கீற்றில் தேட...

மதிய வெயில் மல்லாந்து கிடக்கிறது. கிடைக்கும் கழுத்தில் எல்லாம் செவ்வரும்பாய் ஊரும் வெக்கை அதன் துக்கமா தூக்கமா.

சுற்றிலும் ஆவென திறந்து கிடக்கும் காடு. காடென்றால்... சோலை இல்லை. இருபக்கமும் மேடு. மேடென்றால் மேடு மட்டும் இல்லை. நடுவினில் ஓடும் ஆறு. ஆறு என்றால் நீர் மட்டும் ஓடுவது இல்லை. நிலமும் அது கண்ட களவும் தான். எப்போது வெள்ளம் வரும் என்று தெரியாது. எப்போது பிணங்கள் மிதந்து வரும் என்றும் தெரியாது. உலகமே சுழலும் மர்மங்கள் தானே. இதில் மயான ஓரத்தை தொட்டு தொட்டு ஓடும் ஆறுக்கு அமைதி எப்படி இருக்கும்.

புதர்களின் இடையே நீண்ட நெளிய கனவோடு பாம்புகள் பயணிப்பதும் உண்டு. பாதி வழியில் மீதி காணாமல் போன பாத சுவடுகளும் உண்டு. மொத்தத்தில் ஒரு குதறப்பட்ட கோல சிக்கல் அது. கிளறப்பட்ட கோழி கிறுக்கலும் தான் அது.

அன்பு அழுதே விடுவான் போல. பேந்த பேந்த விழித்தவனுக்கு குலை நடுங்கி வாந்தி வருவதாக உணர்ந்தான். அருண் சமாதான படுத்தினாலும் அவனுக்கும் இதயம் துடிப்பது காதில் வெடிக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும்... அவர்கள் உள்ளுணர்வு அந்த காட்டில் அரூபமாய் அங்கும் இங்கும் பித்து பிடித்து அலையும் அரவமாய் தான் தெரிந்தது. வால் நசுங்கிய பின் தலை தடுமாறும் தானே.

அந்த பொம்பள கண்டிசனா சொல்லிருன்டா. எப்பிடியும் மாட்டி விட்ரும்.

இல்ல சொல்லாது. அந்த பொம்பள யாருன்னே தெரியலயே...

மேக்க இருந்து தான் வருது.. அப்ப பச்சா பாளயத்துக்காரியா தான் இருக்கும்.

தாகம் வெறி கொண்டு அன்பை தாக்கியது. தடுமாற்றம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உணர்ந்தான் அருண்.

நான் தான் சொன்னேன்ல.. கேட்டியா. ஊருக்குள்ள போனதுமே மொத வேலையா சொல்லிட்டு தான் மறு வேலை பாப்பா.

இப்பிடி ஆகும்னு எனக்கென்ன தெரியும்... கருமம் சனியன் மாறி வந்து இப்பிடி....

பற்களை கடித்தான்... காலில் தட்டுப்பட்ட கல்லை ஆற்றுக்குள் தள்ளி விட்டபடியே.

இருவருமே கால் போன போக்கில் நடந்தார்கள். கால் போன போக்கில் என்பது போங்கு. மூளைக்குள் ஒரு தேடல் அவர்களை அறியாமல் உந்திக் கொண்டிருந்தது.

பேசாம அந்த பொம்பளகிட்ட பேசிரலாமா

என்னத்த பேசறது...

சொன்னா கேக்கறியா... இன்னைக்கு வேண்டான்னு சொன்னேன்ல. இப்ப பாரு. எனக்கு தெரியும்.. இதெல்லாம் சரிப்பட்டு வராது.

என்ன இதெல்லாம்... இங்க நாம வந்ததே இல்லயா...

வெறி கொண்ட நாய்களின் ரகசிய மொழி மனதை கடித்து துப்பிக் கொண்டிருந்தது.

அமைதி. பேய் அமைதி. மனதுக்குள் எழும் கூச்சல்களை எந்த மௌனமும் அமைதிப் படுத்தவில்லை. மேலே விழுந்து புரண்டு கொண்டிருக்கும் வெயிலின் சுமை தாங்கொணா கனம். அழுதால் தேவலை போல. ஆழ்மனம் முக்கோணத்தில் சிக்கிக் கொண்டு முட்டி போட்டபடி மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.

ஊரில் இருக்கும் ஒவ்வொரு முகமும் சிரிப்பதும்... துப்புவதும்.... பாவமாய் பார்ப்பதும்.... காட்சிகளாய் விரிகையில் கை விரித்து விட்ட கடவுள் கண் மூடி ஆமோதிப்பது போல இருக்கிறது. வீட்டில் விழும் உதை... அம்மணமாய் வெளிச்சத்தில் நிற்பது போல இருக்கிறது.

சனியன் புடிச்ச பொம்பள... இந்த வழியா தான் வரணுமா... மேல வழியா போய் தொலைஞ்சா என்ன...

