படுத்தனும் இல்லையா. அதுல தான் கோமாளித்தனம் நடக்குது. இதுல நான் நீன்னு ஏற்ற தாழ்வு வேற. ஆண்ட பரம்பரை அவிஞ்ச பரம்பரைன்னு மனுஷ பரம்பரை பத்தின எந்த அறிவும் இல்லாம பிஞ்சுலயே பழுத்தர்றான். பின்னூட்டத்துல... எடுத்ததுமே அம்மா பத்தின வசை சொற்கள் தான். அதுல சாதிய சேத்துக்கறது மகா இயல்பு. வழி காட்ட வேண்டிய பெருசுங்க டிவி முன்னால உக்கார்ந்துருங்க. போன கட்டிகிட்டே ஒதுங்கிடுதுங்க. வழி காட்ட வேண்டியவன் ஒதுங்கிட்டா... வழி தெரியாதவன் தப்பா தான் போவான். பள்ளிக்கூடங்கள்ல பெரும்பாலும் பசங்க வாத்திகளை மதிக்கறதே இல்ல. பொதுவாவே பெரியவர்களை பொடியன்கள் மதிப்பது இல்லை. நீ யாரு அதை கேக்க என்று எகிறும் இளம் ஜிறார்கள் நிறைந்த நல்ல நாடு நம் நாடு.
நினைத்தாலே நெஞ்செரியும் இளைய தலைமுறைகள் வாத்தியை கொந்தளிக்க செய்து கொண்டிருந்தது.
இரவு வழக்கம் போல இருட்டிக் கொண்டு வந்து விட்டது. யோசனை தீரவில்லை. சொல்லி பேச யாருமில்லை. வாத்திக்கு கல்யாணம் ஆகி இருந்தா இந்நேரம் புள்ளைக்கு பாடம் சொல்லி குடுத்துட்டு இருந்திருப்பான். போதாத காலம். சாதி குறுக்கீடு. காதல் காத்துக் கொண்டிருக்கிறது. சாதிகள் இல்லையடி பாப்பா தினமும் தான் சொல்கிறான். யாரை யார் ஏமாற்றிக் கொள்வது. இதில் சம்பள பிரச்சனை வேறு படுத்தி எடுக்கிறது. யாரும் யார் பேச்சையும் கேட்பதில்லை. ஆனால் பேச்சு மட்டும் நிற்பதில்லை. படிக்க வேண்டிய புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான். தேவை இல்லாமல் அலைபேசியிடம் தன்னை அடகு வைப்பதில்லை வாத்தி.
வேகமாய் தலை இல்லாத முண்டம் போல ஓடி வந்த ரவி... நெஞ்சை பிடித்துக் கொண்டு வாத்தி ஜன்னல் சுவரோரம் சரிந்து ஆ ஆ ஆ ஓ என்று உளறினான்.
என்ன சத்தம் என்று எட்டி பார்த்தபடியே அப்படியே வெளியேறிய வாத்தி முகத்தில் சட்டென ஏறிக்கொண்ட தடுமாற்றம்.
என்னாச்சு... ஏன் இப்பிடி ஓடி வர்ற... என்ன.... என்ன ரவி....என்று தடுமாறி அவனை பிடித்து உலுக்க... அதற்குள் வீட்டுக்குள் இருந்து என்ன ஏதென்று அண்ணியும் வந்து விட... பக்கத்து வீடு... எதிர் வீடு என்று வீதியே நொடிகளில் கூடி விட்டது.
அதற்குள் ரவியும் சொல்ல வந்ததை சொல்லி விட்டான். ஒன்றும் விளங்க வில்லை. மூச்சு படபடக்கிறது. உடல் நடுங்கி தூக்கி போடுகிறது.
என்னாச்சுடா.. என்ன தான் ஆச்சு... உலுக்கி சுவரோரம் சாய்த்து தண்ணீரை முகத்தில் அடிக்க....
பிரியதர்ஸன் பிரேம்... இன்னும் நாலைந்து பேர்கள் சொன்னான்.
சரி... என்ன..
எல்லாரும் சேர்ந்து எல்லாரும் சேர்ந்து...
சொல்லி தொலைடா... டேய் ரவி.... வாத்தி கத்தி விட்டான்.
பக்கத்து வீதில வீடு பூந்து கூட படிக்கற ஒரு பையன வெட்டிட்டானுங்க... தடுக்க வந்த அந்த பையனோட தங்கச்சியும்...
அதற்கு மேல அந்த தாய்க்கு அங்கே நிற்க முடியவில்லை.
ஐயையோ... தலைல கல்ல தூக்கி போட்டுட்டானே... இந்த தறுதலை நாள்லாம் ஒளிஞ்சு ஒளிஞ்சு என்னத்தையோ யார் கூடயோ பேசிட்டுருந்தானே.... அப்பவே எனக்கு தப்பா பட்டுச்சு...
கத்திகொண்டே வாசலில் ஓட ஓட அதே நேரம் புல்லட்டில் முறுக்கிக் கொண்டு புருஷன்காரன் எதிர்ப் பட... எல்லாம் உன்ன சொல்லணும் என்று எகிறி ரெண்டு மூணு அறை விட்டாள். புல்லட் தடுமாறி சரிந்து விட்டது. அதற்குள் வாத்தி ஓடி வந்து தடுக்க ஊரே பரபரப்பானது. தட்டு தடுமாறி மீசையில் மண் ஒட்டலயே என்பது போல எழுந்து மீசையை முறுக்கிக் கொண்டே கம்பீர நடை நடந்த புடும்பனுக்கு பையன் பண்ணின காரியம் பெருமையா... சிறுமையா. யாருக்கும் புரிய முடியவில்லை. ஆனால் கம்பீர நடையில் சற்று ஏற்றம் கூடி இருந்ததாக தான் ரெண்டாம் வீட்டு கண்ணப்பனுக்கு தோன்றியது.
நம்ம பசங்ககிட்ட வெச்சிகிட்டா இப்பிடி தான். புல்லட் புடும்பன் பையனா கொக்கா.... ஒரு பெருசு இருமிக் கொண்டே இழுத்தது.
யோவ் அறிவு கெட்ட கூமுட்டை.... மூடு.. என்ற வாத்தி வேகமாய் அடுத்த வீதியை நோக்கி ஓடினான்.
ஆளாளுக்கு கருத்து... ஆதரவாக நிறைய.. அச்சோ பாவம்னு கொஞ்சம். ஒன்னும் சொல்லாம கொஞ்சம். வெறிக்க வேடிக்கை பாக்க கொஞ்சம். ஊர் எப்போதும் போல தன் வேலையை செய்து கொண்டிருந்தது.
வீட்டுக்குள் பெரியவன் பிரகாஷ் விஜய்க்கு... அப்பாடா நிம்மதி என்பது போல சாமி அறை தட்டில் கிடந்த அலைபேசியை எடுத்து வேக வேகமாய் வாட்சப் விரித்தான். காலைலருந்து பார்க்க முடியாத துக்கம்... இப்போது நிம்மதியாய் பூத்தது.
அதே நேரம் நாளைக்கு மன்த்லி டெஸ்ட்க்கு மனம் இலகுவாக வீட்டுக்குள் சென்று அமர்ந்து படிக்கத் தொடங்கினாள் ஆர்த்தி.
- கவிஜி