மெகருக்கு வேறு வழி தெரியவில்லை. வேலை போன மூத்தவன், காலேஜ் வரை படிச்சும் வேலைக் கிடைக்காத சின்னவன்... இருந்த நகையெல்லாம் குடும்பச் செலவுகளுக்காக ஒவ்வொன்றாய் பல மாதங்களாய் அடமானத்தில்... இதோ யாருமே எதிர்பார்க்காமல் கடைசிப் பிள்ளையான அவள் மகள் மரியத்திற்கு மாப்பிள்ளை அமைந்து விட்டது!
காசை வைத்துக் கொண்டா எல்லோரும் மாப்பிள்ளை தேடுகிறார்கள்? ஆனால் அவர்கள் அப்படி தேடவில்லை என்றாலும் ஒரு நல்ல இடத்தில் சம்பந்தம் ஒரே பேச்சு வார்த்தையிலேயே கைக் கூடி வந்திருக்கிறது.
பேங்க் படிப்பு (பி.காம்) படித்துவிட்டு பையன் துபாயில் கைநிறைய சம்பாரிக்கிறானாம்! அந்த நினைப்பே கையில் ஒரு பைசா காசில்லை என்றாலும் மெகரை மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக ஆலாய் அங்குமிங்கும் சில நாட்களாகவே திரிய வைத்துக் கொண்டிருந்தது.
கணவனும் இல்லாத ஒற்றைத் தாயாக எல்லாவற்றிற்கும், அதுவும் மூத்தவனுக்கு வேலை போன கடந்த ஓரிரு வருடங்களாக பெரிதும் அல்லாடி வருகிறாள். இணை, துணை என்று ஒத்தாசைக்கு நிற்க உடன்பிறப்புகள் என்று அவளுக்கு யாருமில்லை. கணவன் தரப்பு உறவுகளும் என்றோ மௌனமாய் ஒதுங்கி விட்டன.
அதனால் கல்யாணச் செலவுகளுக்கு உதவி கேட்டு (கடனாகத்தான்) அந்த செல்வச் சீமாட்டி வீட்டிற்குச் சென்றாள். அந்த சம்பந்தம் வரும் வரை உதவிக்கென அவள் எங்கேயும் அப்படி படியேறினதில்லை. கட்டியவனுக்குப் பிறகு முடியுதோ இல்லையோ தன் சக்திக்கும் புத்திக்கும் உட்பட்டு மூத்தவன் எல்லாவற்றையும் முடிந்த வரை பார்த்துக் கொண்டு வந்தான்.
அவள் இப்படி அங்கே செல்லவிருந்ததும் அவனுக்குத் தெரியாதுதான். என்ன செய்ய ஒருத்தனாக அவனும் எதெதுக்குதான் போராடுவான்? தன்னால் எதுவும் செய்ய முடியுமா என்ற முயற்சிகளில்தான் கடைசியாக அந்த வீட்டின் கதவைத் தட்டிப் பார்த்தாள்.
அந்த வீட்டை எத்தனையோ முறை கடந்து சென்றிருப்பாள்தான்... உள்ளேயும் கூட சென்று சில நேரங்களில் புழங்கியுமிருக்கிறாள். ஆனால் ஆளுயரக் கண்ணாடியை சுவற்றில் செங்குத்தாய் சற்று சாய்த்து வைத்துப் பார்த்தால் நமது உருவமே நம்மை பயம் காட்டுவது போல பிரம்மாண்டமாய் ஓங்கி நிற்குமே... அப்படி அன்று அவளை முதல் முறையாக திகைக்க வைத்தது அந்த மாளிகை வீடு தெருவில் எழுந்து நின்ற கம்பீரத் தோற்றம். இருந்தாலும் கதை ஆரம்பித்ததைப் போல மெகருக்கு வேறு வழி தெரியவில்லை, உள்ளே சென்றுதான் ஆக வேண்டும்!
படியேறியவளை தலைவாசல் பந்தலிலேயே குரலுயர்த்தி நிறுத்தினாள், அந்த வசதிக்காரி... அந்த வீட்டின் எஜமானி அவளுடைய ஒன்றுவிட்ட அக்கா ரகுமத்து! மகளுக்கு மாப்பிள்ளை பேசிய விஷயத்தில் அவளைக் கலந்து கொள்ளவில்லையாம், அதனால் கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையாக அது ஆணவத்தின் வெளிப்பாடென வாய்விட்டு குமைந்து கொள்ள எளியவீட்டு தங்கையான மெகருக்கு உரிமையில்லை!
மேலும் அந்த சம்பந்தம் ரகுமத்தோட ஓரகத்தி ஜாயிரா மூலம் அமைந்திருந்தது. ஜாயிராவிற்கு வசதியில்லையே தவிர இல்லாத வீட்டு காரியங்களில் பங்கெடுக்கும் ஈர மனசு இருந்தது. இதே முனைப்பு ரகுமத்துக்கும் உண்டென்றாலும் அது காரியம் கருதியதாக இருக்கும்; மற்றவர்களை தனது கைக்குள்ளும், கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்துக் கொள்ளும் கைங்கர்யமாகவே மெகர் போன்ற ஆட்களுக்குத் தோன்றும்.
ரகுமத்துடைய கைப்பிடிக்குள் யாரும் சென்றுவிட்டால், அவள் சொல்வதைத்தான் அவர்கள் கேட்க வேண்டும், அவள் சொல்படிதான் நடக்க வேண்டும். ஆட்டுவிப்பது போல் ஆட வேண்டும். அவள் யாரிடமாவது உறவு வைத்துக் கொள்ளக் கூடாதெனக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாத இடத்தில் மறந்தும் பேசிவிட்டாலோ அவளுக்குப் பேய் பிடித்துவிடும்! அப்புறம் அவர்களும் அவளின் திடீர் பரம எதிரிகளின் பட்டியலில் பலியாடுகள் போல இணைக்கப்பட்டு விடுவார்கள்.
