சூர்யோதயத்துக்குச் சொந்தமான கடல் நகரத்திலிருந்து எம்பிப் பறக்கும் விமானம் மேகப் பொதிக்குள் நுழைந்து அலைந்து மிதந்து.... உயர்மலை... பசியக் கணவாய்கள் தாண்டி நீராலான நீலப் படுதாவுக்கு மேல் பறந்து கொண்டிருக்கிறது. மேகமற்ற வெளியில் அதிர்வூட்டும்படி தள்ளாட அலறுகின்ற பயணிகளின் கூக்குரலில் மொழிகளின் குப்பை “பயம் வேண்டாம் : நானுண்டு” நம்பிக்கை விதைக்கும் விமானியின் சொல் உயிர்ப் பயத்தில் கடவுளின் கால்களை நக்கத் தொடங்கினார் : கடவுளை நம்பாதவன் எதனிடம் முறையிடலாமென யோசிக்கும் தருணம் தள்ளுவண்டியில் குளிர் பானங்களோடு வெப்பமேற்றும் மது. பானங்கள் உட்புக பயம் வெளியேற சமுத்திரத்தின் ராட்சச கரமொன்று நீள கறுப்புப் பெட்டிக்காக காத்திருக்கிறான் அஸ்தமனச் சூரியன் |
01.
இந்நேரம் கிளம்பியிருப்பார்களா.....
- ம்ம்... நேரமாயிற்றே....! இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும்.
- ஆமாம்.. ஆமாம்! சரியாக இருக்கும்!
- இந்த வாக்கியத்தை தாங்கள் கூறும்போது உங்கள் முகத்தில் குறும்புன்னகை மிளிர்கிறது கனவானே! நமுட்டுச்சிரிப்புடன் ஓர் ஆங்கிலத் துண்டு.
உயர் ரக சிகரெட்டுகள், சிகார் புகையால் சூழப்பட்ட அறை... பதனக் குளிர் இருந்தாலும் லேசான வெப்பத்தை உடல் வேண்டியது. அதனால் அங்கீகரிக்கப்பட்டது.
அது ஒரு நாசகார கும்பல் வேஷப் பணிகளின் தலைமையகம்! கடும் ரகசியங்களின் காப்பகம் ; அரசியல் சதிகள் : ஆலோசனைகளின் ரகசிய ராஜாங்கம் : இங்கு படைகள் உருட்ட எங்கோ எவர் தலைக்கோ ஆபத்து நிகழும்... பரமபதத்தில் தணிகள் ஏற்றும் : நாகங்கள் கொத்தி கீழிறக்கும்.
“எப்படி நிகழப்போகிறது..?”
”கவலை வேண்டாம்..திறமையாக திட்டமிடப்பட்டுள்ளது…காரியம் செவ்வனே முடியும்.”
“இந்த சஸ்பென்ஸ் தான்..நம்ம தலயின் ஸ்பெஷாலிட்டி..ம்ம் அசத்துங்க..”
02
அந்த எந்திரத் தும்பி புறப்படத் தயாராய் இருந்தது. ‘கட கட கட கட’ வென்ற பேரிரைச்சலோடு விசிறிகள் சுழலத் தொடங்கின.
துணை விமானி தும்பியின் கருவிகளை கட்டுப்பாட்டு அறைக்கானத் தொடர்புகளைத் பரிசோதித்துக் கொண்டிருந்தார். எரிபொருள் கோடு பூரணமாய் ஒளிர்ந்தது.
தலைமை விமானி மெதுவாக நடந்து வந்தார்.....
வட்டத்துக்குள் நின்று சத்தத்தை தந்து கொண்டிருக்கும் எந்திரத் தும்பியை நெருங்கினார்.
எல்லாம் சரியாக இருக்கிறதா......? இரைந்த குரலில் வினவினார்
துணை விமானியோ கட்டைவிரலை உயர்த்தி ‘யாவும் சரியே’ சமிக்ஞை செய்தார்.
- அவர்கள் இன்னமும் வரவில்லையா.
- வந்து கொண்டிருக்கிறார்கள்... கிளம்பி வருகிறார்கள்.
