கீற்றில் தேட...

என்ன இது பொழப்பு கெட்ட வேலை...

மனதுக்குள் நினைப்பது போல இருந்தாலும்.. மனசென்பதற்கு அர்த்தம் மறந்தது போலவே இருந்தது.

யாரு இது... புதுசா...- குரல் வந்த திசைக்கு திரும்புகையில் குரலும் திரும்பியது எப்படி. புரியவில்லை. எங்கெங்கு திரும்பினும் எங்கும் ஒரு திரும்பல் இருந்து கொண்டே இருப்பதை சுழல சுழல உணர முடிவது... நிஜமாகவே உணரலா... உதறலா தெரியவில்லை. நிறைய தெரியவில்லைகள் சூழ்ந்திருப்பது திகைப்பாய் இருந்தாலும்... ஏனோ ஒரு புது வகை ஆறுதலும் கூடவே வால் பிடித்தது.

ஒரு நெடும்பயணம் போல இருந்தாலும்... அது அப்படியாகவே இல்லை. தூரத்தில் இருக்கும் கிட்டத்துக்கு ஓரெட்டில் வந்து விட்ட நெடுங்காலமோ இது. எடையற்று நிற்கையில்... விடையற்றும் நிற்கிறதோ சிந்தனை. கிட்டத்தட்ட வீட்டருகே வந்தாயிற்று.

இப்படியா வீட்டை மறப்பது... அட வழி நெடுக மறதி தானே நினைவுகளை வழி நடத்தியது. அவன் எங்கு சென்றான். இப்போது எங்கிருந்து வருகிறான். ஒன்றும் புலப்படவில்லை. வீட்டுக்கு செல்லும் முக்கில் ஓர் இலகுவான இசையைப் போல நிற்கிறான். ஏன் ஒருத்தருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை. எதற்கு வீட்டில் பந்தல் போட்டிருக்கிறார்கள். அசையாத அவன் முகத்தில் சிமிட்டாத அவன் கண்கள் பாவமாய் பார்த்தன.

வீட்டை பார்க்க பார்க்க விசும்பல் விக்கியது. நெற்றியில் சரியும் பள்ளங்களில் ஓர் ஆழத்திற்கு செல்வதாக தோன்றியது. நெஞ்சுக்குள் நடுக்கம் குறையவில்லை. நீருக்குள் மூழ்கும் நிர்கதி.

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்...

ஏன் வீட்டு வாசலில் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன இது... யாருமே அவனை எதிர்பார்த்து காத்திருப்பது போல தெரியவில்லையே. ஒரு மனுஷன காணோம்... எங்க போனான்... என்ன பண்றான் என்ற எந்த உணர்ச்சியும் இல்லாமல் கறிக்குழம்பும் சுடு சோறுமாக இப்படி தின்று கொண்டிருக்கிறார்கள்.

வெகு நேரம் நின்று பார்த்தான். அங்கும் இங்கும் நடந்து பார்த்தான். அந்த வளையத்துக்குள் செல்லவே முடியவில்லை. வெறிக்க வெறிக்க பார்த்தவனுக்கு வேதனை கொப்பளித்ததை முழுதாக உணரவும் முடியவில்லை. எதுவோ உறுத்துகிறது. அவன் விளையாடித் திரிந்த இடமெல்லாம் வெற்றிடத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. சூனியத்தின் பிளவுகளில் அவன் காலடிகள் காணாமல்... காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

கண்களைக் கூட்டி கவனித்தான். கறிக்குழம்பு வாசம் கவனத்தை சிதைத்தது. கண்களில் தெரிந்தவர்கள் எல்லாம் மனதில் அழிந்து கொண்டிருந்தார்கள். எப்படி இப்படி இருக்கிறார்கள் என்ற வருத்தமும் கோபமும் மேலோங்க... தன் மீது சுய கழிவிரக்கம் தோன்றியது. எத்தனை நேரம் இப்படியே நிற்பது.. சீ என்றிருந்தது. வீடே சேர்ந்து ஊரும் சேர்ந்து கொண்டு இப்படி ஒரு மனிதனை மறப்பதற்கான வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பதை நினைக்க நினைக்க ஐயோ அதுவும் மறந்து கொண்டே இருக்கிறது. ஒரு மரம் போல நின்றவன்... தன்னையே ஆழமாய் பார்த்தான். ஒரு மொட்டை மரம் உடலை உலுக்கிக் கொண்டிருந்தது..