அதனாலேயே மெகர் குடும்பம் எல்லாவற்றிலிருந்தும் சற்று விலகியே இருந்து வந்தது. ஆனால் அப்போதிருந்து கையறு நிலைக்கு... ஒரு முறை, அவளும் அக்காள்தானே... நம்ம மன திருப்திக்கு ஒரு முறை கேட்டுப் பார்த்துவிட்டு வந்தால் என்ன என்ற யோசனை சில நாட்களாகவே மெகரை அரித்துக் கொண்டேயிருந்தது. மேலும் அன்று அவள் அந்த வீட்டின் படியேறி நின்றது மகனின் கவலைகளை சற்று குறைத்துவிடும் முயற்சிகளிலும் கூட!
மற்றவர்களின் குடும்ப விவகாரங்களில் தனது தலையீடும், முடிவும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் ரகுமத்து, அவள் வீட்டு விசேசங்களுக்கு தன்னைப் போன்ற சொந்தங்களையும் கலந்து கொண்டா முடிவெடுக்கிறாள்? அல்லது மற்றவர்கள் தங்களுடைய அபிப்ராயங்களை சொல்லும்போது காது கொடுத்துதான் கேட்பாளா?
ஆனால் ஊரில் உள்ள எல்லா பெண்களும் அவளுடைய ஆலோசனைப்படிதான் நடக்க வேண்டும் என்பது எப்பேர்ப்பட்ட ராங்கித்தனம்! இதற்கெல்லாம் அவளுக்கு வழி வழியாய் கிடைத்திருக்கும் பணமும் செல்வாக்கையும் விட வேறென்ன காரணமாக இருக்க முடியும்?
மாப்பிள்ளைக்காரர் (கணவர்) தோப்பும் துறவுமாப் பிறந்தவர், வளர்ந்தவர். அவள் பெற்ற ஐந்துமே ஆண் மக்கள்! மூத்தவன் மலேசியாவிலே ஓட்டல் கடை வச்சி, குடும்பத்தோட அங்கேயே கிடக்கிறான். ரெண்டாவது பிறந்தவன் மாயவரம் பக்கம் பெரிய ஷாப் கடை (மளிகைக்கடை) வச்சிருக்கானாம்! அந்த ஊரிலேயே நிலம், புலம், வீடு என எல்லாம் வாங்கிவிட்டதாகக் கேள்வி.
மத்த மூணு பேரும் படிச்சிட்டு வெளிநாட்டு காசும் நகையுமா சம்பாரிச்சிட்டு வந்து வரும்போதெல்லாம் உம்மாவோட கழுத்துலேயும் கையிலேயும் கொட்டுறாய்ங்க! அவனுவளும் பொண்டாட்டியும் புள்ளையுமா அங்கிட்டேதான் கெடக்குறானுவோ... போதாததுக்கு ஜமாஅத் தலைவரா ரகுமத்தோட மாப்பிள்ளையையே (கணவனையே) போட்டு வச்சிருக்கு! இப்டில்லாம் இருந்தா எந்த மகராசிக்குதான் தலைக்கு ஏறாது!
முப்பது வினாடிகளுக்குள் மெகர், ரகுமத்தின் பின்புலத்தை ஒருமுறை திரையிட்டுப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டாள். பலமிழந்து, உடல் சோர்ந்து போனது போல் உணர்ந்தாள். அந்த சோர்வில் ஏதேதோ தேவையில்லாத சிந்தனைகள் இழைந்தோடத் துவங்கின.
தன்னுடைய குடும்ப நிலையையும், மகன்களின் தற்போதைய இருப்பைப் பற்றியும் நினைத்து, நினைத்து 'ஒரு கஷ்டம், கவலைக்கு அவன்களையும் கைத்தூக்கி விட நமக்கு கூட பிறந்ததுன்னு யாருமேயில்லையே...!' என கனத்த மனதோடு வழியில் யாரோடும் எதுவும் பேசிக் கொள்ளாமல் வீடு திரும்பினாள்.
சட்டென மீண்டும் ரகுமத்தைப் பற்றி நினைக்கலானாள். எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு சென்றவளுக்கு உதவி கிடைக்கவில்லைதான்... பரவாயில்லை! மனசு இறங்குவாள் என வீடு தேடி போனவளை முகத்தில் அறைவது போல் பேசி, வார்த்தைக்கு வார்த்தை அவமானப்படுத்தி 'கொடுக்க ஒன்றும் இல்லை' என்று அனுப்பினாள்தான்... பரவாயில்லை!
ரகுமத்தை கல்யாணத்திற்கு முதல் ஆளாக வந்து நிற்கச் சொன்னால் ஒருவேளை தன் மீதான அவளுடைய இந்த ஆத்திரங்களும், தாளாமைகளும் கொஞ்சம் தணியலாமென மண்டைக்குள் ஏதேதோ ஓடியபடி வீட்டிற்குள் நுழைந்தவள், முழு சொம்புத் தண்ணீரையும் மடக் மடக்கென ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்.
ரகுமத்தால் திடீரென்றுக் கூடிவிட்டிருந்த அச்சங்களும் படபடப்புகளும் சற்று ஓய்ந்தது போலிருந்தது.
பின்னே அவளைப் போன்றவர்களை பகைத்துக் கொண்டா ஊருக்குள் மெகரைப் போன்றவர்கள் வாழ முடியும்?
- இத்ரீஸ் யாக்கூப்