கல்லெடுத்து ஆற்றில் விட்டெறிந்தான் அன்பு. அருண் ஆற்றையே வெறிக்க பார்த்தான். அவன் கால்கள் நடுங்குவதை அவன் நின்ற இடம் அதிர அதிர உள்வாங்கி கொண்டிருந்தது.

பேசாமல் விழுந்து விட்டால் என்ன என்பது தான் அவன் எண்ணமாக இருந்திருக்க முடியும். ஆனாலும் அவன் காட்டிக்கொள்ள வில்லை. விட்டெறிந்த கல் ஆற்றில் குத்தி கூறு போட்டு மூழ்கியது. பாக்கெட்டில் இருந்து சேகரித்த 13 ரூபாய்களை உள்ளங்கை நடுங்க பிடித்திருந்தான் அருண்.

குடுத்து பாக்கலான்டா.

பார்த்துக் கொண்டே நின்றான் அன்பு.

அரணா கொடி இருக்கு. கழற்றி குடுத்தரலாம்.

இப்ப எதுக்கு இதெல்லாம் பண்ணனும். பேசாம கண்டுக்காம போய்ரலாம். கேட்டா இல்லன்னு சொல்லுவோம்.

அது எப்பிடி சொல்ல முடியும். அந்த பொம்பள தான் பாத்துட்டாளே.

வெக்கையில் சேர்ந்த காற்று ஆயிரம் ஊசிகளை குத்தியது. ஆறா... நதியா... பள்ளமா... சாயப்பட்டறை கழிவு போற பாதையா... என்ன வேணா சொல்லிக்கலாம். ஆனா தண்ணி ஓடிட்டே இருக்கும் பெரும்பள்ள முடாக்கு இது.

கரையோரம் கரை படிந்த ஓவியங்கள் போல மெல்ல நகர்ந்தார்கள்.

எவ்வளவு கவனமாக இருந்தாலும்... இப்பிடி மாட்டிகிட்டத நினைச்சு நினைச்சு உள்ளூர இருவருக்குமே உதறல் தான். பயம் தலைக்கு மேல ஏறி உக்கார்ந்து மதிய நேர பிசாசு போல... பல்லிளித்தது. எத்தனை வேகமாய் நடந்தாலும் மெதுவாக நடப்பது போலவே இருக்கிறது. கால்களின் நடுக்கம் முகம் பிளந்த பாம்பாய் உடல் முழுக்க ஏறுவதைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. பழகிய காடு தான். ஆனாலும் பிசாசுகளை சுமந்து கொண்டு அங்கும் இங்கும் அலைவதாகப் பட்டது. இனம் புரியாத சத்தங்கள் எல்லாம் காதுக்குள் கேட்கின்றன. மூச்சில் கெட்ட வாடை. முகத்தில் காட்டுப் பூச்சிகளின் ரீங்காரம். மூளைக்குள் தொடர் அரிப்பு. முகமற்ற முண்டங்களைப் போல உணர்ந்தார்கள்.

வீட்டுக்கு போவதா... வெடித்து கிடக்கும் பாறைக்குள் சென்று விடுவதா. புரிபடவில்லை. ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பு கூட வந்து விட்டது போல தான். பேசிக் கொள்ளவில்லை. மாறி மாறி நடைகள் முன்னும் பின்னும் முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

உள்ளங்கை வியர்த்து உள்ளங்கால் வியர்த்து... உடல் முழுக்க வியர்வை கசகசப்பு. முதுகில் ஓடும் குறுங்காட்டு ஓடை.... குத்தீட்டி போல உணர்ந்தார்கள்.

நடந்தார்கள். எதையும் யோசிக்க முடியவில்லை. யோசித்தாலும் எதுவும் நினைவுக்கு வரவில்லை.

புதரை தள்ளிக் கொண்டு நிமிர்ந்து எழுந்த ஒற்றையடியில்... மேலேறிய போது அந்த பொம்பள ஆற்றில் முகம் கழுவிக் கொண்டிருந்தாள். திக்கென நின்றவர்கள் முகத்தில் அப்பாடா என்பது போல ஆசுவாசம். அது ஆசுவாசமா அவசரமா புரிபடவில்லை. அதே நேரம் நம்ம முகத்தை பாத்துருக்குமா... என்ற சந்தேகம் வலுத்தது. திருடனுக்கு தேள் கொட்டியது போல கப் சிப்பென அசையாமல் நின்று பார்த்தார்கள். நான்கு கண்களிலும் நான்கு நல்ல பாம்பின் நாக்கு.

மன்னிப்பு கேட்டு காசு குடுத்தா.. அவ ஏதும் சொல்ல மாட்டான்னு எப்பிடி நம்பறது. தப்பு பண்றவனுக்கு சந்தேகம் தான் பலம்.