அது ஒரு தனியார் நிறுவனம் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடுவது அவர்கள் தொழில். குறிப்பாக தேர்தல் காலங்களில் இந்நிறுவனத்துக்கு ஏகப்பட்ட கிராக்கி.. வெகு முக்கியப் பிரமுகர்கள் வானவீதியில் பிறந்து பறந்து வாக்கு சேகரிக்க எந்திரத்தும்பிகளேத் துணை! மேலும் இதுகாறும் சேர்த்து வைத்த கறுப்புபணத்தை விநியோகிக்க எளிதான ராஜதந்திரம்.
இப்போது தேர்தல் காலம்! காவிரி பாயும் கன்னட தேசத்தில் தேர்தல் காலம்!
தேசியக் கட்சியொன்றின் அதி முக்கியஸ்தர்கள்... சட்டமன்ற வேட்பாளர்கள் உடுப்பி, மங்களூர், சிக்மகளூர், ஹாசன் மற்றும் மைசூர் வரை பறந்து வாக்குகளை சேகரிக்கும் முஸ்தீபு கூடவே ‘காபிடேஸ்ட்’ முதலாளியும் அவர் ‘காபி டேஸ்ட்’ க்கு மட்டும் முதலாளி அல்லவே அரசியல் சேவைகளுக்கு அவரும் 5 எம்எல்ஏக்களாவது வேண்டாமா...?
அந்த ஐவரின் பெயரும் இப்போது அநாவசியம் ; ஏனென்றால் எந்திரத் தும்பி இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் ; சிதறும் ...
எங்கு எப்போது என்பதைல்லாம் தும்பிக்கு காப்பீட்டு உத்தரவாதம் உண்டு ; மற்றவர்களுக்கு....?
அட அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.....! மேலும் கதைக்கு காலுண்டா.... கையுண்டா.....?
03
சிகமகளூர் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கடைசி நிமிட வீடியோ உண்மை தானா....? என்று தடயவியல் சோதனைக்கு அனுப்பிய கர்நாடக காவல்துறை அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
சிக்மகளூர் ஜில்லா, முடிகரே வனப்பகுதியில் கடந்த மாதம் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இவ்விடத்தில் ஹெலிகாப்டர் விமானத்தில் பயணம் செய்த தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரும் மக்களை வேட்பாளர் மூவரும் தேர்தல் பிரச்சாரத்துக்காக பயணித்தது வாசகர் அறிந்ததே.
இது குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட காவல்துறை உயர்மட்டக் குழுவின் தலைவர் ராம்கிஷன் கவுடா, விபத்து நடந்த இடம் மற்றும் விபத்து நடப்பதற்கு முன் வீடியோ எடுத்த காபி எஸ்டேட் பகுதி, ஹெலிகாப்டர் வான் வழியாக பறந்த நில வழிப்பாதை உள்ளிட்ட இடங்களில் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் விபத்து நடந்த போது மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள், பொதுமக்கள் போன்றவர்களை உள்ளூர் வருவாய்த் துறையினரும், காவல் மற்றும் தீயணைப்புத் துறையினரும் தனித்தனியாக விசாரித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
அத்துடன் சம்பவ இடத்தில் தீயில் கருகி கிடந்தவர்கள் எந்த நிலையில் இருந்தனர்? அவர்கள் உயிருக்கு பேராடினார்களா? யாரையாவது இறுதி நேரத்தில் தொடர்பு கொண்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், விபத்துக்கானக் காரணங்கள் மற்றும் நேரில் விபத்தைப் பாரத்தவர்களிடம் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
04
விபத்து நடந்த போது இருந்த வானிலை நிலவரம் கேட்டு கடிதம் சிக்மகளூர் மாவட்ட காவல்துறை சார்பில் பங்களூர் வானிலை ஆய்வு மையத்துக்கு அதில் சில நாட்களுக்கு முன் ஹெலிகாப்டர் விமான விபத்து நடந்த போது அந்தப் பகுதியில் நிலவிய வானிலை நிலவரம், பனி மூட்டத்தின் தன்மை ஆகியவை விசாரணைக்கு தேவைப்படுவதால் அந்த நிலவரத்தை வழங்க வேண்டும். என்று குறிப்பீட்டு உள்ளதாக காவல் துறை உயர் அலுவலர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் |
05
தேடுதல் வேட்டை:
ஹெலிகாப்டர் விமான விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகே உள்ள வனப்பகுதி மற்றும் காபி நோட்டப் பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருந்ததா....? என்பது குறித்தும் சிறப்பு அதிரடிப் படையினர் தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிக்மனலூர் அருகே தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணத்தை கண்டறியும் ஆய்வு அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹெலிகாப்டரின் பாதையில் மேகக் கூட்டங்கள் வந்ததால் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மேகக் கூட்டங்களில் நுழைந்த பிறகு வான்பாதை தவறி, விபத்து நிகழ்ந்திருக்கலாமென பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் புலனாய்வுக் குழுவின் முதல்கட்ட வரைவு அறிக்கையில் விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
புலனாய்வுக் குழுவின் உயர்மட்டக் குழுத் தலைவர் தலைமையில் ஹெலிகாப்டரில் தொழில் நட்ப கோளாறு ஏற்பட்டிருக்மோ, அல்லது ஹெலிகாப்டர் மேகமூட்டம் சூழ்ந்ததால் வழி தவறியதா போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி உள்ளது.
ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவர் கூட உயிரிப் பிழைக்கவில்லை என்பதால், கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்த துல்லியமான விவரங்கள் கிடைக்காததும் விசாரணைக்கு சவாலாக இருந்தது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியில் உள்ள விவரங்கள், ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் அளிக்கும் தகவல்கள், சம்பவ இடத்தில் கிடைத்துள்ள தடயங்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் விவரத்தொகுப்பின் அடிப்படையில் விசாரணை அமையும் என வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
06
5 தொகுதிகளின் தேர்தல் நிறுத்தம் : தேதி பின்னர் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு. சமீபத்தில் சிக்மகளூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விமாமன விபத்தில் தேசியக் கடிதத்தின் 5 வேட்பாளர்கள் காலமானது வாசகர் அறிந்ததே! உடுப்பி, மங்களூர், ஹாசன், சிக்மகளூர், மைசூர் ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் நிறுத்தம். வாக்குப்பதிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் |
07
காபிவனமொன்றுள் இருந்த தங்கும் விடுதியில் தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் கூட்டம்!
ரோபஸ்டா மலர்கள் பூக்கத் தொடங்கிவிட்டன..கமுகோடு காதல் சொல்லி இழைந்துப் பிணைந்த குறுமிளகுச் சரங்களில் பச்சை முத்துக்கள்
வேலியோரப் பலாக்கனி நாடிவரும்வேழங்கள்..தவறியும் மிதிப்பதில்லை நெளிந்து மறையும் நாகங்களை…மேயவரும் கிராம விலங்குகள் அனைத்தையும்..கொல்வதில்லை பசி கொண்ட சிறுத்தையோ புலியோ..
உலகளந்தான் உருவாய் ஓங்கி வளர்ந்த ‘ஓக்’ மரங்களின் உச்சியில் தேனடைச் சுவைத்து பாட்டுப் பட்டிமண்டபம் நடத்தும் வனப்புள் குழு..பழுப்புநிற காஃபிப்பழங்களின் வாசம் தூக்கல்தானெனச் சான்றளிக்கும் பழந்தின்னி வவ்வால் கூட்டம்
மென்மேகம் தவழ்ந்து விளையாடும் தூரத்து தொடர்ச்சி மலைக்கு யாரும்
தீ வைக்காத வரை..குளுமையும் அழகுமாய்க் குடகு
காபிப் பூக்களின் சுகந்தம் சுவைத்தபடி சாவகாசமாய் தூங்கும் நாய்க்குட்டி
கரும்புகை கக்கியபடி வேக வாகன கூட்டம்
ம்..ம்..
காபி எஸ்டேட்க்குள் ஒளிந்திருக்கும் ரிசார்ட் ஒன்றின் அதி நவீன முற்றம் வெண்ணிற ஆடைகளால் ..தொண்டர்களால் வேலையாட்களால் நிரம்பியிருந்தது.