சொந்தபந்தங்கள் உறவுகள் நண்பர்கள் விரோதிகள் என்று எல்லாரும் அங்கே கறி சோறு தின்று கொண்டிருக்கிறார்கள். யாரைக் கூப்பிட்டாலும் பதில் இல்லை. இல்லாத கண்களில் இருந்து இல்லாத கண்ணீர் கொட்டுவதை இல்லாமலும் உணர முடிவது நடுக்கத்துக்குரியது.

இது ஆகாது என்று மெல்ல திரும்பினான். ஆற்றாமையும் இயலாமையும் அவனுக்கு முன்னும் பின்னும் ஓவென கத்தியது. முதுகில் குத்தப்பட்ட ஒரு முட்டாளின் மூச்சு வாங்கலை உணர முடிந்தது.

யார் இது... என்ற அதே பழைய குரல்.

நின்று... நீ யாரு....? என்றான்.

இத முன்னமே கேட்ருந்தா இந்த அவமானம் இருந்திருக்காதுல...

குரலையே பார்த்தான்.

கீழ கிடக்கற பொரிய மும்முரமா பொறுக்கிட்டே போன. பொரிய ரோட்ல போடறதே.. இப்டி திரும்பி வர்ற ஆத்மா அதை பொறுக்கிட்டே வரனுங்கறதுக்கு தான். அப்டி வந்தா... ரெண்டு மூணு நாள் ஆகிடும். வழியும் மறந்துரும். மீறி வர்றவங்க... வீட்டுக்குள்ள வந்தற கூடாதுனு தான் வீதி முக்குல.... வீட்டு நிலவுல ஆணி அடிக்கறது. அதையும் மீறி வர்றவங்களுக்கு தான் கறிக்குழம்பு அவமானம்...

சொல்லி விட்டு குரல் சிரித்தது.

ஒன்றும் புரிபடாத சுழற்சியாக இருந்தது. ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள். நான் என் வீட்டுக்கு வரக்கூடாது என்றா ஆணி அடிக்கிறார்கள். அப்படியே வந்தாலும்... மூஞ்சில அடிச்ச மாதிரி இருக்கட்டும் என்றா கறிக்குழம்பு சாப்பிடுகிறார்கள். தாங்க முடியவில்லை. தாள முடியாத தவிப்பு.

பொரியைப் பொறுக்கிக் கொண்டே வந்த காட்சி தலையில் அடித்துக் கொள்ள செய்தது.

நினைக்க நினைக்க இங்கே திரும்பி வந்திருக்கவே கூடாது என்று அவனுக்குத் தோன்றியது. அழ வேண்டும் போல இருந்தது. எப்படி அழ என்று தெரியவில்லையே. மறந்து விட்டது. என்ன விதமான கால்கள் இவை. நடப்பது போலவும் இல்லை பறப்பது போலவும் இல்லை. நொந்தபடி கவலையோடு அமர்ந்து விட்டவன்.... சரி இப்ப என்ன பண்றது என்றான். எது கவலை என்பதும் மறந்து கொண்டிருக்கிறது.

ஒன்னும் பண்ண முடியாது... காத்தோடு கலந்து காணாம தான் போகணும். நானும் அத தான் பண்ணிட்டு இருக்கேன். வா என்றது குரல்.

அங்கே சுழன்ற காற்றில் அதன் பிறகு பேச்சு சத்தம் இல்லை. ஏனோ சற்று நேரத்துக்கு விசும்பல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

- கவிஜி