அவ... மேட்டில் நின்று...." த்தூ... தருதலைங்க... பசங்களுக்கு கொலுப்ப பாரு"ன்னு சொல்லிட்டு அருவருப்பா பார்த்த அந்த சில நொடி காட்சி மீண்டும் நினைவில் கொள்ளி இட்டது. அந்த புதர் நடுவே தள்ளி விட்டது. சுதாரித்து எழுந்து தடுமாறி ஒருவருக்கு பின் ஒருவர் மறைவதற்குள் அவள் சென்று விட்டாலும்... அந்த அவமான சொற்களும்... த்தூவும் அங்கே திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருந்தது.

மானம் போச்சு. இப்படி இந்த காட்டுக்குள் ஒருத்தி பார்ப்பாள் என்று இருவருமே எதிர் பார்க்கவில்லை.

யோசித்துக் கொண்டே எத்தனை நேரம் நிற்பது. ஆற்றில் குனிந்து நீரள்ளி நீரள்ளி முகத்தில் அடித்துக் கொண்டிருந்தாள். அசலூர்க்காரி தான். அதில் சந்தேகம் இல்லை. இந்தப் பக்கம் முந்திரி பாளையத்துக்கு போயிட்டுருக்கா போல.

பார்த்துக் கொண்டே நின்ற அருணை தாண்டி முன்னேறிய அன்பு... வேகமாய் மூச்சைப் பிடித்தபடி பூனை போல ஓடி.. பாய்ந்து... குனிந்திருந்த அவளை அப்படியே தண்ணீருக்குள் தள்ளி விட்டான்.

டே டேய் என்று அருண் கத்துகிறான் ஆனால் ஓசை எழும்ப வில்லை. அப்படியே நிற்கிறான்.

நீருக்குள் தத்தளித்தவள்... நிதானம் இழந்து விட்டாள். நீச்சல் கீச்சல்லாம் வேலைக்கு ஆவாது. அது ஆறே கிடையாது. ஆறு மாதிரி. சாக்கடை. ஆனா ஆழம். ஓடிக்கிட்டே இருக்கும். ஒதுங்கறதுக்கே ஒரு மைல் தூரம் போகணும்.

நடுக்கம் கூட... உடல் இருக்கிறதா.... பாறையாய் வெடிக்கிறதா தெரியவில்லை. பேச்சே வரவில்லை. ஒருவன் பின்னால் ஒருவன் நடையும் ஓட்டமுமாக ஒத்தையடி தாண்டி கரும்பு காட்டுக்குள் புகுந்து... அரவம் போல ஊர்ந்தார்கள். கரும்புக்காடு தாண்டி சோல வரப்பு தாண்டி... அய்யாசாமி தோப்பு தாண்டி... மேட்டாங்காடு போய்ட்டா அதுக்கு அப்பறம் திசையே மாறிப் போகும்.

நாங்க அந்த பக்கம் போகவேயில்லை.

இருவருமே அவரவர்கள்.... யோசித்தார்கள்.

கருமம் புடிச்ச வெயிலே கொஞ்ச நேரம் நில்லேன் என்று சொல்ல தான் இல்லை. இருவர் சட்டையும் வேர்த்து புழுங்கியது.

மேட்டாங்காடு தாண்டியாச்சு. அப்பாடா... மனசுக்குள் நிம்மதி. இன்னேரம் அவ செத்திருப்பா. ரகசியம் ரகசியமாகவே போயிரும். கசியாது. மானம் போகாது. இனி இந்த இடத்துக்கு வரக் கூடாது. யோசனையில் பாறை வெடிப்பு தூரத்தில் தொக்கி தொக்கி நிற்பதாக இருக்க...

சட்டென அன்பை பிடித்து தள்ளி விட்டான் அருண். என்ன நடக்கிறது என்று புரியாத அன்பு அடுத்த நொடி... அதற்கடுத்த நொடி பள்ளத்தில் விழுந்து உருண்டு பாறையில் மோதி தெறித்து விழுந்தான். மூச்சு விடாமல் வேகமாய் முகம் வீங்க எட்டி பார்த்தான் அருண். அன்பை காணவில்லை. பாறைக்கு நடுவே காணாமல் போயிருந்தான்.

கோயில் தூணில் சங்கிலியில் கட்டப் பட்டிருக்கும் ஊர் பைத்தியம் எப்போதோ சொன்னது....

"ரகசியங்கறது ரெண்டு பேருக்கு தெரியறது இல்ல. தான் ஒருத்தருக்கு மட்டுமே தெரியறது..."

மீண்டும் மீண்டும் அருணின் தலைக்குள் ஓர் அரவம் போல ஊர்ந்து சுருண்டு நெளிந்து கொண்டிருந்தது.

ஒரு வெறியேறிய பாம்பின் வேகத்தோடு இப்போது அவன் ஊரை விட்டு ஓடிக் கொண்டிருந்தான்.

- கவிஜி