தொண்டைக் செருமியபடி ஒலித்தது முதல் குரல்.
அந்த ஐவரும் நமது கட்சிக்கு ஆற்றிய பணிகள் . ஏராளம்! : சேர்த்துக் கொடுத்த நன்கொடைகளோ ஏராளம். ஏராளம்! இப்போது நமது கழகத்துக்கு ஐவரும் பேரிழப்பு தான் என்றாலும் அடுத்து வரப் போகும் தேர்தல் முக்கியம்… தேர்தல் தேதிக்கு முன் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்க வேண்டும் ..அது ரொம்ப முக்கியம்..ஜெயிக்கிர குதிரைகளைத் தேர்ந்தெடுக்கணும்…அது ரொம்ப ரொம்ப முக்கியம்..புரியுதா..அதற்காகவே இந்தகூட்டம்!
”தலைவரே நீங்க சொல்றது ரொம்ப சரி..... ”ஓங்கி ஒலித்தது ஒரு ஜால்ரா.
”உங்களுடைய கருத்துகளையும் ஆலோசனைகளையும் சொல்லுங்கப்பா....
பொறவு.... நான் சொன்னன்... தலைவர் கேட்கலன்னு யாரும் சொல்லிடப்பட்டது. என்ன நான் சொல்றது....”
”தலைவரே ஒங்களுக்கு தெரியாததா... வழக்கம் போலத்தான்.. இந்த தடவையும்.”
”அதாவது...”
”ஆமாம் தலைவரே... வழக்கமா நம்ம கட்சி ஜெயிக்கறதுக்கு என்ன பண்ணுமோ அதேதான்.”
”அப்போ இறந்து போனவங்க குடும்பத்துல இருந்து வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கணுமா.. அவங்க குடும்பத்துல ஒத்துக்குறாங்களா...”
”வேற வழி... சேர்த்து வச்சிருக்க சொத்தையெல்லாம் காப்பாத்தணுமே.”
”அப்போ ஹாசன்ல...ஷெட்டியோட மகன்
செத்துப்போனவரோட ராய் சம்சாரம் மங்களூர்ல
மைசூர்ல..பாயோட மகள நிறுத்திடுவோம்.
சிக்மகளூர்ல... போய் சேர்ந்தவரோட கவுடாவோட சின்ன வீடு... அதான் அந்த டிவி நடிகை
உடுப்பி தான் கொஞ்சம் டைட்டு...ம்ம்ம்
கடலோரத்துல மீனவர் சமுதாயம்… ஊருக்குள்ள சாமியர் மடம். அதுக்கேத்தாப்புல.. ஒருத்தர நிக்க வைக்கனும்.”
”ஏம்ப்பா...எவனாவது நடிகன் கிடைக்க மாட்டானா... உடுப்பி சைடுல இருந்து நடிக்க வந்தவன் இருப்பானே... எவனாவது...”
”என்னாத் தலவரே இப்டி கேட்டுபுட்டீங்க,… தலைவரே.. இப்போ பிரபலமா இருக்கிற ஷங்கர் ஷெட்டி... உடுப்பி ஏரியாதான். அவரும் ரொம்ப நாளா நம்ப கட்சியில முக்கிய பொறுப்பு கேட்டு கிட்டு இருக்காரு நமக்கும் கட்சிக்கும் செய்ய வேண்டிய சிறப்பு செஞ்சிடுவாரு.”
”சர்தான்... ஏம்ப்பா.. பொதுச் செயலாளர் சொன்னது ஒக்கேவா எல்லாருக்கும்.”
”ஓக்கே தலைவரே... அவர் சொன்ன மாதிரியே ஆளுங்கள நிக்க வைச்சிடுவோம் ஜெயிக்கனும்... அதான் முக்கியம்.”
”முட்டாள்... முட்டாள் எம்.எல்.ஏ. ஜெயிக்கிறது பெர்சில்ல.. அதிலிருந்து ராஜ்யசபா எம்பி வேணும்... சென்ட்ரல்ல நமக்கு பலம் கூடணும் புரிஞ்சுதா..”
”புரியது தலைவரே.. அதனால தான் நீங்க ராஜதந்திரி...நாங்க வெறும் மந்திரி…”
”வேறெண்ணப்பா கூட்டம் முடிஞ்சுடுதுன்னா..மேட்டர ஆரம்பிக்கலாமா...”
”தலைவர் பேச்சுக்கு மறு பேச்சு உண்டா..உத்தரவு தலைவரே....”
08
ஹெலிகாப்டர் விபத்து: வீடியோ உண்மை தானா.....?
மக்களவை தேர்தல் பரப்புரைக்காக பெங்களூரில் இருந்து கடந்த தேசியக் கட்சியின் தலைவர்களையும் ‘காஃபி டேஸ்ட்’ உரிமையாளர் மதுசூதன ராஜ் உட்பட தொழிலதிபர்களையும் ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விமானம் சிம்மகளூர் அருகே முடிகரே வனப் பகுதியில் விபத்துக்குள்ளானது வாசகர் அறிந்ததே.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன்பு வந்த ஹெலிகாப்டரை வீடியோ எடுத்த நபரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதில் பதிவாகி இருக்கும் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது. அதில் இருக்கும் தகவல்கள் என்னென்ன? அவை உண்மைதானா? என்பதைக் கண்டறிய அந்த செல்போன் பெங்களூரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், விபத்து நடந்த முடிகரே பகுதியில் உயர் மட்டக் கம்பிகள் மற்றும் உயர்மின்னழுத்த மின் கம்பங்கள் இருக்கிறதா? மற்றும் செல்போன் கம்பெனிகளின் கோபுரங்கள் உள்ளனவா? அப்படி இருந்தால் அவை சேதம் அடைந்துள்ளதா? என்பதைக் கண்டறிய வேண்டும் என மாவட்ட மின்துறை அதிகாரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
“அந்த ஹெலிகாப்டர் பாதுகாப்பானது தானா என்று கேட்கிறார்கள்...? இரண்டு இன்ஜின்கள், ரேடார் வசதி மற்றும் சென்சார் வசதி உண்டு அதாவது வானத்தில் பறக்கும் போது வித்தியாசமாக ஏதாவது தென்பட்டால், உள்ளே. விமானிக்கு எச்சரிக்கை செய்யும். எரிபொருள் டாங்க்கைச் சுற்றிலும் ஒருவித பாதுகாப்பு முறை இருப்பதால் எளிதில் தீப்பிடிக்காது. நமது நட்பு நாட்டிலிருந்து வாங்கப்பட்டது என்பதனால் அந்நாட்டினரும் விசாரணையில் இறங்க வாய்ப்புண்டு”
மேலும் அன்றைய நாளில் விமானம் பறந்த வான்வழி இயல்பானதாக இல்லை.
உயர் அழுத்த கோபுரத்தின் கம்பிகளில் மோதி விமானம் தீப்பற்றி இருக்க வாய்ப்புண்டு. அதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மலைமுகடுகளில் மோதி அடர்வனத்தினூடே வீழ்ந்திருக்கவும் வாய்ப்புண்டு.
அப்படியாயின் மோசமான வானிலையே ஹெலிகாப்டர் விமான விபத்துக்கு காரணம் என அறிக்கை தயாராகட்டும்.
உத்தரவு ..... அய்யா.... இன்று மாலை அறிக்கை வெளியாகும்.
.09
சிக்மகளூர் ஹெலிகாப்டர் விபத்து ; முழு விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே முக்கியக் காரணம், ஹெலிகாப்டரில் எவ்வித தொழில் நுட்ப கோளாறும் ஏற்படவில்லை என விசாரணையில் தகவல் வெளியானது, மேலதிக்க விவரங்கள் விரைவில் வெளியிடப்படுமென உயர் மட்டக்குழு அறிவித்தது.ஹெலிகாப்டர் விபத்து குறித்த முழு விசாரணை அடங்கிய 14256 பக்க அறிக்கை பாராளுமன்ர இரு அவையிலும் சமர்ப்பிக்கப் படுமென்றும் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் உறுதிப் படுத்தினார், |
- அன்பாதவன்